-- என்.சரவணன்
முன்னுரை:
எனது தொடர்ச்சியான சிங்கள வாசிப்பு, தேடல், அறிதல், புரிதல் என்பனவற்றைத் தொடர்ந்து ஒரு முடிவுக்கு வர முடிந்தது. சிங்கள இதிகாசங்கள், புராணங்கள், காப்பியங்கள் என்பனவற்றை அத்தனை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. அவர்களிடமும் வளர்ச்சிபெற்ற வளமான ஏராளமான இலக்கியங்கள் உண்டு. இதைச் சொல்லும்போது புரையோடிப்போன நமது தமிழ்மணம் சற்று கசப்பாகத் தான் எதிர்கொள்ளும் என்பதை நான் அறிவேன். ஆனால் நமது விருப்புவெறுப்புகளுக்கப்பால் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதன் பொருள் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தைக் குறைத்து மதிப்பிடுவதென்பதல்ல. அதேவேளை நம்மைச் சுற்றியுள்ள தமிழ்த்தேசிய உணர்வானது கண்மூடித்தனமாகவும், வெறுப்புணர்வுடனும் இதை எடுத்த எடுப்பில் மறுக்கும் இயல்பைக் கொண்டிருக்கிறது என்பதை நாம் இனங்கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த கண்மூடித்தனமான மறுப்புணர்வு; உண்மையை இனங்காண தடையாக இருப்பதுடன், பகுத்தறிவுக்கு இழுக்கானதாகவும், ஆய்வு முறைக்கு எதிரானதாகவும் ஈற்றில் ஒரு சரியான கருத்துருவாக்கத்தை எட்டத் தடையாகவும் ஆகிவிடுகிறது. இந்த நிலைமை நமக்கு மட்டுமல்ல தமிழ் இலக்கிய பாரம்பரியத்தையும், உள்ளடக்கத்தையும், அதன் வரலாற்றையும், இயல்பையும் அறியாது போயிருக்கிற சிங்களச் சூழலுக்கும் முற்றிலும் பொருந்தும்.
சிங்கள இலக்கியங்கள்:
சிங்கள இலக்கிய பாரம்பரியத்தின் நீட்சிக்கு அந்த சிங்கள இனம், சிங்கள மொழி என்கிற காரணிகளோடு முக்கியமாக பௌத்த மதமரபின் செல்வாக்கும் பெரும் பங்காற்றி வந்திருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக பெரும் இலக்கியங்களெல்லாம் பௌத்த விகாரைகளில் இருந்து தான் எழுதப்பட்டுள்ளன. பௌத்தத் துறவிகளால் தான் எழுதப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தளவில் ஈழத்து தமிழ் இலக்கியங்களைவிட சிங்கள இலக்கியப் பாரம்பரியம் அதனால் தான் வலுவானதாகவும், அளவில் பன்மடங்காகவும் இருப்பதைக் காண முடிகிறது. பௌத்தத் துறவிகளின் பணியே விகாரைகளிலும், காடுகளிலும், குகைகளிலும் இருந்தபடி தியானிப்பதும், போதிப்பதும் அவர்களின் அன்றாட கடமைகளில் அங்கமாக இருந்தாலும் கூடவே எழுதுவதும், வாசிப்பதும் இன்னொரு முக்கிய அங்கமாக நாளாந்தம் இருந்து வந்திருக்கிறது. எனவே ஏராளமாக எழுதிக் குவித்தார்கள். ஓரிடத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி அவற்றின் முக்கியத்துவம் கருதி வேறு விகாரைகளில் மீளவும் பிரதிசெய்து, படி எடுத்து வைக்கும் மரபு இருந்தது. எனவே தான் மகாவம்சத்தின் பிரதி வேறு பல விகாரைகளிலும் கண்டெடுக்கப்பட்டன. அதுபோல பௌத்த 'திரிபிடக' வின் பிரதிகள் பல நாடெங்கிலும் இருந்து கிடைத்தன.
தமிழில் சைவக் கோவில்களில் இருந்திராத பாரம்பரியம் இது. இலங்கையில், சமண, ஜைன, பௌத்த மரபில் மாத்திரமே இப்படி வாசிப்பும், எழுத்தும் அவற்றின் இன்றியமையாத மரபாக இருந்து வந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இனத்துவ முறுகலால் இந்த குட்டித்தீவின் மண்ணின் மைந்தர்களான தமிழர் – சிங்களவர் இரு சாராரும் பண்பாட்டையும், நாகரிகத்தையும், வரலாற்றையும், இலக்கியங்களையும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளும் மரபைக் கைக்கொள்ளாத கூட்டங்களாக துருவமயப்பட்ட வளர்ச்சிப் போக்கை கடந்து வந்திருக்கின்றனர். இதில் விதிவிலக்குகள் இருக்க முடியும். ஆனால் இங்கு நான் குறிப்பிடுவது 'போக்கு' பற்றியது. உறுதியான மரபு பற்றியது.
இத்தகைய இலக்கிய படைப்புகளின் போது இந்தியாவில் இருந்து வந்த இலக்கியங்களின் பாதிப்பும் இல்லாமல் இல்லை. வட இந்திய பௌத்த ஜாதகக் கதைகள் பல அவற்றின் மூலத்தைக் குறிப்பிடாமலே சிங்களத்தில் சிங்கள இலக்கியங்களாக பதிவாகியுள்ளன. அது மட்டுமன்றி புவியியல் ரீதியில் கிட்டிய தேசமாக தமிழகம் இருந்ததால் இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து தமிழ் மொழி இலக்கியங்களும் சிங்கள இலக்கியங்களில் கலந்திருக்கின்றன. சில இலக்கியங்கள் தமிழ் தான் இதன் மூலம் என்று குறிப்பிட்டாலும் சில தழுவல்கள் தமிழில் இருந்து பெறப்பட்டதாக குறிப்பிட்டதில்லை. பிற்காலத்தில் பன்மொழி அறிந்த அறிஞர்களால் தான் அவற்றின் மூலம் எவையென கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
மகாவம்சத்தில் எல்லாள மன்னனை மகாநாம தேரர் மிகவும் சிறந்த நீதிதவறாத மன்னனாகவும், ஒழுக்கசீலனாகவும் பதிவு செய்திருப்பதைக் காணலாம். அதற்கு சான்றாக அதில் ஒரு கதையுண்டு.
