Sunday, June 5, 2016

சென்னையின் நீர்வழித்தடங்கள் - இந்திய ராணுவமும் கடலூரும்

-- கே.ஆர்.ஏ. நரசய்யா



காலனி ஆட்சியில் சென்னையின் நீர்வழித்தடங்கள் பெற்ற முக்கியத்துவத்தை  முன்னர் கண்டோம். தொடர்ந்து, மற்ற வகைகளிலும் இத்தடங்கள் சென்னையின் வரலாற்று நிகழ்வுகளில் நெருங்கிய தொடர்புள்ளவை. அவற்றுள் முன்னதாகக் கருதப்படுவது, அடையாறு போர். 18ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில், அடையாற்றின் வடகரையில் நடந்த இந்தப் போர், இன்றைய பரிமாணத்தின் படி ஒரு யுத்தமாகவே கணக்கில் வராது எனினும், சில நிகழ்வுகளால் முக்கியத்துவம் பெற்றது மட்டுமின்றி, போர் யுக்திகள் கற்பிக்கப்படுகையில், இன்றும் ராணுவக் கல்லூரிகளில் ஒரு முன்னுதாரணமாக இப்போர் எடுத்துக் காட்டப்படுகிறது. இதைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ள சென்னையின் 18ம் நூற்றாண்டின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாகப்பட்டினம் போர்கிழக்கிந்தியக் கம்பெனியைப் போன்று பிரெஞ்சுக் கம்பெனியொன்றும், 1720ல் நிறுவப்பட்டது. இந்தியக் கடலோரப் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அது எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஒன்று, கோரமண்டலக் கரையில் ஒரு துறைமுகத்தைத் தனதாக்கியது. அப்படித்தான் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை வந்தடைந்தனர். ஐரோப்பாவில் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் குழப்பம்  ஏற்பட்டால், அது காலனி நாடுகளிலும் எதிரொலிக்கும். ஆஸ்திரிய நாட்டின் தலைமுறை விவகாரத்தில் இருவரும் தலையிட்ட போது, அதன் எதிரொலியாக, தென்னிந்தியாவில் இருவரும் தாக்கிக் கொண்டனர்.

அப்போது டூப்ளே புதுச்சேரியில் பிரெஞ்சுக் கவர்னராக இருந்தார். ஆங்கிலேயரின் கப்பற்படை, பிரெஞ்சுக் கப்பல்களை, 1745ல் கோரமண்டல் கரையருகில் தாக்கியது. அதை முறியடிக்கத் திட்டமிட்ட டூப்ளே, 1746, ஜூலையில், லா போர்ட்னாயிஸ் என்ற கடற்படைத் தளபதியின் தலைமையில் ஒரு கடல் தாக்குதலை நாகப்பட்டினம் அருகில் நடத்தினார். அதில் சரியான முடிவு கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்கள், அட்மிரல் எட்வர்ட் பேடன் என்பவர் தலைமையில் கடற்போர் செய்தனர்.ஜார்ஜ் கோட்டை முற்றுகை தமது குறைகளை அறிந்து கொண்ட பிரெஞ்சுக் கப்பல்படைத் தளபதி, லா போர்ட்னாயிஸ் தமது கப்பல்களை, புதுச்சேரித் துறைமுகத்திற்குக் கொண்டு சென்று புதுப்பித்து, அவற்றில் புதிய பீரங்கிகளையும் ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கித் தனதுப் பயணத்தைத் தொடங்கினார். விவரம் அறிந்த அட்மிரல் பேடன், அந்த படையை சமாளிக்க முடியாதெனத் தெரிந்து கொண்டு, தமது கப்பல்களுடன் வங்கத்திற்கு சென்று விட்டார்.

கடந்த, 1746, செப்., 4ம் தேதி, லா போர்ட்னாயிஸ், அடையாறு கடலில் சங்கமிக்கும் இடத்திற்குக் கிழக்கே, அதாவது சாந்தோமில் தமது கப்பல்களை நிறுத்தினார். ஆங்கிலப் படை அங்கில்லை என தெரிந்து கொண்டு, கோட்டையை முற்றுகையிட திட்டமிட்டார். அன்றைய தேதியில் அவர் தரையிறங்கி, 800 காலாட்படைகளுடன் தாக்குதலைத் தொடர்ந்தார். 5ம் தேதி அன்று, சிந்தாதிரிப்பேட்டையை அடைந்தார். பின் கோட்டையை முற்றுகையிட்டார். ஆங்கிலேயர்களால் வெளியில் வர
இயலவில்லை. அவர்களுக்கு குடிநீர் கூட வெளியில் இருந்து கிடைக்காத நிலையில், அவர்கள் சரணடைந்தனர். மதராஸ், பிரெஞ்சுக்காரர்கள் கீழ் வந்தது. அன்றைய ஆங்கில கவர்னர் மோர்ஸ் என்பவர், சரணாகதிக்கு அடையாளமாக தமது உடைவாளை லா போர்ட்னாயிசுக்கு அளித்தார். இந்த விவரங்கள் எல்லாம், 'ஆனந்தரங்கம் பிள்ளையின் தினப்படி சேதிக்குறிப்பு சொஸ்தலிகிதம்' என்ற தலைப்பில் அவரது நாட்குறிப்புகளின் மூன்றாம் புத்தகத்திலுள்ளன.

