Monday, February 8, 2016

தமிழகச் சிற்பிகள் வரலாறு - நூல் மதிப்புரை

-- முனைவர் சுபாஷிணி.

தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் பயணிக்கும் போதும் என் மனதை வெகுவாகக் கவர்வது தமிழக கட்டுமானக் கலைகளும் சிற்பங்களும் கல்வெட்டுக்களும் தான்.

ஒரு மண்டபத்தில் ஒரு சிறப்பென்றால் இன்னொரு மண்டபத்தில் மற்றொரு சிறப்பு. ஒரு கோயிலில் ஒரு பிரமாண்டம் என்றால் இன்னொரு கோயிலில் மற்றுமொரு பிரமாண்டம். ஒரு சிற்பம் ஒரு காரணத்திற்காக தனித்துவம் வாய்ந்ததாக விளங்குவது போல மற்றொரு சிற்பம் தனக்கேயுரிய மற்றொரு தனித்துவத்துவடன் விளங்குகின்றது. ஒரு சுவரோவியம் ஒரு தன்மையத்தது என வியக்கும் வேளை மற்றொன்று இன்னொரு வகையில் சிறப்பானதாக இருக்கின்றது. ஒரு கல்வெட்டுப் பாறை இப்படியும் ஒரு வேலைப்பாடா என அதிசயிக்க வைக்கும் அதே வேளை இன்னொரு கல்வெட்டு வேறொரு வகையில் சிறப்புக்களோடு காட்சியளிக்கின்றது. இப்படி என் ஒவ்வொரு முறை தமிழகத்துக்கான வருகையின் தேடுதல்களின் போதும் என் தேடுதல்களுக்கு அலுப்பு கொடுக்கா அதே வேளை புதியனவற்றை நான் பார்த்து அறிந்து கொள்ளும் நிலைதான் ஏற்படுகின்றது. இது என் தேடுதலின் தன்மையைச் சுவாரசியமானதாகவும் ஆக்கியிருக்கின்றது. இப்படி காணக் காண அற்புதங்களாக இருக்கும் தமிழக நிலப்பரப்பின் சிற்பக்கலை, கட்டுமானக் கலையைப் பற்றி அதன் ஆரம்ப காலத் தோற்றம், படிப்படியான வளர்ச்சி, வரலாற்றுக்கு முக்கியமான சான்றுகளின் விபரங்கள் என்ற வகையில் விரிவான தகவல்களைத் தருகின்ற ஒரு நூலை அண்மையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்ததுமே அதனைப் பெற்றுக் கொண்டு வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தருகின்ற நூல்.


வரலாற்று ஆய்வாளர் திரு. நடன காசிநாதன் எழுதி வாஸ்து வேத ஆய்வு நிறுவனத்தின் வெளியீடாக 2006ம் ஆண்டு இதன் முதல் பதிப்பு நூல் வெளிவந்திருக்கின்றது. இந்த நூல் உருவாக ஊக்கம் தந்தவர் தமிழகத்தின் முக்கிய சிற்பியான டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி அவர்கள் தான் என நூலாசிரியர் தனது முகவுரையில் அதன் காரணங்களோடு விளக்குகின்றார்.

நூலின் முன்னுரையோடு ஸ்தபதிகள் ,சிற்பிகள் பற்றிய நீண்ட அறிமுக விளக்கத்தையும் டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி அவர்கள் இந்த நூலில் வழங்கியிருக்கின்றார்கள். தனது விளக்கத்தில் இக்காலத்தில் ஸ்தபதிகள் என்று குறிப்பிடப்படும் கட்டிடக் கலைஞர்களும் சிற்பக் கலைஞர்களும் பற்றிய மதிப்பு என்பது குறைந்து. கொத்தனாராகவும் கூலி வேலைசெய்பவராகவும் மதிக்கப்படும் நிலை இருக்கின்றது என்று குறிப்பிடுகின்றார். இதனை வாசிக்கும் போது, ஆங்கிலத்தில் ஆர்க்கிடெக்ட் என்று சொல்லும் போது ஏற்படும் தனி உயர் மதிப்பு தமிழில் கோயில் கட்டிடக் கலைஞர் என்றோ சிற்பி என்றோ ஏன் தமிழ் மக்கள் சிந்தனையில் தோன்றவில்லை என்பதை நாம் யோசிக்கவேண்டும் என்று தோன்றாமல் இல்லை.

