Sunday, February 28, 2016

சென்னையின் நீர்வழித்தடங்கள் - அடையாறும் அதன் கரைகளும்

-- நரசய்யா.


 உலகின் நாகரிகங்கள் எல்லாமே நீர்வழித்தடங்களின் கரைகளில் தான் துவங்கின. அப்படித்தான் இந்தியாவின் முதல் நாகரிகமான சிந்துசமவெளியும், சிந்துநதிக் கரையில் துவங்கிற்று. சங்கப் பாடல்களில், தமிழக ஆறுகளின் பயனும் அவற்றின் பெருமையும் பாடப்பட்டுள்ளன. தமிழகக் கடல்வழி வணிகம், ஆறுகள் கடலில் சங்கமிக்கும் இடங்களில் இருந்த நகரங்களில் தான் பெருமளவில் நடந்து கொண்டிருந்தது.

அன்றைய நாட்களில், நாகரிகத்தில் இந்தியர்களைவிடப் பின்தங்கியிருந்த ஐரோப்பியர்கள், கடல்வழி வணிகத்தின் பெருமையை முற்றிலும் உணர்ந்து, இந்தியாவின் செல்வத்தையும் தெரிந்து கொண்டு, 15ம் நுாற்றாண்டில் இந்தியாவை நோக்கித் தம் பார்வையைத் திருப்பினர்.அன்று, இந்திய நாடு ஒற்றுமை குலைந்து பல சிற்றரசர்கள் தமக்குள் போர் புரிந்து கொண்டிருந்த நேரம். ஐரோப்பியர்களின் ஆளுமைக்கு ஒரு பெரும் நல்வரவளிக்கும் விருந்தாகவே ஆகிவிட்டது.

பொருளீட்டுவதற்காக ஸ்பானியர்களுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் கீழைநாடுகளை நோக்கிச் செல்லும் அவா ஏற்பட்டபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டியைத் தீர்த்து வைக்க அன்றைய போப்பாண்டவர் முன் வந்தார். ஏனெனில் அவ்விரு நாட்டினரும் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் மத்தியஸ்தத்திற்கு போப்பாண்டவரை நோக்கினர். 'பேப்பல் புல்' என்றறியப்பட்ட போப்பாண்டவரின் ஆணை, 1493ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி உலகை அசோரஸ் என்ற தீவின் வழியாக, வடக்கிலிருந்து தெற்காக இரண்டாகப் பிரித்து, கிழக்குப் பகுதிகளை போர்த்துகீசியர்களுக்கும் மேற்குப் பகுதிகளை ஸ்பானியர்களுக்கும் அவர் பகிர்ந்தளித்தார்.


ஆங்கிலேயர்களின் தேர்வு:
நில, நீர் ஆக்கிரமிப்புகள் ஒன்றும் புதிதல்ல; அன்றே துவங்கி விட்டன. வேடிக்கை என்னவெனில் இவ்வுலகம் போப்பாண்டவருக்கும் சொந்தமானதல்ல! அவ்வாறுதான் வாஸ்கோடகாமா, கோழிக்கோடு வந்தடைந்து மெல்ல மெல்ல இன்றைய கேரள நாட்டின் முக்கியப் பகுதியைப் போர்த்துகீசியர்களுடையதாக்கிக் கொண்டான்!அங்கிருந்து போர்த்துகீசியர்கள், கோரமண்டலக் கரையிலும் தமது ஆக்கிர மிப்பைக் கிறிஸ்தவ மத பரப்புதலுடன் துவக்கினர். 16ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அவர்கள், இன்றைய சாந்தோமை அடைந்தனர். சாந்தோம், அன்று மயிலாப்பூரின் ஒரு பகுதியாக இருந்தது. பல நுாற்றாண்டுகளுக்கு முன்னரே, மயிலாப்பூர் ஒரு பாதுகாக்கப்பட்ட துறைமுகமாக விளங்கியதற்குச் சான்று, பொன்னேரி, வீற்றிருந்த பெருமாள் கோவிலில், 11ம் நுாற்றாண்டின் கல்வெட்டாகக் காணக் கிடைக்கின்றது. மயிலாப்பூரின் தெற்குப் பகுதி, அடையாறு கடலில் சங்கமிக்கும் இடத்திற்கு சற்றே வடக்கில் இருந்தது. கோரமண்டல் கரை வந்த போர்த்துகீசியர்கள், அடையாறு சங்கமிக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வடக்கில், தமது கோட்டை ஒன்றை அமைத்தனர்.

