Tuesday, March 16, 2021

வேதாந்தம் - ஒரு விளக்கம்

 வேதாந்தம் - ஒரு விளக்கம்


 - முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி



மதம் என்பது மானுட இனத்தின் மேன்மைக்காக நாடு, இனம், மொழி கடந்து உயிரும், உலகமும் (பிரபஞ்சமும்) ஒன்றிணையும் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டதாக ஒவ்வொரு மதத்தினரும் கூறிக் கொள்கின்றனர். ஒரு தலைவர் அல்லது தலைமை நிறுவனத்தின் வழியில் பரப்பப்பட்டு, வளர்க்கப்பட்டு, நிறுவன மயமாக்கப்பட்ட அமைப்பாகத் தான் மதங்கள் வளர்ச்சி நிலை பெற்றிருக்கின்றன. இன்று உலகத்தின் பெரும்பான்மை மதங்கள் எல்லாம் நிறுவன மயமாக்கப் பட்டவைதான். பழங்காலத்தில் சமயமாகத் தோற்றுவிக்கப்பட்டவை கூட நிறுவனமாக வளர்ச்சி பெற்று இன்று மதமாக வேரூன்றி நிற்கின்றன. இந்தியச் சமயங்களில் சமணமும், பௌத்தமும் இதற்கு எடுத்துக்காட்டுகள். ஆனால் இன்று இந்து மதமாகக் கற்பிக்கப் படும் வைதிக மதம், ஒரு மதத்திற்கான வெளிப்படையான நிறுவனமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஏராளமான கடவுள்கள் இருந்தாலும், அது தனக்கென்று ஒரு மதத் தலைவனைக் கொண்டதல்ல. சட்ட பூர்வமான நிறுவன மயம் என்பது இன்று வரையிலும் இல்லை. ஆனாலும் இவற்றையே தன் பெருமையாகக் கூறிக்கொண்டு, வெறும் நம்பிக்கைகளையே அடிப்படையாகக் கொண்டு, மாபெரும் கோட்டையாகக் கட்டமைக்கப்பட்ட அடித்தளத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வருவதுதான் இன்றைய இந்து மதம். இந்த இந்து மதம், வைதிக மதமாக அறியப்பட்ட முற்காலத்தில், அதன் கட்டமைப்பின் வலிமை என்பது, அது உருவாக்கி வைத்திருக்கும் சாஸ்திரங்கள் தான். அவைதான் வேதாந்தம் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றன. வைதிகத்தின் மூலவிசையாகக் குறிப்பிடப்படும் வேதமும், அதன் இறுதிப் பகுதியாகக் கூறப்படும் வேதாந்தமும் தங்கள் வளர்ச்சி நிலையின் அடையாளமாக ஆறு சமயங்களைக் கூறுகின்றன.

religion india.jpg

இந்து மதத்தின் ஆறு சமயங்களாகக் குறிப்பிடப்படுபவை சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் ஆகியவையே என்று இந்து மதத்தை அறிமுகப்படுத்தும் நூல்கள் குறிப்பிடுகின்றன. இவை சன்மார்க்கங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. சன் = ஆறு; மார்க்கம் = பாதை; அதாவது ஆறு பாதைகள் அல்லது ஆறு வழிகள். இந்தச் சன்மார்க்கங்கள், அதாவது ஆறு சமயங்கள் எப்படி வைதிகத்தில் உள் நுழைக்கப் பட்டன என்பதைப் புரிந்து கொள்ளும் வழி பல அடுக்கு நிலைகளைக் கொண்டது. படித்து அறிந்து கொள்ளச் சற்றுக் கடினமானது. என்றாலும் படித்தறிவது காலத்தின் கட்டாயம். 

எந்த உருவம் ஆனாலும் வழிபடுவதும், எல்லாக் குணங்களையும் ஏற்றுக்கொள்வதும் சகுண பிரம்மம் ஆகும். எவ்விதக் குணமுமற்ற ஞானம் என்பது நிர்குண பிரம்மம் ஆகும். இந்தச் சகுண பிரம்மமும், நிர்குணப் பிரம்மமும் சேர்ந்ததுதான் வைதிகத்தின் மூலமான பிரம்மம் என்பது. இந்தப் பிரம்மம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்றும்  பிரஸ்தான திரயம் (முக்கிய மூன்று) என்று அழைக்கப்படுகின்றன. அந்த மூன்றில் பிரம்ம சூத்திரம் ஒன்றாக அறியப்படுகிறது. மற்ற இரண்டும் உபநிடதம் மற்றும் தத்துவ விவாதமான கீதையும் ஆகும். இதில் உபநிடதம் (பத்து) என்பவை வேதங்களின் சடங்குகளையும், யாகங்களையும் தவிர்த்துத் தத்துவங்களாக உருவாக்கப்பட்டவை. ஒரு வகையில் வேத மறுப்பு உள்ளவை. மற்றொரு தத்துவ விவாதம் பகவத்கீதை. மகாபாரதத்தின் பிற்கால இடைச்செருகல். முழுக்க முழுக்கச் சித்தாந்தத்தின் மசியல் அது. (சித்த + அந்தம் = சித்தாந்தம்) அதாவது சித்தத்தின் இறுதிப்பகுதி. இவை அனைத்தையும் சேர்த்துத்தான் வேதாந்தமாகக் கூறப்படுகிறது. (வேத + அந்தம் = வேதாந்தம்) அதாவது வேதத்தின் இறுதிப் பகுதியான, முக்கியமான மூன்று தத்துவ அமைப்புகள். அதில் ஒன்றான பிரம்ம சூத்திரத்தின் சகுண பிரம்மக் கூறுகளாகக் கூறப்படுபவை தான் ஆறு சமயங்கள் அல்லது சன்மார்க்கங்கள்.

