Thursday, March 25, 2021

கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும்

கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும்

-- முனைவர் சொ.சாந்தலிங்கம்


அண்மையில் மதுரை மாவட்டம் செக்கானூரணிக்கு அருகில் கிண்ணிமங்கலம் கிராமத்தில் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டு ஒன்றும் அத்தோடு வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் ஆய்வாளா் காந்திராஜன் குழுவினரால் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த சில நாட்களில் மற்றொரு தமிழ்க்கல்வெட்டும் (கி.பி.1722), அதே இடத்தில் கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்புகள் ஆய்வாளா்களின் கவனத்தை வெகுவாக ஈா்த்ததுடன் பல சூடான சுவையான விவாதங்களுக்கும் வழி கோலியது. இவ்வூா் 2014 ஆம் ஆண்டிலேயே இக்கட்டுரை ஆசிரியா் மற்றும் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு அக்கோயிலில் கி.பி.19ம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு ஒன்று இருந்ததைப் படித்து வெளியிடப்பட்டது (ஆவணம் இதழ் 25 பக்.11-12, 2014). அப்போது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் எவையும் இக்கோயிலில் இல்லை (ஏகநாத சுவாமி திருக்கோயில்). இப்புதிய கல்வெட்டுகள் அண்மையில் பூமிக்குக் கீழிருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கல்வெட்டுகள் பற்றிய சிறிய விவாதமே இக்கட்டுரை. ஏற்கனவே ஒரு விமா்சனக்கட்டுரை முனைவா்.மீ.மருதுபாண்டியன், மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் அவா்களால் மல்லாங்கிணறு கருத்தரங்கில் படிக்கப்பட்டது என்பதையும் நினைவு கூருகிறேன்.

தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டு:
தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் காணவியலாத ஒரு எண்பட்டைக் கல்தூணில் இரண்டு வரிகளில் ஏகன் ஆதன் கோட்டம் என்று இரண்டு வரி ‘தமிழி’ கல்வெட்டு இங்கு காணப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த மூத்த கல்வெட்டறிஞா் வெ.வேதாசலம் இக்கல்வெட்டில் முதல் எழுந்தான் ‘ஏ’ என்பதில் உள்ளே புள்ளி உள்ளது என்றும் எனவே இதனை எகன் ஆதன் கோட்டம் என்றே வாசிக்கவேண்டும் எ்னறும் கருதுகிறார். ஆனால் இக்கல்வெட்டை மீளாய்வு செய்த சு.இராசவேலு இக்கல்வெட்டில் எந்த எழுத்திலும் புள்ளியில்லை என்றும் எனவே ‘ஏகன் ஆதன் கோட்டம்’ என்று படித்தது சரியே என்றும் விவாதிக்கிறார் (சாசனம் ப.9. கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுப் பேரவை வெளியீடு, 2020 டிசம்பா்) இதன் அடிப்படையில் சு.இராசவேலு இக்கல்வெட்டின் காலத்தை கி.மு.2ம் நுாற்றாண்டிற்குரியது எனக் குறிப்பிடுகிறார் (மேலது). இவருடைய கருத்தில் பலருக்கும் வலுவான ஐயங்களும், அத்தோடு இக்கல்வெட்டின் உண்மைத்தன்மையிலும் பல ஆய்வாளா்கள் ஐயம் கொண்டுள்ளனா் (சு.இராசகோபால், நா.மார்க்சியகாந்தி, ஆா்.பத்மாவதி, சொ.சாந்தலிங்கம் கட்டுரையாளா்).

