- முனைவர் ஸ்ரீ ரோகிணி, துபாய்
வேட்டையாடி மாமிசத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் நெருப்பைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் முதலில் எப்போது பேசத் தொடங்கினார்கள்? மனிதர்கள் மட்டுமே மொழியைப் பயன்படுத்தும் உயிரினமாக இருக்கிறார்கள். விலங்குகளிடம் இருந்து நம்மை தனித்துவமாக்கிக் காட்டுவதும் அதுதான், உரையாடுவதற்கான இந்தத் திறன்தான் பரிணாம வளர்ச்சியில் முக்கியமான நிலைமாறுதலாகக் கருதப்படுகிறது. வாழ்க்கை நிலையில் மாறுதலை ஏற்படுத்தியதில் மற்றவற்றைக் காட்டிலும், உண்மையான அம்சம் இதுதான்.
கதைகளை விவரித்துக் கூறுவதற்கும், சம்பிரதாயங்களை உருவாக்குவதற்கும் நிறைய மொழி அறிவு நமக்குத் தேவைப்பட்டது என்று பேராசிரியர் டாலர்மேன் கூறுகிறார். பேசுவதற்கு ஆரம்பக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அநேகமாக அதற்கான முயற்சிகள் உருவாகியிருக்க வேண்டும். இந்தப் பேரிடர்க் காலத்தில் காகிதம் புரட்டும் சதவீதம் அதிகரித்துள்ளது. திரும்பப் பழைய நிலைக்கு வந்துள்ளது வழக்கொழிந்து போன பழைய பழக்கங்களில் ஒன்றான புத்தக வாசிப்பும். மேலறிஞர்கள் பலர் ஆய்வின்படி இன்னும் பல இடத்தில் இளைய தலைமுறையினர் இந்த வாசிப்புத் திறனை அதிகரிக்கவில்லை என்றே கூற வேண்டும்.
நமக்குக் கிடைக்கும் நாட்குறிப்பு புத்தகத்தில் முகவரிகள் தொலைபேசி எண்கள் இவற்றோடு நம் அன்றாட நிகழ்வுகளை நினைவலைகளாக எழுதும் பழக்கம் அடியோடு மறக்கப்பட்டு விட்டது. நம் நினைவலைகளைப் பதிவு செய்வது வேண்டாம் நமக்கு வேண்டியவர்களின் முகவரிகள் தொடர்பு எண்கள் இவற்றை எழுதி வைக்கும் பழக்கம் இன்றும் தேவைப்பட்டாலும் கைத்தொலைபேசியில் தொடர்பு எண் இருந்தால் போதும் மற்ற விபரங்கள் அவ்வப்போது கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று யாரிடமும் எந்த விபரங்களும் இருப்பதில்லை. தொலைபேசி தொலைந்து விட்டது என்றால் அவருடன் அத்தனை தொடர்புகளும் தொலைந்து போய்விடும்.
நாற்பது ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்குப் புத்தகம் வாசித்தல் என்பது இயல்பான ஒன்று 1960 மற்றும் 70களில் பிறந்தவர்களுக்கு வெளியில் சென்று விளையாடுவது வானொலி கேட்பது,தொலைக்காட்சி பார்ப்பது, அதுவும் குறிப்பிட்ட சில நேரங்களுக்கு மட்டும் திரைப்படங்கள் பார்ப்பது, இவற்றோடு புத்தகம் படிப்பது என்பது அதிகச் செலவில்லாத பொழுதுபோக்கு. ஆனால் அப்போது பெற்றோர்களுக்கு நம் பிள்ளைகள் கண்ட புத்தகங்களைப் படித்துக் கெட்டுப் போய்விடுவார்கள் என்ற மற்ற பொழுது போக்குகளுக்குக் கொடுத்த அனுமதி புத்தகம் படிக்கும் போது கொஞ்சம் தணிக்கையோடு இருக்கும். பள்ளிகளிலும் பொது இடங்களிலும் வீட்டிலும் புத்தகங்கள் சஞ்சிகைகள் போன்றவை குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் ஆயிரம் தடைகளுக்குப் பிறகே கிடைக்கும். அவர்களுக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானிப்பது இவர்களை. குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான கதைகள் தமிழில் மிகக் குறைவே.
சில குழந்தை பத்திரிகைகள் இருந்தன ஆனால் இவற்றின் மூலம் குழந்தைகளுக்கு என்ன கிடைத்தன என்று கேள்வி எழுகிறது. அப்போதைய குழந்தைகளின் உலகம் பேதைமையும் அப்பாவித்தனமும் நிறைந்தது அவர்களுக்கு எது நன்மை தரும் இது தீமை என எடுத்துச் சொல்லும் நீதிநெறி கதைகள் வாழ்க்கையில் மாறாத துன்பங்களுக்குப் பின் மகிழ்ச்சியான வாழ்க்கை பெரும் அனாதைச் சிறுவர்கள், வஞ்சிக்கப்பட்ட இளவரசிகள், அழகிய பெண்கள், இடையில் உதவி செய்யும் தேவதைகள், இறுதியில் அவளைக் காப்பாற்றி திருமணம் செய்துகொள்ளும் ஆண், அழகான இளவரசன் இவை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடித்த கதைகள். பல கதைகள் நாவல்கள் நாடகங்கள் திரைப்படங்கள் என இந்தக் கரு வெவ்வேறு சூழல்களில் வடிவங்களில் இன்றும் வந்து கொண்டிருக்கின்றன.
எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்:
மனித உறுப்புகளில் கண் சிறப்பிடம் பெறுகிறது. அந்தக் கண்ணுக்கு இணையாகக் கல்வியை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார். நமது முகத்தில் இரண்டு கண்கள் இருக்கின்றன. அந்த இரண்டு கண்களுக்கு இணையாகக் கருதத் தக்கவை எண்ணும் எழுத்தும். அப்படி சிறுவயதில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தினால் தொடங்கப்படும் வாசிப்புப் பழக்கம் வயது ஆக ஆக இயல்பான ஆர்வத்தினால் தொடரவேண்டும். ஆனால் நெருக்கடியான கல்விச்சூழல் புத்தகங்கள் படிப்பதை விட அதிகச் சுவாரஸ்யங்கள் தரும் ஊடகங்கள், தொலைக்காட்சி, இணையம், கைத்தொலைபேசி முகநூல், படவரி (இன்ஸ்டாகிராம்) போன்ற பல ஊடகம் சார்ந்த வசதிகளினால் பொழுது முழுவதும் வேறு எதற்குமே நேரம் இல்லாமல் போய்விடுகிறது.
நகைச்சுவைக்காகச் சொன்னாலும் நம் அக்கம்பக்கத்தினர் யார் என அறியாது, அமெரிக்காவில் உள்ள முகநூல் நண்பர்களுக்கு வணக்கம் வாழ்த்தும் சொல்வதுதான் இன்றைய நிலைமை. வாசிப்பது மற்றும் நண்பர்களுடன் ஆழ்ந்த நட்பு கொள்வது போன்றவை இல்லாமல் மேம்போக்கான நட்பு தேவை காண வாசிப்பு என வாழ்க்கை தொடர்கிறது. ஆனால் உளவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்க்கை அனுபவங்கள் பெற்று பெரியவர்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லும் இரண்டு விடயங்கள், படிப்பதற்கு நல்ல புத்தங்கள் மனம் விட்டுப் பேசி பழக நண்பர்கள் கண்டிப்பாக மனித வாழ்க்கைக்கு வேண்டும், இவை இரண்டும் தனிமையைப் போக்கும் அதுமட்டுமல்லாது வாழ்நாள் இறுதிவரை துடிப்போடு வாழ்க்கையை வாழவைக்கும்.
மருத்துவர்கள் அறிவியலாளர்கள் மேலாண்மைத் துறையில் உள்ளவர்களுக்கு வாசிப்பு என்பது வாழ்நாள் முழுக்க தொடரும் என்றாலும் அவர்கள் வாசிப்பு தொழில் சார்ந்து இருக்கும். கல்வித்துறையில் மொழி கற்பிக்கும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தைத் தாண்டி மாணவர்களுக்கு வாசிப்பின் சுவையைச் செய்தாலும் அவர்களுக்குத் தெரிந்த இலட்சியவாத இலக்கியங்கள் கதைகள் போன்றவற்றோடு அதை நிறுத்திக் கொள்கிறார்கள். புனிதப் பிம்பங்களாக வலம் வரும் கதை நாயகர்களைப் படிப்பதற்குத் தற்கால இளைஞர்களுக்குச் சலிப்பு ஏற்படுகிறது. அவர்களைச் சுற்றி நடப்பதைப் பார்த்து பலவற்றையும் அறிந்து கொள்கின்றனர் அவர்களுக்கு லட்சிய வாதங்களை முன்வைக்கும் இலக்கியங்கள் போலித்தனமாக தோன்றுகிறது.
நவீனகால இடையூறுகளைத் தாண்டி படிக்க முற்படும் இளைஞர்களுக்கு நாம் எத்தகைய வாசிப்பை பழக்கப்படுத்த வேண்டும் என்பது ஒரு சவாலாகவே இருக்கிறது. வாழ்க்கையில் படிப்பதற்கும் அவற்றைச் சுவைப்பதற்கும் ஏராளமான புத்தகங்களும் அவை சார்ந்த அனுபவங்களும் நிறைந்து கிடக்கின்றன. இவற்றைப் படித்து உணர்ந்து முடிக்க ஒரு வாழ்நாள் போதாது.வாசிப்பு இந்த நான்கு எழுத்து மந்திரம் உலகத்தையே திருப்பிப் போடும் வல்லமை மிக்கது. வாசிப்பை நேசித்துச் சுவாசிப்போம்.
குறிப்பு: உலகப் புகழ் பிரான்சு தமிழ் நெஞ்சம் ஆகஸ்ட் மாதம் 2021 மாத இதழில் வெளிவந்தது. நன்றி.
தமிழ்ப் பணிச் செம்மல்.முனைவர் ஸ்ரீரோகிணி
உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்
தலைவர் - SB,TRG
துபாய், அமீரகம்
srirohini.mr@gmail.com
-----
No comments:
Post a Comment