Wednesday, March 10, 2021

அரியாசனத்தில் அமராத எழுத்துகள்


அரியாசனத்தில் அமராத எழுத்துகள்
*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*


நிறைவடைந்த புத்தகக் கண்காட்சியில்
எல்லாம் கலைந்த பின்னர் சுத்தம் செய்கின்றனர்
புனிதமடைந்திருந்த
களத்தில் எழுத்துகள் சிதறிக் கிடக்கின்றன

அறிவுத் தூர்வாரிக் கிடந்த
மைதானத்தில் நாளை படித்த மனிதர்களும் 
படிக்காதவர்களும் விளையாடும் போது புதுவாசனை நுகர்வார்கள்

சருகுகள் போல்
மண்ணில் ஒட்டியிருக்கும் வார்த்தைகள் உடையாமலிருக்க 
மிக முக்கியமாக 
கால்கள் மிதிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

அரியாசனத்தில் அமர்ந்த எழுத்துகள் தாண்டி 
கை முறிந்து கால் முறிந்து
பின்னப்பட்ட எழுத்துகள்
கலைமகள் கை உடைந்த வீணையாய் ஆங்காங்கே கிடக்கலாம்

தாண்டிப் போகும் போது
அதையும் ஒரு ஓரமாக அமர்த்தி விட்டுச் செல்லுங்கள்
அதற்கும் சிறிது மரியாதை தந்து

குப்பைத் தொட்டி குழந்தைக்கும் காப்பகமுண்டு
பிறந்தது அதன் பாவமல்லவே!!!


 --- பூங்கோதை கனகராஜன்

No comments:

Post a Comment