இந்த ஆறு சமயங்களில் சைவம் சிவனையும், வைணவம் விஷ்ணுவையும் வழிபடுவது. சாக்தேயம் என்பது சக்தி வழிபாடு. கேரளா, வங்காளத்தில் இவ்வழிபாடு அதிகம். கௌமாரம் என்பது பழந்தமிழ்ப் பண்பாட்டில் இருந்து நவீன மயமாக்கப்பட்ட முருக வழிபாடு. தற்போது சைவத்தில் இணைத்துப் பேசப்படுவது. காணபத்தியம் என்பது கணபதி வழிபாடு. பிற்காலத்தில் தோன்றி தற்போது சைவத்தில் இணைத்துப் பேசப்படுவது. சௌரம் என்பது சூரிய வழிபாடு. தற்போது வைணவத்தில் இணைத்துப் பேசப்படுவது. இவையெல்லாம் தத்துவ அமைப்பின் சகுண பிரம்ம வழியில், அதாவது எல்லாக் குணங்களும் கொண்ட, உருவ வழிபாட்டுடன் கூடிய மேற்கூறிய ஆறு சமயங்களையும் உள்ளடக்கியதாகும். இவையெல்லாம் சேர்ந்ததுதான் வேதாந்தத்தின் பிரம்மம் குறித்து விளக்கும் தத்துவ அமைப்பு என்று இந்து மத நூல்களில் விளக்கப்பட்டுள்ளன (தி. சேஷாத்திரி, ஹிந்து மதம் ஓர் அறிமுகம், அத்வய பிரசுரம்,  மதுரை, 1972).

வேதாந்தத்தின் தத்துவ அமைப்பு இத்துடன் நின்று விடவில்லை. இதுவரை கூறிய, பிரஸ்தான திரயம் ஆகிய, மூன்று தத்துவ அமைப்புகளையும் (உபநிடதம், பிரம்ம சூத்திரம், தத்துவ விவாதம்) வலிமையாக்க மேலும் இரண்டு துணைப் பிரிவுகளை ஏற்படுத்தி வைத்துள்ளது. அவை சாஸ்திரம் மற்றும் புராணங்கள் என்பவையே. இதில் புராணங்கள் பலவித மரபுவழிக் கதைகளை ஒன்றிணைத்து நம்பிக்கை ஏற்படுத்த முயல்பவை. புராணங்களில் மத்ஸ்ய புராணம் தொடங்கி ஸ்காந்த புராணம் வரை மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 

வேதாந்தத்தின் இரண்டாவது துணைப் பிரிவான சாஸ்திரம் என்பதுதான் வைதிகத்தை இன்று வரை கட்டிக் காத்து வரும் வலிமையான கட்டமைப்பு. இந்தக் கட்டமைப்பின் வழியில்தான் வேறு எல்லா விதமான தத்துவங்களையும், கோட்பாடுகளையும் விழுங்கி, சீரணித்து, தன்னுள் கரைத்து, விஸ்வரூபத் தோற்றத்தினை இந்து மதத்தால் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. எழுதப்பட்டவை எங்கிருந்தாலும், என்ன மொழியில் இருந்தாலும் அதை அப்படியே மூலத்துடன் சேர்த்துத் தன்னுள் கரைத்துக் கொள்ளும் வல்லமை கொண்டது தான் தரிசனம் என்று அழைக்கப்படும் சாஸ்திரப் பிரிவு. சாஸ்திரம் என்றால் அது எழுதப்பட்டவற்றை மட்டுமே குறிக்கும் என்பதால், எழுதப்படாத மெய்யியல் மொழிவுகளைத் தன்னுள் வயப்படுத்த ஏற்படுத்தப்பட்ட உள் பார்வைதான் தரிசனம். கடவுள் தரிசனம் போலத் தத்துவ தரிசனம். அதன் பொருள் காட்சி தான். கண்ணால் பார்த்து அறியப்படுவது தான். வெறும் கண்ணால் பார்த்து அறிவது சாஸ்திரம். ஞானக் கண்ணால் கண்டறிவது தரிசனம்.

தரிசனம் என்பதில்தான் வைதிகத்தின் சூட்சுமமே அடங்கியுள்ளது. தரிசனம் குறித்த விளக்கங்களை எளிமையாக்கிக் காண்போம். உலகில் கண்ணுக்குத் தெரியும் பொருட்கள் உண்டு. கண்ணுக்குத் தெரியாத பொருட்களும் உண்டு. தெரிந்தவை, தெரியாதவை ஆகிய ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. இவற்றின் குணாதிசயங்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டவை. இவற்றின் இயல்பை ஆராய்ந்து அறியும் உள் பார்வையே தரிசனம் ஆகும். தரிசனம் என்பதன் சூட்சுமக் கட்டமைப்பு, அதனை ஆஸ்திக தரிசனம் என்றும், நாஸ்திக தரிசனம் என்றும் பிரித்து வைத்திருப்பதுதான். வைதீக ஏற்பாட்டின்படி ஆஸ்திக தரிசனங்கள் என்பவை 'வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை'. அவை ஆறு வகைப்படும். நாஸ்திக தரிசனங்கள் என்பவை 'வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை'. அவையும் ஆறு வகைப்படும்.

