Showing posts with label முனைவர் சிவ. இளங்கோ. Show all posts
Showing posts with label முனைவர் சிவ. இளங்கோ. Show all posts

Sunday, May 29, 2022

எங்கே நிகழ்ந்தது மனிதனின் தொடக்கம்

எங்கே நிகழ்ந்தது மனிதனின் தொடக்கம்

-- முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி.


          பேரண்டம் (பிரபஞ்சம்) தொடங்கிய காலம் 1350 கோடி ஆண்டுகள்; சூரியக் குடும்பம், பூமி உட்பட உருவான காலம் 450 கோடி ஆண்டுகள்; உயிரினம் தோன்றியது 380 கோடி ஆண்டுகள்; பரிணாம வளர்ச்சியில் ஊர்வன, பறப்பன, விலங்கினங்கள் தோன்றிய பின்னர் மனிதக் குரங்கினம் உருவான காலம் 70 - 60 லட்சம் ஆண்டுகள்; அதனுடைய பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றியது 25 லட்சம் ஆண்டுகள்; இவையெல்லாம் அறிவியலாளர்கள் நமக்கு அளித்திருக்கும் தகவல்கள். ஆனால் மனித இனம் தோன்றியது குறித்துப் பல்வேறு கருத்துகள் உலவி வருகின்றன. பொதுவான கருத்தாக, கிழக்கு ஆப்பிரிக்காவில் மனித இனம் தோன்றி, உலகமெங்கும் பரவியது என்று கூறும் அதே நேரம், மத்திய தரைக்கடல் பகுதி, ஆசியா, ஐரோப்பா, சைனா ஆகிய பகுதிகளிலும் மனித இனம் தோன்றி இருந்திருக்கக்கூடும் என்றும் அறிவியல் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம் என்று முன் வைக்கப்பட்ட கருத்து இன்றுவரையிலும் கருத்தாகவே உள்ளது. உலகின் முதல் நாகரிகத் தொட்டில் சுமேரியா என்பதிலும் இன்னும் சர்ச்சை தீர்ந்தபாடில்லை. காலம் பின்னோக்கிச் செல்லச் செல்லச் சான்றுகளுடன் நிறுவுதலில் ஏற்படும் நம்பகத்தன்மை முழுமையடையாமல் போவதே, 'இதுதான்' என்று அறுதியிட்டுக் கூறும் நிலையைத் தடுத்து வருகிறது. 

          மனிதன் முதலில் தோன்றிய இடம் இருக்கட்டும்; முதன் முதலில் தோன்றிய மனித இனம் எது என்பதே இன்னும் ஆய்வில் தான் உள்ளது(Indianexpress.com). அதாவது மனித இனம் என்பது ஒன்றல்ல என்றும், இதுவரை சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மனித இனங்கள் தோன்றி வாழ்ந்து வந்துள்ளன என்றும் கூறுகிறார்கள். இன்றைய உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் 'ஹோமோ சேப்பியன்ஸ்' (Homo sapiens) இனத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஹோமோ என்பது மனித இனம் என்றும், சேப்பியன்ஸ் என்பது அவ்வினத்தின் பரிணாம வளர்ச்சிப் பிரிவான 'அறிவாளன்' என்றும் பொருள்படும். நமக்கு முன்னதாக 'ஹோமோ எரக்டஸ் (Homo erectus), 'ஹோமோ புளோரேசியன்சிஸ்' (Homo floresiensis), 'ஹோமோ நியாண்டர்தால்' (Homo neanderthalensis), 'ஹோமோ சோலயன்சிஸ்' (Homo soleansis), 'ஹோமோ டெனிசோவா' (Homo denisovans), 'ஹோமோ ரூடால்பென்சிஸ்' (Homo rudolfensis), 'ஹோமோ எர்கஸ்டர்' (Homo ergaster) உட்பட சில மனித இனங்கள் தோன்றி இதே பூமியில் வாழ்ந்து இருக்கின்றனர். அவர்கள் நம் இனமான ஹோமோ சேப்பியன்ஸ் காலத்திலும் வாழ்ந்திருக்கின்றனர். அதேநேரம், இன்று, இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் (2021) வாழ்ந்து வரும் ஒரே மனித இனம் ஹோமோ சேப்பியன்ஸ் மட்டுமே என்று வலியுறுத்திக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். பிற மனித இனங்கள் என்ன ஆனார்கள் என்பது ரகசியமாகவே இருந்து வந்தாலும், அண்மைக்காலங்களில் ஆய்வுகள் வழி வெளிப்பட்டு வருகின்றன (சேப்பியன்ஸ்:2018:16-22).

          அறுபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதக் குரங்கு இரண்டு பெண்களை ஈன்றது. அதில் ஒன்று, இன்றும் வாழும் சிம்பன்சி என்னும் மனிதக் குரங்கின் மூதாதையர் ஆனது. மற்றொன்று, இன்றைய மனித (ஹோமோ) இனத்தின் மூதாதையர் ஆனது. சிம்பன்சி இனத்தில் பல பிரிவுகள் இருப்பதைப் போல் மனித இனத்திலும் பல பிரிவுகள் உண்டாயிற்று. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மனித இனங்கள் தோன்றி வாழ்ந்ததாகப் புதைபடிமங்கள் வழி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகள் தொடர்ந்தால் இன்னும் சில மனித இனங்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது. இக்கட்டுரை எழுதப்பட்ட இக்காலத்தில் (ஆண்டு- 2021) புதியதாக ஒரு மனித இனம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மண்டை ஓடு, 1,46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முற்றிலும் புதிய மனித இனத்தைச் சேர்ந்ததாகவும், இப்புதிய இனத்திற்கு 'ஹோமோ லாங்கி' (Homo longi) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.[1] ஆனால் இவை எதுவும் இன்றைய வாழ்வில் இல்லை, ஒன்றைத் தவிர. அதுதான் நம் இனமான மனித (ஹோமோ) அறிவாளன் (சேப்பியன்ஸ்). இன்றைய மனித வர்க்கத்தை 'அறிவாளன்' என்று குறிப்பிடக் காரணம், ஹோமோ சேப்பியன்ஸ் மற்ற விலங்கினங்கள் அனைத்தையும் வெற்றி கொண்டதோடல்லாமல், பிற மனித வகைகளையும் வெற்றி கொண்டதால்தான். 

          இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி, எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவை விட்டு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து வந்த ஹோமோ சேப்பியன்ஸ்கள், தங்கள் அறிவால் ஆன ஆற்றல்களால் பிற அனைத்து இனங்களையும் தோற்கடித்தும், கொன்றழித்தும் இன்றைய உலகின் முதல் ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். அன்றோ கல் ஆயுதம். இன்றோ அணு ஆயுதங்கள். இது பரிணாம வளர்ச்சியையும் தாண்டிய அறிவியல் வளர்ச்சி. இயற்கைக்கு மாறான வளர்ச்சி. ஹோமோ சேப்பியன்ஸ்களின் இவ்வளர்ச்சியில், இத்தனை நாள் மறைந்திருந்த இரண்டு நிலைகள் உள்ளதாக ஆய்வுலகம் குறிப்பிடுகிறது. 

          ஒன்று 'இனக்கலப்புக் கோட்பாடு'. ஹோமோ நியாண்டர்தால், ஹோமோ எரக்டஸ் உட்படத் தங்கள் புலம் பெயர்வால், பிற மனிதர்களோடு கொண்ட உறவால், மனித இனங்கள் கலந்து இன்றுள்ள ஒரே மனிதக் கூட்டமாக மாறி உள்ளன என்பது ஒரு கோட்பாடு. மற்றொன்று, மாற்றீட்டுக் கோட்பாடு. அதாவது, பிற மனித இனங்கள் அனைத்தையும் தாங்கள் கொன்றொழித்துத் தங்களை மட்டும் வெற்றியாளர்களாக நிலைநிறுத்திக் கொண்டனர் என்னும் கோட்பாடு (சேப்பியன்ஸ்:2018:16, 17). இரண்டுமே கோட்பாடுகள் தான். இரண்டிலுமே உண்மை இருக்கக்கூடும். ஆனால் தற்போதைய ஹோமோ சேப்பியன்ஸ் (மனித அறிவாளன்) இனம், தாங்கள் வேறு எதனுடனும் தொடர்பில்லாத தனி மனித இனம் என்று கூறப்படுவதையே விரும்புவதால், இரண்டாவது கோட்பாடு, அதாவது பிற மனித இனங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்ற கோட்பாடு வலுவாகப் பரந்திருக்கிறது. அதுவும் சில காலம் தான். டி.என்.ஏ. என்னும் மரபணுச் சோதனைகளில் நியாண்டர்தால் மனித இனத்தின் மரபணுக்கள் 2010 ஆம் ஆண்டில், தற்போதைய மனித இனத்தில், கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒரு சில இடங்களில் எங்காவது இனக்கலப்பு (நான்கு விழுக்காடு வரை - சேப்பியன்ஸ்:2018:19) நிகழ்ந்து இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பிற மனித இனங்கள் இன்று யாரும் இல்லை என்று நிறுவுவதில் பெரும்பாலோர் ஆர்வமாக உள்ளனர்.

          உயரம் - குள்ளம், பருமன் - ஒல்லி, கருப்பு - வெள்ளை போன்ற வேற்றுமைகள் இன்றும் பிற மனித இனத்தின் எச்சங்கள் நம்முடன் வாழ்வதைக் குறிப்பதாக ஒரு சில எதிர்வாதம் இருந்தாலும், இன அழிப்பு வாதத்தை எல்லோரும் விரும்பி ஏற்கிறார்கள். இதற்காக இல்லாத கடவுள்களை இவர்களே உருவாக்கி, கடவுள் மனித இனத்தை உருவாக்கியதாகக் கற்பித்துத் தனித்தனிச் சமயம், மதம், கூட்டம் என்று கூறி, அவற்றிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பெருமை கொள்வதையே மனித அறிவாளனான சேப்பியன்ஸ் இனம் விரும்புகிறது. சிலர் ஆதாம் ஏவாளில் இருந்து வந்த இனம் என்றும், சிலர் உருவமற்ற இறைவனால் படைக்கப்பட்டோம் என்றும், சிலர் உருவமுள்ள இறைவனால் படைக்கப் பட்டோம் என்றும், சிலர் தங்களைச் சூரிய, சந்திர வம்சம் என்றும் கட்டுக் கதைகளைக் கூறித் தங்களைச் சேப்பியன்ஸ் (அறிவாளன்) என்பதிலிருந்து வேறுபடுத்திக் கொள்வதில் ஆவேசமும், வெறியும் கொள்கிறார்கள். இன்றும் காட்டப்படும் ஆவேசமும், வெறியும் ஒரு காலத்தில் இவர்கள் பிற இனங்களைக் கொன்றழித்து இருப்பார்கள் என்பதைப் பெரிதும் நம்ப வைக்கின்றன. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த கொடூரமான மதச் சண்டைகளும், இன்றும் நிகழ்ந்து வரும் மதக் கலவரங்களும் அவற்றை நிரூபிக்கின்றன. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹோமோ சேப்பியன்ஸ் (மனித அறிவாளன்) இனத்தில் எல்லோருமே மதம் பிடித்தவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும் இருந்திருக்கிறார்களா என்றால் இல்லை. மகாவீரர், புத்தர் போன்ற பொறுமையையும், அன்பையும் போதித்த உண்மையான அறிவாளர்களும் இருந்திருக்கின்றனர். அவர்களும் ஹோமோ சேப்பியன்ஸ் இனம்தான்.

          வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட ஹோமோ சேப்பியன்ஸ் உள்ளிட்ட பிற மனித இனங்களின் வாழ்க்கை முறையையும், பண்பாட்டையும் பற்றி அறிந்து கொள்ள அதிகமான சான்றுகள் ஏதும் இல்லை. அவர்கள் பயன்படுத்தியதே கற்கருவிகள் தான். இந்தக் கற்கருவிகளை வைத்தே பூமியில் வாழ்ந்த மனித இனங்களின் காலத்தையும் கணிக்கும் நிலைதான் இன்றைய மனித இனத்தின் வரலாறாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கற்கருவிகள் குறித்துப் பல கதைகள் உண்டு. பழங்கால மனிதர்கள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் இல்லாத அக்காலத்தில், கி.பி. 1800 ஆம் ஆண்டில், அவர்களுடைய ஆயுதங்கள் பற்றிக் கேள்விப்பட்ட ஜான் பிரெரே என்பவர் கற்கோடரியின் படம் ஒன்று வரைய, இங்கிலாந்து பத்திரிகை ஒன்று அதை வெளியிட்டது. அதைப் பார்த்து மக்கள் பயந்ததே அதிகம். இவை கடும் சீற்றத்துடன் கூடிய புயலின் போது வானத்தில் இருந்து விழுந்ததாக மக்கள் நம்பினார்கள். அதனை இடிக் கற்கள் என்றும் கூறினார்கள். மின்னல் தாக்கியதால் நிலத்திற்குள்ளிருந்து மேற்பரப்பில் வந்ததாகப் பேசிக்கொண்டார்கள். இதனால் பயந்து போய்க் கற்கோடரியின் வடிவத்தைத் தாயத்து போல் அணியும் பழக்கமும் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் கற்கோடரியின் தொடர் பயன்பாடு இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. சேர்வராயன் மலைப் பகுதிகளில் உழவு செய்யும்போது கிடைத்த கற்காலக் கோடரிகளை இடியாக விழுந்தவை என்று எண்ணி மரத்தடிக் கோவில்களில் வைத்து தெய்வீகக் கல்லாக வணங்கி வருகின்றனர் (ஏற்காடு இளங்கோ:2017:67,111). கல்லாலான கோடரியை மட்டும் பார்க்க வேல் வடிவத்தில் காணப்படும். அதனுடன் ஒரு மரக்கிளை அல்லது மூங்கில் வைத்துக் கட்டினால் அது வேல் ஆயுதம் தான். வேலன் வெறியாட்டம் என்பது நாட்டையும், ஊரையும் காக்கும் வீரர்களுக்காக நடத்தப்படும் ஒரு சடங்காகச் சங்க காலத்தில் இருந்தது. அவர்கள் உயிர்த் தியாகம் செய்தால் நடுகற்களில் அவர்கள் உருவம் பொறித்து வணங்கப்படும். அவர்கள் கையில் இருந்த அந்த ஆயுதம் தான் வேலாயுதம். இது வேல் வடிவம் கொண்ட கற்கோடரியின் நீட்சியாக இருக்கக்கூடும். உருவ வழிபாட்டின் தொடக்கமாக இந்தக் கற்கோடரிகள் (வேல்) இருந்திருக்கலாம்.

          எது எப்படியோ, மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவில் தான் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். மனித இனத்தின் பல வகைகளும் அங்கு தான் தோற்றம் பெற்றன. எழுபது முதல் அறுபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றிய மனித இனத்தின் சில வகையினர், இருபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை விட்டுப் புலம் பெயரத் தொடங்கினர். நில வழியாக அவர்கள் ஆசியா, ஐரோப்பா, சீனா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும், கடற்கரை  வழியாகத் தென் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பரவினர். எழுபத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் தெற்காசிய நாடுகளுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் 34,000 ஆண்டுகளுக்கு முன்பும், வட இந்தியப் பகுதிகளில் உத்தரப் பிரதேசம் பெலான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் 18,000 ஆண்டுகளுக்கு முன்பும் இவர்கள் பரவி இருந்தனர் என்பதாகப் பல்வேறு ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன (Dr. V. Selvakumar: 2010:17-36).

          இப்படியாக, இந்தியத் துணைக்கண்டத்தில் பரவியிருந்த இனம்தான், இக்கண்டத்தின் பூர்வகுடிகள் என்று கூறப்படுகிறது. ஆனால் இக்கண்டத்திற்கென்றுச் சொந்தப் பூர்வகுடி மக்கள் குறிப்பாகத் தென்னிந்தியா எனப்பட்ட அன்றைய தமிழகத்தில் பூர்வகுடி மக்கள் இருந்தனர் என்றும், அவர்கள் குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா என்ற கண்டத்தோடு இணைந்திருந்தனர் என்றும் விலங்கியல் ஆய்வாளர்களால் 19 ஆம் நூற்றாண்டில் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குமரிக்கண்டத்தைக் கடல் கொண்டபோது எஞ்சியிருந்த தமிழ் இனத்தவர் தான் தற்போதைய தமிழ் நாட்டினர் என்று தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டித் தமிழறிஞர்களான பாவாணர், அப்பாதுரையார் போன்றோர் கருத்துரைத்து வந்தனர். ஆனால்  1915 ஆம் ஆண்டில், ஆல்பர்ட் வெகனர் என்ற ஜெர்மானியர் 'பாஞ்சியா' (Pangaea) என்னும் கோட்பாட்டை முன்வைத்து, அது வரலாறு, தொல்லியல் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட பிறகு, குமரிக்கண்டக் கோட்பாடு கிட்டத்தட்ட கைவிடப் பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. இன்று உலகில் உள்ள ஏழு பெரிய கண்டத் திட்டுகளும் ஒருகாலத்தில் ஒன்றாக இருந்து, 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரியத்தொடங்கி, இன்று தனித்தனியாக ஏழு கண்டத் திட்டுகளாக நிலை பெற்றுள்ளன என்பது தான் 'பாஞ்சியா' கோட்பாடு. இக்கோட்பாட்டில் குமரிக்கண்டம் இல்லை. கிட்டத்தட்ட இக்கோட்பாடு அனைத்து அறிவியலாளர்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.[2] ஆனாலும் திராவிட மொழிக் குடும்பத்தினர் இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களே என்ற ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், சிந்துவெளி முதற்கொண்டு தென்னிந்தியா வரையில் பரவியிருந்தவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்த திராவிடர்களே என்று மரபியல், மொழியியல் கூறுகளை வைத்து நிறுவும் ஆய்வுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன (Dr. V. Selvakumar: 2010:33-35).

          வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை வலுவான சான்றுகளுடன் விளக்கவும், நிறுவவும் வாய்ப்பில்லை. பேரண்டம், சூரியக் குடும்பம், பூமி, உயிரினங்கள், மனித இனங்கள் இவை எல்லாமே வரலாற்று நிகழ்வுகள் தான். இவற்றிற்கெல்லாம் வரலாறு இருந்தாலும் அவை உருவாக்கப்பட்ட வரலாறாக இல்லாமல் இயற்கையோடு இயைந்த வரலாற்றைக் கொண்டவை. அதற்கு மாறான வரலாறு என்பது மனித இனத்திற்காக மனிதர்களால் உருவாக்கப் பட்ட வரலாறாக அதுவும் வென்றவர்களின் வரலாறாகக் கிடைக்கிறது. அந்த மனித இனத்திலும் எந்த இனம் அறிவு சார்ந்து செயல்பட்டதோ அப்போதிலிருந்து தான் அவ்வரலாறு தொடங்குகிறது. அவற்றிலிருந்து எப்போது, ஏதோ ஒன்று சொல்லப்பட்டதோ அல்லது எழுதப்பட்டதோ அந்தக் காலம் வரை வரலாற்றுக் காலமாகக் கொள்ளப்படுகிறது. அதற்கு முன்பு ஆதி வரையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தான். அதாவது, இன்றிலிருந்து பின் கணக்கில் 5,000 அல்லது 6,000 ஆண்டுகள் வரையிலான காலமே வரலாற்றுக்காலம். இக்காலத்தில் தான் மனிதனின் எண்ணங்கள் எழுத்துகள் ஆயின. மனிதன் புதிய புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டான். கண்டுபிடித்தான். 6,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து உலகம் தோன்றிய காலமான 450 கோடி ஆண்டுகள் வரை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தான். இக்கால கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மனிதனும், பிற உயிரினங்களும் இயற்கையில் ஒன்றுதான். ஆனால் மனித இனத்தில் ஹோமோ சேப்பியன்ஸ் என்ற இனத்தவனே வரலாற்றை வசப்படுத்திய மனித இனமாக (அறிவாளன்), சிறுகச்சிறுக எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த உயிரினமாக மாறிப்போனான். இந்த அடிப்படையில் மனித இனம் தோன்றி, பரவி, அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவர்கள் பயன்படுத்திய கற்களை வைத்து வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களைக் கற் காலங்களாக ஆய்வாளர்கள் பிரித்து வைத்துள்ளனர். இக்காலங்கள் ஒவ்வொரு இடத்துக்கும் மாறுபடும்.
                    மிகப் பழங்காலம்               : 2 கோடி ஆண்டுகள் 
                    பழங்கற்காலம் (முன்)       : 7 இலட்சம் - 50,000 ஆண்டுகள் 
                    பழங்கற்காலம் (இடை)     : 1.5 இலட்சம் ஆண்டுகள் - 35,000 ஆண்டுகள்
                    பழங்கற்காலம் (கடை)      : 30,000 ஆண்டுகள் - 10,000 ஆண்டுகள்
                    இடைக் கற்காலம்               : 10,000 ஆண்டுகள் - 3,000 ஆண்டுகள்
                    புதிய கற்காலம்                   : 8,000 ஆண்டுகள் - 2,000 ஆண்டுகள் 
                    செம்புக் காலம்                    : 5,000 ஆண்டுகள் - 3,000 ஆண்டுகள்
                    இரும்புக் காலம்                  : 3,000 ஆண்டுகள் - 2300 ஆண்டுகள் 

          இன்றைய இந்தியத் துணைக்கண்டத்தில் கற்கால மனிதர்களின் வரலாற்றை அவர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்களைக் கொண்டு கணிக்கப்பட்ட கால அட்டவணை தான் மேற் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட குறிப்பில் உள்ளவை (Dr. V. Selvakumar: 2010:17).

          மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த தொல்பொருள்கள் மிக அரிதானவை. இவற்றில் சில தற்போதைய பாகிஸ்தானின் ரிவாட் பள்ளத்தாக்கில் கிடைத்துள்ளன. பழங்கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் குறிப்பாகக் கற்கோடரிகள் சோகான் பள்ளத்தாக்கு (பாகிஸ்தான்), பெலான் பள்ளத்தாக்கு (உத்தரப் பிரதேசம்), அன்ஸ்கி பள்ளத்தாக்கு (கர்நாடகம்), நர்மதா பள்ளத்தாக்கு மற்றும் பிம்பேட்கா பாறைக் குகைகள் (மத்தியப் பிரதேசம்), திட்வானா (ராஜஸ்தான்), அத்திரம்பாக்கம் மற்றும் குடியம் (தமிழ்நாடு) ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ளன. இங்குக் குறிப்பிடப்பட்ட பகுதிகளிலேயே மிகப் பழமையான கற்காலக் கருவிகள் கிடைத்த இடம் இன்றைய சென்னைக்கு அருகிலுள்ள அத்திரம்பாக்கம் என்ற ஊரைச் சுற்றியுள்ள பகுதிகள் தான். இங்கு 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்திருந்த மனித இனத்தினர் பயன்படுத்திய 'அச்சூலியன்' வகைக் கற் கருவிகள் (Acheulian) கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுடன் அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்விடங்கள், பிராணிகளின் கால்தடங்கள், எலும்புகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்காலக் கருவிகள் பிரான்சின் சோமி (Somme river) ஆற்றங்கரையில் 'செயின்ட் அச்சூல்' என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை வைத்து, அதன் காலத்தைக் குறிப்பதற்காக 'அச்சூலியன்' கருவிகள் என்று வழங்கப்படுகிறது (Dr. S. Vasanthi: 2012:2). அதேபோன்று அக்கருவியைப் (கற்கோடரி) பயன்படுத்திய ஹோமோ எரக்டஸ் என்ற மனித இனம் தமிழ் நாட்டில் வாழ்ந்ததாக நிலவியல், தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனமான ஹோமோ எரக்டஸ் இனம், தமிழ்நாட்டின் அத்திரப்பாக்கம் பகுதியில் வாழ்ந்தனர் என்பதற்கு அப்பகுதியில் அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் சான்றாக அமைந்துள்ளன.

          இதற்கு முன்பே, 1863 ஆம் ஆண்டில், சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரத்தில் தற்போதைய திரிசூலம் பகுதியில் பழங்கற்காலக் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது கற்கோடரி ஆகும். கடினமான படிகக்கல் அல்லது கூழாங்கல் அல்லது மணற்கல் (Quartzite) வகையைச் சேர்ந்தது. இதற்கு அடுத்து இதே ஆண்டில் அத்திரம்பாக்கம் குடத்தலை/கொற்றலை/கொசத்தலை/கோர்த்தலை ஆற்றுப் படுகைகளில் பூண்டிக்கு அருகே கற்கோடரியும், வேறு சில ஆயுதங்களும் கிடைத்தன. இதேபோன்று பாலாறு, வடஆற்காடு, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, தர்மபுரி, திருநெல்வேலி போன்ற பகுதிகளிலும் கற்கருவிகள் கிடைத்தன. பழங்கற்கால மனிதர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்ந்ததை இவை உறுதிப்படுத்தின. இங்கு வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய கற்களை வைத்துப் படிகக்கல் மனிதர்கள் (Quartzite Men) என்று இங்கு வாழ்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர். இவ்வகைக் கற்கள் எங்கு தென்படுகின்றனவோ அவ்விடத்தைப் பழங் கற்காலக் குறியீடுகளாக ஆய்வாளர்கள் கொண்டனர். (Dr. K. V. Raman: 2015:51). இதனால் பழைய கற்காலம் குறித்த உலக வரைபடத்தில் இந்தியாவும் இடம் பிடித்தது. சென்னைக்கு அருகில் கிடைத்த தொல்பொருள் கற்கருவிகளை வைத்து சென்னையின் அப்போதைய பெயரான மதராஸ் என்ற பெயரால் மதராசியப் பண்பாடு (Madrasian culture) என்று இப்பண்பாடு குறிக்கப்படுகிறது. மேலும் இங்குக் கிடைத்த கருவிகளை வைத்து, இது இக்கருவிகள் உற்பத்தி செய்யப்பட்ட இடம் என்பதைக் குறிக்கும் வகையில் இவ்விடம் மதராசியன் கற் கருவித் தொழிற்சாலை (Madrasian Industry) என்றும் மெட்ராஸ் மரபு என்றும், அச்சூலியன் தொழிற்சாலை (Acheulian Industry) என்றும் அழைக்கப்படுகின்றது. இதே போல் இந்தியாவில் மற்றொரு கற்கருவி உற்பத்தி இடமாக நர்மதைப் பள்ளத்தாக்கில் உள்ள சோன் என்னும் பகுதி குறிக்கப்படுகிறது. இது சோன் பண்பாடு (Soan culture) என்று அழைக்கப்படுகிறது (Dr. S. Vasanthi: 2012:5-11).

          பழங்கற்கால உலக வரைபடத்தில் சென்னையும், இந்தியத் துணைக் கண்டமும் சேரக் காரணமாக அமைந்தவர் இராபர்ட் புரூஸ் பூட் (Robert Bruce Foote - 1834-1912)) என்பவர். இங்கிலாந்தில் பிறந்து நிலவியல், தொல்லியல் வல்லுநராக விளங்கியவர். இந்தியாவில் தொல்லியல் ஆய்வு நிறுவனம் 1861 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு 1851ஆம் ஆண்டில் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. உலகில் மனித இனத் தோற்றம் குறித்த ஆய்வுகள் 1860 ஆம் ஆண்டுகளில் தீவிரமடையத் தொடங்கிய காலத்தில், புவியியல் ஆய்வு மையப் பணிக்காகச் சென்னை வந்தார் இராபர்ட் புரூஸ். நிலவியலிலும், தொல்லியலும் ஆர்வம் கொண்டிருந்த அவர் அது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்த போதுதான், 1863 ஆம் ஆண்டில், பல்லாவரம், அத்திரம்பாக்கம், குடியம் ஆகிய பகுதிகளில் கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். மூங்கிலில் செருகக்கூடிய சிறிய வகை கல் ஈட்டி முனைகள் பல்லாவரத்தில் கிடைத்தன. தொடர்ந்து பூண்டிக்கு அருகில் உள்ள பரிக்குளம் கிராமத்தில் ஐந்து இலட்சம் ஆண்டுகள் பழமையான செம்மண் சரளைக் கல் படுகையில் கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்தார். பூண்டிக்கு வடக்கில் குடியம் பகுதியில் மிகப் பழமைவாய்ந்த, நீளமான பதினாறு குகைகளைத் தேடியலைந்து அகழ்வாராய்ச்சி நடத்தி அங்கு ஏராளமான கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் பழங்கற்கால மனித இனம் தமிழ்நாட்டில் வாழ்ந்ததை உலகிற்கு அறியப்படுத்தக் காரணமானார். 

