-- ச.பாலமுருகன்
வரலாற்று ஆர்வலரும் புகைப்படக் கலைஞருமான திருவண்ணாமலை வெற்றிவேல் அவர்கள் மண்ணில் புதைந்தவாறு இருந்த புகைப்படத்தை அனுப்பி அதன் இருப்பிடத்தையும் அனுப்பினார். புகைப்படத்தைப் பார்த்தால் பழமையான நடுகல் என்று தெரிந்தது. மேலும் அதன் தலைக்கு மேலே காலியான வெற்றிடம் போல இருந்தது. கல்வெட்டு இருக்கிறதா என கேட்க, ஆம் என்றார் வெற்றிவேல். எனக்குச் சந்தேகமாக இருந்தது. இருந்தாலும் நேரில் சென்று பார்த்துவிடலாம் பக்கம் தானே என்று சென்றேன். துணைக்கு எனக்குத் தெரிந்த காஞ்சி வெங்கடாசலம் அவர்களை அழைத்துக்கொண்டேன்.
வெற்றிவேல் கூறிய பள்ளியின் எதிரே உள்ள நடுகல்லை ஆய்வுசெய்த போது மேற்புறம் 5 வரிகளில் கல்வெட்டு இருந்தது. ஆச்சர்யமும் சந்தோஷமும் கலந்த நிலையில் அங்கிருந்த ஊர் மக்களிடம் இந்த நடுகல்லின் முக்கியத்துவத்தைக் கூறினேன். உடனே ஆளுக்கு ஒரு கைபிடிக்க பல நாட்களாக மண்ணில் புதைந்திருந்த நடுகல் தூக்கப்பட்டு, அருகில் இருந்த புளியமரத்தின் கீழ் நிற்கவைக்கப்பட்டது. அப்போது பார்க்கும் போது பின்பக்கமும் எழுத்துக்கள் இருப்பது தெரியவந்தது. மாலை நேரம் ஆனாலும் அப்போதே அந்த எழுத்தைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடுகல்லை சுத்தம் செய்து மாவு பூசிப் படியெடுத்துப் பார்த்தால் இந்த நடுகல் முதலாம் பராந்தகன் காலத்திய பல்குன்றக்கோட்டத்து கீழ்வேணாட்டு காந்தளூர் கூற்றத்து என்று கல்வெட்டு முன்பக்கம் இருந்தது. பின்பக்கம் பெருமளவு சிதைந்து இருந்தது. புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.
அதன் பிறகு மதன், பழனிச்சாமி ஆகியோர்களுடன் மீண்டும் சென்று அந்த நடுகல்லை, அருகிலேயே அனைவரும் பார்க்கும் வண்ணம் நிலையாக ஒரு தளம் அமைத்து நிற்கவைக்கப்பட்டது. இந்த நடுகல்லில் சுவாரஸ்யம் என்னவென்றால் சாலை ஓரமாக சுமார் 20 ஆண்டுகளாக உள்ளது. ஆனால், இதை யாரும் பார்க்கவில்லை அந்த ஊரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் வெற்றிவேலுக்குத் தகவல் அனுப்ப வெற்றிவேல் எனக்குச் சொல்ல அந்த நடுகல் மீண்டெழுந்தது. இதற்கு முன்னர் இந்த நடுகல் கூட்டுறவு கடை கட்ட பள்ளம் எடுக்கும் போது மண்ணுக்குள் இருந்துள்ளது. அதை எடுத்து சாலையின் மறுபுறம் போட்டுவிட்டனர். வரலாறு எப்படியோ தன்னை மீட்டுக்கொள்ளும் என்பது போல, அந்த வீரன் மிகவும் சிரமப்பட்டுப் பல ஆண்டுகளாக மண்ணுக்குள் உள்ளேயும் 20 ஆண்டுகளாக சாலையின் ஓரம் கேட்பாரற்றும் கிடந்தான். இன்று உற்சாகமாக வில்லும் வாளும் கொண்டு காட்சியளிக்கிறான். இந்த காட்சியைப் பார்ப்பது ஒன்றே போதும் எங்களை போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு.
இந்த நடுகல் கல்வெட்டில் சுமார் 5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டது. இதில் உள்ள வீரனின் உருவம், இடது கையில் வில்லும் வலது கையில் வாளும் கொண்டு போருக்குத் தயார் நிலையில் உள்ளது போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. இதில் மேற்பகுதியில் 5 வரியிலும் பின்பக்கத்தில் 6 வரியிலும் கல்வெட்டுகள் உள்ளன.
இந்த கல்வெட்டை படித்தளித்த கல்வெட்டு அறிஞர் சு. ராஜகோபால், இந்த கல்வெட்டு மதிரை கொண்ட பரகேசரி என்ற பட்டம் உடைய பராந்தக சோழனின் முப்பத்துமூன்றாவது ஆட்சியாண்டில் (கி.பி. 940) வெட்டப்பட்டது என்றும் இதில் பல்குன்றக்கோட்டத்து கீழ்வேணாட்டு காந்தளூர் கூற்றத்தைச் சேர்ந்த அதிராக மங்கலம் என்ற ஊரில் நடைபெற்ற ஒரு போரில் ஈடுபட்டு கலிமுகற் பெருங்கருமான் மருமகன் மலையன் என்பவர் இறந்துள்ளான் என்று அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
அரிதாரிமங்கலம் நடுகல் கல்வெட்டு
1. ஸ்ரீமதிரை கொண்ட கோப்ப
2. ர கேசர பந்மற்மக்கி யாண்
3. டு முப்பத்து மூன்றாவது ப
4. ல் குன்றக் கோட்டத்துக் கீழ் வே
5. ள் நாட்டு காந்தளூர்க் கூற்றத்து அ
6. திரா…
7. கலிமுகற் பெருங்கருமான் மரு
8. மகன் மலையன் அதிராக மங்
9. கலத்து……யப்பன்
10. மங்க…
11. ….
12. ….
இதில் குறிப்பிடும் அதிராக மங்கலம் என்பதே தற்போது அரிதாரிமங்கலம் (இடம்: 12°23'53.1"N 78°59'08.3"E) என்று வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீரனின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நடுகல் ஒருகாலத்தில் மக்கள் வழிபாட்டில் இருந்துள்ளது. பின்பு ஏதோ காரணத்தால் பூமியில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினர் இதை மீட்டு சீரமைத்து மக்கள் பார்வைக்கும் வழிபாட்டிற்கும் ஏற்றவாறு அமைத்துக் கொடுத்துள்ளனர். இந்த கல்வெட்டை படித்தளித்த சு. ராஜகோபால் கல்வெட்டறிஞர் அவர்களுக்கும், இவையனைத்தும் சாத்தியமாக்கிய வெற்றிவேல், விக்னேஷ், அரிதாரிமங்கலம் ஊர்மக்களுக்கும் அன்பான நன்றி.
------
No comments:
Post a Comment