ஆஸ்திக தரிசனங்கள் ஆறாகப் பகுக்கப் பட்டுள்ளன. இவை வைதீக தரிசனம் என்றும் வழங்கப்படும். சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகிய இந்த ஆறும் ஆஸ்திக தரிசனங்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. நாஸ்திக தரிசன வரிசையில் சார்வாகம், ஜைனம் (சமணம்), சௌத்ராந்திகம், வைபாஷிகம், மாத்யமிகம் (சூன்யவாதம்), யோகாசாரம் (விஞ்ஞான வாதம்) ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சார்வாகம், ஜைனம் தவிர்த்த ஏனைய நான்கும் பௌத்தத்தின் உட்பிரிவுகளாக வைக்கப் பட்டுள்ளன. நாஸ்திக தரிசனங்களாகக் கூறப்பட்டுள்ள ஆறும், பிரகிருதிவாதம் அதாவது இயற்கையை அடிப்படையாகக் கொண்டவை. மார்க்சியக் கருத்தியலின் படி 'பொருள் முதல் வாதம்'. மனிதனின் உயர் நிலையே இறைநிலை. இறந்தவனே இறைவன். ஆன்மா, மோட்சம், அவ்வுலகம் எதுவும் இல்லை. (பிற்காலச் சமணத்தில் ஆன்மாவும், மோட்சமும் உண்டு). இதில் சார்வாகமும், சமணமும் இந்நாட்டில் வைதிகம் உள்நுழையும் முன்பிருந்தே சமயங்களாக அறியப்பட்டவை. ஆனால் அவற்றை 'வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை' என்று குறிப்பிடுவதற்குக் காரணம், அவை வேத காலத்துக்குப் பின்னர் தோன்றியவை என்று நம்ப வைப்பதற்காகவே. உண்மையில் வேத காலத்திற்கு முன்பு தோன்றியவை சார்வாகமும், சமணமும், சாங்கியமும். யோகமும் அப்படித்தான். ஆனால் இவற்றை வேதங்களை ஏற்றுக் கொண்டவை என்றும், ஏற்றுக்கொள்ளாதவை என்றும் குறிப்பிடுவதன் காரணம், வேத காலத்தை முன்னோக்கிக் காட்டுவதற்காகத்தான்.

வேதங்களை ஏற்றுக் கொண்ட ஆஸ்திக தரிசனங்களாகக் கூறப்படும் சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகிய ஆறு தரிசனங்களில் பூர்வ மீமாம்சம் தவிர்த்து ஏனைய ஐந்துமே நாஸ்திக தரிசனங்கள் தான். ஆனால் ஆஸ்திக தரிசன வரிசையில் வைக்கப் பட்டுள்ளன. இவற்றின் கோட்பாடுகளில் கடவுளும் இல்லை; ஆன்மாவும் இல்லை. சாங்கியம், (முற்கால) கபிலரின் பிரபஞ்ச ஆய்வுக் கோட்பாடுகளைக் கொண்டது. யோகம் என்பது, உடல், மனக் கோட்பாடுகளின் மூலம் உண்மையை அறியும் சித்தர்களின் தரிசனம். இதில் பதஞ்சலி முனிவர் இடைச்செருகலாக உள் நுழைக்கப் பட்டவர். நியாயம் என்பது, புத்தருக்கு முன்பிருந்த கௌதமரின் காரண காரிய வாதங்களை அலசி ஆராயும் மறைபொருள் காட்சி. வைசேடிகம் என்பது, கணாதரின் (கணி + ஆதன்) அணுவியல் கோட்பாடுகளை முதன்முதலில் ஆய்ந்து எண்ணியம் என்று அளித்த விசேட தரிசனம் (சிறப்புக் காட்சி). உத்தர மீமாம்சம் என்பது, சடங்கு யாகங்களை மறுத்து, உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு, ஞானப் பார்வையை விரிக்கும் தரிசனம். பூர்வ மீமாம்சம் ஒன்றுதான் காலத்தில் பிந்தியது. வேதங்களின் கரும காண்டத்தை அடியொற்றிய அதன் மூலவரான ஜைமினியின் பார்வையைக் கொண்டது.