அதாவது நீதி தவறாத எல்லாள மன்னன் தன் படுக்கை அறையில் ஒரு மணியைத் தொங்கவிட்டிருந்தான். அது அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. மன்னனின் மகன் சென்ற தேரால் ஏற்றப்பட்டு கன்று ஒன்று கொல்லப்பட்டதால், நீதிவேண்டி தாய்ப்பசு மணியை ஒலித்தது. நிகழ்ந்ததை அறிந்த மன்னன் தன் மகனையும் அவ்விதமே தேரால் ஏற்றிக் கொல்லுமாறு தீர்ப்பளித்ததாகவும் மகாவம்சம் குறிப்பிடப்படுகின்றது. சிலப்பதிகார காப்பியத்தில் வேறு சில இடங்களிலும் இதே கதை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூலான பழமொழி நானூறு என்னும் நூலிலும் இக்கதை எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. சோழர் காலத்து நூலான சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே மனுநீதிச் சோழன் கதை விரிவாகக் காணப்படுகிறது. மனு திருவாரூரில் இருந்துகொண்டு சோழ நாட்டை ஆண்ட மன்னன். அவன் மகன் தேரில் விரைந்து சென்றபோது துள்ளியோடிய பசுக்கன்று தேர்க்காலில் சிக்கி இறந்தது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் நிகழ்ந்தது அறிந்து பசுவுக்கு நீதி வழங்கும் அறநெறியில் கன்று இறந்தது போலவே தன் மகனைத் தேர்க்காலில் கிடத்திக் கொன்றான் என்கின்றன இந்தக் காவியங்கள். மேலும் சோழ மன்னர் பெருமை கூறுகின்ற இராசராசசோழன் உலா, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா என்பவற்றிலும் இக்கதை வருகிறது. மகாவம்சத்தில் எல்லாளனை சோழநாட்டில் இருந்து வந்த ஒருவனாகவே குறிப்பிடுவதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
அதுபோல சிங்கள காப்பியங்களில் ஒன்றான 'பன்சிய பனஸ் ஜாதகய' (ஐநூற்று ஐம்பது ஜாதகக் கதைகள்) என்கிற நூலில் 'சிபி ஜாதகய' (සිවි ජාතකය) என்கிற ஒரு கதையுண்டு. இந்தக் கதை அப்படியே தமிழில் புறநானூற்றில் உள்ளதாக தொல்லியல் துறை வல்லுனரான பேராசிரியர் ராஜ் சோமதேவ (Prof.Raj Somadeva) மே மாதம் 2021 இல் அளித்த ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிடுவதைக் கவனிக்க முடிந்தது. புறநானூறு கூறும் சிபிச் சக்கரவர்த்தியின் கதையில் ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காக பருந்துக்கு தன் உடலைத் தானமாக கொடுப்பதாகவும் சிங்களத்தில் கூறப்படும் சிபி அரசரின் கதையில் கண்களைத் தானமாகக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது. இப்படி பல சிங்கள இதிகாசக் கதைகளைக் கேட்கும் போது நாமறிந்த தமிழ் இதிகாசக் கதைகளை நினைவூட்டுவதைத் தவிர்க்க இயலாததாக இருக்கும். இவற்றைப் பற்றி பல ஆய்வு நூல்களை பேராசிரியர் சுனில் ஆரியரத்ன சிங்களத்தில் எழுதியிருக்கிறார்.
சிங்களத்தில் வெளியான இந்திய இதிகாசக் கதைகளில் முக்கியமாக இராமாயணத்தைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.
இலங்கையில் இராமாயணம்:
இராமாயணம் பற்றிய தேடல்கள் இலங்கையில் உயிர்த்த காலம் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தான். ஆங்கிலேய அறிஞர்களின் இலக்கிய-வரலாற்றுத் தேடல்களின் மூலம் அது நிகழ்ந்தது எனலாம். ராஜரீக ஆசியக் கழகத்தின் இலங்கைக் கிளையின் சஞ்சிகையில் இது பற்றிய பல விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகளின் சமர்ப்பிப்புகளைக் காண முடிகிறது.
இதேவேளை இலங்கையின் பாட நூல்களில் இராமாயணம் பற்றி இந்தியாவில் நிலவுகிற அதே வான்மீகி இயற்றிய இராமாயணக் கதையின் சுருக்கத்தைத் தான் கற்பித்து வந்தார்கள். ராமனை நாயகனாகவும், சீதையை நாயகியாகவும், சீதையைக் கவர்ந்து கடத்தி வந்து சிறைவைத்து சண்டையிட்ட இராவணனை கயவனாகவும் சித்திரிக்கிற கதை தான் நெடுங்காலமாக சிங்களப் பாடநூல்களில் இருந்தன. இராவணன் ஒரு சிங்கள வீரன் அல்லன் இராவணனுக்கு எந்த மரியாதைப் பெறுமதியும் ஆரம்பத்தில் கொடுக்கப்படவில்லை. ஒரு வகையில், மாற்றான் மனைவியைத் திருடிய திருடனாகவே இராவணன் உருவகப்படுத்தப்பட்டிருந்தான்.
இராவணனின் வீரதீரச் செயல்கள் பற்றியோ, இராவணனின் இராஜ்ஜியம் பற்றியோ, இராவணனின் போர் முறைகள் பற்றியோ, இராவணனின் பறக்கும் வானூர்தி பற்றிய கதைகளோ கூட முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. கணக்கில்கொள்ளப்படவில்லை. ஆனால் இராவணனை சிங்களத் தலைவனாக புனையும் முயற்சிகளை சில தசாப்தங்களாக இலங்கையில் தலைதூக்கியிருப்பதைக் காணலாம். இலங்கை முழுவதும் சிங்கள பௌத்த நாடென உறுதிப்படுத்துவதற்கும், வடக்கு கிழக்குப் பகுதிகளில் இராவணன் பற்றி நிலவும் வாய்மொழி வரலாற்றையும், தொல்லியல் நம்பிக்கைகளையும் சுவீகரிக்க இராவணன் சிங்களத் தலைவனாக இன்று ஆக்கப்பட்டுள்ளான்.
இலங்கையின் பிரபல நாடகாசிரியர் ஜோன் த சில்வா 1886 இல் முதற் தடவையாக இராமாயணத்தை இலங்கையில் மேடையேற்றினார். அந்த இராமாயண நாடகத்தின் பிரதி பல ஆண்டுகளாக மேடையேற்றப்பட்டு வந்தது. அந்த பிரபலமான இராமாயணக் கதை இலங்கையின் சுயத்துக்கு இழுக்கு என்று 'ஹெல ஹவுல' என்கிற இயக்கம் தீர்மானித்தது. இராமாயணத்துக்கு மாற்றாக அவர்கள் 'சக்வித்தி ராவண' என்கிற ஒரு நாடகத்தை இயக்கினார்கள். அது 1946முதன் முதலில் மேடையேற்றப்பட்டது. சிங்கள சமூகத்தில் பிரசித்திபெற்ற இந்த நாடகம் இன்றும் ஆயிரக்கணக்கான தடவைகள் மேடையேற்றப்பட்டு வருகிறது.
இராமாயணத்தின் திரிபு வடிவங்கள்:
பொலநறுவைக்காலத்தில் காணப்பட்ட முக்கிய உரைநடை சிங்கள இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது 'ஜானகிகரண' இது இராமாயணக் கதையின் முழுமையான பிரதியாக இல்லாவிட்டாலும் அதன் தழுவலாகக் கொள்ளலாம்.
இராமாயணத்தைப் பொறுத்தளவில் வான்மீகி எழுதிய மூல இராமாயணத்தைத் தவிர அதையொட்டி தமிழில் கம்பர் எழுதிய இராமாயணத்தை கம்பராமாயணம் என்கிறோம். அதேவேளை இராமாயணமானது இதுவரை 300 க்கும் மேற்பட்ட வித்தியாசமான பிரதிகள் உலகளவில் (குறிப்பாக, தென்னாசிய, தென்கிழக்காசிய பிராந்தியத்தில்) இருப்பதை இன்று காண முடிகிறது. இதைப் பற்றி பல ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியுமுள்ளன. ஆக கம்பரின் இராமாயணம் என்பது அதில் ஒன்று தான்.
