-- முனைவர் க. சுபாஷிணி
தமிழர்களின் வீரத்திற்கும் ஆட்சித் திறத்திற்கும் ஓர் அடையாளம் மாமன்னர் இராஜேந்திர சோழன்
காணொளி
சிங்கப்பூர் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகம் நடத்திய மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடித்திருவாதிரையை அரசு விழாவாக்கிய தமிழக அரசுக்குப் பன்னாட்டுத் தமிழர்களின் பாராட்டுவிழா நிகழ்ச்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் சார்பில் முனைவர் க. சுபாஷிணி வாசித்த வாழ்த்துரை:
இணைய வெளி அவையில் இணைந்திருக்கும் சான்றோர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். கிபி 11ம் நூற்றாண்டில் தமிழர்களின் வீரத்தையும் ஆட்சித் திறத்தையும் இன்றளவும் பறைசாற்றும் ஓர் அடையாளம் மாமன்னன் ராஜேந்திர சோழன்.
கங்கை கொண்ட சோழீஸ்வரத்தில் மாமன்னன் ராஜேந்திரச் சோழன் அரியணை ஏறிய ஆயிரமாண்டான 2014ம் ஆண்டு முதல் திரு.கோமகன் தலைமையிலான கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமமும் ஊர் மக்களும் இந்நாளை விழாவாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
ஆடித் திருவாதிரை நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம் பிடிக்கும் ஒரு நாள். தனக்கு நிகரில்லா ஒப்பற்ற ஆளுமை பொருந்திய ராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரைத் திருநாள். இந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தொல்லியல் துறை அமைச்சர் ,மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் ஆகியோருக்கு இத்தருணத்தில் பாராட்டுக்களைப் பதிவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அவரது ஆட்சிக் காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் எனப் படம் பிடித்துக் காட்டுகின்றன. தனது தந்தை ராஜராஜ சோழனின் அடியொற்றி கங்கை வரை வெற்றி கண்டு சோழ அரசின் நில எல்லையை மேலும் விரிவாக்கி வெற்றி கண்டவன் ராஜேந்திர சோழன். அதுமட்டுமன்றி அன்றைய மலாயாவின் கடாரத்திற்கும் தனது படைகளை அனுப்பி கடல்கடந்து தமிழ் அரசை நிலைநாட்டியவர் மாமன்னன் ராசேந்திரன்.
ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் காணப்படும் கங்கை படையெடுப்பில் அவரது படைகள் வென்ற ஊர்களாக இன்றைய சட்டீஸ்கர் மாநிலத்தின் சித்திரக்கூடா நகரம், பீகார் மாநிலத்தில் உள்ள மதுரா, கோசலை நாடு அதாவது இன்றைய ஜார்கண்ட் மாநிலம் , ஒடிசா மாநிலத்தின் பஞ்சப்பள்ளி, காஞ்சம் மாவட்டம், ஒட்டவிஷயம், தக்கணலாடம் அதாவது இன்றைய பீகாரின் ஒரு பகுதி, மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியான தண்டபுத்தி ஆகிய பகுதிகளும் அடங்கியிருப்பதை அடையாளம் காண்கிறோம்.
அண்மையில் நான் நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழக நூலகத்தின் அனுமதி பெற்று பெரிய லைடன் மற்றும் சிறிய லைடன் செப்பேடுகளை ஆய்வு செய்து வந்தேன். இவை ஆனைமங்கலம் செப்பேடுகள் என்றும் அறியப்படுகின்றன. அதில் பெரிய லைடன் செப்பேடுகள் எனப்படுபவை ராஜேந்திரன் காலத்தில் எழுதப்பட்டவை. 21 செப்பேடுகளைக் கொண்டது இது. ராஜேந்திர சோழனின் அரசு முத்திரை போடப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் பரம்பரையை விவரிக்கும் மிக முக்கிய ஆவணம் இது என்பது தமிழ்நாட்டு வரலாற்று அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்றே. ஆடித் திருவாதிரை நாளை அரசு விடுமுறையாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு இந்த லைடன் செப்பேடுகளை மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்க்கும் பெரும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்று இத்தருணத்தில் வேண்டுகோள் முன்வைக்கின்றேன்.
இந்தப் பாராட்டு விழாவை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் சிங்கப்பூர் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகத்திற்கும் அதன் செயற்குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
-- முனைவர்.க.சுபாஷினிதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.
No comments:
Post a Comment