ஆக, இந்து மத ஆதார நூல்கள் குறிப்பிடும் வேதங்கள் என்பவை இந்தியச் சமயங்களின் காலத்திற்குப் பிந்தியவை என்பதை அவை குறிப்பிடும் முரண்களே நிரூபிக்கின்றன. ஆனால், வேத காலம் என்பதற்கு உலகம் படைக்கப்பட்ட காலம் என்றும், ஆகாயத்தில் பரவி உள்ள ஒலி அலைகளைத் தியான நிலையில் கேட்டு, மந்திரத் திரட்டாக ரிஷிகள் மூலம் அளிக்கப்பட்டது என்றும், வாய்மொழி, செவி வழியாகப் பரவும் ஒலி அலைகள் என்பதால் வேதம் 'சுருதி' எனப்படுவதாகவும், கேட்டு அறியப்படுவதால் வேதம் பயின்றோன் 'சுரோத்திரி' என்று அழைக்கப்படுவதாகவும், இந்த வேத விற்பன்னர்கள் வடதுருவத்தில் வாழ்ந்திருந்து, பின்னர் சிந்து நதிக் கரைக்கு வந்து வேதம் கற்பித்தனர் என்றும் வேதக் கதைகள் நிறையவே கதைக்கின்றன. இந்தக் கதைகளின் அடிப்படையில்தான் இந்திய மொழிகளின் முதல் இலக்கியமாக நான்கு வேதங்கள் குறிப்பிடப் படுகின்றன. நம்பிக்கை கொள்ள முடியாத இந்த வரலாற்றில் வேதம் அறிந்த ரிஷிகள், சிந்து நதி தீரத்திற்குக் கைபர், போலன் கணவாய் வழி வந்தார்கள் என்று வேத வரலாற்றில் குறிப்பிடுவது மட்டுமே வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றோடு ஒத்துப் போகின்றது. ஏனைய அனைத்தும் கட்டமைக்கப் பட்ட முரண் கதைகள் தான்.

இந்தியாவில் வேதங்களுக்கு முன்பிருந்த பல சமயங்களும் தங்கள் கோட்பாட்டு விளக்கங்களுக்குத் தனித்தனி நூல்களை உருவாக்கி வைத்திருந்தன. அவற்றில் ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அந்தந்தச் சமயத்தினுடைய தலைவர்களின் உபதேசத் திரட்டுகளே அந்தந்தச் சமயங்களின் வேதங்களாகப் போற்றப்படுகின்றன. தமிழ், பாலி, பிராகிருதம், மாகதி போன்ற மொழிகளுக்கு மிகவும் பிற்பட்ட காலத்தில் தோன்றிய மொழியான சமஸ்கிருதத்தில், 'ரிக்' உள்ளிட்ட வேதங்கள் உள்ளனவாகக் கூறுவதே வேதத்தை வரலாற்றுக்குப் பிந்திய காலத்தில் கொண்டு சேர்க்கிறது. வேத வரலாற்றில் வேதம் என்றும், ஆதி வேதம் என்றும் குறிப்புகள் உண்டு. இதில் வேதம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. ஆதி வேதம் என்ற சொல்லே அதன் பழமையைக் குறிக்கும். அந்த ஆதிவேதம் தமிழ் மொழியில் எழுதப்பட்டது. அதாவது முற்காலத் தமிழ் எழுத்தான 'தமிழி' எழுத்துருவில் எழுதப்பட்டது. இதை வேத நிறுவனங்களே இப்படிக் கூறுகின்றன. "பழமையான நான்கு வேதங்களும் சமஸ்கிருதத்தில் எழுதப்படவில்லை. அவை 'தமிழி' என்ற மொழியில்தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சமஸ்கிருதம் தெரிந்த அறிஞர்களிடம் வேதங்களில் சில பகுதிகளை மொழிபெயர்க்கக் கூறியபோது, அவர்கள் இதில் உள்ள பல சொற்கள் சமஸ்கிருத அகராதியிலேயே இல்லை என்றனர். இதுகுறித்து மேலும் ஆராய்ந்த போது, வேதங்கள் அனைத்தும் சமஸ்கிருதம் கலந்த 'தமிழி' மொழியில் இயற்றப்பட்டுள்ளது என்று தெரியவந்தது" என்று வேத ஆராய்ச்சியாளரும், வேதஸ்ரீ நிறுவனர் மற்றும் தலைவருமான பி. வி. என். மூர்த்தி, சென்னையில் நடைபெற்ற "மறைமொழி அறிவியல்" என்ற கருத்தரங்கில் கூறியுள்ளார் (தினமணி, 28. 12. 2013).

இந்த நிலையில் இந்தியாவின் எழுதப்பட்ட முதல் இலக்கியமாக நான்கு வேதங்களையும் கூறுவது எத்தனைப்பிழையானது என்று அறிய முடியும். "வேதங்கள் இயற்றப்பட்ட காலத்தில் பல நூல்கள் தமிழி எழுத்துருவில் எழுதப்பட்டுள்ளன" என்று 'மறைமொழி அறிவியல்' கருத்தரங்கில் மேற்கூறிய வேத ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். இது, இந்தியாவின் ஏன், உலகத்தின் முதல் இலக்கியம் என்பதே தமிழ் இலக்கியம் தான் என்று சான்று பகர்கின்றது. ஆனால், எப்படியோ அவை மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் அல்லது மாற்றப்பட்டும் விட்டதால், இன்று இந்தியாவின் முதல் இலக்கியம் என்பது வேதமாகக் கூறப்படுகிறது. உண்மையில் இவர்கள் கூறும் வேதங்கள் நான்கும் சமஸ்கிருத மொழியில் உருவாகவில்லை. அவை வெறுமனே ஒலி அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிந்து நதி தீரத்துப் பூர்வ குடியினரின் வாய்மொழிக் கூற்றுதான். அவையும் சிந்து வெளிக் காலத்துச் சமணர்களின் வாய்மொழி மந்திரங்களே. சிந்துவெளி காலத்திலிருந்து அன்றைய காலத் தமிழர் வழிபாட்டு முறைகளில் ஆதிநாதரை (முன்னோர்களின் தலைவரை) வழிபடுவதான கூட்டுப் பாடல்களின் சொற்களும், பாடும் முறையும் கொண்டு அதையே பிற்காலங்களில் வழிமொழிந்த நாடோடிக் கும்பல்களின் ஒலி வடிவமான வழிபாட்டு முறைப் பாடல்களே நான்கு வேதங்கள். அதில் இருக்கக்கூடிய உலக உருவாக்கம் பற்றிய கருத்துக்கள் அவர்கள் சிந்துவெளிப் பூர்வ குடி மக்களின் முன்னோர் வழிபாடுகளில் செவிவழிக் கேட்ட கருத்துக்களே.