நூலில் நூலாசிரியரின் நுண்ணுரை, டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி அவர்களின் முன்னுரை அகவுரைக்கு அடுத்தார் போல பதினெட்டு தலைப்புக்களில் தமிழகச் சிற்பிகளை பற்றி ஆராய்கின்றார் நூலாசிரியர்.
அவை ...
  1. குமரிகண்ட காலத்தில் சிற்பிகள்
  2. ஹரப்பன் நாகரிகக் காலத்தில் சிற்பிகள்
  3. வேத காலத்தில் சிற்பிகள்
  4. இதிகாச, புராணக் காலங்களில் சிற்பிகள்
  5. பண்டைத் தமிழ்க் கல்வெட்டுக் காலத்தில் சிற்பிகள்
  6. சங்க காலத்தில் சிற்பிகள்
  7. காப்பியக் காலத்தில் சிற்பிகள்
  8. பல்லவர் காலத்தில் சிற்பிகள்
  9. முதற்காலப் பாண்டியர் காலத்தில் சிற்பிகள்
  10. சோழர் காலத்தில் சிற்பிகள்
  11. பிற்காலப் பாண்டியர் காலத்தில் சிற்பிகள்
  12. சம்புவராயர் காலத்தில் சிற்பிகள்
  13. விசய நகர மன்னர்கள் காலத்தில் சிற்பிகள்
  14. நாயக்கர் காலத்தில் சிற்பிகள்
  15. மராத்தியர் காலத்தில் சிற்பிகள்
  16. பாளையக்காரர்கள் காலத்தில் சிற்பிகள்
  17. பிற்காலங்களில் சிற்பிகள்
  18. சிற்பங்களிலும் ஓவியங்களிலும் சிற்பிகள்
என்ற பதினெட்டு தலைப்புக்களாகத் தகவல்கள் விரிகின்றன.

இந்த நூலிற்குச் சிறப்பு சேர்க்கும் விசயங்களில் ஒன்றாக மயன் பற்றிய விளக்கங்களைக் காண்கின்றேன்.

கடல்கோளால் ஆட்கொள்ளப்பட்ட குமரிகண்டத்தில் பிறந்து மயன் என்னும் ஆதி சிற்பியே தொழிற் கருவிகள், மட்கலங்கள், ஓவியங்கள்,கட்டிடங்கள் ஆகியனபற்றிய ஆரம்ப நிலை தொழில்நுட்பக் கூறுகளைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தியவராக இந்த நூலின் முதற் பகுதி விளக்குகின்றது. இதற்கு ஆதாரமாக வைசம்பாயனம் என்ற நூலை ஆதாரமாகச் சுட்டுவதுடன், இந்நூல் மயன் தான் அறிந்த தொழில் நுட்பங்களை நூல்களாக எழுதி குமரி கண்டத்தில் செயல்பட்ட முதல் சங்கத்தில் அரங்கேற்றினார் என்றும் அதில் மயன் சிற்பமாச் செந்நூல், ஓவியச் செந்நூல், மனநிலச் செந்நூல், நிலமனச் செந்நூல், விண்கலச் செந்நூல், நாட்டியச் செந்நூல், இசைக் கலைச் செந்நூல், மூலிகைச் செந்நூல், தமிழியற் செந்நூல், கணிதமாச் செந்நூல், கோட்டுருச் செந்நூல் என்ற பதினோரு நூல்களை இயற்றியது பற்றிய குறிப்பு உள்ளமையையும் சுட்டுகின்றார். இது இந்த வைசம்பாயணம் என்னும் இம்மூல நூலைத் தேடிப் பெற்று வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக அமைகின்றது.

குமரிகண்ட மயனின் பெயரிலேயே பலர் இருந்திருக்கலாம் என்றும் அவர்களும் கட்டிடக் கலைகளில் தேர்ந்தவர்களாகவும் சிற்பக் கலை வல்லுநர்களாகவும் இருந்திருக்கலாம் என்பதை இலக்கிய இதிகாசச் சான்றுகள் சுட்டுவதையும் இந்த நூலில் காண முடிகின்றது. உதாரணமாக இன்றைக்கு ஏறக்குறைய கி.மு1000 - 700 வரை எனக் கணக்கிடப்படும் இராமாயண மயன் பற்றிய குறிப்புக்கள் இருப்பதும் இங்குக் குறிப்பிடப்படுகின்றது. மயனின் மகள் மண்டோதரி என்ற ஒரு குறிப்பும் அர்ஜூனனுக்கு மயன் கட்டிய அவை மண்டபம் பற்றியும் வருகின்ற குறிப்புக்களை அறிய முடிகின்றது. காப்பியக் காலத்தில் மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலை ஒரு மலர்வனத்திற்குச் சென்றபோது அங்கே மயன் பண்டைய காலத்தில் தனது நூற்குறிப்பில் உள்ள கட்டுமான மரபினை ஒத்துக் கட்டப்பெற்ற பளிங்கு மண்டபத்தில் உதயகுமாரனுக்குப் பயந்து ஒளிந்து கொண்டமையை இளங்கோவடிகள் சுட்டுவதையும் அறிய முடிகின்றது. இதே போல சிலப்பதிகாரத்திலும் மனையறம்படுத்த காதையில் மயன் உருவாக்கிய நெறிமுறையில் தயாரிக்கப்பட்ட கட்டிலில் கண்ணகியும் கோவலனும் படுத்துறங்கினர் என்ற குறிப்பும் வருவது மயன் என்ற ஆதித் தமிழ் கட்டுமான ஆசானைப் பற்றி மேலும் வலியுறுத்திச் சொல்வதாக அமைகின்றது .