இக்கல்வெட்டு போலியானது என்பதற்கான காரணங்கள். இதுவரை சங்காலத்தில் கல்லால் ஆன கட்டுமானம் (கோயில், அரண்மனை, கோட்டை உட்பட) எவையும் தமிழ்நாட்டில் கண்டதில்லை. பெருங்கற்சின்னங்கள் (கல்திட்டை) தவிர எவையும் கல்லால் கட்டப்பட்டதில்லை. ஆனால் இத்தமிழி கல்வெட்டு கிடைத்துள்ள கல் முப்பட்டையுடன் கூடிய ஒா் அரைத்தூண் ஆக உள்ளது. பிற்காலத்திய ஒரு கோயில் அல்லது ஒரு மண்ட்பத்திற்குரியதாக இது இருக்கலாம். எனவே இக்கல்வெட்டு சங்ககாலத்தைச் சோந்ததாக கொள்ளமுடியாது.
மேலும் இருவரிகளில் வெட்டப்பட்டுள்ள ‘ஏகன் ஆதன் கோட்டம்’ என்ற தொடா் கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்குரியதல்ல எழுத்துக்கள் எவ்வித பிசிறும் இன்றி, அளவு எடுத்த அச்சு எழுத்துக்கள் போல் ஒரே வடிவில் வெட்டப்பட்டுள்ளன. அண்மைக்காலத்தில் நன்கு படித்த கல்வெட்டெழுத்துகளில் ஞானம் கொண்ட ஒருவரால் எழுதப்பட்டவை போலத் தெரிகிறது. மற்றும் கல்வெட்டில் சுண்ணப்பொடி போட்டு எடுத்த படத்தில் எல்லா இடங்களிலும் புள்ளி இருக்கிறது. எனவே ராசவேலு கூறுவது போல் புள்ளி இல்லை என்பது பொருந்தாது. அடுத்த கோட்டம் என்ற சொல் முதன் முதலாகப் பூலாங்குறிச்சி கல்வெட்டில் தான் பயின்று வருகிறது. பூலாங்குறிச்சி கல்வெட்டின் காலத்தை கி.பி.3ம் நூற்றாண்டு என்கிறார். சு.இராசவேலு (சாசனம்.23 ப.11) ஆனால் மற்ற அறிஞா்கள் இதன் காலத்தை கி.பி.5ம் நூற்றாண்டு என்றே கொள்ளுவா். எனவே சு.இராசவேலுவின் காலக்கணிப்பு ஏற்புடையதல்ல. கோட்டம் என்ற சொல்லுக்குப்பல பொருள்களும் பல இலக்கியச் சான்றுகளும் உள்ளன. இக்கல்வெட்டில் இச்சொல் கோயில் என்ற பொருளைத்தரும். ஆனால் கல்வெட்டே சந்தேகத்திற்குரியதாக இருக்கும் பொழுது இதன் காலம் பொருள் பற்றி நாம் கவனம் செலுத்தத்தேவையில்லை.

வட்டெழுத்துக் கல்வெட்டு:
தமிழி கல்வெட்டைக் கண்டறிந்த அதே குழுவினா் அத்தோடு ஒரு வட்டெழுத்துக் கல்பலகையையும் கண்டனா். இவ்வெழுத்தின் காலம் கி.பி.7-8ஆம் நூற்றாண்டு எனக் கணித்துள்ளனா். கல்வெட்டுள்ள கல்லின் முதல் பாதி உடைந்திருக்கலாம். பாதியிலிருந்தே செய்தி தொடங்குகிறது. ஐந்து வரிகளைக் கொண்ட இக்கல்வெட்டு
01. இறையிலியாக
02. ஏக நாதன்
03. பள்ளிப்படை
04. மண்டளி
05. யீந்தான்
என்பதே இக்கல்வெட்டின் பாடம் சு.இராசவேலு ‘மன்றளி ஈந்தார்’ என்று எழுத்துக்களைத் தவறாகப் படித்துள்ளார் (சாசனம் ப.13). இக்கலவெட்டிலும் மொழிப்புலமை இல்லாததன் காரணமாக புணா்ச்சியை அறியாமல் எழுதியுள்ளார். ஏகன்+நாதன் என்றால் ‘ஏகனாதன்’ என்று தான் வரவேண்டும். இங்கே ஏகநாதன் என்று வந்திருப்பதைக் கவனிக்கலாம். மேலும் இக்கல்வெட்டும் போலியானது என்பதற்கு இதன் எழுத்தமைதியே சான்று. இக்கல்வெட்டு ஆழமாக வெட்டப்படாமல் கீறல் முறையில் வெட்டப்பட்டுள்ளது. இதனை 7-8 ம் நூற்றாண்டாகக் கருதுகின்றனா். இதே சமயத்தில் மதுரையில் செக்கானூரணிக்கு அருகிலேயே கீழக்குயில்குடி, முத்துப்பட்டி போன்ற இடங்களில் அழகான வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை ஒப்பிட்டு நோக்குவோர் இந்தக்கல்வெட்டின் போலித்தன்மையை எளிதில் உணா்வா்.