குறிப்பாகச் சொல்வதானால் அவை சிந்துவெளித் தீரத்துத் தமிழ் அந்தணர்களின் (சமணர்களின்) வழிபாட்டுப் பாடல்களின் கருத்துக்களும், சொற்களுமே. அவை இன்று திராவிட மொழிக் குடும்பச் சொற்களாக இனம் காணப்பட்டுள்ளன. ரிக் வேதத்தின் சில கருத்துகளைத் தொகுத்து 'திராவிட ரிக்' என்று வழங்கியும் வந்தனர். இவற்றைத் தவிர்த்து வேதங்களில் உள்ள பிற வழிபாட்டுப் பாடல்கள் சிந்துவெளி, ஹரப்பாவில் வாழ்ந்திருந்த நாகரிக மக்களை எதிரியாகக் கருதி 'அவர்கள் அழிந்து போகக் கடவதாக' என்று தங்கள் தலைவனிடம் வேண்டுவதான வழிபாட்டு முறைகளே யசூர், சாம, அதர்வண வேதங்கள். இந்தப் பாடல்கள் சிந்துவெளி வழிபாட்டுப் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட நாடோடி இனக்குழுக்களின் வழிபாட்டுப் பாடல்கள். அவை வெறும் ஒலிப்பு முறையை மட்டுமே கொண்டவை. இவை எழுத்துருவம் பெறும் போது அன்றைக்கு நடைமுறையில் இருந்த ஒரே எழுத்துருவான 'தமிழி'யில் எழுதப் பட்டன.

எழுத்து முறை என்பது சிந்துவெளிக் காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருந்தது. சித்திர மொழியிலிருந்து பரிணாமம் பெற்றதே குறியீடுகளின் மொழி. குறிப்பால் பொருளை உணர்த்தும் முறையைத்தான் குறியீடுகள் கொண்டிருக்கின்றன. பேச்சு வழக்கு அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்பாகவே இருந்திருக்கும். எப்படி இருப்பினும் சிந்துவெளி எழுத்து தான் இந்தியாவின், தமிழர்களின் முதல் எழுத்து முறை. அந்த எழுத்து முறையைத் தோற்றுவித்தவர் தான் ஆதிநாதர். அந்த மொழியின் (தமிழியின்) பேச்சு, எழுத்து வடிவங்களுக்கும், அதற்குப் பிறகு தோன்றிய அத்தனை வழக்கு மொழிகளுக்கும் 'அ' என்னும் எழுத்தே முதலாவதாக அமைந்திருப்பதைத் தற்செயல் என்று கடந்து போய்விட முடியாது.
 
இதற்குப் பிறகான காலத்தில் தமிழி வரிவடிவ மூலத்தைக் கொண்டு பிராகிருத, பாலி, மாகதி மொழிகளுக்கு எழுத்துருவாக்கம் ஏற்படுத்தப் பட்டது. 2600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்துருவை நெறிப்படுத்தியவராகக் கௌதம புத்தர் அறியப்படுகிறார். தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மூன்று மொழிகளுக்குமான வரிவடிவத்தை நெறிமுறை படுத்தியவர் புத்தரே என்பதும், அதற்கு முன்னர் வரிவடிவம் கொண்டிருந்த தமிழி (தமிழ் பிராமி) எழுத்து முறையை முன்மாதிரியாகக் கொண்டு, புத்தர் இம்மூன்று மொழிகளுக்கும் வரிவடிவத்தை ஏற்படுத்தினார் என்பதும் புத்தரின் வரலாற்றில் இருந்து அறியப்படும் செய்திகள். இவற்றைப் பண்டிதர் அயோத்திதாசர் வலியுறுத்துகிறார். (க. அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள்). 