தமது வணிகத்திற்காக, ஆங்கிலேயர்கள், 17ம் நுாற்றாண்டு துவக்கத்தில், கோரமண்டலக் கரையில் ஒரு ஆற்றின் முகத்துவாரத்தைத் தான் தேடிக் கொண்டிருந்தனர். அடையாறு முகத்துவாரம் சிறந்ததாகத் தெரிந்தாலும், அருகில் போர்த்துகீசியர்கள் இருந்தமையால், கூவம் முகத்துவாரத்தைத் தேர்ந்தெடுத்தனர்.  வடக்கில் பழவேற்காடு, டச்சுக்காரர்கள் கைகளில் இருந்தது. போர்த்துக்கீசியர்களின் சாந்தோம் கோட்டை, ஆங்கிலேயர்களால் 17ம் நூற்றாண்டு இறுதியில், தரைமட்டமாக்கப்பட்டது. 1749ல் அந்த இடம், ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமாகிற்று. அப்போது அடையாறு, ஒரு சிறந்த ஆறாகத் திகழ்ந்தது. அது கடலில் கலக்குமிடம் -கழிமுகப் பகுதி, இயற்கையின் எழில் மிகு பகுதியாக அமைந்திருந்தது. பறவைகளின் ஒரு பெரும் சரணாலயமாகவும் இருந்தது. கடந்த, 1639ல் இங்கு வந்த ஆங்கிலேய வணிகர்களான ஆண்ட்ரூ கோகன் எனபவரும் பிரான்சிஸ் டே என்பவரும், அன்றைய நாயக்க அரசப் பிரதிநிதியான தாமரல வெங்கடாத்ரியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு, கூவம் முகத்துவாரத்தில் தமது வணிக தலத்தை நிறுவிக் கொண்டனர்.  அதுதான் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டையாக உருவானது. அப்போது, சாந்தோமில் போர்த்துகீசியர் பலம் சற்றே குறைந்திருந்தது. ஆங்கிலேயர் பிராடஸ்டண்டு பிரிவை சேர்ந்தவர்கள்; போர்த்துகீசியர்கள் கத்தோலிக்கர்கள். ஆகையால் இருவரிடையேயும் பகை புகைந்து கொண்டு இருந்தது.