‘இறையிலி’ என்னும் சொல் முதன்முதலாகப் பாண்டிய நாட்டில் (கி.பி.772-ல்) (SII vol. XIV-19; கல்வெட்டுச் சொல்லகராதி ப.80) காணப்படுகிறது. இது போல் ‘பள்ளிப்படை’ என்ற சொல்லும் பாண்டிய நாட்டில் கி.பி.10ம் நூற்றாண்டில் தான் காணலாம். இவ்விரு சொற்களையும் இங்கே காண்பது மிகவும் வியப்புக்குரியதாக உள்ளது. இது போல் ‘மண்டளி’ என்ற சொல் மண்+தளி=மண்டளி என்றாகி மண்ணால் ஆகிய கோயில் எனும் பொருளைத் தரும். இவ்வாறான மண்டளியே முந்தய கோயில் என்றாலாவது சற்று பொருத்தமாகும். இதனைக் கொண்டு பாண்டிய நாட்டின் முதல் பள்ளிப்படைக் கோயில் கிண்ணிமங்கலத்தில் தான் உள்ளது என்பதும் ஏற்புடையதல்ல. இங்கு ஒரு மண் தளி இருந்திருக்காலம். 8-9 ம் நூற்றாண்டுகளில் தான் பல மண்தளிகள் கற்றளிகள் ஆயின என்பது தமிழ்நாட்டு கட்டடக்கலை வரலாறு. சு.இராசவேலு அவா்கள் ‘கோட்டம்’ என்ற சொல் எங்கெல்லாம் பயின்றுவருகிறது என்றும் பள்ளிப்டைக் கோயில்கள் எங்கெல்லாம் உள்ளன எனவும் அயரவைக்கும் பட்டியலைத்தருகிறார். அதனை நாம் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை கட்டுரையின் நீளத்தை அதிகரிக்க பயன்படும் இவையெல்லாம் இங்கு  தேவையற்ற சரக்குகள் என்பது என்கருத்து.

நாயக்கா் காலக்கல்வெட்டு:
மூன்றாவதாக கி.பி.1722 ஆம் ஆண்டைச் சோ்ந்த விஜயரங்க சொக்கநாதா் காலத்திய கல்வெட்டு ஒன்றும் அங்கு காணப்பட்டது. இக்கட்டுரை ஆசிரியரால் முதலில் நேரடியாகப்படிக்கபட்டது. 43 வரிகளைக் கொண்டது இக்கல்வெட்டு. கல்வெட்டின் பெரும்பகுதி மதுரை நாயக்கா்களின் மெய்க்கீா்த்தியும் பின்னா் முக்கிய செய்தியும் இடம் பெற்றுள்ளன. மெய்க்கீா்த்திப் பகுதியைத் தவிர்த்துப் பார்ப்போமானால் கிண்ணிமங்கலம் ஏகநாதா் கோயிலும் குரு மடமும் ஒரு குடும்பத்திற்கு மட்டும் பாரம்பரியமாய் உரிமையுடையது. பிறா் யாரும் இதில் உரிமை கொண்டாட முடியாது என்பதே முக்கியச் செய்தியாகும்.



