Thursday, June 30, 2016

கடலில் மிதக்கும் கல்

-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.

இந்தியாவின் இருபது புதிர்கள் / மர்மங்கள் எனும் தலைப்பில் இணையத்தில் உள்ள ஒரு தொகுப்பில் “ இராமேஸ்வரத்தின் மிதக்கும் கல்“ இடம் பெற்றுள்ளது. “வானரங்கள் கட்டிய இராம சேதுவில் போடப்பட்ட கற்களில் இராமநாமம் எழுதப்பட்டதால் அக் கற்கள் மிதந்தன. அந்தக் கற்கள் இன்னும் இங்கே சிதறிக் கிடக்கின்றன , அவை நீரில் மிதக்கின்றன-இந்தக் கற்களைக் காண நாடுமுழுவதுமிருந்து பக்தர்கள்கூடுகிறார்கள்” எனும் குறிப்பின் கீழ், கீழ் கண்ட படமும் போட்டிருக்கிறார்கள்.



 இங்கே தண்ணீரில் மிதக்கும் பாறை ‘பவளப் பாறை” என்பதை அறிந்தவர்கள் கண்டவுடன் தெரிந்து கொள்வார்கள். இத்தகைய பவளப் பாறைகளால் அமைந்த  21 தீவுகள்  ராமேஸ்வரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையே உள்ள கரையோரப் பகுதிகளில் உள்ளன. நல்ல தண்ணி தீவு, உப்பு தண்ணி தீவு, குருசடை தீவு, வான் தீவு, விலாங்கு சுழி தீவு ,கரியசுழி தீவு, அப்பா தீவு போன்றவை அவற்றில் சில. இவை அனைத்தும் பவளத்திட்டைகள் / நீள் திட்டைகளால் ஆனவை.



இந்தப் பகுதி உயிரியல் ரீதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அலைகளால் அடித்துவரப்படும் இந்த பவளப் பாறை துண்டுகள் கடற்கரைகளில் ஒதுங்கிக் கிடக்கும். இவற்றை எடுத்து இவை இராமர் கட்டிய பாலத்தில் பயன் படுத்திய  மிச்சம் மீதிகள் –இவை மிதப்பதைப் பாருங்கள் என்று சொல்லி மக்களிடம் காட்டுகிறார்கள் – ஓரளவிற்கு “தட்சிணையும்”யும் பெறுகிறார்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் எங்கள் குடும்பப் பெரியவர்களுடன் இராமேஸ்வரம் சென்றேன். இந்தப் பாறை ஏன் மிதக்கிறது என்று விளக்க முற்பட்டேன். இராமருக்கு எதிராக ஒன்றும் பேசக் கூடாது என்று என் வாயைக் கட்டிவிட்டார்கள்.

கடலின் கீழ் வாழும் பவளத்தை எங்கள் ஊர் மீனவர்கள் ‘பவளப் பூச்சி’ என்பர். பவளப் பாறைகளை ‘நுரைகல்’ என்பர்.—அது நுரை போன்று காட்சி தருவதால்.


பவளப் பூச்சி  முதுகெலும்பில்லா பிராணிகளில் Phylum:Cnidaria , Class: Anthozoa  வைச் சேர்ந்தது. Polyps எனப்படும் ஒரு தனிப் பூச்சி சில மி.மீ. குறுக்களவும், பல செ.மீ. நீளமும் கொண்டது. பை போன்ற உடலமைப்பைக் கொண்ட இந்தப் பூச்சியின் வாயை சுற்றி tentacles எனும் இழைகள் காணப்படுகின்றன. இந்தப் பூச்சிகள் சுண்ணாம்பு கார்பனேட்டை உமிழ்ந்து அது கெட்டிப்பட்டபின்  ஒரு காலனி போன்ற அமைப்பை உருவாக்கிக் கொள்கின்றன. இவையே பவளப் பாறை அல்லது நுரைப்பாறை என்று அழைக்கப்படுகின்றன. நுரையில் இருப்பது போல் இந்தப் பாறைக்குள்ளும் காற்றுக் குமிழிகள் நிறைய இருப்பதால் இவற்றின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளது. சாதாரணமாக சுண்ணாம்புக் கல்லின் அடர்த்தி 2.7 ஆக இருக்கும். ஆனால் காற்றுக்குமிழ்கள் காரணமாக இவற்றின் கனவளவு அதிகமாவதால் அடர்த்தி வெகுவாகக் குறைந்து 1 அல்லது அதற்கும் குறைவாக வந்து விடுகிறது. இதன் காரணமாக இந்தப் பாறை  நீரில் மிதக்கிறது அவ்வளவே. இதில் எந்த ஒரு மர்மமும் இல்லை -புதிரும் இல்லை.


பின் குறிப்பு: ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் எங்கள் துறையின் கேரளப் பிரிவில் இயக்குநராகப் பணியாற்றியபோது , BBC யில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. “MYTHS OF INDIA AND THE SCIENCE BEHIND THEM” என்று ஒரு நிகழ்ச்சி தயாரிக்கிறோம் , நீங்கள் இராமேஸ்வரம் வந்து FLOATING STONES பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்-செய்முறைக்  காட்சிகளுடன்” என்றார்கள். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன். என் உயர் அதிகாரியிடம் அனுமதி கேட்டேன். என்னை அறிந்தவர். உடனே ஒப்புக் கொண்டார். ஆனால் அன்று மாலையே மேலிடத்திலிருந்து “ உங்களுக்கு இராமர் பாலம் பிரச்சினை ஒன்று போதாதா, “FLOATING STONE” பிரச்சினை வேறு வேண்டுமா? மத நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் எந்த காரியத்திலும் அரசு அதிகாரிகள் ஈடுபட வேண்டாம்” என்று எச்சரிக்கை வந்தது. கப்சிப்.

 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________ 

No comments:

Post a Comment