பண்ணை வீடுகள்:
அழகான அடையாற்றங்கரையோ ஆங்கிலேயர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தது. இருமருங்கிலும் பசுமை நிறந்து கண்கொள்ளாக் காட்சியாக அது இருந்தது. நீளத்தில் கூவத்தை விட குறைவான அடையாற்றின் பிறப்பிடம் கூடுவாஞ்சேரி செம்பரம்பாக்கம் ஏரியருகில், செம்பரம்பாக்கம் போன்ற சில நீர்நிலைகளின் உபரிநீரும், மற்ற சில ஆறுகளின் உபரிநீரும் அடையாற்றில் கலந்து ஓடுகிறது. இந்தியாவின் சிறந்த நதிகளைப் போல ஏதோ மலைப்பாங்கான இடத்தில் தோன்றிய நதியல்ல அடையாறு; ஏரிகளின் உபரிநீர் வடியும் ஒரு வடிகால் தான். அங்கிருந்து, 40 கி.மீ., ஓடிய பின், கடலில் சங்கமிக்கிறது. சென்னை நகரத்தில், நந்தம்பாக்கம் வாயிலாக நுழையும் அடையாறு, நகரத்துள் 13.5 கி.மீ., துாரத்திற்கு ஓடுகிறது. கூவத்தைப் போலல்லாது, இதன் முகத்துவாரம் விரிந்து பரந்து கிடக்கிறது. இந்த முகத்துவார பரப்பளவு, 300 ஏக்கர். சென்ற நுாற்றாண்டின் முதல் பாதி வரை இப்பகுதி, சிறந்த மீன்வள நீர்ப் பரப்பாக இருந்தது. மீனவர்கள் வாழ்வாதாரமாகவும் விளங்கியது. சுற்றிலும் பெரும் மீனவ சமுதாயமே செழிப்பாகத் தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தது. சென்ற நுாற்றாண்டின் பிற்பகுதியில், மாசு மிக்க பகுதியாக மாறி மீன்வளம் செத்து விட்டது. சுனாமியின் போது நடந்த நல்ல நிகழ்வு, பின்னோக்கி வந்த பேரலைகளால் (அவை சைதாப்பேட்டை வரை வெள்ளமெடுத்தன) அடையாற்றின் பெரும்பகுதி சுத்தப்படுத்தப்பட்டு விட்டது தான்!  பதினேழாம் நுாற்றாண்டின் இறுதி வரை, ஆங்கிலேயர் சென்னையின் இன்றைய தெற்குப் பகுதிக்கு வரவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டிலும், அதன் பின்னரும் தமது ஆக்கிரமிப்புகளை அவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கையில், தெற்கு நோக்கி நகர்ந்தனர்.

சிறு கிராமங்கள் வழியாக எழில் மிகு நதியாக ஓடிக்கொண்டிருந்த அடையாற்றின் இரு மருங்கிலும், சிறு கோவில்களும் வசிக்குமிடங்களும் அமைந்திருந்தன. சலனமற்ற அந்நாட்களின் வாழ்வு சிறந்ததாக இருந்திருக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் இயற்கையை ரசித்தவர்கள். அடையாற்று கரையினில் அவர்கள் பண்ணை வீடுகள் கட்ட துவங்கினர். இந்த இடத்தைப் பற்றிய முதற்குறிப்பு, மெட்ராஸ் கலெக்டரின் 1806ம் ஆண்டு அறிக்கையில் தென்படுகிறது [1]. அதன்படி ஒரு பெரும் பரப்பளவு (50 காணி நிலம்) பனை மரத் தோட்டமாக இருந்தது. அதன் உரிமையாளர் வெங்கடாசலபதி என்பவர். 1807ம் ஆண்டில் அதிகார பூர்வமாக இந்த சொத்துரிமை அவருக்குக் கலெக்டரால் அளிக்கப்பட்டது. அதற்குப் பின்புலமாக இருந்தவர் ஆலந்த நாராயணசுவாமி நாயக் என்பவர். அங்கு இரு சிறு கோவில்களும் இருந்தன. அதில் ஒன்று கடாரி அம்மன் கோவில். இந்த நாயக், அடையாற்றின் வடகரை முழுவதையும் சொந்தம் கொண்டாடியவர்! துரதிர்ஷ்டவசமாக இவர் முத்துக் குளிப்பதில் போட்டிருந்த செல்வமெல்லாம், 1821ல் தொலைந்து விட, இவ்விடங்கள் ஆங்கிலேய பிரபுக்களுக்கு விற்கப்பட்டன. கடந்த, 1792ல் இருந்து, 1831 வரை ஐ.சி.எஸ்., அதிகாரியாக இருந்த, எல்.ஜி.கே.முர்ரே என்பவரிடம், நாயக் கடன்பட்டிருந்தார். ஆகையால் அவர் கைக்கு, நாயக்கின் பெரும் பகுதி சொத்துகள் போய்விட்டன.