டூப்ளேக்கு எப்படியாவது மதராசைத் தனது ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற ஆசை இருந்தது. கோட்டையிலிருந்த எல்லா ஆங்கிலேயர்களையும், 'பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகப் போரிட மாட்டோம்' என்ற எழுத்து வடிவ உறுதிமொழி அளிக்க வேண்டும் என, டூப்ளே உத்தரவிட்டார்.சிலர் அதற்கு இணங்கவில்லை. அவர்களுள் முக்கியமானவர் ராபர்ட் கிளைவ். அவர் மூன்று ஆங்கிலேயர்களுடன் இந்தியர்கள் போல வேடமணிந்து கோட்டையிலிருந்து தப்பிக் கடலூரில், அப்போதிருந்த செயின்ட் டேவிட் கோட்டைக்கு ஓடி விட்டனர்.மதராசைப் பிடித்த உடன், ஊரையும் கோட்டையையும் கர்நாடக நவாப் அன்வருதீன் முகம்மது கானுக்கு அளித்து விடுவதாக தான் அளித்த உறுதிமொழியை, டூப்ளே காற்றில் பறக்கவிட்டார். அதன் விளைவாக நடந்தது தான், அடையாறு போர். இது, முதல் கர்நாடகப் போரின் ஒரு பகுதி என்றும் அறியப்படுகிறது.

அடையாறு போர்ஆற்காடு நவாப், 1746, அக்., 15ம் தேதி அன்று, ஆங்கிலேயரின் உதவியுடன் பிரெஞ்சுப் படையைத் தாக்க முற்பட்டார். ஆற்காடு நவாப் மகன் மாபூஸ்கான், 10,000 காலாட்படையினருடன், தெற்கு நோக்கி வந்து சாந்தோமைக் கைப்பற்றிய பின்னர் அடையாற்றின் வடகரையில், பிரெஞ்சுப் படையைத் தாக்க, தயாராக இருந்தார். பிரெஞ்சுப் படையினர், அடையாற்றின் தென்கரையில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் மொத்தமே 200 பேர் தான். சுவிட்சர்லாந்துக்காரரான கேடன் பாரடிஸ் தான் அவர்களுக்கு தளபதி.

அக்., 22ம் தேதி அந்த படை ஒரு யுக்தியைக் கையாண்டது. மாபூஸ்கானுக்கு பீரங்கிகளைப் பற்றி அதிகம் தெரியாது. ஆகையால் வடகரையிலிருந்து அப்படை சுட்டதெல்லாம் வீணாகவே போயிற்று. ஆனால் பாரடிஸ் படைவீரர்கள் நன்கு போர்ப் பயிற்சி பெற்றவர்கள். ஒரே நாளில் முடிந்ததுஇப்போது கிரீன்வேஸ் தெருவில் இருக்கும் க்வீபிள் தீவு (இப்போது இது கிறிஸ்தவர்களின் கல்லறை பகுதியாக உள்ளது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குதான் கிறிஸ்தவர்களின் சவ அடக்கம் நடந்து வருகிறது. இங்கு நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் கல்லறையும் உள்ளது) பாரடிசுக்கு ஒரு சிறந்த மறைவிடமாக தெரிந்தது.

தமது படையினரை அங்கே இருக்கச் சொல்லி, அவர் நவாப் படை மீது சுட்ட போது அந்த படை சிதறியது. பின் மிக சாமர்த்தியமாக சுற்றி வளைத்து, நவாபின் படையைச் சரணடையச் செய்தார் பாரடிஸ். போர் தொடங்கியது அதிகாலையில். அன்று மாலைக்குள் போர் முடிந்தே விட்டது. படைபலம் என்பது எண்ணிக்கையில் இல்லை; யுக்திகளிலும் சிறந்த பயிற்சியிலும் தான் என்பதைக் காட்ட இன்றும் ராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் இக்கதை கூறப்படுகிறது.இந்த போரை அடுத்து, ஆங்கிலேயர்
தமக்கு மதராஸ் திருப்பித் தரப்பட்டவுடன், முதற்காரியமாக இந்திய ராணுவத்திற்கு அடித்தளம் அமைத்தனர். அப்படித்தான் இந்திய ராணுவத்தின் முதல்படியாக மதராஸ் ரெஜிமெண்ட் கடலூரில் ஆரம்பிக்கப்பட்டது.

நன்றி: தினமலர் 


___________________________________________________________
  

Mr. K R A Narasiah
narasiah267@gmail.com 
___________________________________________________________
 

No comments:

Post a Comment