சோழப் பேரரசு உட்பட பல இந்திய அரசுகள்; பர்மா, திபெத், ஜாவா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், வங்காளம், இந்தோனேசியா, சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், கம்போடியா, மலேசியா, வியட்நாம் போன்ற தென்னாசிய நாடுகள் வரை ஆக்கிரமித்து ஆட்சி செய்த வரலாற்றை நாமறிவோம். அப்படி அவர்கள் சென்ற இடமெல்லாம் கலாசார, பண்பாட்டு புகுத்தல்களையும் செய்யவே செய்தார்கள். அப்படிப்பட்ட இடங்களில் அன்று மிகவும் பிரசித்திபெற்றிருந்த இராமாயணமும் கொண்டு போய் சேர்க்கப்பட்டதில் நமக்கு ஆச்சரியமிருக்காது. அவர்கள் அங்கே கட்டிய கோவில்களில் இராமாயணக் கதைகளைச் சித்திரங்களாகச் செதுக்கினார்கள். அங்கிருந்த இலக்கிய வடிவங்கள் மூலமும் அந்தக் காவியங்களைப் பரப்பினார்கள். பாரம்பரிய நாட்டார் கதைகள் மூலமும், இலக்கியங்களின் மூலமும், நம்பிக்கைகளின் மூலமும் செல்வாக்கு இராமாயணம் செலுத்தி வருகிறது. மேற்கு நாட்டு நாட்டு அறிஞர்களையும் கலைஞர்களையும் கூட ஈர்க்கிறது, ஏனெனில் இதற்கு ஓர் இலக்கியக் காவியப் பெறுமதி உண்டு என்பது உண்மை. இது மாய, மந்திர, போர், காதல், பழிவாங்குதல் மற்றும் கதாநாயக வழிபாடு என ஈர்க்கிறது.
செவிவழிக் கதைகளாகவும், ஓலைச்சுவடிகளிலும், ஓவியங்களிலும் அவை பதிவுபெற்றன. அப்படி இன்று பல இராமாயண நூல்களை அவர்களின் மொழிகளிலெல்லாம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளிலும் வான்மீகியின் இராமாயணத்தில் இருந்து ஆங்காங்கு வித்தியாசப்படுகிறது உள்ளடக்கத்துடன் பல வெளியாகியுள்ளன.
உதாரணத்துக்கு...
• தெலுங்கில் கோனா புத்த ரெட்டியின் ராமாயணம்,
• தமிழில் கம்பனின் கம்பராமாயணம் (11 -12 ஆம் நூற்றாண்டு),
• அஸ்ஸாமியில் மாதவ கண்டாலியின் சப்தகண்ட ரமாயனா (14 ஆம் நூற்றாண்டு),
• வங்காள மொழியில் கிருத்திபாஸ் ஓஜாவின் கிருதிவாசி ரமாயனா (15 ஆம் நூற்றாண்டு),
• மராத்தியில் ஏக்நாத்தின் பவார்த் ராமாயணா (16 ஆம் நூற்றாண்டு),
• ஒரியாவில், பலராம் தாஸ் 'தண்டி' ராமாயணா(16 ஆம் நூற்றாண்டு),
• அவதியில், துளசிதாஸ் ராம்சரிதமனாஸ் (16 ஆம் நூற்றாண்டு)
• மலையாளத்தில் துஞ்சத்து எழுதச்சனின் ஆத்யாத்மா ராமாயணம்.
என்பவற்றை சிறந்த உதாரணங்களாகக் குறிப்பிடலாம். (1)
இவற்றில் பல பிரதிகள் அப்படியே இராமாயணத்தை முழுமையாக ஒத்தவை அல்ல. இராமாயணக் கதையின் சாயலைக் கொண்ட கதைகளாக பல உள்ளன. உதாரணத்துக்கு இலங்கையில் 'வெஸ்ஸந்தர ஜாதக' (Vessantara Jataka - වෙස්සන්තර ජාතකය), தசரத ஜாதக (Dasaratha Jataka - දසරථ ජාතකය) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை பாளி மொழியில் எழுதப்பட்டவை. அதேவேளை இலங்கை, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, பர்மா போன்ற நாடுகளில் இவை பெரும்போக்கு இலக்கியங்களாக உள்ளன. பாளியில் மட்டுமன்றி உள்ளூர் மொழிகளிலும் உள்ளன.
'தசரத ஜாதகய' நேரடியாக இராமாயணக் கதையில் இருந்து வந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 'பன்சிய பனஸ் ஜாதகய' விலும் இதனை சுருக்கமாக விளக்கியிருக்கிறார்கள். பௌத்த போதனைகளின் வாயிலாக நீள்கின்ற கதையாக இருக்கிறதும் பௌத்த பாணியில் கூறப்படும் பௌத்த இராமாயணங்களாக...
• தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
• அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
• தசரத கதனம் (பாலி, கி. மு. 5)
என்பவை காணக்கிடைக்கின்றன.
அது போல ஜைன இராமாயணங்களாக...
• விமல சூரி : பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
• சங்க தாசர் : வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
• இரவி சேனர் : பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
• குணபத்ரர் : உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
• சுயம்பு தேவர் : பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
• சீலங்கர் : சௌபன்ன மகா புருஷ சரிதம் (பிராக்ருதம், கி. பி.868)
• பத்ரேசுவரர் : ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)
என்பவையும் நம்மால் அடையாளம் காண முடிகிறது,
வேறு நாடுகளில் காணப்படும் இராமாயணங்களை இப்படி வரிசைப்படுத்தலாம்...
• கம்போடியாவில் ரீம்கர்
• தாய்லாந்தில் ராமாகீய்ன்
• லாவோஸில் பிர லாக் பிர லாம்
• பர்மாவில் யம ஸாட்டாவ்
• மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
• இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
• பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
• இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா(Dastan-e-Ram O Sita)
• ஸ்ரீலங்காவில் ஜானகிகரன் (Janakiharan)
• ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
• சீனா, திபெத் யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)
இவ்வாறு இராமாயணத்தின் பல வடிவங்களைப் பற்றிய ஆய்வுகளைத் திறந்துவிட்டதில் ராமானுஜனுக்கு (A.K. Ramanujan) முக்கிய பங்குண்டு. அவர் எழுதிய 'முந்நூறு ராமாயணங்கள்: மொழிபெயர்ப்புகளின் ஐந்து உதாரணங்களும், மூன்று எண்ணக்கருக்களும்' ('Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translations') என்கிற ஆய்வுக் கட்டுரை தான் இதைப் பற்றி ஆய்வுப்பரப்பை மேலும் விரிவுபடுத்தியது எனலாம்.
தசரத ஜாதகய: தசரத ஜாதகயவில் தசரத மன்னனுக்கு மூன்று பிள்ளைகள், இராமன், இலக்குமணன், சீதை. மூத்த இராணியாரின் இறப்பை அடுத்து அடுத்த நிலையில் இருந்த இரண்டாந்தார மனைவி ஆதிக்கம் செலுத்த முற்படுகிறாள். தசரத மன்னனிடம் தனது மகன் பரதனுக்கே எதிர்காலத்தில் முடிசூட்டப்படவேண்டும் என்று பரதன் ஆறு வயதாக இருக்கும்போதே கோருகிறாள். தசரதன் அதனை மறுக்கிறான். இந்த மறுப்பின் காரணமாக தன் இளவரசர்கள் இருவரும் இராணியால் கொல்லப்படக்கூடும் என்றும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதையும் உணர்ந்துகொண்ட தசரதன் தான் மரணிக்கும்வரை அவர்களை அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பாக வாழும்படி பணிக்கிறான். அவர்களுடன் சகோதரி சீதாவும் வெளியேறுகிறாள். மன்னன் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்வார் என சோதிடர்கள் கூறியதால் பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் வனவாசம் அனுபவிக்கிறார்கள். பரதன் அவர்களை வேட்டையாடத் தேடிச் செல்கிறான் என்று நகர்கிறது கதை. இதில் சீதை இராமனின் மனைவியல்ல மாறாக சகோதரி, மேலும் இராவணன் என்கிற பாத்திரமும் இல்லை. இராமாயணத்தின் முற்பகுதி 'தசரத ஜாதகய'வில் காண முடிகிறது. கதையும் அவ்வளவு பெரிய கதையல்ல.
