Thursday, August 12, 2021

மிகப்பெரிய எழுத்துகள் கொண்ட மறுகால்தலை தமிழிக் கல்வெட்டு



 -- வே.சிவரஞ்சனி


அறிமுகம்:
தமிழகத்தில் பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புகள் கொண்ட கல்வெட்டுகள் நூற்றுக்கும் மேல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பல கல்வெட்டுகள் தன்னகத்தே சிறப்பு கொண்டவை. அவற்றில் ஒன்று மறுகால்தலையில் உள்ள தமிழிக் கல்வெட்டு. 

அமைவிடம்:
திருநெல்வேலியிலிருந்து சீவலப்பேரி வழியாக 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது மறுகால்தலை. முன்பு ஒரு காலத்தில் இந்த ஊருக்குச் செல்லும் சாலை தான் திருநெல்வேலியில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் பெருவழியாக  விளங்கியது. இவ்வூரின் அருகில் தான் தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. குன்றுகள் நிறைந்த இவ்வூரில் பூவிலுடையார் மலை என்று அழைக்கப்படும் குன்றின் மேற்குப் பக்கத்துத் தரையில் குகை ஒன்று உள்ளது. படுக்கைகளுடன் காணப்படும் இக்குகை பஞ்ச பாண்டவர் படுக்கை என மக்களால் கூறப்படுகிறது. இந்த குகையின் நெற்றியில் அமைந்துள்ள காடியின் கீழ் ஒரு தமிழிக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

Marukalthalai inscription1.jpg

தமிழிக் கல்வெட்டு:
இக்கல்வெட்டு முதன்முதலாக 1906 இல் அப்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஹெமைடு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு ஒரே வரியில் ஆழமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 

Marukalthalai inscription2.jpg

கல்வெட்டின் வாசகம்:
"வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம் "(தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை). இதனை,
"வேண் கோஸிபன் குடுபிதகல காஞ்சணன்" என்று கிருஷ்ண சாஸ்திரி அவர்களும்,
"வேண் கோஸிபன் குடுபித கல் காஞ்சனம்" என்று சுப்பிரமணிய அய்யர், நாராயணராவ், டி.வி.மகாலிங்கம் ஆகியோரும்,
"வெண் காஸிபன் கொடுபித கல் கஞ்சணம்" என்று இரா.நாகசாமி மற்றும் மயிலை.சீனி அவர்களும்,
"வெண் காஸிபன் குடுபித கல் கஞ்சணம்" என்று ஐ.மகாதேவன் அவர்களும் வாசித்து உள்ளதாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2006 இல் வெளியிட்ட தமிழ் - பிராமி கல்வெட்டுகள் என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
நான் இக்கல்வெட்டை நேரில் சென்று காணுகையில்,
"வேண கோஸிபான குடுபிதா கால காஞசாணம" (கல்வெட்டில் உள்ளபடி)
"வெண் கோஸிபன் குடு(ப்)பி(த்)த கல் கஞ்சணம்" என வாசிக்க முடிந்தது.

இக்கல்வெட்டு, ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் சவாலாக அமைந்திருந்தது. அதற்கு இக்கல்வெட்டு குறிப்பிடும் "கல் கஞ்சணம்" என்ற சொல்லே காரண‌ம்.  தோராயமாக வெண் காஸிபனால் இந்த குகையில் ஒரு கட்டட அமைப்பு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்று பொருள் கொள்ளப்பட்டதே தவிர, கல் கஞ்சணத்திற்கான உரிய பொருளை ஆய்வாளர்களால் அறிய இயலவில்லை. இந்நிலை ஒரு நூற்றாண்டுக்கும் மேல்  நீடித்தது. 

2017 இல் ஐ.மகாதேவன் அவர்கள் இச்சொல்லின் பொருள் முடிச்சை அவிழ்த்தார். அதாவது, தமிழில் கசணை என்ற பெயர்ச்சொல்லுக்கு "ஈரம், ஈரப்பதம்" என்றும் கசி என்ற வினைச்சொல்லுக்கு "ஈரம் கசிந்து வழிதல்" என்றும் பொருள். மேலும் கஸி என்ற கன்னடச் சொல்லுக்கு "வழிந்து ஓடுதல்" என்று பொருள். இவற்றோடு கஞ்சணம் சொல்லை ஒப்பிட்டு நோக்கினால் "நீர்க் கசிவு வழிந்து ஓடும் தடம்" எனும் பொருள் நேரடியாக கிடைக்கிறது. ஆதலால் இக்கல்வெட்டில் உள்ள கல் கஞ்சணம் என்ற சொல் குறிப்பது குகையின் நெற்றியில் வெட்டப்பட்டுள்ள சல தாரையையே ஆகும். கஞ்சணம் என்ற சொல்லின் முன் கல் என்ற அடைமொழி இட்டதற்குக் காரணம் உண்டு. பெய்யும் மழைநீர் வீட்டின் உள் கசியாதவாறு மேற்கூரையில் சலதாரை ஓடுகளை அமைப்பதுண்டு. வீட்டுக் கழிவுநீரைச் சுடுமண் கலங்கள், குழாய்கள் கொண்டு பழங்காலத்தில் வெளியேற்றப்பட்டதை அகழாய்வு உணர்த்துகிறது. 

