Monday, February 1, 2016

காந்தித்தாத்தா

-- கவிஞர் ருத்ரா. 


 ஓவியம்: ஓவியக் கவிஞர் ரவி சுப்பிரமணியன் 

 
காந்தித்தாத்தா
என்ற சொல்
முள்ளுமுனையில் கூட‌
மூணு குளம் வெட்டும்.
மூணு குளமுமே
பாழ் என்றாலும்
வெட்டிய இடம் எல்லாம்
அவர்
ரத்தமும் வேர்வையும் தான்.
சுதந்திரத்தை வாங்க‌
அடிமைத்தனத்தை
பண்டமாற்றம் செய்யச்சொன்னார்.
அப்படி மாற்றப்பட்டதை விடவும்
மாட்டிக்கிடந்ததே 
நமக்கு பரம சுகம்.

கத்தியின்றி ரத்தம் இன்றி
யுத்தம் புரிவதன் உருவகமே
அந்த அண்ணல்!
உருவமே 
மூளியாய் நின்றவர்களுக்கு
கத்தியும் புரியவில்லை
ரத்தமும் புரியவில்லை.
அதனால்
நம் ரத்தமே நமக்கு 
தர்பூஸ் ஜூஸ்.
நம் அன்னையர்களே
நம் அண்ணன்களே
நமக்கு கைமா.
கள்ளு வேண்டாம் என்று
தென்னைகளை வெட்டிச்சாய்த்த‌
சினத்தின் எரிமலைகள் தான் நாம்.
இப்போது 
ஃபாக்டரியும்
ரசம் நுரைக்கும்
கலர் கலர் கண்ணாடி பாட்டில்களுமே
நம் சாம்பல் மேடுகள்.
மூடி கடித்து கழற்றி யெறி.
சீசாவை கூசாமல் 
வயிற்றுக்குள் கவிழ்.
சைடு டிஷ்?
அதோ
வாக்காளர் பட்டியலில்
வெயிட்டாக‌
"காந்தியின் புன்னகை"
அமரர் ஆனவர்
ஏன் கொச்சைப்படுத்தினீர்
என்று
கோர்ட்டுக்குப் போனாலும் போகலாம்.
கோடிக்கணக்கான‌
நம் நிலுவை கேஸ்களில்
ஆவியாக போனவற்றில்
இந்த ஆவியும் ஒன்றாக இருக்கலாம்.
எழுந்து நில்லுங்கள்.
அந்த "மகான் கேட்கவில்லை"
கேட்பது
அந்த பீரங்கிக்குண்டுகள்!
தந்தையே
உனக்கு சிரம் தாழ்த்துகிறோம்.
அப்போது தான் மண்ணின் அடியில்
நீ 
இன்னும் அந்த 
புழுக்களுக்கு உன்னை
புசிக்கக்கொடுப்பதை
பார்க்க முடிகிறது.
எங்கள் கண்கள் கசிகின்றனவே!
 
 

___________________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
___________________________________________________________
 

No comments:

Post a Comment