ஆனால் இது இராமாயணத்தை வான்மீகி எழுதுவதற்கு முன்னரே வெளிவந்துவிட்டதாக உரையாடல்களும் சிங்களச் சூழலில் நடந்து வருவதைக் காண முடியும். இராமாயணத்தைவிட பழமையான 'சூத்திர பிடக' என்கிற பாளிமொழி பௌத்த ஜாதகக் கதையில் இது காணப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் சிங்கள மொழியில் இது தொடர்பில் நடக்கும் சில உரையாடல்களை இக்கட்டுரைக்காக கவனிக்க நேரிட்டது. இராமாயணமா, அல்லது 'தசரத ஜாதகய'வா காலத்தால் மூத்தது எது என்கிற விவாதம் பலமாக நடந்து வருவதைக் காண முடிகிறது. சிலர் 'தசரத ஜாதகய'விலிருந்து தான் வான்மீகி அக்கதையை விரித்திருக்கிறார் என்று வாதாடுவதைக் காண முடிகிறது. இராவணனின் பாத்திரம் அல்லாத 'தசரத ஜாதகய' என்கிற இலக்கியத்தை சிங்களத் தரப்பில் ஏற்றுக்கொண்டால் இராவணன் பற்றிய புனைவுகளையும் ஏற்றுக்கொள்ளமுடியாது போய்விடும் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுவது நல்லது.
இராவணனும், இலங்கையும் இன்றியமையாத இராமாயணம் பற்றி ஆசிய ராஜரீகக் கழகத்தின் ஆய்வுச் சஞ்சிகையில் வெளிவந்த N. B. Utgikar எழுதிய The Story of the Dasaratha Jataka and of the Ramayana (JRAS - October 1924) என்கிற கட்டுரையும் Gombrich, Richard இந்த இரு காவியங்களையும் இராமாயணத்தோடு ஒப்பிட்டு 1985இல் எழுதிய ‘The Vessantara Jataka, the Ramayana and the Dasaratha Jataka’, Journal of the American Oriental Society. கட்டுரையும் முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளாகக் கருதலாம்.
இலங்கையில் 'வெஸ்ஸந்தர காவ்ய' என்கிற பெயரில் சிங்களத்தில் இருக்கிறது. இலங்கையின் பல விகாரைகளில் ஓவியங்களாக இக்கதை வரையப்பட்டுள்ளன. சிங்கள மக்கள் மத்தியில் இன்றும் இறந்தவர் வீடுகளில் முதல் ஏழு நாட்களும் விழித்திருந்து ஒப்பாரிப் புராண இலக்கியங்களைப் பாடுவார்கள். குறிப்பாக ஜாதகக் கதைகள் என்று கூறக்கூடிய கதைகளாக இருக்கும். அப்படிப் பாடப்படுகின்ற நூல்களை 'மலபொத்த' (இறப்புநூல்) என்பார்கள். அவ்வாறான 'மலபொத்'களில் அதிகப் பிரசித்தம் பெற்றது இந்த 'வெஸ்ஸந்தர காவ்ய' என்கிற நூல். கண்டியிலுள்ள தெகல்தொருவ என்கிற விகாரையில் உள்ள இந்தக் கதையின் சுவரோவியம் பிரசித்திபெற்றது. அந்த ஓவியம் 1973 ஆம் ஆண்டு முத்திரையாக வெளியிடப்பட்டது.
கம்போடிய இராமாயணத்தில் (Reamker) இராவணனுக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி மண்டோல்கிரிட், இரண்டாவது மனைவி அகிநட். சீதை பாத்திரமானது இராவணனின் மகளாக காணப்படுகிறது சீதையால் அழிவு வரும் என்கிற சோதிடக் கூற்றால் சீதை பானையில் வைத்துக் கடலில் விடப்படுகிறாள் என்பதாக கதை நகருகிறது.
குமாரதாசர் இயற்றிய ஜானகிகரணய:
இப்படியெல்லாம் இருக்க 'ஜானகிகரண' என்கிற நூல் தான் முக்கியமாக இராமாயணக் கதையாக பெரும்பாலும் ஒத்த கதையாக சிங்களத்தில் காணக் கிடைக்கிறது. இதன் மூலப் பிரதி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இலங்கை மன்னனும் மகாகவியுமான குமாரதாச(ர்) என்கிற அரசனால் 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாகாவியமென நூலின் முகப்பில் குறிப்பிடப்படுகிறது.(2) குமாரதாச அல்லது குமாரதாதுசேனன் என்றும் சிங்கள, பாளி இலக்கியங்களில் அழைக்கப்படுகிறார். சிங்களத்தில் 'ஜானகிகரண'வை 'மகாகாவியம்' என்கிற அடைமொழியில் தான் அழைக்கிறார்கள். சிங்கள இலக்கிய நூல்களில் இலங்கையின் முதலாவது மகாகாவியம் என 'ஜானகிகரண'வை குறிப்பிடுவார்கள்.
முகலன் என்கிற அரசனின் புத்திரனான குமாரதாச ஒரு புலமைத்துவமுள்ள பண்டிதர் எனவும், காளிதாசன் என்கிற தனது நண்பனின் மரணத்தைத் தாங்காது தானும் அதே நாள் தீயில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனான் என்று பூஜாவலியவில் குறிப்பிடப்படுகிறது. இதே கதை ராஜாவலியவிலும் கூறப்பட்டுள்ளது. கவிஞர் காளிதாசன் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்கவிஞனுக்காகத் தற்கொலை செய்துகொண்டதாக வாய்மொழி வரலாறும் உண்டு. குமாரதாசர் மௌரிய வம்சாவளியிலிருந்து வந்தவர் என்பதைப் பல ஆய்வு நூல்களிலும் குறிப்பிடுகின்றன. அதாவது அவரின் முன்னோர்களான தாதுசேனன், முகலன் அனைவரும் மௌரிய வழிவந்தவர்கள் என்கின்றனர்.(3)
'பூஜாவலி'யின் பிரகாரம் தாதுசேனனின் (Dasenkeli) புதல்வர்களில் புதல்வர்கள் காசியப்பன், முகலன் (மொக்கலான) ஆகியோர். தந்தையான தாதுசேனனைக் கொன்றுவிட்டு ஆட்சியேறுகிறான் காசியப்பன். பட்டத்து இளவரசனான முகலன் தமிழகத்துக்கு தப்பியோடிவிடுகிறான். முகலன் அங்கிருந்து பெரும் படையைத் திரட்டிக்கொண்டு வந்து காசியப்பனை வீழ்த்திவிட்டு பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனின் மகனான பண்டிதப் புலமையுள்ள குமாரதாச ஒன்பது ஆண்டுகள் (கி.பி. 513-522) சிகிரியவை ஆட்சி செய்ததாகவும், தனது நண்பனின் சிதையில் தானும் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டான் எனவும் விவரிக்கிறது. (4)
தென்னிலங்கையில் மாத்தறை மாவட்டத்திலுள்ள 'ஹத்போதிவத்தை' (Hatbodiwatta - ஏழு அரச மரத் தோட்டம் என்று பொருள்) என்கிற இடத்தில் தான் இப்படியொரு சம்பவம் இலங்கையில் நிகழ்ந்ததாக பல நூல்களில் குறிப்பிடப்படுகின்றன.(5) ஆனால் அது பெரும்பாலும் அனுராதபுரத்துக்கு அருகில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்றும் வேறு சில நூல்களில் குறிப்பிடப்படுகின்றன. (6)
மகாவம்சத்தை முதலில் மொழிபெயர்த்த வில்ஹைம் கைகர் தனது சிங்கள மொழியும் இலக்கியமும் (Literatur und Sprache der Singhalesen) நூலிலும் காளிதாச கவிஞனுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய கவிஞ மன்னன் குமாரதாச என்கிறார். கைகர் 1929 ஆம் ஆண்டு தொகுத்த மகாவம்சத்தின் இரண்டாம் தொகுப்பான சூளவம்சத்தின் முதலாம் பாகத்திலும் 'ஒன்பது அரசர்கள்' என்கிற அத்தியாயத்தில் இந்தக் கதை காணக் கிடைக்கிறது. நீலகண்ட சாஸ்திரி உள்ளிட்ட சில வரலாற்று அறிஞர்கள் மன்னர் குமாரதாசரும், கவிஞர் குமாரதாசரும் இரு வேறு நபர்கள் என்றே நம்புகிறார்கள்.(7)
குமாரதாச காஞ்சியில் வாழ்ந்த காலத்தில் தான் ஜானகிகரணத்தை எழுதியதாக குறிப்பிடப்படுகிறது. அவரின் தந்தை முகலன் இந்தியாவுக்குத் தப்பியோடி வாழ்ந்த காலத்தில் இது எழுதப்பட்டிருக்க வேண்டும். சமஸ்கிருதத்தையும் அங்கே அவர் கற்றுத் தேறியிருக்கலாம். ஜானகிகரண காளிதாசனின் பார்வைக்குச் சென்றடைந்ததும் அந்த வழியிலாக இருக்கலாம். இலங்கையில் ஜானகிகரணய முதற் தடவையாக 1891இல் சமஸ்கிருத ஓலைச்சுவடிகளில் இருந்து தொகுக்கப்பட்டு சிங்களத்தில் வெளிக்கொணரப்பட்டது. முதலாவது வெளியிடப்பட்ட அந்தப் பிரதியில் அன்றைய ஆளுநர் சேர் ஆர்தர் எளிபேங் ஹெவ்லொக் (Sir Arthur Elibank Havelock) அவர்களின் அனுமதியுடன் வெளியிடப்படுவதாக முன் பக்க வசனத்துடன் இருப்பதைக் கவனிக்க முடிகிறது.