மேற்கூறிய மொழிகளில் சேராத ஒலிக்குறிப்புகளைக்  கொண்ட ஒலி அமைப்பினைச் செம்மைப்படுத்தும் முயற்சி புத்தர் காலத்திற்கும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. அப்படிச் செம்மைப்படுத்தப்பட்ட ஒரு மொழியைத்தான் சமஸ்கிருதம் என்றனர். அதற்கு வரி வடிவமாகப் பாலி மொழியின் வரிவடிவத்தைக் கொண்டு சமஸ்கிருதத்தை ஒரு தனி மொழியாகப் பாவித்து வந்தனர். இதற்குப் பிறகுதான் சமஸ்கிருத ஒலிக் குறிப்புகள் கொண்ட வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் பாலி வரிவடிவத்தில் எழுதப்பட்டுச் சமஸ்கிருத ஒலிக் குறிப்பின் அடையாளத்தைப் பெற்றன. சமஸ்கிருத உருவாக்கம், வளர்ச்சி அத்தனைக்கும் அடிப்படையானது தமிழ்மொழியே. தமிழும், வடமொழிகளும் அறிந்த தமிழ்ப் புலவர்களே இக் காரியத்தைச் செய்து வைத்து, சமஸ்கிருத மொழியை உயர்த்திப் பிடித்து, அது அரசாங்க மொழி ஆவதற்கும், கோயில் மொழியாவதற்கும் காரணமாயினர். இதற்கெல்லாம் எதுவுமே பாடுபடாமல், ஒரு சிறிதும் உழைக்காத பிராமணர்கள், தங்களுக்குத் தானாக வந்த இந்த வாய்ப்பை எல்லாம் சிந்தாமல், சிதறாமல் அப்படியே அள்ளிக்கொண்டு இன்று வரை கோலோச்சி வருகின்றனர். 

இந்தியச் சிந்தனை மரபு என்பதே தமிழ்ச் சிந்தனை மரபு தான். இம்மரபின் பரிணாம வளர்ச்சியில் முதல் தத்துவார்த்தக் கோட்பாட்டை (மெய்யியல்) உருவாக்கியவர் ஆதிநாதர். அந்தக் கோட்பாட்டின் அடிப்படை அறம். இந்தக் கோட்பாட்டினைப் பின்பற்றியவர்கள் மூன்று பிரிவினர்களாக நிலைபெற்றனர். சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய இம்மூன்று பிரிவினருக்கும் மூல ஊற்றாக இருப்பவர் ஆதிநாதர். சிந்துவெளி நாகரிகம் உச்சமாக நிலைபெற்று இருந்த காலத்தில் வாழ்ந்தவர் ஆதிநாதர். சமண சமயம் சிந்துவெளி காலத்தோடு தொடர்புடையது. சிந்துவெளி முத்திரையில் எருமைக் கொம்பு அணிந்த உருவம் 'பசுபதி' என்று குறிப்பிடப்படுகிறது. அது 'ரிஷபநாதர்' என்று அழைக்கப்படும் ஆதிநாதர் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். (க. நெடுஞ்செழியன், ஆசீவகமும் ஐயனார் வரலாறும்). ஆதிநாதர் சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர். சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் எருது, எருமைக் கொம்பணிந்த உருவங்கள், சுவத்திக (ஸ்வஸ்திக்) சின்னங்கள் இவையெல்லாம் சமணத்தின் தோற்றுவாயாகச் சிந்துவெளியைக் குறிக்கின்றன. இந்த ஆதிநாதரைச் சைவர்கள், சிவனாகக் (பசுபதி) கொண்டாடுகிறார்கள். ஜைனர்களும் (சமணர்களும்), ஆசீவகர்களும் தங்களின் முதல் தீர்த்தங்கரராகப் போற்றுகிறார்கள். 23 ஆம் தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரின் போதனைகளையும், கபிலரால் கருத்தியல் உருவாக்கப்பட்ட 'சாங்கியம்' என்ற சமய போதனைகளையும் அறிந்தவரான கௌதம புத்தர், தான் வாழும் காலத்தில் நிலவிய 62 சமயங்களின் கருத்துக்களையும் நன்கறிந்து உணர்ந்த பின்னர் பௌத்தத்தின் கோட்பாட்டினை மொழிந்தார். (டாக்டர் அம்பேத்கர், புத்தரும் அவரது தம்மமும்).

இப்படிப்பட்ட தமிழ்ச் சிந்தனை மரபுகளுக்கு எதிரான மரபுதான் வைதீக மரபு. ஆதிநாதர் காலத்திலிருந்து மொழியப்பட்ட அறக்கோட்பாடுகள் தான் சுருதிகளாகவும் (வேதங்கள்) சுமிருதிகளாகவும் (உபநிடதங்கள், தர்ம சாஸ்திரங்கள்) சிந்தனை வழி, தலைமுறை, தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு வந்தன. அவை திராவிட மொழிக் குடும்பத்தின் மூல ஊற்றான தமிழ் மொழியில் இருந்தன. ஆதி வேதங்கள் தமிழி எழுத்துருவில் எழுதப்பட்டதாக வேத ஆய்வு நிறுவனங்களே கூறுகின்றன. ரிக் வேதத்தைத் 'திராவிட ரிக்' என்று சொல்வதும் வழக்கத்தில் உள்ளது. இங்குக் கூறப்பட்ட சுருதி, சுமிருதிகளுக்கு உண்மையான பாத்தியதை உடையவர்களான ஜைன, பௌத்த, ஆசீவக, சைவ சமயத்தினர், தங்கள் பூர்வீகச் சொத்துக்கான தாயாதிச் சண்டையில் ஈடுபட்டுப் பிரிந்து போய்விட, தமிழ்ச் சிந்தனை மரபின் வைரியான வைதீகம், சமண, பௌத்த, ஆசீவகச் சமயங்களை அழித்து அவற்றின் தத்துவங்களைத் தனதாக்கிக் கொண்டது. 