பிராடீஸ் கேசில்:
அவர் இந்த நிலங்களை, எட்வர்ட் பிரான்சிஸ் எலியட் என்பவருக்கு விற்றார். இவர் பெயரில் தான் எலியட்ஸ் பீச் இன்று அறியப்படுகிறது. இந்த எலியட்டின் தந்தை, மெட்ராஸ் கவர்னராக 1814 - 1820 காலகட்டத்தில் இருந்தவர்.பின்னர் பல கைகள் மாறி நிலங்கள் பக், நார்ட்டன் போன்றோருக்குச் சொந்தமாயின. அடையாற்று கரையை ஒட்டிய இடங்கள் விற்கப்பட்டு, அங்கு ஆங்கிலேயர்கள் தமது பண்ணை வீடுகளைக் கட்டிக் கொண்டனர். மேற்கு முனையில் அவ்வாறு கட்டப்பட்ட வீடுகளில் ஒன்று தான் கிரேஞ்ச் என்று அன்றறியப்பட்ட இன்றைய காஞ்சி என்னும் இல்லம். இப்போது அண்ணா மேலாண்மைக் கல்லுாரி. 1853ம் ஆண்டு ஜான் ப்ரூஸ் நார்ட்டன் (நன்கறியப்பட்ட வக்கீல் நார்ட்டனின் தந்தை) என்பவரால் இது கட்டப்பட்டது. அன்றைய பிராடீஸ் கேசில் - இன்றைய தென்றல் (இசைக் கல்லுாரி) எனப்படும் கட்டடத்தின் கதையே விசித்திரமானது. சாந்தோமின் தெற்குப் பகுதியில், கிவிபிள் தீவு என்பது அடையாறு முகத்துவாரத்தில் உள்ளது. இப்போது அது கல்லறைகள் நிறைந்த இடம்.

அதன் தெற்கில் அடையாற்றங்கரையின் எழிலில் மயங்கிய ஜேம்ஸ் பிராடீ என்ற ஆங்கிலேயர், இங்கு, 11 ஏக்கர் நிலத்தை வாங்கி,1796 - -98ல் ஒரு பெரும் மாளிகை கட்டினார். அதன் பெயர்தான் பிராடீஸ் கேசில். 

அங்கு குடியேறும் முன்னரே அவர் மனைவி ஒரு கெட்ட கனவு கண்டதாகவும், அதனால் அவருக்கு அவ்வீடு செல்லத் தயக்கம் இருந்ததாகவும், பென்னி என்ற ஆங்கிலப் பெண்மணி, 'கோரமண்டல் கோஸ்ட்' என்ற பத்திரிகையில் கூறியுள்ளார்.  அவர்கள் அங்கு குடியேறியவுடன் அவர்களது, 600 ஆண்டுகள் பழமையான குடும்ப ஆவணங்கள், ஒரு தீ விபத்தில் சாம்பலாயின. சில நாட்களுக்குப் பின், பிராடி ஒரு படகில் தனது வீட்டருகில் அடையாற்றில் பொழுது போக்கச் சென்று கொண்டிருக்கையில், படகு கவிழ்ந்து அவர் அங்கேயே மூழ்கி இறந்தார். தாளாத துயரத்தில் அவரது மனைவி அங்கிருந்து வேறு வீட்டிற்குச் சென்றுவிட்டார். கடந்த, 1866ம் ஆண்டில் ஜான் மெக்கைவர் என்பவர் இங்கு குடியேறினார். 1866 டிச., 23ம் தேதி அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட இவ்வீட்டிற்கு கர்னல் டெம்பிள் என்பவர் விருந்தாளியாக வந்திருந்தார். அவர் மெக்கைவரின் இரு குமாரிகளையும் அழைத்துக் கொண்டு, கேப்டன் ஹோப் ஸ்கட்மோர் போஸ்டாக் என்பவருடன் ஒரு படகில் உல்லாசமாகச் சென்றார். ஆனால் அடையாற்றின் துரோகத்தால் (அப்படித்தான் அவர்கள் கருதினர்) அந்த படகு கவிழ்ந்ததில் அடையாற்றின் பசிக்கு, போஸ்டோக் தவிர மற்றவர்கள் விருந்தாகினர். அன்றிலிருந்து அந்த மாளிகை பேய் மாளிகையாகிவிட்டது! இன்று பிராடீஸ் கேசில் என்ற பெயர் மாற்றப்பட்டு, தென்றல் என்ற பெயரில், இசைக் கல்லுாரி செயல்படுகிறது [2].

