Friday, June 10, 2016

கல்மரப் பூங்கா காவலாளியுடன் ...

 --கோ.செங்குட்டுவன்.
இரண்டாண்டு இடைவெளியில் திருவக்கரை கல்மரப் பூங்காவிற்கு இன்று மீண்டும் பயணம்.


தந்திடி.வி. செய்தியாளர் திரு.கோபிநாத்- உடன். சிறப்புச் செய்திக்காகச் சென்றிருந்தேன்.


கடந்தமுறை சென்றபோது அங்கு பரந்து விரிந்து விழுதுகளுடன் காட்சியளித்த 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த ஆலமரம் என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது தான் கவனித்தேன், அருகிலேயே ஐயனார் கோயில் கொண்டிருப்பதை!
திருவக்கரை காவல் தெய்வமாக எல்லையில் அவர் வீற்றிருக்கிறார். இந்த ஆலமரம் கூட அவருக்குத்தான் சொந்தம்.
கிராம மக்கள் பலரும் வந்து வழிப்பட்டுச் செல்கின்றனர்.
கல்மரப் பூங்கா வளாகத்தில் இப்படி ஒரு காட்சி.
மகிழ்ச்சி..!




தந்தி டி.வி. செய்தியாளர் கல் மரங்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். நான் அங்கிருந்தக் காவலாளியிடம் பேச்சுக் கொடுத்தேன்.
பெயர் டி.ராமச்சந்திரன். மத்திய அரசின் புவியியல் துறையால் நியமிக்கப்பட்டவர். விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தயம் பகுதியைச் சேர்ந்தவர்.
29 ஆண்டுகள் இந்தக் கல்மரப் பூங்காவில் பணியாற்றிவிட்டார். இம்மாதத்தோடு ஓய்வு பெறுகிறாராம்.
இந்த இடத்தை சொந்த வீடுபோல் பாவித்து வந்தவர். ஏதாவது சுத்தம் செய்ய வேண்டும் என்று அவசர வேலை வந்துவிட்டால் மனைவி, மகன் ஆகியோரையும் அழைத்து வந்துவிடுவாராம்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகர்-பிரதமவராவதற்கு முன்பு மூன்று முறை இந்தக் கல்மரப் பூங்காவுக்கு வந்துசென்றிருக்கிறார்.
திருவக்கரைக்கு வருகைதந்த நீதியரசர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கல் மரங்களுடன், ராமச்சந்திரனையும் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
“மறக்க முடியாத நிகழ்வு ஏதாவது இருக்கா? ராமச்சந்திரனிடம் கேட்டேன்.
“உம் அப்படியொன்னும் இல்ல என்றவர், நீண்ட யோசனைக்குப் பின்னர், “ஒருமுறை காதலர்கள் கூட்டம் ஒன்று இங்கு வந்து லூட்டி அடித்தனர். அவர்களை வெளியே போகச்சொன்னேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், வேப்பங்குச்சியால் பயங்கரமாக அடித்துவிட்டு ஓடிவிட்டனர் என்றனர்.
கல்மரப் பூங்காவிலும் காதலர்க்கு எல்லையுண்டு என்பதை அந்தக் கும்பல் மறந்து விட்டது போலும்.  
அடிபட்டதன் காயத்தையும் வலியையும் அவர் மறந்தாலும், அந்த வடு அவருக்குள் மாறா சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எப்போதும் காலை 10மணிக்கெல்லாம் பணிக்கு வந்துவிடும் ராமச்சந்திரன், நேற்று காலை சிலநிமிடங்கள் தாமதமாகத்தான், ஓட்டமும் நடையுமாக வந்தார். இதற்குக் காரணத்தையும் அவரே சொன்னார்,
“இன்னிக்கு எனக்கு 60ஆவது பிறந்த நாள்.
அட. எவ்வளவு பெரிய விசயம். அவரிடம் வாழ்த்துப் பெற்றேன்.
ராமச்சந்திரன் ஒருவயது குழந்தையாக இருந்தபோது திருவக்கரை கல்மரப் பூங்கா தொடங்கப்பட்டது. இன்று அவரது 60ஆவது வயதையும் இந்தப் பூங்காவில் அடைந் திருக்கிறார்.
கல்மரங்கள் அவருடனும்,
கல்மரங்களுடன் அவரும்
இத்தனை ஆண்டு காலம் நிறையவே பேசியிருப்பார்கள்.
இனி நேரம் கிடைக்கும் போது கல்மரங்களுடன் ராமச்சந்திரன் நிச்சயம் பேசுவார்..! 



_____________________________________________________

கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
_____________________________________________________

No comments:

Post a Comment