எவ்வுயிரையும் மதித்து, பிறருக்காக வாழும் அந்தணர்கள் சமூகத்தில் பெற்றிருந்த மதிப்பும், செல்வாக்கும் தான் சமயச் சண்டைகளுக்கு அடிப்படைக் காரணம் ஆயிற்று. இது அதிகாரப் பற்றை நோக்கியே எப்போதும் செயல்படும் வைதிகத்தின் சிந்தனை வளர்ச்சியாக உருப்பெற்று, சமணம், பௌத்தம், ஆசீவகம் போன்ற சமயங்கள் செல்வாக்கை இழந்திருந்த காலத்தில் அவற்றின் உண்மையான அந்தணர்களாகப் போற்றப்பட்ட இடத்தில் வைதிகப் பிராமணியம் சிறிது சிறிதாக உள் நுழைந்தது. இதற்கு இடம் கொடுத்ததும் சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய சமயங்கள் தான். இயற்கை, பொருள், உயிர் இவற்றை மட்டுமே முழுமையாக நம்பிய இச்சமயங்களின் மூலவர்களான மகாவீரர், புத்தர், மற்கலி கோசாலர் ஆகியோரின் காலத்திற்குப் பின்பு இவர்களின் சீடர்களாகவும்,  வழித் தோன்றல்களாகவும் வைதீகப் பிராமணர்கள் தங்களை வரித்துக்கொண்டனர். சமண, பௌத்த, சாங்கிய, ஆசீவகக் கோட்பாடுகளை உட்செரித்துக் கள்ளுண்ணாமை, ஊன் உண்ணாமை போன்றவற்றைச் சிரமப்பட்டுக் கடைப்பிடித்து, இச்சமயங்களின் உயர்ந்த கோட்பாடுகளை வைதீகத் தத்துவத்தில் ஏற்றி, அதையே வேதமாகவும், கீதையாகவும் வேறு வேறு மொழிகளில் எழுதியும் வைத்து, அவை அரச தர்மத்துக்கும் மேலான தர்மம் என்றும், அவற்றின் விளக்கங்களே மனுதர்மம், சாத்திரம் என்றும் கூறி, அவற்றைக் கடவுள் மொழிந்ததாகக் கூறி, மன்னர்களையும் மயங்க வைத்த மதகுருக்களாகத் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொண்டனர். அந்தணர், பார்ப்பனர் என்ற அறிவார்ந்த சமயத் தலைவர்களின் பட்டங்களை ஆரிய வைதிகப் பிராமணர்கள் தங்கள் பட்டங்களாகக் கூறிக் கொண்டனர். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. மன்னனிடம் பரிசில் பெற வரும் தமிழ்ப் புலவர்களும், இசைப் பாணர்களும் மத குருக்களையும் போற்றிப் பாடினால் தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் ஆரியப் பண்பாடும், ஆரிய மொழியும் தமிழோடு கலந்து ஒட்டி உறவாடி ஆரியமே உயர்ந்தது என்ற மனோபாவ அரசியலே இந்தியாவை ஆட்கொண்டது. இன்றும் ஆண்டு வருகிறது.

மேற்கூறிய காரணங்களால் ஆசீவகம், 14ஆம் நூற்றாண்டில் முற்றாகச் சிதைந்து போனது. சமணம், மகாவீரர் காலத்திலேயே (கிமு 600) இந்திரபூதி கவுதமர் என்னும் பிராமணரைத் தலைமைச் சீடராக ஏற்று பிராமணிய மயம் ஆகிப்போனது. பிராமணர் அல்லாத சமணர்கள் பிராமணச் சமணர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டுக் கழுவில் ஏற்றப்பட்டனர். அதைக் கொண்டாடும் திருவிழாக்கள் இன்றும் மதுரை உட்படப் பல்வேறு கோயில் நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பௌத்தமும் பிராமணிய உள்நுழைவால் பலவாறாகப் பிளவுபட்டு (18 என்கிறார் டி. டி. கோசாம்பி), வலிமை இழந்து, பிறந்த நாட்டில் சுருங்கிப் போனது. இந்தியாவின் மரபுவழிச் சமயங்கள் இவ்வாறு வலிமை இழந்த நிலையில் அவற்றின் மெய்யியல் கோட்பாடுகள் மெல்ல, மெல்ல வைதிகத்திற்குச் சொந்தமாகிப் போயின. அவற்றைத்தான் வேதங்களின் இறுதிப் பகுதியான வேதாந்தத்தில் நாஸ்திக தரிசனங்கள் என்ற பெயரில் வைதிகம் தனதாக்கிக் கொண்டிருக்கிறது. பிற்காலங்களில் (கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில்) அவற்றைத் தொகுக்கும் போது, அவை வைதீக மரபு கலந்த சுருதி, சுமிருதிகளாக மாற்றம் பெற்றன. நான்கு வேதங்களும் (ஆதிவேதம்) தொகுக்கப்பட்ட இடமாகத் தென்னாட்டை அதாவது தமிழ்நாட்டை டி. டி. கோசாம்பி குறிப்பிடுகிறார் (பகவான் புத்தர்). 