கடந்த, 1700களில் அடையாறுதான் சென்னையின் தெற்கு எல்லையாகத் திகழ்ந்தது. ஆயினும் இரண்டு ஆங்கிலேயர்கள் ஆற்றைத் தாண்டித் தெற்கில் பண்ணை வீடுகள் கட்டினர். 


அடையாற்றின் பாலங்களும், பண்ணை வீடுகளும்





அடையாறு மற்ற நதிகளைப் போல, மலைப் பாங்கான இடத்தில் தோன்றவில்லை. மற்ற நதிகளுக்கு, மூலம், மேல் அல்லது நடுப் பகுதி கீழ்ப் பகுதி என்று மூன்று பகுதிகள் உண்டு. அடையாற்றை அவ்வாறு பிரிக்க முடியாது.

மாறாக மொத்த நீரோட்டமும் கீழ்ப் பகுதியாகவே உள்ளது. அதாவது சமவெளியில் நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரை எடுத்துச் செல்லும் ஒரு நீர்வழித் தடம் தான் அடையாறாக ஓடுகிறது.

மணிமங்கலம் ஏரியில், இதன் துவக்கம் இருந்தாலும், இதன் நீர்வரத்து பல ஏரிகள், குளங்கள்,- முக்கியமாக செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றில் இருந்து தான் துவங்குகிறது.

இந்த ஆற்றின் ஆழம், 0.50 மீ., முதல் 0.75 மீ., வரை உள்ளது. ஆற்றுப் படுகை, 10.50 மீ., முதல் 200 மீ., வரை, இடங்களைப் பொறுத்து பெருகியும் குறுகியும் உள்ளது. வங்காள விரிகுடாவில் கலக்கும் இதன் நீர் பரிமாணத்தில், காலத்திற்கு தகுந்தாற்போல மாறுபடுகிறது. மழைக்காலத்தில் அதிகமாகவும் மற்ற மாதங்களில் குறைவாகவும் இருக்கும்.

பல இடங்களில் ஆழம் மிகக் குறைவாக இருப்பதாலும், கோடையில் முற்றிலும் வற்றியே காணப்பட்டதாலும் இந்த ஆற்றைக் கடக்க, பாலங்கள் எதுவும் காலனி ஆட்சிக்கு முன்னர் கட்டப்படவில்லை.

அவ்வாறு காலனி ஆட்சி ஆரம்ப கட்டத்தில் கட்டப்பட்ட கடவு, உண்மையில் ஒரு பாலமல்ல. 'காஸ்வே' என்று ஆங்கிலத்தில் அறியப்பட்ட இந்த மாதிரியான கடவுகள், தரைப்பாலங்கள் என்றழைக்கப்பட்டன. அவை ஆற்றின் நீர்மட்டத்திற்கு ஆற்றைக் கடப்பதற்குத் தகுந்தாற்போல மாட்டுவண்டிகள் செல்லவும் மனிதர்கள் செல்லவும் பயன்பட்டன. வெள்ளம் வரும் போது அவை நீரில் மூழ்கிவிடும்!

அந்த வகையில் முதல் முறையாக அடையாற்றைக் கடக்கக் கட்டப்பட்ட தரைப்பாலம், 'மார்மலாங்க் காஸ்வே'. 'மார்மலாங்க்' என்பது மாம்பலம் என்பதின் திரிபு. மாம்பலம் என்ற பெயரே மஹாபில்வக்ஷேத்திரம் என்ற பெயரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதற்குச் சரித்திரச் சான்று கிடைக்கவில்லை.