இலங்கையில் 'ஜானகிகரண' மகாகாவியத்தின் மூலப் பிரதியை தேடிக் கண்டுபிடிக்க முடியாதுபோன நிலையில் அதன் உதிரிப் பிரதிகளைக் கொண்டு ரத்மலான தர்மராம ஹிமி அதில் இருந்த கிடைத்த சுலோகங்களைத் தொகுத்து 1891இல் மீள உருவாக்கினார்.(8) அதில் மொத்தம் பதினைந்து அத்தியாயங்களில் பதிநான்கைத் தான் அவரால் சீரமைத்துத் தொகுக்க முடிந்தது. பின்னர் இதன் மூலப் பிரதி கண்டுபிடிக்கப்பட்டது. மூலப் பிரதிக்கும் ரத்மலான ஹிமியின் பிரதிக்கும் இடையில் பெரிய வித்தியாசம் காணப்படவில்லை என்று அறியப்படுகிறது. இராவணனுக்கு சார்பான கதையாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் மொத்தம் பதினைந்து அத்தியாயங்களை (Sarga) உடைய ஓலைச்சுவடி கண்டெடுக்கப்பட்டன. இறுதி அத்தியாயம் 25வது அத்தியாயம் என்று காணப்படுவதால் இடையில் பத்து அத்தியாயங்கள் தவறவிடப்பட்டுள்ளதை உணரமுடிந்துள்ளது. 18 அங்குலம் கொண்டதும், ஒரே ஓலையில் எட்டு வரிகளைக் கொண்டதுமான 101 பனையோலைச் சுவடிகளைக் கொண்டது அது.(9) இதேவேளை மலபாரில் 1920 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட பிரதியில் மொத்தம் 20 அத்தியாயங்கள் சமஸ்கிருதத்திலேயே உள்ளன. அவை மொத்தமாக 54 ஓலைகளைக் கொண்டவை. அவற்றிலும் சில தவறவிடப்பட்டனவாக இருந்துள்ளன. திருவாங்கூர் வடக்கில் இருந்த ஒரு நம்பூதிரி குடும்பத்தினரின் சேகரிப்பில் மலையாள எழுத்தில் எழுதப்பட்ட இந்த சமஸ்கிருதப் பிரதி கண்டெடுக்கப்பட்டு பின்னர் மெட்ராசில் உள்ள கிழக்கத்திய ஓலைச்சுவடி நூலகத்தில் இன்றும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஜானகிகரணய பற்றிய ஆய்வுகளைச் செய்த சீ.எஸ்.சுவாமிநாதனின் கணிப்பின் படி அது கண்டெடுக்கப்பட்ட காலத்தைவிட ஒரு நூறாண்டுகள் பழமையானதாக இருக்கும் என்கிறார். (10)
ஆங்கிலேய அறிஞரான லயனல் பார்னட் (Lionel Barnett) என்பவரிடமும் 118 ஓலைகளைக் கொண்ட 'ஜானகிகரணய'வின் மலையாள மொழிப் பிரதி இருப்பதை அறிய முடிந்தது. அதுவே 16 பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒன்றென கணிக்கப்பட்டுள்ளது. பார்னட்டின் கணிப்பின்படி அது சிங்களத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்கிறார். அதுவரை வெளியிடப்படாத 16வது அத்தியாயத்தையும் அவர் 1926ஆம் ஆண்டு வெளியிட்டார்.(11) இலங்கையில் இருந்து கேரளாவுக்கு எவ்வாறு இது சென்றது, எப்படி இது பிரபல்லியம் பெற்றது என்பது பற்றி பல ஆய்வாளர்களும் வியப்புடன் பார்க்கிறார்கள். கேரளாவுக்கும், இலங்கைக்கும் (இன்னும் சொல்லப்போனால் மலையாளத்துக்கும் சிங்களத்துக்கும் இருந்த உறவு) அன்று இருந்த கலாசார உறவையும் இது எடுத்துக்காட்டுகிறது. எப்படியோ இன்று சிங்களத்தில் முழு வடிவ நூலாக 'ஜானகிகரணய' கிடைக்கிறது. உயர்தர வகுப்புகளிலும், மேற்படிப்புகளிலும் பாடமாக இருக்கிறது.
1943 ஆம் ஆண்டு தான் இன்றைய முழுமைப்படுத்தப்பட்ட ஜானகிகரணய வெளியிடப்பட்டது. இதனை தொகுப்பதில் அதிக சிரத்தைக் காட்டியவர்கள் இலங்கையின் மூத்த தொல்லியல் வரலாற்றாசிரியர்களான சீ.ஈ.கொடகும்புரவும், எஸ்.பரணவித்தானவும். அந்த நூலின் அறிமுகத்தில் அக்கவிதையைப் பற்றி சீ.ஈ.கொடகும்புரவும், கவிஞரைப் பற்றி எஸ்.பரணவித்தானவும் எழுதியிருந்தார்கள். இதற்காக அவர்கள் மேற்கொண்ட பின்புல உழைப்பைப் பற்றிய முக்கிய கட்டுரையொன்றை The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain & Ireland இல் வெளியாகியிருந்தது.(12) ஜானகிகரண பற்றிய ஆய்வுகளில் இன்னொரு முக்கிய ஆய்வுக் கட்டுரையாக F.W.Thomas எழுதிய குமாரதாசரின் ஜானகிகரண என்கிற கட்டுரையும் முக்கியமானது. அவ்வாய்வுக் கட்டுரையில் பல பக்கங்களுக்கு கலைச்சொல் விளக்கப் பட்டியலை அதில் தந்திருப்பது அக்கட்டுரையின் முக்கிய சிறப்பு.(13) 'ஜானகிஹரணய' பின்னர் K.N.Joglrkar என்பவரால் ஆங்கில மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு 1908 ஆம் ஆண்டு இந்தியாவில் பம்பாய் நகரில் வெளியிடப்பட்டது.