கல்வெட்டுகளை என்பது மிக உயர்ந்த மிக நுணுக்கமான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய தேவைகளுடன் கூடிய ஒரு கலை. நமக்கு இன்று கிடைக்கின்ற நூல்களின் வழியாகச் சங்க கால கட்டுமானம் என்பது செங்கற்கட்டடங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிகின்றோம். இன்றைக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே செங்கல் தயாரித்து அதனைக் கொண்டு கட்டிடங்களை எழுப்பிய தமிழர் தம் தொழில் நுட்பத் திறன் வியக்க வைக்கும் ஒன்றே என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கிடமேதுமில்லை.

நூலாசிரியர் இந்த நூலில் வழங்கியிருக்கும் மேலும் இரண்டு சிறப்பு விடயங்களாக அமைவது கல்வெட்டுக்கள் பற்றிய விளக்கங்களும் செப்பேட்டுகளைப் பற்றிய விரிவான தகவல்களும் என்று சொல்லலாம். பண்டைய தமிழ் எழுத்துக்களான பிராமி, வட்டெழுத்து அத்துடன் சமஸ்கிருத கிரந்த எழுத்துக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் பல உதாரணங்களாக நூலில் கையாளப்பட்டுள்ளன. இச்செப்பேடுகள் தற்சமயம் இருக்கின்ற அருங்காட்சியகங்களைப் பற்றிய தகவல்கள் இவற்றை நேரில் பார்த்து ஆராய விரும்புவோருக்கு ஆரம்ப நிலைக் குறிப்புக்கள் வழங்கும் தன்மையும் சிறப்புக்குரியது என்றே கருதுகின்றேன்.

எப்படி ஓலைச்சுவடிகள் என்றால் அவை சோதிடம் சார்ந்தவை என்ற எண்ணம் பரவலாகப்பல தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றதோ அதே போல கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் என்றாலே அவை மன்னர்கள் வரலாற்றுத் தகவல்களாக இருக்குமோ என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதுண்டு. கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தமிழ் மக்களின் சமூகம் சார்ந்த விடயங்களைப் பதிவு செய்து வைத்த ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன என்பதை சில ஆதாரங்களின் வழி நூலாசிரியர் விவரிக்கின்றார். அதில் உதாரணமாக வரி பற்றிய விபரங்கள், ஒரு குடும்பத்தினர் தம்மை அடிமைகளாக விற்றுக் கொண்டதற்கான சான்று செப்பேடு, கொள்ளை நிகழ்வு ஒன்றைப் பற்றிய செய்தியைப் பதிந்த செப்பேடு என்பன போன்றவற்றை குறிப்பிடலாம். இப்படி வித்தியாசமான செப்பேடுகள் விசய நகர மன்னர்கள் காலத்தில், நாயக்கர் காலத்தில், சம்புவராயர், மராத்தியர் காலங்களில் வெளியிடப்பட்ட குறிப்புக்கள் கல்வெட்டு செப்பேடு தயாரிப்பு பற்றிய தகவல் களஞ்சியமாக இந்த நூலின் தரத்தை உயர்த்துவதாக உள்ளது.

இந்த நூலின் மிக முக்கிய அங்கமாக நான் காண்பது ஒவ்வொரு அத்தியாயத்தின் பின்னும் கொடுக்கப்பட்டிருக்கும் துணை நூற் குறிப்புப் பட்டியல். இந்தப் பட்டியலில் உள்ள நூல்கள் ஆய்வு மாணவர்களுக்கும் வரலாற்றுத்தேடல் உள்ளோருக்கும் மிக உதவும் தன்மை கொண்டவை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

​தச்சர்கள், பொற்கொல்லர்கள், சிற்பிகள், சித்திரக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் திறத்தால் விட்டுச் சென்றவையே இன்றைய தமிழர் தம் வரலாற்றுச்​சான்றுகளாக நம் கண் முன்னே திகழ்கின்றன. அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக இன்று சிற்பக்கலை தமிழகத்தில் சுட்டப்படுவது வேதனைக்குரிய ஒரு விடயம். பண்டைய தமிழர் கட்டுமானக் கலைகள் இக்காலச் சூழலில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக அறிமுகப்படுத்தப்படுமேயானால் அது இக்கலை அதன் சிறப்புத்தன்மை கெடாது அறிவியற் கூறுகளின் பெருமையோடு மேலும் மிளிர வாய்ப்பு ஏற்படும்.

விலை ரூ.350
பிரசுரிப்பாளர்: வாஸ்து வேத ஆய்வு நிறுவனம்


___________________________________________________________
  

முனைவர். சுபாஷிணி
ksubashini@gmail.com
___________________________________________________________
 



No comments:

Post a Comment