நன்றாக ஊன்றி கவனித்தால் இக்கல்வெட்டும் போலியானது எனக் கண்டறியலாம். இக்கல்வெட்டில் சில வரிகளைக் கீழே தருகின்றேன்
வரிகள்
26. மீனாட்சி சுந்தரேசுவர சுாமிகள் சன்
27. னதியில் கிண்ணிமங்கலம் ஸ்ரீலஸ்ரீ
28. ஏகநாத குருமடத்தார்க்கு தன்மசிலா சாதனப்பட்டயம்
29. எழுதிக்குடுத்தபடிக்கு இம்மடத்துக்குப் பாத்தியப்பட்ட
30. நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டு
31. திரல்விடையாவும் நெடுஞ்சழியன் பரா
32. ந்தகபாண்டிய ராசனின் பட்டயத்தில் கண்
33. டபடி குடும்பத்தாரின் வாரிசுதாரா்களால்
34. ஆதாயம் கையாடிக்கொண்டு இவா்களின்
35. குல ஆசார வழக்கப்படி பூஜித்து பரிபாலனம்
36. செய்துவரவும் மடப்புறத்தில் பரம்பரைசம்பி
37. ரதாயப்படி பள்ளிப்படை சமாது வைத்து வ
38. வணங்கிவரவும் இம்மடத்தார்க்கு மட்டுமே கா்
39. ணபரம்பரை பூர்வீகபாத்யதை உண்டு
40. பிறகுலத்தார் யாவருக்கும் எவ்வித பாத்தியதையும்
41. இம்மடத்தில் இல்லை.
மேற்கண்ட வரிகளில் இக்கல்வெட்டின் உண்மையான நோக்கம் தெளிவாகப் புலப்படும். இக்கல்வெட்டும் உண்மையானதல்ல என்பதற்கு இதில் இடம் பெற்றுள்ள பல சொற்களே சான்றாகும். எடுத்க்காட்டாக 27ம் வரியில் வரும் ‘ஸ்ரீலஸ்ரீ’ என்ற அடைமொழி கல்வெட்டுக் காலத்துக்குப் பொருந்தாததாகும் (கி.பி.1722க்கு) வரி 31-32 ல் நெடுஞ்செழியன் பராந்தகபாண்டியன் ராசனின் பட்டயத்தில் கண்டபடி’ என்பது மிகவும் அபத்தமான சொற்றொடராகும். நெடுஞ்செழியன் சங்கால மன்னன். அவன் காலத்திய பட்டயம் ‘தமிழி’யில் எழுதப்பட்டிருக்கும். இக்கல்வெட்டை வெட்டியவா் அப்பட்டயத்தை எங்கு பார்த்தார். அவருக்கு அக்கால எழுத்தை கி.பி.1722ல் படிக்கத் தெரியுமா? இது போல் பராந்தகபாண்டியன் (கி.பி.768-815) ஆம் ஆண்டைச் சோ்ந்தவன். அவன் வெளியிட்ட பட்டயம் வட்டெழுத்தில் இருக்கும். அதனை இக்கல்வெட்டு வெட்டியவா் படித்தாரா, படிக்கத்தெரியுமா அப்படி இரண்டையும் பார்த்திருந்தால், படித்திருந்தால் தற்போது அப்பட்டயங்கள் எங்கே? என்ற கேள்விக்கு மடத்தின் தலைவா் அருளாநந்தம் கூறும் எளியவிடை அவையெல்லாம் திருடு போயிவிட்டன என்பது தான். இப்பதில் நம்பும்படியாக இல்லை. மேலும் இது போல பல ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு உசிலம்பட்டி வட்டத்தில் செப்பேடுகளாகப் பலவீடுகளில் உள்ளன. நானே பத்து செப்பேட்டு நகல்கள் (Xerox) சேகரித்துவைத்துள்ளேன்.

இது போலி செப்பேடுகளில் பெரும்பாலும் ஒரே செய்தி தான் இருக்கும். அதாவது மதுரை திருமலை நாயக்கா் ஒரு நாள் தங்கள் ஊருக்குவந்தார். அப்போது நான் அவரை சீனி, சா்க்கரை வைத்து வரவேற்றேன். அவா் மகிழ்ந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். எனக்கு இந்தவூர் காவல் உரிமை வேண்டும் எனக் கேட்டேன். அப்படியேதந்தேன். இவ்வூரில் நன்மைக்கு ஒரு பணமும், தீமைக்கு ஒரு பணமும் வசூலித்துக் கொண்டு நீசுகத்திலிருப்பாயாக” என்று பட்டயம் கொடுத்தார், மீனாட்சி சுந்தரேசுவரா் என்ற பெயரே 1898 ஆம் ஆண்டுவரை வழக்கத்தில் கல்வெட்டுகளில் இல்லை. ஆனால் அந்தப்பெயா் இக்கல்வெட்டில் உள்ளது வேடிக்கையே. இவையாவும் நூறு ஆண்டுகளுக்குள் ஒருவரைப்பார்த்து ஒருவா் ஒரே வாசகத்துடன் சுயமாகத் தயார் செய்து கொண்டதாகும். இவை முற்றிலும் போலியானதாகும்.