ஏற்கெனவே 'தசரத ஜாதக' கதையை அறிந்த சிங்கள மக்களுக்கு 'ஜானகிகரண' அந்நியமாக இருந்ததில்லை. பெயரிலேயே ஜானகி இருக்கிறது. ஜானகி சீதையின் இன்னொரு பெயர். எனவே சீதையை மையப் பாத்திரமாகக் கொண்ட காவியமாக இது காணப்படுகிறது. 'ஜானகிகரணய' என்றால் 'ஜானகியை சுவீகரிப்பது' (கடத்திச் செல்வது) என்று பொருள். இதில் சீதை இராவணன் கடத்திச் செல்வதைத் தான் ஜானகிகரணய என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
மகாவம்சம் தோற்றம்பெற்ற காலப்பகுதியில் அதிகளவான பிராமிக் கல்வெட்டுக்கள் தோன்றவில்லை ஆனால் இக்காலப்பகுதியில் பிராமணியத்தின் ‘தேவ மொழி’யாகிய சமஸ்கிருதத்தின் செல்வாக்கு இலங்கையில் தலைதூக்கியதைக் காணலாம். மகாஞான பௌத்த பிக்குகளைச் சார்ந்த அபயகிரி, ஜேதவன விகாரைகள் சமஸ்கிருத மொழிக் கல்விக்குப் புகழ் பெற்றவையாக விளங்கின. இக்காலத்தில் மகாவிகாரை பாளி மொழிமூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
ஆனால் குறிப்பிட்ட சில மன்னர்கள் சமஸ்கிருதத்தினை ஆட்சி மொழியாகவும், விளம்பரங்களை மக்களுக்கு அறிவிக்கும் மொழியாகவும் பயன்படுத்தினர். உதாரணமாக மகாஞான கருத்துக்களைக் கூறும் குச்சவெளிக் கல்வெட்டு, திரியாய் கல்வெட்டு போன்றன சமஸ்கிருத மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. மேலும் அனுராதபுரத்திலுள்ள விஜயராம எனும் இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பஞ்சவிம்; சதிசஹஸ்திகா, பிரபஞ்சபாரமுதா போன்ற மகாஞான நூல்களில் உள்ள சமஸ்கிருத மொழிச் சுலோகங்களின் பகுதிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதே சமஸ்கிருத மொழியில் தான் சாரார்த்த சங்கிரகம், ஜாதகமாலா மட்டுமன்றி ஜானகீ ஹரணமும் சமஸ்கிருதத்தில் எழுந்தன. இலங்கைத் தீவில் சமஸ்கிருத மயமாக்கலின் செல்வாக்கைத் தடுக்கும் நோக்கில், பல்வேறு வழிகளில், பாமர மக்களிடையேயும், பிக்குகளிடையேயும் நிலவி வந்த சுதேச மரபுகளையும் தழுவி பாளி மொழியின் இலக்கண, இலக்கிய அமைதிக்கு ஏற்ப வரலாற்றையும், பௌத்த பண்பாட்டையும் வலியுறுத்தும் ஒரு 'பெறுமதியான இலக்கியம்' எழவேண்டிய சூழ்நிலை நிலவியது. அதனை மகாநாமதேரர் மகாவம்சத்தின் மூலம் நிறைவேற்றினார் என்பதை நாமறிவோம். அந்த வகையில் சமஸ்கிருதத்தில் இலங்கை மன்னரொருவரால் எழுதப்பட்டதாக அறியப்படும் ஜானகிகரணய காவியம் இலங்கையின் இலக்கிய வரலாற்றுப் பண்பாட்டில் முக்கியதொரு இலக்கியமாக கருதப்படுகிறது.
இலங்கையில் அப்போது சமஸ்கிருதத்தை வாசித்தறியும் வாய்ப்பைப் பெற்ற குழாமினர் சிறு பகுதியினரே என்பதைச் சொல்லத் தேவையில்லை. சில பிராமணர்களும், நீதிமன்ற தரப்பினரும், சமஸ்கிருதம் கற்ற பௌத்த பிக்குகளும், அரச பரம்பரையினரில் சிலருமாகத் தான் இருந்தார்கள். (கொடகும்புர, 2014) ஆக இத்தகைய சமஸ்கிருத இலக்கியங்கள் எளிய மக்களை அன்று சென்றடைந்ததில்லை. ஆனால் வாய்மொழியாக இவ்விலக்கியங்களின் சாராம்சம் ஓரளவு அறியப்பட்டிருந்ததை மறுப்பதற்கில்லை.
இலங்கையின் இலக்கியங்களில் இராமாயணத்தின் செல்வாக்கு குறித்து 'ராஜரீக ஆசிய கழகம்' (Royal Asiatic Society of Sri Lanka -RASSL) நடத்திய ஒரு கருத்தரங்கில் ஆற்றப்பட்ட ஆய்வுரைகளைத் தொகுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான அதன் ஆய்வேட்டில் (Journal of the Royal Asiatic Society of Sri Lanka - Vol. 59) இராமாயண சிறப்பிதழாக வெளியிட்டது. அக்கட்டுரைகள் இதைப் பற்றிய மேலதிகத் தேடல்களைச் செய்பவர்களுக்குப் பெரிதும் உதவும். இதில் பிரபல வரலாற்றாசிரியரான கொடகும்புர எழுதிய 'இலங்கையில் இராமாயணமும், இராமாயணத்தில் இலங்கையும்' வெளியான என்கிற கட்டுரை பல விபரங்களை உள்ளடக்கியது.(14)
காளிதாச – குமாரதாச நட்பைப் போற்றும் இலக்கியங்கள்:
இந்திய வரலாற்றில் காளிதாசன் ஒரு முக்கிய கவிஞனாக போற்றப்படுகிறான். கிழக்கின் ஷேக்ஸ்பியர் என்று பல அறிஞர்கள் காளிதாசனைக் குறிப்பிடுகிறார்கள். காளிதாசனின் பூர்வீகம், வாழ்ந்த காலம் பற்றி சற்று முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் உண்டு. காளிதாசன் இமாலயப் பகுதிக்கு அண்மித்த உஜ்ஜேனி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அதே வேளை வேறு பல நூல்களில் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்கிறது. சில நூல்களில் விக்கிரமாதித்த பேரரசனின் சபையில் பாடிவந்த புலவன் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை வாழ்ந்த காலமும் கூட சந்திரகுப்தனின் காலத்தில் (380-430) காலப்பகுதியில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல வேறு பல மூலாதாரங்களில் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அதுபோல காளிதாசன் என்கிற பெயரில் இன்னும் இன்னும் சில புலவர்கள் வெவ்வேறு காலங்களில் இருந்துள்ளார்கள் என்கிற தர்க்கமும் இருக்கிறது.
காளிதாசனால் எழுதப்பட்ட சகுந்தல, மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் போன்ற படைப்புகள் காளிதாசனின் பெயரை இன்றும் நிலைக்க வைத்திருகிறது. காளிதாசன் இயற்றிய இலக்கியங்கள் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் பேசியபோதும் காளிதாசனின் முடிவு பற்றிய கதை அந்தளவு பேசுபொருளாக இருந்ததில்லை என்பதை உணர முடிகிறது. காளிதாசனின் முடிவு பற்றிய கதைகள் இலங்கையின் இலக்கியத்தோடு தொடர்புடைய ஒன்றாக இருந்ததாலோ என்னவோ இலங்கையின் இலக்கியங்களில் நிறையவே பேசப்பட்டிருக்கிறது. இலங்கை அரசனான குமாரதாசனின் மிகவும் நெருங்கிய நண்பன் என பல இலக்கியங்கள் கூறுகின்றன.
