Thursday, June 2, 2016

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்கலைக்கழக தமிழ்க் கல்வியின் நிலை

-- தேமொழி


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த  'ஆதிரை'  என்ற இதழில் (Vol. 1, 3 - ஆவது இதழ்) வெளியான தமிழ்க் கல்வியின் நிலையைப் பற்றிய  செய்தியைத் தொடர்ந்து  தமிழறிஞர்கள் செய்த கருத்துப் பரிமாற்றங்கள், சர்ச்சைகள் விளைவாக  அன்றையத் தமிழகத்தின் தமிழ்க் கல்வியின் நிலை தெரிய வருகிறது.

பண்டிதமணி 
மகிபாலன்பட்டி பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்  அவர்கள் "தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில்  செல்வாக்குள்ள நிலையில் இருப்பதாலும்,  அவர்கள் வடமொழிப் பற்று அதிகம் கொண்டிருப்பதாலும் தமிழைத் தலையெடுக்கவிடாது செய்கின்றனர்" என்று கூறிய கருத்தும்;   அதற்கு உ.வே. சா. மற்றும் எஸ். சத்தியமூர்த்தி ஆகியோரின் மறுமொழிகளும்;   உ. வே. சா தனது கருத்திற்கு சான்று கொடுத்ததாக  பண்டிதமணியார் அவர்கள் கொடுத்த  மறுமொழி ஆகியவற்றால் அன்றைய தமிழகத்தில்  தமிழ்க் கல்வியின் நிலை பற்றிய ஒரு   வரலாற்றுப் பார்வை நமக்குக் கிடைக்கிறது. 
உ. வே. சா.


யாழ்ப்பாணத்தின்  ஆரிய திராவிட பாடாபிவிருத்தி சங்கத்தின் பதினோராவது  ஆண்டுவிழாவிற்குத் தலைமையேற்று பண்டிதமணி உரை நிகழ்த்தியுள்ளார்.  ஆதிரை இதழின் ஆசிரியர் என். நாராயணய்யர் என்பவரால்  இந்த உரையின் முழுச்செய்தியும் கொடுக்கப்படாது, உரையின் சிற்சிலப் பகுதிகளை மட்டும் தேர்வு செய்யப்பட்டு, உண்மைக்குப் புறம்பாகத் திரிக்கப்பட்டு, அச்செய்தி தமிழகத்தின் தமிழ் அறிஞர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் மறுமொழி பெறப்பட்டு அவையும்  ஆதிரை பத்திரிக்கையால்  வெளியிட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, இச்செய்திக்கு எதிராக, இந்த உண்மை அல்லாத  திரிப்பு வேலையை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் மற்றொரு பத்திரிக்கையான "ஈழகேசரி சீமுக" என்ற பத்திரிக்கை சுட்டிக் காட்டுவதுடன்,   நிகழ்ச்சி நடத்திய யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாடாபிவிருத்தி சங்கத்தின் கண்டனத்தையும் தனது இதழில் (ஜூன் 1933) வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வினையொட்டி தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 'தமிழ்ப்பொழில்' இதழும் விரிவான  தனது கண்டனத்தை "ஆதிரை" இதழின் மீது பதிவு செய்துள்ளதுடன், இந்நிகழ்விற்காக  பண்டிதமணி அவர்களுக்கு  வருத்தமும் தெரிவித்துள்ளது. இக்கண்டனச் செய்தியில் காணப்படும் செய்திகளின்  வழி தெரிய வருவது...
சென்னைப் பல்கலைக்கழகத்தில்  முன்னர் தமிழ்ப் பண்டிதர் தேர்வுக்குப் படிப்போருக்கு கட்டாய வடமொழிப் பாடம் தேவை என்ற விதியும், வடமொழி பயில்வோருக்கு தமிழ்ப் புலமை வேண்டுமென்பதை விதிக்காத ஒரு நேர்மையற்ற நிலையும் இருந்துள்ளது. 