வட்டெழுத்து ஓலைச்சுவடிகள்:
சு.இராசவேலு அவா்கள் கிண்ணிமங்கலம் மடத்தில் நேரடி ஆய்வு செய்த போது மடத்தின் தலைவா் திரு அருளானந்தா் ஓலைச்சுவடிகள் சிலவற்றைக் காட்டியுள்ளார். அதில் வியக்கத்தக்க செய்தி அவை வட்டெழுத்தில் எழுதப்பட்டதாகும். சிலவற்றை பாடல் வடிவில்படித்து தனது கட்டுரையில் கொடுத்துள்ளார் (சாசனம் பக் 16-17) இவற்றை எழுதியவா் இம்டமத்தின் 62வது குருமகாசன்னிதானமாக விளங்கிய அ.மகாலிங்கம் என்ற கருணானந்தம் என்னும் இவா் 1812 ஆம் ஆண்டு மறைந்தார் என்றும் இராசவேலு குறிப்பிடுகிறார் (சாசனம் ப.18) தற்போதுள்ள மடத்தின் தலைவா் 67 வது குருவாகும். இவ்வோலைகள் ஒன்றில் ‘ஏகநாத பள்ளி ஆசான்’ என்றும் நாட்டாற்றுப்புறத்து அமிர்த பராக்கிரம நல்லூர் வெள்ளாள குயில்குடியான்மார்கள் பரிவட்டணை கடமையாக பத்து ஆண்டுக்கு ஒரு முறை ஆநிரை அறுபத்தும் அதற்கொப்ப கூளமும் கிண்ணிமங்கல ஏகனாத மடத்துக்கு ஈந்தார்’ என எழுதப்பட்டுள்ளது (பக் 17-18). இதில் வரும் நாட்டாற்றுப்புற அமிருதபராக்கிரம நல்லூர் குயில்குடி என்பது முத்துப்பட்டி வட்டெழுத்துக் கல்வெட்டில் வரும் தொடராகும் (கி.பி.9-10ம் நுாற்றாண்டு).

ஆனால் ஆசான், கூளம் என்ற சொற்கள் கி.பி.9-10ம் நூற்றாண்டு காலத்துக்குரியன அல்ல. எனவே இவ்வோலையை சிலாசாசன நகல் என்று இறுதியில் குறிப்பிட்டாலும் நமக்கு சந்தேகமே. கி.பி.10 நுாற்றாண்டுக்கான பாடல் வடிவிலோ, மொழி அமைப்பிலோ இவ்வோலைகள் இல்லை. மேலும் இதில் ‘மாவூத்து வேலப்பா் குறடு’ என்ற தொடரும் வருகிறது. மாவூத்து வேலப்பா் கோயில் என்பதும் சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்திய கிராம தெய்வக்கோயிலே. இதனை கி.பி.10ம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கலவெட்டில் பதிவு செய்திருப்பது எவ்வகையில் பொருந்தும்.