காளிதாசனின் ரகுவம்ச காவியத்தால் ஈர்க்கப்பட்டவர் மன்னர் குமாரதாச, மன்னர் குமாரதாசனின் ஜானகிகரணத்தால் ஈர்க்கப்பட்டவர் கவிஞர் காளிதாசன். காளிதாசன் இலங்கை வந்து குமாரதாசனின் நெருங்கிய நண்பனாக ஆகிறான். இருவரும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள். குமாரதாச மன்னனின் அந்தப்புர நாயகியொருத்தியும்(15) காளிதாசனும் காதலிக்கிறார்கள் என்று அரசனின் ஒற்றன் தகவல் கூறுகிறான் கையும் களவுமாக இதைப் பிடிப்பதற்காக அந்தப்புரத்து மதிலில் குமாரதாச மன்னன் கவிதை வரிகளை எழுதி அதைப் பூரணப்படுத்துவோருக்கு எடைக்கு எடை சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துச் செல்கிறான்.
அக்கவிதையின் எஞ்சிய பகுதியை காளிதாசன் பூர்த்தி செய்கிறான். அந்தப்புரத்து நாயகி சன்மானத்தை தானே கவர்வதற்காக காளிதாசனைக் கொன்றுவிட்டுத் தானே அதைப் பூரணப்படுத்தியதாக மன்னனிடம் அறிவிக்கிறாள். அதைப் பூரணப்படுத்தும் ஆற்றல் காளிதாசனுக்கு மட்டுமே இருப்பதை அரசன் அறிவான். நடந்ததை அறிந்து மனமுடைந்து நண்பன் காளிதாசனின் உடலை எடுத்துச் சென்று தகனம் செய்து மனம் ஆறாமல் அதே தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டு நண்பனோடு தானும் அக்கினியில் சங்கமமாகிறான்.(16) கூடவே அவனின் ஐந்து அரசிகளும் சிதையில் குதித்து உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.(17) இந்தக் கதையின் பல வடிவங்கள் உண்டு. ஆனால் காளிதாசன் இறுதியில் கொல்லப்பட்டார் என்பதில் அக்கதைகளில் மாற்றம் இல்லை.
காளிதாசனின் காவியங்கள் நாடகங்களாக இன்றும் இருப்பதைப் போல, காளிதாசன் கொல்லப்பட்ட சம்பவத்தையும், காளிதாசர் – குமாரதாசர் ஆகிய இருவரின் நட்பைப் போற்றியும் நாடகங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது மீரா காந்த், மனு விக்கிரமன் ஆகியோர் எழுதிய 'அறிந்தேன் ஆனால் கண்டதில்லை' (Shrooyate Na Tu Dristryate/Suna HuaAndekha or 'Heard, But Never Seen') என்கிற தலைப்பில் உருவாக்கிய நாடகப் பிரதி. 'அறிந்தேன் ஆனால் கண்டதில்லை' என்பது குமாரதாச மன்னன் எழுதி முடிக்காமல்; காளிதாசன் முடிப்பதற்காக விட்டுச் சென்ற வரிகள்.(18)
திரைப்படங்களில் மகாகவி காளிதாசர்:
இந்தக் கதையையொட்டி திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன. தமிழ்ச் சினிமா வரலாற்றில் முதலாவது பேசும் படம்; 1931 இல் வெளியான 'காளிதாஸ்' என்கிற திரைப்படம் தான். தமிழிலும் தெலுங்கிலும் ஒரே காலத்தில் வெளிவந்தது அத்திரைப்படம். அதன் விளம்பரத்திலேயே (First Tamil & Telugu Talkie) என்கிற விளம்பரத்தோடு வெளியான திரைப்படம் அது. தமிழில் முதல் பாடல் இடம்பெற்ற படமும் இதுதான். அதுவும் ஐம்பது பாடல்கள் அதில் இடம்பெற்றன.(19) அன்றைய நாளில் 8000 ரூபா செலவில் உருவாக்கப்பட்டு 75,000 ரூபா வசூலை சம்பாதித்த திரைப்படம். அழிந்துபோன சினிமாப் பிரதிகளில் அதுவும் ஒன்று. ஆனால் இந்தத் திரைப்படத்தைவிட அதிகத் தொழில்நுட்ப நேர்த்தியுடன் 'மகாகவி காளிதாஸ்' என்கிற திரைப்படம் 1966 இல் வெளிவந்தது. அத்திரைப்படத்தில் காளிதாசனாக சிவாஜி கணேசனும், அரசன் குமாரதாசனாக முத்துராமனும் (படத்தின் படி போஜா அரசன்) நடித்திருந்தார்கள்.(20) இந்தத் திரைப்படத்தின் கே.வி.மகாதேவனின் இசையில் அமைந்த பாடல்கள் அன்று பிரபலமாக இருந்தது போல இன்றும் கேட்க இனிமையானவை. 'மலரும் வான் நிலவும்...', 'யார் தருவார் இந்த அரியாசனம்...', 'கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்...', 'காலத்தில் அழியாத, காவியம் தரவந்த...' போன்ற பாடல்களை இங்கு நினைவுக்குக் கொண்டு வரலாம். இந்தத் திரைப்படத்தில் காளிதாசர், குமாரதாசர் ஆகியோரின் நட்பை மிகவும் அற்புதமாக நடிப்பால் ஆக்கியிருக்கிறார்கள் சிவாஜியும், முத்துராமனும்.
கதையின் படி குமாரதாசனின் மனைவியர் இருவரில் ஒருவரான மோகனாங்கியின் (எல்.விஜயலட்சுமி) காதலை ஏற்கமறுத்து புறக்கணிக்கிறார் காளிதாசன். காளிதாசனின் 'சகுந்தலை' காவியம் தன்னைப் பற்றிய காவியம் தான் என நம்புகிறார் மோகனாங்கி. காளிதாசனின் காதல் மறுப்பினால் வெறுப்படைந்த மோகனாங்கி காளிதாசனுக்கும் மற்றோர் அரசிக்கும் இடையில் கள்ளக்காதல் இருப்பதாக வெகுஜனங்கள் மத்தியில் வதந்தியைப் பரப்பிவிடுகிறார். அப்படியோர் வதந்தி உலாவுவதை மன்னர் குமாரதாசர் மாறுவேடத்தில் நகர்வலம் செல்லும்போது அறிந்துகொள்கிறார். அதேவேளை தனது நண்பன் காளிதாசன் அப்படிப்பட்டவன் அல்லன் என்பதையும் அறிந்துகொள்கிறார்.
ஆனால், காளிதாசனின் மனைவி அந்த வதந்தியை நம்பியதால் துவண்டுபோன காளிதாசன் தன் மனைவியிடம் இருந்து பிரிந்து செல்கிறார். "நீ மனைவியைப் பிரியலாம், மற்றவர்களை விட்டுப் பிரியலாம் எப்படி நண்பா என்னை விட்டுப் பிரிய உனக்கெப்படியடா மனம் வந்தது” என்று மன்னன் துவண்டு போகிறார். நண்பனைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு வழி செய்கிறான். ஒரு கவிதையை எழுதி அதன் மீதிக் கவிதையை முடிப்பவருக்கு ராஜ்ஜியத்தில் பாதியை எழுதித் தருவதாக அறிவிக்கிறார். அது காளிதாசனால் மட்டும் தான் முடியும் என நம்புகிறார். அந்தப் பரிசை கவர்வதற்காக மோகனாங்கி சதி செய்கிறாள்.