மார்மலாங்க் காஸ்வே (1):
ஆர்மேனியர்கள் (அரண்மனைக்காரர்கள் என்ற வழிமொழிச் சொல்லிலும் அறியப்பட்டவர்கள்) மதராசுக்கு, 1666ம் ஆண்டிலேயே வந்துவிட்டனர். இப்போது அந்த வம்சாவளியில் சென்னையில் அதிகமாக எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.

பெர்ஷியாவிலிருந்து வந்த இந்த வணிகர்கள், மதராஸ் வணிகத்தில், முக்கியமாக விலையுயர்ந்த கற்கள், துணிமணிகள் ஏற்றுமதியில் பங்கு பெற்றனர். 1688ம் ஆண்டில் இருந்து, கம்பெனி வணிகத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர்.

அவர்களில் ஒரு சிறந்த வணிகப் பெருமகன், கோஜா பெட்ரஸ் உஸ்கான் என்பவர். அவர்தான், 1726ம் ஆண்டில், 'மார்மலாங்க்' தரைப்பாலத்தைக் கட்டியவர். அதற்கான சான்று இருமொழிக் கல்வெட்டுச் சாசனமாக இன்றும் காணக் கிடைக்கிறது.

கத்தோலிக்கரான இவர்தான், பரங்கிமலையில் ஏறுவதற்கு வசதியாகப் படிகளும் கட்டியவர். பாலமும் அந்த படிகளும் அவரது சொந்தச் செலவில் அமைக்கப்பட்டன. 'உஸ்கான் அறக்கட்டளை' அவர் உருவாக்கியது தான். அதற்கான ஆவணங்கள் இன்றும் உள்ளன.

அவர், 1751, ஜனவரி 15 அன்று காலமானார்; உடல் வேப்பேரியில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் அன்று கட்டிய அந்த பாலம், 196௬ம் ஆண்டில், முழு பாலமாக மாற்றப்பட்டு, மறைமலை அடிகள் பாலம் என, பெயரும் மாற்றப் பட்டது.

கி.பி., 18ம் நூற்றாண்டில் தரைப்பாலம் கட்டிய பிறகு தான் அடையாற்றைக் கடக்கும் வசதிகள் ஏற்பட்டன. முக்கியமாகக் கத்தோலிக்கர்கள் தான் அந்த பாலத்தைப் பயன்படுத்தினர். ஆங்கிலேயர்கள் அப்போது அந்த வடகரையில், அதிகமாகக் கவனம் செலுத்தவில்லை. வடக்கு, கிழக்குப் பகுதிகள் சையதுகான் என்பவர் கைவசம் வந்தது. அவர் பெயரால், பின்னாளில் சையதுகான் பேட்டையாகிக் காலப்போக்கில் சைதாப்பேட்டையாகப் பரிணமித்தது.


அடையாற்றின் இரண்டாவது பாலம்:
எல்பின்ஸ்டன் என்பவர்,1837- 1842ம் ஆண்டு வரை, மதராசின் கவர்னராக இருந்தார். இவர் தான் மெரீனா கடற்கரையை உருவாக்கியவர். 1840ம் ஆண்டில், அடையாற்றில் இரண்டாவது பாலம் கட்டப்பட்டு, அதற்கு இவரது பெயரும் சூட்டப்பட்டது. இந்த பாலம் தான், 1973ல், 58 லட்சம் ரூபாய் செலவில், திரு.வி.க., பாலமாக மாறியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த பாலத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு, விரிவாக்கப்பட்டது. பழைய பாலம் இன்றும் உள்ளது.

கடந்த, 1876- 78 காலகட்டத்தில் ஒரு பெரும் புயல் மதராசைத் தாக்கியபோது பழைய பாலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. பாலத்தின் ஒரு தூண் புயலால் தகர்க்கப்பட்டது.