          நிலவியல், தொல்லியல், மானுடவியல், படிமவியல் அறிஞராக வளர்ச்சி நிலை பெற்ற புரூஸ், தொடர்ந்து தென்னிந்தியா முழுமைக்கும் சென்று ஆய்வு செய்தார். ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் இயற்கையாக அமைந்த பெலும் குகைகளைக் கண்டுபிடித்தார். கற்கால மனிதர் தொட்டு, புத்தத் துறவிகள் காலம் வரையில் பெலும் குகையில் மனிதர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்த மானுடவியல் வரலாறும் அவரால் வெளியானது. பெலும் குகைப் பகுதியில் நாற்பதடி உயரம் கொண்ட புத்தர் சிலை ஒன்று உள்ளது. மேலும், நெல்லூர், ஹைதராபாத், மைசூர், குஜராத் ஆகிய பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்ட புரூஸ், கர்நாடகாவைச் சேர்ந்த பெல்காம் மாவட்டத்தில் காண்டாமிருகத்தின் மண்டைஓடுப் படிமத்தைக் கண்டெடுத்தார். 1883 ஆம் ஆண்டில் திருநெல்வேலி, சைதாங்க நல்லூர் பகுதியில் தேரி எனப்படும் மணல் குன்றுப் பகுதிகளிலும், சாயர்புரம் தேரிப் பகுதிகளிலும் நுண் கற்கருவிகளைக் கண்டெடுத்தார். அங்கு நுண் கற் கருவிகள் தயாரிக்கும் தொழில் கூடம் இருந்ததையும் புரூஸ் வெளிப்படுத்தினார். அது இடைக் கற்காலத்தைச் சேர்ந்த நுண் கற் கருவிப் பண்பாடு என்று அறியப்படுகிறது. அவருடைய தொடர் ஆய்வுகளுக்காக இராபர்ட் புரூஸ் பூட், "இந்தியத் தொல் பழங்கால வரலாற்றின் தந்தை" எனப் போற்றப்படுகிறார் (ஏற்காடு இளங்கோ: ராபர்ட் புரூஸ் பூட்: 2017).

          இராபர்ட் புரூசைத் தொடர்ந்து வேறு பல ஆய்வாளர்களும் இப்பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அரசின் தொல்லியல் துறையினரும், சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரும் அங்கு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டனர். அத்திரம்பாக்கம் கோர்த்தலை (கொற்றலை) ஆற்றுப்பகுதியில் சாந்திபாப்பு என்பவர், 1991 ஆம் ஆண்டு முதல் ஆய்வுகளை மேற்கொண்டார். 1999ஆம் ஆண்டு முதல் இப் பகுதியில் அகழ்வாராய்ச்சிகளையும் அவர் மேற்கொண்டார். இதில் 3500க்கும் மேற்பட்ட தொல் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மனித இனம் வாழ்ந்ததை இவர் ஆய்வின் வழி உறுதிப்படுத்தினார். இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் மனித இனம் வாழ்ந்திருக்கிறது. அவர்கள் ஹோமோ எரக்டஸ் என்னும் சேப்பியன்ஸ் இனத்திற்கு முந்திய இனம். 20 இலட்சம் தொடங்கி 16 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிப் புலம் பெயர்ந்தவர்கள். அச்சூலியன் கருவிகளை உபயோகப் படுத்தியவர்கள். சாந்திபாப்பு மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன (cosmogenic nuclide burial dating). இவ்வாய்வின் முடிவுகள், தமிழ்நாட்டில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் வாழ்ந்ததை நிரூபித்துள்ளன. இப்பகுதியில் வெளிநாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்களும் தொடர் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இங்குக்கிடைத்த பொருட்கள் காஸ்மிக் கதிர் காலக் கணிப்பு முறையில் (cosmic ray exposure dating) ஆய்வு செய்யப்பட்டு, இக்கற்கருவிகள் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று அறிவிக்கப்பட்டது.[3]

Siva Ilango3.jpg
 
         மனித இனம் குறித்த ஆய்வுகளில் தற்காலத்தில் மரபணுச் சோதனை ஆய்வுகளும் முக்கிய இடம் பிடித்துள்ளன. 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மரபணுச் சோதனையில் தமிழ்நாட்டில், மதுரை அருகில், ஜோதிமாணிக்கம் என்னும் கிராமத்தில் வாழும் விருமாண்டி என்பவரின் மரபணு (DNA M130), ஆப்பிரிக்காவில் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு புலம் பெயர்ந்து வந்த ஹோமோ சேப்பியன்ஸ்/நியாண்டர்தால் இனத்தின் மரபணுவோடு பொருந்தியதை வைத்தும் மனித இனத்தின் வரலாறு விரிவுபடுத்தப்பட்டது. இம் மரபணுவின் சாயல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி ஆய்வுகளிலும் அவ்வப்போது தென்பட்டது. ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகளில் பாதிப்பேருக்கு இம்மரபணு மாதிரிகள் உள்ளன. பிலிப்பைன்ஸ், மலேசியாவின் பழங்குடி இனத்தவருக்கும் இம்மரபணு மாதிரிகள் உள்ளன (Dr. V. Selvakumar: 2010:33). இவை எல்லாம் ஹோமோ எரக்டஸ், ஹோமோ சேப்பியன்ஸ் ஆகிய மனித இனங்கள் தமிழகம் தொடங்கி ஆஸ்திரேலியா வரை பரந்து இருப்பதையே உறுதிப்படுத்துகின்றன.