விரக்தியுற்றுத் திரிகிற காளிதாசனைக் கண்டுபிடிக்கிறாள். ஆசைகாட்டி அரசனின் கவிதையின் மிகுதி வரிகளை எழுதிப் பெறுகிறாள். அரசனிடம் வந்து அக்கவிதையைத் தானே பூர்த்தி செய்துவிட்டதாக காண்பித்துப் பாதி ராஜ்ஜியத்தைக் கேட்கிறாள். கவிதையை வாசித்த அரசனுக்கு அது காளிதாசனின் வரிகள் என்பதை உணர நேரமெடுக்கவில்லை. அதேவேளை காளிதாசன் உயிரோடு இருக்க வாய்ப்புமில்லை என்று பதைபதைக்கிறான். என்ன நேர்ந்திருக்கக் கூடும் என்பதை உணர்ந்து “காளிதாசன் எங்கே..? உயிரோடு வைத்திருக்கிறாயா, கொன்று விட்டாயா?” என மோகனாங்கியை ஆவேசத்தோடு வினவுகிறான். “காளிதாசனோடு வாழத் தான் முடியவில்லை, ஆனால் இனி காளிதாசனின் கடைசி அத்தியாயத்தில் இனி என் பெயரும் இருக்கும்” எனக் கொக்கரிக்கிறாள். காளிதாசனின் தலையைக் கொய்து கொன்றுவிட்டதையும் ஒப்புக்கொள்கிறார் மோகனாங்கி. மோகனாங்கியை அதே இடத்தில் கொன்று விடுகிறான் குமாரதாசர். காளிதாசன் கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று அழுதுபுலம்பி தானும் காளிதாசனோடு மரணிக்கிறார். ஐம்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் துண்டிக்கப்பட்ட சிவாஜியின் தலை பேசுகின்ற காட்சிப் படமாக்கப்பட்டிருக்கிற விதம் அற்புதம். 1983 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான 'கவிரத்ன காளிதாச' என்கிற திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இறந்த காளிதாசும், போஜா மன்னரும் (குமாரதாசர்) அம்மன் அருள் பெற்று மீண்டும் உயிர்பெற்று எழும்புவதாக முடியும். அதில் காளிதாசனாக நடித்தவர் (பிற்காலத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட) பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார்.
முடிவுரை:
ஜானகிகரண, குமாரதாச, காளிதாசன் பற்றிய தமிழ் திறனாய்வின் அவசியத்தை இக்கட்டுரைக்கான தேடல்களின் போது அதிகம் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஜானகிகரண பற்றிய ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மொழிகளில் இருப்பதை இக்கட்டுரைக்கானத் தேடலில் அறிந்துகொள்ள முடிந்தது அவற்றில் முன்னுக்குப் பின் முரணான பல்வேறு தர்க்கங்கள் முன்வைக்கப்படுவதையும் காண முடிகிறது. தமிழில் இதைப் பற்றிய போதிய ஆய்வுகள் இல்லை என்றே கூற முடியும். அந்தத் தர்க்கங்கள் தமிழில் வெளிவருவதற்கான ஆரம்பமாக இக்கட்டுரையும் அமையும் என்றே நம்புகிறேன். ஜானகிகரண உள்ளிட்ட இராமாயணத்தோடு சம்பந்தப்பட்ட இலக்கியங்களின் உள்ளடக்கத்தின் ஒப்பீட்டு ஆய்வு தமிழில் கவனிக்கப்படவேண்டிய, மேற்கொள்ள வேண்டிய முக்கிய ஆய்வென்பதைப் பரிந்துரை செய்யலாம்.
அடிக்குறிப்புகள்:
1. Susantha Goonatilake, Introduction to the Issue on the Rāmāyaṇ, Journal of the Royal Asiatic Society of Sri Lanka, Vol. 59, No. 2, Special Issue on the Ramayana (2014)
2. Janakiharana: An Epic Poem in Sanskrit by a celebrated Sinhalese Poet Kumaradasa, King of Ceylon; restored into Metre from a Sihalese Literal Paraphrase and edited with the Revised Sanna. By K.Dharmarama Sthavira. Printed & published D.D.J.Senanayaka, Arachchi (1891)
3. Janakiharanam of Kumaradasa, cantos I-V ; with a Sanskrit commentary by Narayan Vasudeva Nigudkar and English notes, and translation by K.M. Joglekar, The Oriental Publishing co, Bombay, 1908
4. Ibid (Preface)
5. Ananda W.P.Guruge, Sri Lankan attitude to the Ramayana: a Historical analysis, Indologica Taurinensia (1993-1994)
6. L. E. Blaze, History of Ceylon, The Christian Literature society for India & Africa, Ceylon Branch, colombo, 1933
7. A History of South India, K.A.Nilakanta Sastri, pagc 344, Oxford University Press,I966
8. C. R. Swaminathan , Janakiharana of Kumaradasa: A Study, Motilal Banarsidass (December 8, 2000)
9. James D'Alwis, (Janakiharana Chapter p188-195) Descriptive Catalogue of Sanskrit, Pali, & Sinhalese Literary works of Ceylon, Vol I, William Sken, Government Printer, Ceylon, 1870.
10. Ajay Kamalakaran, Column | The mystery of Kerala’s Sri Lankan Ramayana manuscripts, (https://www.onmanorama.com/lifestyle/keralaspora/2019/09/05/janakiharana-ramayana-manuscript-in-kerala.html)
11. Bulletin of the School of Oriental Studies, University of London, Vol. 4, No. 2(1926), pp. 285-293
12. K. T. W. SUMANASURIYA, Reviewed Work: The Janakiharana of Kumaradasa by S. Paranavitana, C. E. Godakumbura, The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain & Ireland, Vol. 11 (1967)
13. F. W. Thomas The Janakiharana of Kumaradasa, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland (Apr., 1901)
14. C.E. Godakumbura, Ramayana in Sri lanka and Lanka of the Ramayana, Journal of the Royal Asiatic Society of Sri Lanka Vol. 59, No. 2, Special Issue on the Ramayana (2014)
15. அந்தப்புரத்து நாயகி என்று ஓரிடத்திலும், வேலைக்காரி, இன்னொரு இராணி என வெவ்வேறு இலக்கியங்களில் கூறப்படுவதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
16. Ratna Chanda, A Critical Study of the Janakiharana of Kumaradasa, (Thesis submitted for the Ph.D.Degree of the University of Calcutta) - 2016
17. K. Dharmarama Sthavira, Janakiharana: An Epic Poem in Sanskrit by a celebrated Sinhalese Poet Kumaradasa, King of Ceylon; restored into Metre from a Sihalese Literal Paraphrase and edited with the Revised Sanna, Satya/samuchchaya press Peliyagoda, 1891
18. Meera Kant and Manu Vikraman, Heard, But Never Seen, Indian Literature, Vol. 51, No. 1, Sahitya Akademi(January-February 2007)
19. The First Tamil talking picture, RANDOR Guy remembers… on the occasion of the 75th Anniversary of the Tamil talkie, Madras musing, Vol. XVI No. 14, 2006 Nov.
20. காளிதாசன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நிகரான கதை மைசூரில் கண்டெடுக்கப்பட்ட ஜானகிஹரணத்தில் காணப்படுகிறபோதும், அங்கே குமாரதாசனுக்குப் பதிலாக போஜா என்கிற பெயரில் மன்னரின் பெயர் காணப்படுகிறது.
நன்றி - தாய்வீடு - யூலை 2021
---
No comments:
Post a Comment