Thursday, February 11, 2016

தித்திக்கும் திருக்குறள்

--நா.கண்ணன்



வள்ளுவர் ஓர் நல்ல கவிஞர். குறட்பா எனும் வடிவைத் திறமையாகக் கையாண்டவர்.

அவரோர் நல்ல தொகுப்பாசிரியர். அவர் காலத்தில் கண்டு, கேட்டு, உள்வாங்கிச் சிந்தித்த கருக்களை பிற்காலத்தவருக்காக தொகுத்து அளித்தவர்.

வள்ளுவர் நல்ல ஆசிரியர், மாணவர், சிந்தனையாளர், கணவர், பெற்றோர். கொஞ்சம் ஆணாதிக்கம் உள்ளவர் (அவர் காலத்தில் அப்படித்தான் வாழ்ந்திருக்க முடியும்)

வள்ளுவம் 'மறை' அல்ல. அதுவொரு நீதி நூல், வாழ்வியல் நூல். அவ்வளவே. வள்ளுவரைத் தெய்வமென மதித்துப் போற்றும் போக்கு கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது.

வள்ளுவர் ஓர் காலக்கண்ணாடி. அவர் காலத்தில் இந்திய உபகண்டத்தில் இருந்த வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுகிறார். எனவே அது முழுக்க தமிழ்ச் சிந்தனை என்பது போன்ற கூற்றுப் பிழையுள்ளது. அது இந்தியப் பொதுமைக்குமான சிந்தனைக் கூட்டு.

வள்ளுவரை ஒவ்வோர் அதிகாரமாகப் பார்த்து தரிசிக்க வேண்டும். அதிகார முக்கியத்துவமே அவரது நோக்கு. அந்த அதிகாரப் பொருளை உயர்வாக எடுத்துப் பேசுவார். அது வேறோர் அதிகாரத்தில் குறைவாகச் சுட்டப்படலாம்.

வள்ளுவனை வழிபடவோ, முழுமையாகப் பின்பற்றவோ முடியாது. ஏனெனில் வள்ளுவன் மனிதனைத் தெய்வ நிலைக்குக் கொண்டு செல்ல முயல்கிறான். அதி உன்னத மனிதனை உருவாக்க முயல்கிறான். அவன் தரக்கட்டுப்பாட்டிற்குள் விழ வேண்டுமென எண்ணுபவன், 'அக்னிப்பரிட்சையில்' இறங்குகிறான். அது மனிதரால் இயலாத செய்கை! வள்ளுவனின் ஓரிரு வாழ்வியல் நெறிகளைக் கடைப்பிடித்தால் அதுவே பெரிது. இல்லை வள்ளுவனே என் ஆசான். அவன் சொல்லே என் வாழ்வு என்று சொல்வோர் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, பிறரையும் ஏமாற்றுகின்றனர்.

தமிழர்கள் வள்ளுவனின் இன்பத்துப்பால் பற்றிப் பேசுவதில்லை. ஓர் வெட்கம். ஏதோ வள்ளுவர் கொக்கோக சாத்திரம் பேசுவதாக எண்ணிக்கொண்டுள்ளனர். அறம், பொருள், இன்பம் என முப்பாலைப் பின் ஏன் அவன் எழுத வேண்டும்?

காமத்துப்பாலைக் கண்டு கூச்சப்படும் தமிழன் சிறுகுழந்தைகளைக்கூடக் காமத்துப்பாலை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கச் செய்கிறான். அது முரணாக அவனுக்குப் படவில்லை! சமீபத்தில் மலேயாவில் மாணவி திருக்குறளை தமிழ், பாகாஸா மொழிகளில் ஒப்புவித்தாள்.

திருக்குறளின் கவிநயம் பேசப்பட வேண்டும். அவனது சொல்லாட்சி கண்டு மகிழ வேண்டும். தமிழின் சீரிளமைக்கு வள்ளுவமே வாட்சி.

குறள்களில் சில எளிய தமிழ் கொண்டு எளிதாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையில் நேரடிப் பொருள் சொல்வன. ஆனால் பல குறள்கள் மிகச் சிக்கலான மொழி நடையில், இலக்கண அறிவு இல்லாமல், இலக்கியப் பரிட்சயம் இல்லாமல் அணுக இயலாதவாறு உள்ளன.

வள்ளுவத்தில் சமிஸ்கிருதச் சொற்கள் ஏராளமாகப் பரவிக்கிடக்கின்றன. அது குறை அல்ல. நிறை. அக்காலத்திலும், இக்காலத்திலும் தமிழ் மொழி நடை அவ்வாறே உள்ளது. எனவே வள்ளுவனைத் தூய்மைப்படுத்த முயலும் முயற்சி தீவினையில் முடியும்.

வள்ளுவன் இந்திய சமயச் சிந்தனை உள்ளவன். அது எந்த நெறி என்பது அவரவர் புரிதலைப் பொருத்தது. ஆனால் வள்ளுவனை சமயச் சிந்தனை அற்ற பொருள் முதல்வாதியென்றோ, இக்கால பகுத்தறிவாதி போன்றவர் என்றோ புரிய முற்படுவது அனர்த்தத்தில் முடியும். பல நேரங்களில் பரிமேல் அழகர் இல்லாமல் வள்ளுவனைப் புரிந்து கொள்ள முடியாது என்பது உண்மை.

அதே போல் அதிகாரத்தை விட்டு குறளை வெளியே எடுத்து பொருள் கொள்ள முயன்றால் அது பொருள் தரலாம், ஆனால் அதைத்தான் வள்ளுவர் சொல்கிறார் என வாதிடமுடியாது. ஏனெனில் குறள் அதிகாரம் சார்ந்தது. அப்படித்தான் அவன் இயற்றியிருக்கிறார்.

வள்ளுவம் ஆயிரம் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது என மார்தட்டுவதில் பெருமிதம் இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் அதன் தாய் மொழியில் வள்ளுவம் இன்னும் முழுமையாய் புரிந்து கொள்ளப்படாத போது அது பிற மொழிகளில் எப்படி மிளிரும். போதிய தரக்கட்டுப்பாட்டில், எல்லா உரைகளையும் அலசி ஆராய்ந்துதானா இந்த மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன? கடவுளுக்கே வெளிச்சம்.

வள்ளுவம் அழகு! வள்ளுவம் புனிதம்! வள்ளுவம் கவிதை! வள்ளுவம் ஓர் ஆச்சர்யம்!

___________________________________________________________
முனைவர் நா. கண்ணன்
nkannan@gmail.com
___________________________________________________________

No comments:

Post a Comment