வடமொழி பயில்வோருக்கு சாகித்தியம், வியாகரணம், நியாயம், மீமாம்சம், வேதாந்தம் ஆகியவற்றில் 'சிரோமணி', 'வித்துவான்'  ஆகிய படிப்புகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டும்; ஆனால் தமிழில் இவற்றுக்கு இணையான நூல்கள் இருந்தும், தமிழறிஞர்கள்  வேண்டுகோள் விடுத்தும், தமிழுக்கு 'தமிழ் வித்துவான்' என்ற ஒரேயொரு பாட வாய்ப்பை மட்டும் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள்  வழங்கியுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வடமொழியில் B. A. Honours படிப்பு அனைத்துக் கல்லூரியிலும் இருந்திருக்கிறது.  சிக்கனம் காரணமாக சென்னை அரசர் கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) அந்தப் பாடவகுப்பை நீக்கலாம் என்ற கருத்தை முன்வைத்த பொழுது பார்ப்பனர்களால் ஊர் தோறும் மறுப்புக் கூட்டங்கள் போடப்பட்டு கண்டனங்கள் வைக்கப்பட்டன. 

ஆனால், தமிழில் B. A. Honours படிப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அப்பாடம் இருக்கும் பொழுது சென்னையில்  அதற்குத் தேவையில்லை  என்று S. சத்தியமூர்த்தியய்யர் மறுப்புக் கூறியதாகவும் தெரிகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக B. A. Honours படிப்பிற்குத் தேவையான நூல்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. துணையாசிரியர்கள் (Reader) தேவை என்ற நியாயமான கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டது.  மேலும், பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின்  எண்ணிக்கை பலமடங்கு அதிகமிருந்தும் வடமொழியைவிடக் குறைந்த ஆசிரியர் எண்ணிக்கையும், குறைந்த அளவு நிதியும் ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது. தமிழில் தேர்ச்சி பெறாதவர்களைத் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்ட நிலையும்  இருந்து  (வீட்டில் தமிழ் பேசுவதால் தமிழில் தேர்ச்சி என்பது அவசியமற்றது  என்ற காரணம் காண்பிக்கப்பட்டிருக்கிறது) அதற்கு எதிர்ப்பு தோன்றியதால் ஒரு ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டு அந்த நிலைமை சீர் செய்யப்பட்டுள்ளது. 

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆளுகை நிலையில் இருந்தோர்  தமிழறிந்தவர்கள் அல்ல. மறைமலையடிகள், உ.வே. சா. போன்ற தமிழறிஞர்களுக்கு  அக்குழுவில் இடமிருந்திருக்கவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தால் தமிழ் சிறப்புடன் போற்றப்படவில்லை, சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆளுகையில் இருந்தோரில் பெரும்பாலோர் தமிழ் ஆர்வலரும் அல்லர்.

எனவே, இக்கருத்தை பண்டிதமணியார் சுட்டிக் காட்டியதில் இழுக்கொன்றுமில்லை, மேலும் இது உ. வே.சா பண்டிதமணியாரிடம் பகிர்ந்து கொண்ட ஒரு கருத்தே என்பதால் அதில் தவறேதுமில்லை  எனவும்  தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழில் குழுவினர் கருதியுள்ளனர்.

மேலும், இது போன்று தமிழ் அறிஞர்களின் எதிரெதிர் கருத்துக்களை வெளியிட்டு,  அவர்களிடையே (பண்டிதமணி, உ. வே. சா. போன்றோரிடையே) தகராறு கிளப்பிவிட எண்ணும்  இலங்கை பத்திரிக்கையின் நோக்கமும்  கண்டிக்கப்பட்டுள்ளது. 

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்."
என்று ஆதிரை இதழின் ஆசிரியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.


குறிப்பு:
இது தமிழ்ப் பொழில்  (1933-1934) துணர்: 9 - மலர்: 3 மலரில் காணப்படும் ஒரு தமிழ்ச் செய்தியின் சுருக்கம், தமிழ்க் கல்வியின் வரலாறு என்ற நோக்கில் கொடுக்கப்படுகிறது. 

______________________________________________________________________
தேமொழி
themozhi@yahoo.com
______________________________________________________________________

No comments:

Post a Comment