இந்த கஞ்சணங்களில் இருந்து இது வேறுபட்டது என்பதை உணர்த்தத்தான் கல்வெட்டில் கல் என்ற அடைமொழி கொண்டு கஞ்சணம் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்தார். இப்போது கல்வெட்டின் பொருளைப் பாருங்கள், "வெண் காஸிபன் என்பவரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட நீர்வடி விளிம்பு" என்பதே இக்கல்வெட்டு கூறும் செய்தி. கல் கஞ்சணம் பற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு அவர்கள் என்னிடம் கூறியதாவது, கஞ்சம் என்ற சொல்லுக்கு நீர் எனவும் பொருள் உண்டு. வாயின் வளைந்த மேற்பகுதி அண்ணம், அணம் எனப்படுகிறது. அவ்வகையில் குகையின் வளைந்த மேற்பகுதியையும் காரணப் பெயராக அணம் என்ற சொல் குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே குகையின் வளைந்த மேற்பகுதியில் நீர் வடியாமல் தடுக்க வெட்டப்பட்ட காடியை, கஞ்சணம் என்ற சொல் குறிப்பதாகக் கொள்ளலாம். இது கல்லில் அமைக்கப்பட்டதால் கல் கஞ்சணம் எனப்பட்டுள்ளது.

வெண் காஸிபன் - வெண் காசிபன் இப்பெயர் ஆசீவகத்துடன் தொடர்புடையதாக பேராசிரியர் நெடுஞ்செழியன் கருதுகிறார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, காயன் > காயிபன் > காசிபன் அதாவது காயன் என்ற பெயர்ச்சொல்லில் இருந்து காயிபனும் பிறகு காசிபனும் தோன்றியதாகக் கூறுகிறது. இம்மூன்று பெயர்ச்சொற்களும் ஒரே பொருள் கொண்டவை. காய் என்ற வினைச்சொல்லுக்கு ஒளிர்தல், பிரகாசித்தல் என்று  பொருள் உண்டு.

எனவேதான், நாம் நிலா ஒளிர்தலை நிலா காய்கிறது என்கிறோம். அப்படியென்றால் நிலா ஒளி வீசுகிறது, பிரகாசிக்கிறது என்று பொருள். இது பெயர்ச்சொல்லாக வரும்போது ஒளியன், ஒளி உடையவன், பிரகாசன், பிரகாசிப்பவன் என வரும். ஆகவே வெண் காசிபன் என்ற சொல்லுக்கு வெண்மையான ஒளியை உடையவன் (அ) பிரகாசத்தை உடையவன் என்று பொருள் கூறலாம். இதுபோல் வெண் என்ற முன்னொட்டு கொண்ட சங்ககாலப் புலவர் வெண்கண்ணனார், வெண்கொற்றன், வெண்பூதன்  போன்று சில பெயர்கள் உள்ளன.  சங்ககாலப் புலவர்களுள் ஒருவர் பெயர் காசிபன் கீரன். அத்தியிடம் தேவர்களையும் திரியிடம் அசுரர்களையும் பெற்ற ஒரு முனிவரின் பெயர் காசிபனார். மேலும் தமிழிக் கல்வெட்டுகளில், அழகர்மலை கல்வெட்டில் உள்ள கஸபன், யானைமலை கல்வெட்டில் உள்ள அரட்டகாயிபன், புகளூர் கல்வெட்டில் உள்ள செங்காயபன், தொண்டூர் கல்வெட்டில் உள்ள இளங்காயிபன் ஆகிய  பெயர்கள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன.

கல்வெட்டின் தனிச்சிறப்பு:
1. ஒரு அடிக்கும் மேல் உயரம் கொண்ட எழுத்துகள். தமிழி கல்வெட்டுகளிலேயே இந்த கல்வெட்டு எழுத்துகள் தான் அளவில் பெரியவை. 
2. இங்கு அசோகன் பிராமி எழுத்தான "ஸி" பொறிக்கப்பட்டு உள்ளது.
3. தமிழ்நாட்டில், ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி குகைக் கல்வெட்டுகள் ஏதோ ஒரு பழங்கால எழுத்துகளால் வெட்டப்பட்டுள்ளன என்றே ஆய்வாளர்கள் கருதினர். இந்த கல்வெட்டைக் கண்டறிந்த பின்பு தான் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளதென முதன் முதலாக தெரிய வந்தது. 

முடிவுரை:
இக்கல்வெட்டு எழுத்துகள் சீராக இல்லாமல் பெரிதும் சிறிதுமாக ஒழுங்கற்று அமைந்துள்ளன. தரைப்பகுதிக்கும் கல்வெட்டுக்கும் இடையில் ஏறக்குறைய 40 அடி உயரம். ஆதலால் படிப்பதற்கு ஏதுவாக பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கருதலாம். இப்போது தரைப்பகுதி உயர்த்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு அமைந்துள்ள பகுதி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.


உதவியவை:
1.  தொல்லியல் துறை தகவல் பலகை
2.  ஆவணம் இதழ் 28, தொல்லியல் கழகம், 2017
3.  தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2006.


sivaranjani.jpg
கட்டுரையாளர்:
வே.சிவரஞ்சனி, rmdsivaranjani2021[at]gmail.com
முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு, சேதுபதி அரசு கலைக்கல்லூரி, இராமநாதபுரம்.
ஒருங்கிணைப்பாளர்:
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.

-----


No comments:

Post a Comment