கடந்த, 1840ம் ஆண்டு வரை, அடையாற்றின் வடபகுதியில் தான் பண்ணை இல்லங்கள் கட்டப்பட்டன. கைமாறி விட்ட வீடுகளில் பல, இப்போது அரசுக்குச் சொந்தமாக உள்ளன. சில, தனியார் வசமுள்ளன. இன்று போட்கிளப் இயங்குமிடம், 1892ம் ஆண்டு வரை ஒரு ஆங்கிலேயருக்குச் சொந்தமான பண்ணை வீடாகத்தான் அடையாற்றை ஒட்டி இருந்தது.

மற்றொன்று 'யெர்ரோலைட்' என்ற பெயர் கொண்டது. இன்று அங்குதான் ஆந்திர மஹிள சபா உள்ளது. சற்றே வடபுறம் இருந்த, 'பக் ஹவுஸ்' இப்போது, சத்ய சாய்பாபா பிரார்த்தனை மையமாக செயல்படுகிறது.

இந்த பாலம் கட்டிய பின், அடையாற்றின் தெற்குப் பகுதி ஆங்கிலேயர்களின் ஆவலைத் தூண்டியது. அவ்வாறு தெற்குக் கரையில், கடற்கரையருகில் கட்டப்பட்ட இல்லங்களில் முக்கியமானது, 27 ஏக்கரில், ஹட்டல்ஸ்டோன் தோட்டம். 1780ம் ஆண்டில், ஜான் ஹட்டல்ஸ்டோன் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. அதே போல தென்கரையில், சிறிதே மேற்கில், எல்பின்ஸ்டன் தோட்டம் உருவானது.

ஆக இந்த இரண்டு கட்டடங்கள் தான், எல்பின்ஸ்டன் பாலத்தின் தெற்கில் இரு மருங்கிலும் இருந்தன. வேறு பெரிய வீடுகள் எதுவும் கிடையாது. 19ம் நூற்றாண்டில், அன்றைய அரசு அலுவலகங்கள் உதகமண்டலத்திற்கு மாற்றப்பட்டன. அதனால், கேட்பாரற்று இருந்த இந்த தோட்ட வீடுகளும், முதல் வாய்ப்பு கிடைத்தபோது விற்கப்பட்டன.


தியாசபிகல் சொசைட்டி:
வரலாறு எதிர்பாராத திருப்பங்களை தன்னுள் அடக்கியுள்ளது. அதில் ஒன்று அடையாறு தியாசபிகல் சொசைட்டி மதராசுக்கு வந்த நிகழ்வு.

அதன் துவக்கம் அமெரிக்காவில். ரஷ்யப் பெண்மணியான ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கியும், கர்னல் ஹென்றி ஆல்காட் என்பவரும், தியாசபிகல் சொசைட்டி எனப்படும் பிரம்மஞான சபையை அமெரிக்காவில், 1875ல் நிறுவினர்.

இந்தியாவில் அந்த சபையின் தலைமையகத்தை நிறுவ நாட்டம் கொண்ட அவர்கள், ஒரு இடத்தை தேடிக் கொண்டிருந்தனர். பம்பாய், காசி முதலிய இடங்களில் சில நாட்கள் கழித்த பின், காசியிலிருந்து மதராஸ் வந்த அவர்கள், ஹட்டல்ஸ்டோன் கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போதைய நிலையில், ஹட்டல்ஸ்டோன் தோட்டம் இயற்கையின் சொல்லொணா அழகுடையதாய் இருந்திருக்க வேண்டும். அமைதியான சுற்றுச்சூழலையும் அழகையும் ஒரு பெரிய ஆலமரத்தையும் தன்னுள் கொண்டிருந்த அந்த பகுதி, மேலை நாட்டினரை ஈர்க்கும் தன்மையுடையதாகவும் இருந்தது.