எனவே இம்மடத்தின் தலைவா் அருளானந்தா் இராசவேலுவிடம் உரையாடியபோது கூறியதாகச் சொன்னது போல் ஒரு நூறு ஆண்டுகளுக்குள் இவ்வோலை ஆவணங்கள் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். யாரோ கல்வெட்டு எழுத்துக்கள் தெரிந்த நபா்களைக் கொண்டு இதனை எழுதியிருக்க வேண்டும். இவ்வோலை ஆவணங்களின் மொழி நடை கி.பி.9-10ம் நூற்றாண்டுக்குரியது அல்ல. இவ்விதமான போலி ஆவணங்கள் வைதீஸ்வரன் கோயில் வட்டாரத்துக் கிராம மக்களால் குடிசைத் தொழிலாகத் தயார் செய்யப்படுவதை அண்மையில் செய்தி ஊடகங்களில் கண்டோம். எனவே இங்கு கிடைத்த அனைத்து கல் மற்றும் ஓலை ஆவணங்களின் மெயத்தன்மை சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. இதே கருத்தினை பல மூத்த கல்வெட்டாய்வாளா்களும் கொண்டுள்ளனா். அவசரப்பட்டு ஆா்வக் கோளாறு காரணமாக இதனை கி.மு.2ம் நூற்றாண்டு முதல் செயல்பட்டு வரும் மடம் என்று கூறுவது சற்றும் ஏற்புடையதல்ல. ஒரு எம்.பில். ஆய்வேடு இம்மடம் 200 ஆண்டுகளுக்கு முன்னா் சோழவந்தானில் செயல்பட்டுவந்ததாகக் கூறுகிறது.

ஏகநாதா்மடமும் காந்தளுார்ச்சாலையும்:
ஏகநாதா் மடம் கிமு.2ம் நூற்றாண்டு முதல் செயல்பட்டது என்றும் இங்கு வழிவழியாகக் கல்வி கற்பிக்கவும் போர்க்கலைகள் கற்பிக்கும் இடமாகவும் திகழ்ந்து வந்துள்ளது. குறிப்பாக வேளாண்மை, இயற்கையைப் பாதுகாக்கும் முறைகள், நீா் மேலாண்மை, சோதிடம், தமிழ் மருத்துவம், தமிழ் கணிதவியல், இவற்றுடன் போர்க்கலை பயிற்சிக்கான களமாகவும் இது திகழ்ந்தது. சோழா் காலத்தில் கல்வெட்டுகளில் குறிக்கப்படும் ‘காந்தளுர்சாலை’ போன்று இம்மடம் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது என்கிறார் சு.இராசவேலு (சாசனம் ப.7). இக்கூற்று அவரது கற்பனையின் உச்சம் என்று கொள்ளத்தக்கதாகும். இவ்கூற்றுக்கு எவ்விதச் சமகாலச் சான்றோ, பிற்காலச் சான்றோ இல்லை. இன்றைய மடத்தலைவா் அருளானந்தன் வாய்மொழிக் கூற்று எல்லாம் வரலாறு ஆகிவிடமுடியாது என்பதை இராசவேலு உணரவில்லை. காந்தளுர்ச்சாலைக்கு இணையான ஒரு நிறுவனம், கி.மு. 2ம் நுாற்றாண்டிலிருந்து செயல்பட்டது என்றால் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் கி.பி.14ம் நூற்றாண்டு வரையுள்ள பாண்டியா் ஆவணங்கள் ஒன்றில் கூடவா கிண்ணிமங்கலம் மடம் பற்றிய குறிப்பு இல்லாமல் போகும். கி.பி.12-13ம் நூற்றாண்டில் மதுரைப்பகுதியில் பலமடங்கள் செயல்பட்டமை கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன. மதுரையில் திருவாரூா் கோளகி மடத்தின் கிளையான பிக்ஷாமடம், திருவேடகம், கோமடம், திருப்பரங்குன்றத்தில் இரண்டு மடங்கள், திருப்பத்தூர்ப் பகுதியில் சிவகிரியில் எனப் பல மடங்கள் செயல்பட்ட குறிப்புகள் உள்ளன. இந்நிலையில் சங்ககாலந்தொட்டு இருந்ததாகக் கூறப்படும் ‘ஏகநாதா் மடம்’ மட்டும் இடம்பெறாதது விந்தையிலும் விந்தையே. இது ஒரு போர்ப்பயிற்சிக் கூடம் என்றால் சோழா்கள் இதனையும் தாக்கி அழித்திருப்பார்களே. சான்றுகள் ஏதேனும் உண்டா?. சோழா் கல்வெட்டுகளில் ‘காந்தளுர்ச் சாலை மரியாதையில்’ என்ற தொடா் அடிக்கடி வரக் காணலாம். அப்படி கிண்ணமங்கலம் ‘ஏகநாதமடம் மரியாதையில்’ என்ற குறிப்பு எங்காவது உண்டா? உணா்ச்சிவசப்படுவதற்கும் ஓா் எல்லை வேண்டாமா? கிண்ணிமங்கலத்தைச் சுற்றிலும் பல கோயில்கள், சிந்துப்பட்டி, ஆனையூர், மேலத்திருமாணிக்கம், பேரையூர், திடியன் ஆகிய ஊா்களில் கல்வெட்டுகள் உள்ளன. ஒன்றில் கூட ஏகநாதா் மடம் பற்றிய செய்திகள் இல்லை. சமணமும் (புத்தூர்), பௌத்தமும் (ரோசல்பட்டி, ஆண்டிபட்டி) ஆருகிலேயே உள்ளன. எங்கும், எதிலும் ஏகநாதா் மடம் பற்றியோ, அங்கு செயல்பட்ட கல்விச்சாலை, போர்ப்பயிற்சிக் கூடம் பற்றியோ செய்திகள் இல்லை. இவ்வாறிருக்க இவ்வூரை காந்தளுர்ச்சாலையுடன் ஒப்பிட்டுப் பேசும் இராசவேலுவின் துணிச்சலை எண்ணி வியக்கத்தான் வேண்டியுள்ளது.