Siva Ilango2.jpg
          புதிய கற்காலக் கருவிகளும் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் புதிய கற்காலம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கணிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தின் கருவிகள் தொழில்நுட்ப வகையில் முன்னேற்றம் அடைந்தவை. பளபளக்கும் தன்மை உள்ளவை. செம்பு கண்டுபிடிக்கப்படுவதற்கு முற்பட்ட காலமான புதிய கற்கால மக்கள், வேளாண்மை செய்வதில் ஈடுபட்டிருந்தனர். நிலையான குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். வீட்டு விலங்குகளை வளர்த்தனர். படிப்படியாக சமூக வாழ்க்கையில் பழகிய அவர்களின் மொழி, பேச்சு நிலையிலிருந்து எழுத்து நிலைக்கு மாறிய காலமாக இருந்தது. 1865 ஆம் ஆண்டில் சேலம் பகுதிகளில் இராபர்ட் புரூஸ் ஆய்வுகளை மேற்கொண்டு 65 வகையான புதிய கற்காலப் பொருள்களைக் கண்டுபிடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை, செம்பியன் கண்டியூர் பகுதியில் கிடைத்த வழவழப்பான கற்கோடரி ஒன்று சிந்துவெளியில் உள்ளதைப் போன்ற குறியீடுகளுடன் கூடியதாகக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு தமிழகத் தொல்லியல் துறையினரால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மட்கலன்கள், பானை ஓடுகள், எலும்புச் சிதைவுகள் போன்றவையும் கிடைத்தன ((ta.m.wikipedia.org).

          இறந்தவர்களை அப்படியே விட்டுச் செல்வதுதான் பழங்கால மனிதர்களின் வழக்கமாக இருந்தது. புதிய கற்காலத்தில் இந்த நிலை மாறி வந்தது. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் பழக்கத்தால் இறந்தவர்களின் உடல்களை வைக்கும் இடத்தில் அடையாளமாகக் கற்களைச் சுற்றி வைத்தனர். பல இடங்களில் பெருங்கற்கள் அல்லது பாறையைச் சுற்றி அடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இக்காலமே பெருங்கற்காலம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பெருங்கற்காலம் என்பது 5000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி கி.மு. 300 வரையிலும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பெருங்கற் சின்னங்கள் ஏராளமான அளவில் இன்றும் காணப்படுகின்றன. கல்திட்டை, கல்வட்டம், நெடுங்கல், குத்துக்கல் (Menhirs) என்று பலவகைப் பெயர்களில் இவை உருவத்திற்கேற்ப அழைக்கப்படுகின்றன. இறந்தவர்களின் நினைவுச் சின்னங்கள் எல்லா ஊர்களிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாடு ஆகியவற்றின் முதல் நிலையே பெருங்கற்காலச் சின்னங்கள் எனலாம். பெருங் கற்களைக் கொண்டு இறந்தவர் நினைவிடம், காலம் கணிக்கும் அமைவிடம், நினைவு உருவங்கள் என உலகம் முழுவதும் ஏராளமான பெருங்கற் சின்னங்கள் உள்ளன.

          வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த தொல்லியல் பொருள்களும், எழுத்துச் சான்றுகளும் நமக்கு ஏராளமாகக் கிடைத்துள்ளன. ஆனால் மிக நீண்ட பகுதியான வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சான்றுகளாக நமக்குக் கிடைத்து இருப்பவை கல் ஆயுதங்கள் தான். அறிவு ஆட்சி செய்யாத போது, எல்லாமும் இயற்கையைச் சார்ந்தே இருந்தன. அறிவின் ஆட்சி எல்லாவற்றையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இயற்கைக்கு மாறான நம்பிக்கைகளும் இன்றைக்கு இயற்கைக்கு எதிராகவே திரும்பி இருக்கின்றன. நடந்தே சென்று உலகைச் சுற்றி வந்த மனித இனம், இன்று விமானத்தில் பறந்து, இயற்கையை எப்படிக் காப்பாற்றுவது என்று மாநாடு கூட்டி விவாதித்துக் கொண்டு இருக்கிறது. அதையும் தாண்டிப் பிற கிரகங்களுக்குச் சென்று கால் வைப்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. எங்கோ இருக்கும் பிற கோள்களிலிருந்து வரும் அறிவில் உயர்ந்த இனங்கள் நம்மை (மறைமுகமாக) ஆட்சி செலுத்தி வருகின்றனவா என்பது குறித்த ஆய்வுகளும் (unidentified flying object - UFO) ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன. ஆற்றலை, ஆறறிவை வியக்கின்ற நேரத்தில், அதன் ஆளுமைத் தன்மை, பிறவற்றை அடிமைப்படுத்தி அடக்குமுறைகள் செய்வது என்பது மனித இனத்தின் மரபணுவிலேயே உள்ளதா அல்லது உயிரினங்களின் மரபணுவிலேயே உள்ளதா என்பதை, பூமியில் மனித இனம் அழியும் முன்பே, ஆராய்ந்து அறிவதும் அதன்படி வாழ்வியலை மாற்றி அமைப்பதும் நிகழ்காலத் தேவை என்ற எண்ணம் ஆய்வாளர்களுக்குத் தோன்றாமலா இருந்திருக்கும்?


