தமிழில் பயன்படுத்துவது எப்படி?
எத்தனை- எத்துணை .. எங்கே பயன்படுத்துவது?
ஒருகையில் எத்தனை விரல்கள் இருக்கின்றன ? ஒரு கையில் எத்துணை விரல்கள் இருக்கின்றன ?
நான் எத்தனை நேரமாக காத்திருக்கிறேன் ? நான் எத்துணை நேரமாக காத்திருக்கிறேன் ?
மேலுள்ள நான்கு தொடர்களிலும் எத்தனை, எத்துணை என்னும் இருசொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றுள் ஏதாவது தவறு உண்டா அல்லது எல்லாமே சரியா எண்ணிப் பார்ப்போம்.
எத்தனை என்னும் சொல்லை ஒன்று, இரண்டு என்று எண்ணி அறியக்கூடிய இடங்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம்.
எத்துணை என்பதை மற்ற வகையான அளந்து அறியக்கூடிய இடங்களில் எல்லாம் பயன்படுத்தலாம்.
எத்துணை என்பதன் பொருள் எவ்வளவு என்பதுதான்.
என்ன? எது?
என்ன? எது? இரண்டும் ஒன்றா? வேறுபாடு உண்டா ?
உன் பெயர் என்ன ? என்று வினவுவதற்கும், உன் பெயர் எது ? என்று வினவுதற்கும் வேறுபாடு இருக்கிறதா ? இல்லையா ?
என்ன என்னும் வினாச் சொல்லை முற்றிலும் நம்மால் அறியப்படாத ஒன்றை அறிந்து கொள்ள விரும்பும் போது பயன்படுத்த வேண்டும். எது என்னும் சொல்லை பொதுவாக அறியப்படும், சிறப்பாக படாமலும் உள்ள ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும்போது பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக ஒருவருடைய பெயர் இன்னது என்று முற்றிலும் தெரியாத நிலையில் உன்பெயர் என்ன? என்று கேட்பது பொருத்தமாக இருக்கும்.
ஒருபட்டியலில் உள்ள பெயர்களில் நாம் தெரிந்து கொள்ள விரும்பும் ஒருவர் பெயரும் இருக்கிறது என்னும் பொதுவான அறிவு நமக்கு இருந்து அப்பட்டியலில் உள்ள பெயர்களில் அவர்பெயர் எது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்ற போது உன்பெயர் எது எனக்கேட்பது பொருத்தமாக இருக்கும்.
ஓய்வும் - ஒழிவும்
ஓய்வு வேறு. ஒழிவு வேறு ஓய்வு நேரம் என்பது வேலை செய்து களைத்துப்போய் இளைப்பாறும் நேரம் என்னும் பொருளுடையது.
ஒழிவு நேரம் என்பது எந்த வேலையும் இல்லாமையால் சும்மா இருக்கும் நேரம் என்னும் பொருளுடையது.
தற்போது மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், மின்சாரப் பணியாளர்கள் போன்றோர் ஓய்வும் ஒழிச்சலும் இல்லாமல் உழைக்கிறார்கள் நமக்கு இப்போது இந்த இரண்டு நேரமும் இருக்கிறது .
அவர் பொதுவாக எல்லோரையும் அன்புடன் வரவேற்றார். ஆயினும் குறிப்பாக என்னை மிகவும் அன்புடன் வரவேற்றார். இத்தொடரில் குறிப்பாக என்னும் சொல் தவறாகவே ஆளப்பட்டிருக்கிறது பொதுவாக என்பதற்கு எதிரானதாக குறிப்பாக என்பதைத் தேர்ந்தெடுத்துக் கூறியுள்ளார். பொது என்பதற்குச் சிறப்பு என்பதுதான் எதிர்ச்சொல். குறிப்பு என்பது வெளிப்படை என்பதற்கு எதிர்ச்சொல் ஆகும். வெளிப்படையாக அன்றி மறைபொருளாகக் கூறப்படுவதைத்தான் குறிப்பாகக் கூறப்பட்டவையாகக் கொள்ளலாம்.
ஆகவே “பொது- சிறப்பு” மற்றும் “வெளிப்படை- குறிப்பு” எனும் வகையில் எதிர்ச்சொற்களை அமைத்துக் கொண்டு பயன்படுத்துவதே நல்லது.
-- புலவர்.ஆ.காளியப்பன்
97885 52993
No comments:
Post a Comment