பிற சமயங்கள் உருவான நிலையில், அதற்கு எதிரான தன்மை உடையோர் ஒன்று கூடித் தங்கள் நெறியாக (சமயமாக) ஒன்றைக் கட்டமைத்துப் பின்னர் அதற்கென்று கோட்பாடுகளை உருவாக்கி (மனுதர்மம் முதலான சாத்திரங்கள்) தங்கள் தனித்தன்மையை நிறுவினர். எனவே இந்தியாவின் பிற சமயங்களைப் போன்று ஒரு சமயம் அல்லாத பிரிவினர் ஒன்று கூடித் தங்கள் இருப்பைக் காட்ட முற்பட்ட ஒரு வைதீகக் கூட்டமே பின்னாட்களில் ஆறு சமயங்களை உள்ளடக்கிய ஒரு பெரும் சமயமாக அவர்களாலேயே அறிவிக்கப்பட்டது. மேலும், அறம் என்பதே என்னவென்று அறியாத கோட்பாடுகளும், மானுட இனத்தின் அனைத்து உயிர்களின் மேன்மையைப் போற்றாத, சமத்துவம் அல்லாத கோட்பாடுகளும் கொண்டதாக வெளிப்படையாகக் கூறிக் கொண்டு வஞ்சகத்தால் அதிகாரத்தை நகர்த்திக் கொண்டு வரும் சமயமாகவும் அது அவர்களாலேயே பெருமை பொங்கக் குறிப்பிடப்பட்டு வருகிறது. அறம் முதலான கருத்துகள் மேலோங்கிய காலத்தில், எந்தவிதமான மேலோங்கிய கருத்தையும் தங்களுடையதாக மொழிந்து, "எதுவானாலும் அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது" என்கிற வாசகத்தோடு வைதிகம் பாமர மக்களை வசப்படுத்தியது. சமயம் என்கிற ஓர் உண்மையான உருவம் இல்லாத இவ்வைதிகம் சமண, பௌத்த, ஆசீவகக் கோட்பாடுகளை உட்செரித்து, ஒரு மதமாக நிலைத்திருக்கப் பழி பாவத்தின் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும், வாழுமிடமாகவும்  வளர்ச்சிநிலை பெற்றே வந்திருக்கிறது.

இப்படி, இந்தியச் சிந்தனை மரபாக வளர்நிலை பெற்ற தமிழ்ச் சிந்தனை மரபுகள், வெளியிலிருந்து உள்நுழைந்த வைதிக (ஆரிய) மரபுகளாகத் திரிக்கப்பட்டுத் தற்போதைய நான்கு வேதங்களாக, உபநிடதங்களாக, தர்ம சாஸ்திரங்களாக வேறு, வேறு மொழிகளில் (பாலி, பிராகிருதம், மாகதி) உருவாக்கப்பட்டன. பிற்காலத்தில் இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு மறை(வு)மொழியில் (சமஸ்கிருதம்) இவையெல்லாம் தொகுக்கப்பட்டும், எழுதப்பட்டும் ஆவணப்படுத்தப்பட்டன. அதற்கு முன்பிருந்த மொழித் தடயங்கள் பெரும்பான்மையானவை அழிக்கப்பட்டன. சில, அவற்றிற்குப் பாத்தியதை (உரிமை) உள்ளவர்களாலேயே கைவிடப்பட்டன. (எடுத்துக்காட்டு - தமிழ் ஓலைச்சுவடிகள். உ. வே. சா. காலம் வரை இதுதான் நடந்தது). கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் எல்லாமே வைதிக மரபாகிவிட்டன. இந்தியச் சிந்தனை மரபு என்பது வைதிகத்தின் பெருமரபாக இன்று நிலைபெற்று நிற்கிறது. உயரிய மெய்யியல் (தத்துவக்) கோட்பாட்டினை உலகிற்கு அளித்த தமிழர்கள், போகியிலும், ஆடிப்பெருக்கு வெள்ளத்திலும் தமிழின் செல்வங்களான ஓலைச்சுவடிகளைக் காவு கொடுத்து விட்டுக் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மூலமாக வைதீகம் குறிப்பிடும் 'பிரம்மம்' என்பதைக் கூட புத்தரின் உருவில் தான் அவர்களால் வெளிப்படுத்த முடிந்தது. அதற்காக விஷ்ணுவின் அவதாரத்தையே தாரைவார்த்துப் பௌத்தத்தை விழுங்கியது வைதிகம். அதிலிருந்து பவுத்தத்தை 'நவயானம்' வழி மீட்டெடுத்த அண்ணல் அம்பேத்கரையும் தங்கள் மதக் காவலராகக் கபளீகரம் செய்யும் முயற்சியும் தற்போது நடைபெற்று வருகிறது. "மனித நேயத்துக்கு முரணான, சமத்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழிப்போம்" என்ற உறுதி மொழியோடு பௌத்தத்தைத் தழுவிக்கொண்ட அண்ணல் அம்பேத்கரின் பின்னால் அணிவகுப்போர் 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழங்கவும் நினைப்பார்களா?

---

நன்றி: புதிய கோடாங்கி பிப்ரவரி 2021




No comments:

Post a Comment