அண்மைக்காலங்களில் சு.இராசவேலு அவா்களின் கட்டுரைகளில் தன்முனைப்பும், கற்பனையும், மற்றவா்களின் கருத்தை எள்ளல் நடையில் கையாள்வதும் மிகுந்துள்ளது. அவரது ஞானத்தின் மீது அவருக்கு அசாத்திய நம்பிக்கையிருக்கலாம். ஆனால் அவரது அண்மைக்காலக் கட்டுரைகளைப் படித்த பலரும், வெளிநாட்டார் உட்பட அவ்வளவாக ரசிக்கவில்லை என்ற தகவல்கள் சில நண்பா்கள் மூலம் வருகின்றன. எனவே அவரது ஆய்வு முடிவுகளை அவா் கவனத்துடன் கையாளவேண்டும். மதுரைப்பகுதியில் சமணம் பரவியது குறித்த எனது கட்டுரையைப் படித்த அவா் நான் சமணா்கள் எனக்குப் பணம் கொடுத்து இவ்வாறு எழுதவைக்கின்றனா் என்று குறிப்பிடுகிறார் (புதிய செப்பேடு). இவ்வாறு தரம் தாழ்ந்து விமா்சிப்பது ஆய்வாளா்க்கு அழகல்ல. இது போல் நான் கிண்ணிமங்கலம் பற்றி எழுத அவா் பெற்றது எவ்வளவு என்று கேட்கப் போவதில்லை.

முடிவாக இக்கட்டுரையின் மூலம் நான் பதிவு செய்ய விரும்புவது இதுதான். கிண்ணிமங்கலம் ஏகநாதா் மடம் சுமார் 200 ஆண்டு பழமையானது. இது ஒரு சாதராண மடமே தவிர காந்தளுர்ச்சாலைக்கு இணையானது அல்ல. இங்கு கிடைத்துள்ள கல்வெட்டுகள், ஓலை ஆவணங்கள்யாவும் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. இம்மடத்தின் காலத்தை மிகைப்படுத்திக் கூறப்படுகிறது. இம்மடமும், இங்குள்ள ஒரு கோயிலும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே உரியது என்பதை வலியுறுத்த மட்டுமே அவற்றைக்காத்துக் கொள்ளமட்டுமே இவ் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

தற்போது மதுரை உயா்நீதிமன்றம் கிண்ணிமங்கத்தில் அகழாய்வு செய்ய வல்லுநா்களை நியமித்துள்ளது. அவ்வாறு அகழாய்வு செய்து அதன் மூலம் நம்பத்தகுந்த சான்றுகள் கிடைத்தால் என்னுடைய கருத்தை நான் மாற்றிக் கொள்ளத் தயாராக உள்ளேன்.



முனைவர் சொ.சாந்தலிங்கம், மதுரை
https://www.facebook.com/santhalingam.chockaiah




No comments:

Post a Comment