Sunday, June 19, 2016

கூடத்தில் தொங்கிய கேள்வி

-- ருத்ரா இ.பரமசிவன்





பிறந்த உடன்
என்னை
அப்படியே தகப்பனை
உரித்து வைத்திருக்கிறது என்றார்கள்.
தவழ ஆரம்பித்த போது
அப்படியே
தாய் மாமன் தான் என்றார்கள்.
வயது ஏற ஏற‌
குரங்குச் சேட்டையும் கூட ஆரம்பித்தது.
இப்போது
"டார்வினை"க்காட்டி
அந்தப் பரிணாமத்தின் படி தான்
நான் இருப்பதாய் சொல்லி
கண்டிப்புக்கார பள்ளியில் சேர்க்கப்போகிறார்களாம்
என்னை இடுப்பில் கயிறு கட்டாத குறையாய்
வைத்திருக்கிறார்கள்.
எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்து விட்டதாம்.
எல்லாம் என் கைக்கெட்டாத தூரத்தில் தான்.
ஒரு நாள் எனக்கு..
அந்த முகம் பார்க்கும் கண்ணாடி கிடைத்தது.
அதற்குள் தெரிந்த‌
முகத்தை
உலுக்கிக் குலுக்கி பார்த்தேன்.
சுழட்டி சுழட்டி பார்த்தேன்.
நான் யார் ஜாடை?
தெரியவில்லை..
இசகு பிசகாய் கண்ணாடி விழுந்து நொறுங்கியது.
அந்தக் குப்பையை எட்டிப் பார்த்ததில்
பலப்பல பிம்பங்கள்..
அத்தனையும் வேறு வேறாய்..
ஒன்றில் கண்
ஒன்றில் மூக்கும் வாயும்
இன்னொன்றில்
நெற்றி மட்டும்.
எனக்கு மட்டும் அதிலும் ஒரு கண் தெரிந்தது.
"சரியான வாலுப்பயல்.."
முதுகில் மொத்து விழுந்தது.
"தள்ளிக்கடா...காலில் கண்ணாடி
குத்திவிடப்போகிறது.."
என்றாள் அம்மா.
கண்ணாடி செதில்களில்
நான் யார் ஜாடை?
"கேளா ஒலியில்"
அந்தக் கூடம் முழுதும் அது எதிரொலித்தது.
"நான் யார்?"
இப்படியொரு கேள்வியில்
கூடத்து நடுவில் உயரத்தில் படத்தில்
கோவணம் கட்டிப் படுத்துக்கொண்டு
அந்த மனித முனிவன்
சிரித்துக்கொண்டிருந்தான்.
அப்பா!
இனி நான்
யாரை உரித்துக்கொண்டு வந்து தோற்றம் தருவது?





______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
 

1 comment:

  1. குழந்தைகளின் கேள்வி பெரியவர்களுக்கு அபத்தமாக தோன்றும்.ஆனால் குழந்தைகளின் பார்வையில் பெரியவர்கள் படு அபத்தமாக தெரிவார்கள்.இந்த சிறு பொறியைத்தான் கவிதைக்குள் பொதிந்து வைத்தேன்.இக்கவிதையை மின் தமிழ் மேடையில் அற்புதமான இரு கவிதைகளாக்கியிருக்கிறீர்கள்.
    ஆம்! ஒன்று கவிதை.இன்னொன்று அந்த படம்.
    மிக்க நன்றி.

    அன்புடன் ருத்ரா

    ReplyDelete