அப்போது சிறிது விரிவாக்கப்பட்டு, மொத்தமாக, 30 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டிருந்த அந்த பண்ணையில் இரு வீடுகளும் இருந்தன. அவற்றின் மதிப்பு அன்று, 600 சவரன் அதாவது இந்திய மதிப்பில், 8,500 ரூபாய் என்று தெரிந்து கொண்ட இருவரும், சற்றும் தாமதியாமல், வாங்கி விட்டனர். பத்திரம், 1882, நவம்பர் 17ம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டது. அதை முடித்துக் கொடுத்தவர் இந்திய சபை உறுப்பினர் பி. அய்யலு நாயுடு என்பவர்! அந்த நாள் தான் இன்றும் சபையின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், 20ம் நூற்றாண்டில் அதன் பரப்பளவு, 250 ஏக்கராக ஆகிவிட்டது. மற்றும் பல கட்டடங்களும் கட்டப்பட்டன. பல தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன. அவை ஆல்காட், பெசன்ட், தாமோதர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன.

இதனால் உண்டான மிகப்பெரிய பயன் என்னவெனில், அடையாறு டெல்டா நன்கு பராமரிக்கப்பட்டது. அங்கு பெரும் கான்கிரீட் கட்டடங்கள் எழுப்பப்படவில்லை ஆதலால். பறவைகள் சரணாலயமும் காக்கப்பட்டது. சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டது. இல்லையெனில் அந்த பகுதியும் அதன் வடகரையைப் போல, முற்றிலும் பாழாகியிருக்கும்.

அதேபோல சற்றே மேற்கில், அடையாற்றின் தென்கரையில், 'எல்பின்ஸ்டன் பார்க்' என்ற ஒரு தோட்ட வீடும் இருந்தது. அதன் பரப்பளவு அந்த காலத்தில், 158 ஏக்கர். ஆற்றை நோக்கிய ஒரு பெரிய பங்களாவும் இருந்தது.


காந்தி நகர்:
அயர்லாந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மதராசில், 1875ல் துவக்கப்பட்ட ஒரு நிறுவனம், 'பேட்ரீஷியன் பிரதர்ஸ்'. டாக்டர் பென்னலி என்ற மதராசின் அன்றைய ஆர்ச் பிஷப், இவர்களை கத்தோலிக்க அனாதை நிறுவனத்தை பராமரிக்க அழைத்தார். சகோதரர் பால் ஹ்யூஜஸ் மற்றும் சகோதரர் பிண்டன் பார்க்கின்சன் என்ற இரு அயர்லாந்து நாட்டவர், இந்தியா வந்தனர்.

அந்த நிறுவனம் ஆர்மேனியத் தெருவில் இயங்கிக் கொண்டிருந்தது. அதற்காக பெரிய இடம் தேடிக் கொண்டிருந்த செயின்ட் பேட்ரிக் சொசைட்டிக்கு, இந்த, 1158 ஏக்கர் நிலமும் பங்களாவும், 1885, ஜூலை 1ம் தேதி அன்று ஆங்கிலேயரால், விற்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த, ஆர்ச் பிஷப்புடன் நேர்ந்த சச்சரவால் பரப்பளவு குறைக்கப்பட்டது.

சிறு சிறு பகுதிகளாக விற்கப்பட்டு பின்னர் காந்தி நகர் கட்டட சொசைட்டிக்கு பெரும் பகுதி விற்கப்பட்டது. அப்படி சென்னையில் சுதந்திரத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட முதல் புறநகர்ப் பகுதி தான் காந்தி நகர்.

இன்றும் செயின்ட் பேட்ரிக் பள்ளி வளாகத்தில், பழைய ஆங்கிலேயர் கட்டிய விடுதி அப்படியே பராமரிக்கப்படுகிறது. அதற்கு அருகில் அடையாற்றங்கரையில் இக்கட்டடத்தின் வரலாறு கூறும் கல்வெட்டு, 1950களில் ஏற்பட்ட மாற்றங்களால் மறைந்து விட்டது.





[1] Madras Tercentenary Volume 1939 page 61[2] Madras tracing the history from 1639 K. R. A. Narasiah page 206 (கட்டுரையாளர் - எழுத்தாளர், ஆய்வாளர்)


நன்றி:  தினமலர்



___________________________________________________________
  

Mr. K R A Narasiah
narasiah267@gmail.com 
___________________________________________________________
 


No comments:

Post a Comment