குறிப்புகள்:
1.     சீனாவின் ஹெய்லாங்கியாங் மாகாணத்தில் ஷாங்குவா நதியின் குறுக்கே 1933 ஆம் ஆண்டில் பாலம் கட்டும் போது கண்டெடுக்கப்பட்ட இந்த மண்டை ஓடு, தனிப்பட்ட ஒருவரின் பாதுகாப்பில் எண்பது ஆண்டுகள் வைக்கப்பட்டு, அவர் இறந்த பிறகு அண்மையில் அறிவியலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சீன மொழியில் லாங் என்றால் டிராகன் என்று பொருள். எனவே டிராகன் மனிதன் என்ற பொருளில் ஹோமோ லாங்கி (Homo Longi) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஆதி மனிதன் மற்றும் நவீன மனிதக் கூறுகளின் கலவையாக உள்ளது. இதன் தாடை எலும்பும், தற்போதைய திபெத்தியப் பீடபூமியில் கண்டெடுக்கப்பட்டுள்ள டெனிசோவன் இனத்தின் ஒரு தாடை எலும்பும் ஒரே மாதிரியாக இருப்பதால் டெனிசோவன் இன மனிதனின் முக அமைப்பாக இருக்கலாம் என்றும் கருத்து கூறப்பட்டுள்ளது. தி இன்னோவேஷன் என்னும் அறிவியல் இதழில் இது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது (www.bbc.com/tamil/science-576). ஹோமோ டெனிசோவன் இனம் கடந்த காலத்தைச் சேர்ந்த ஒரு வியத்தகு மர்மம். ரஷ்யாவின் டெனிசோவா குகையில் கண்டெடுக்கப்பட்ட 50,000- 30,000 ஆண்டுகள் பழமையான விரல்களில் நிகழ்த்தப்பட்ட டி. என். ஏ. ஆய்வுகளின் வழி டெனிசோவன் இனம் கண்டறியப்பட்டது (Indianexpress.com).

2.     பாஞ்சியா (Pangaea) – 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் நிலப்பரப்புகள் ஒன்றாக இருந்தன. அதன் வடபகுதி லாரேசியா என்றும், தெற்குப் பகுதி கோண்டுவானா என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட கண்டத்திட்டு நகர்வுகள் காரணமாக இப்பொழுது உள்ள ஏழு கண்டங்களாக பூமியின் நிலப்பரப்புகள் பிரிந்து இருக்கின்றன. கண்டங்கள் நகர்தலின் போது இன்னொரு கண்டத் திட்டில் மோதும் நிலை ஏற்பட்டால் அந்த மோதலின் விளைவாக தொடர் மலைகள் உண்டாகி இருப்பதை முன்பே ஆல்பிரட் வெகனர் சுட்டிக்காட்டியிருந்தார். தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலான நிலப்பாலம் ஒன்று நீண்ட காலத்திற்கு முன்பு இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இப்பகுதிகளில் முன்பிருந்த கிளாசாப்டரிஸ் என்ற மரத்தின் பாறைப் படிமங்கள் படர்ந்து இருப்பதை வைத்தும் இப்பகுதிகள் ஒன்றாக இருந்தவை என்று நிரூபித்தார். இந்த வகைப் பாறைப் படிமங்கள் முதன் முதலில் இந்தியத் துணைக்கண்டத்தில் கோண்டுவானா என்ற பகுதியில் கிடைத்ததால், பழைய ஒன்றாக இருந்த தெற்கு நிலப்பகுதிகள் கோண்டுவானா நிலம் என்று அழைக்கப்பட்டன. மேலும், இலெமூரியாப் பகுதிகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வந்து ஆசியக் கண்டத்தில் மோதிய நிகழ்வையும் அவர் சுட்டிக்காட்டினார். இவை இரண்டுக்கும் இடையில் இருந்த டெத்திஸ் என்ற பெருங்கடல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இறுதியில் கடலுக்கு இடமே இல்லாமல் கண்டத் திட்டுகள் மோதியதால் உருவானவைதான் திபெத்தியப் பீட பூமியும், இமய மலைத் தொடர்களும் என்றார். அதனால்தான் எவரெஸ்ட் சிகரம் ஆண்டுதோறும் சில சென்டி மீட்டர்கள் உயர்ந்துகொண்டே இருக்கிறது என்றும் அவர் கூறினார் (essay by Dr Siva Ilango in City ads Newspaper, July 15, 2010, p.3).

3.     திருமதி சாந்திபாப்பு  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஆய்வு நிறுவனம் மூலம் மரபியல் கல்வி குறித்து உலகளாவிய அளவில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இக்கட்டுரையில் கூறப்பட்ட அவரது ஆய்வுகள் குறித்த கருத்துகள், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 2020, ஜனவரி, 6 - 10 வரை நடத்திய தொல்லியல் பட்டறையில், திருமதி சாந்தி பாப்பு அவர்களால் செயல் விளக்கமாக அளிக்கப்பட்டவை.

நூல் விவரப் பட்டியல்:
1.     யுவால் நோவா ஹராரி, சேப்பியன்ஸ் - மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, 2011, மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால்.
2.     முனைவர் கே. வி. இராமன், தொல்லியல் ஆய்வுகள், 2015, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
3.     முனைவர் தி. சுப்பிரமணியன், தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு, 2018, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
4.     ஏற்காடு இளங்கோ, ராபர்ட் புரூஸ் பூட், 2017, ராமையா பதிப்பகம், சென்னை.
5.     Dr. V. Selvakumar, Tamil cultural connections across the world, 2010, Tamil University, Thanjavur.
6.     Dr.  S. Vasanthi, Peeping the past - Through palaeolithic tools (An introduction), 2012, Department of Archaeology, Government of Tamilnadu, Chennai.
7.   Akhilesh, Kumar & Pappu, Shanti & Rajapara, Haresh & Gunnell, Yanni & Shukla, Anil & Singhvi, Ashok. (2018). 


Thursday, April 7, 2022

திருவள்ளுவர் யார் ?

- முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி 


     திருவள்ளுவர் யார் என்று நெடுங்காலத்திற்கு முன்பே தொடங்கிய ஆராய்ச்சி இன்று வரை  முற்றுப்பெறவில்லை. அவரைக் குறித்து வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள கதைகளில் பெரும்பான்மையானவை புராணக் கதைகளைப் போன்றே உள்ளன. இவற்றையெல்லாம் கேட்க நேர்ந்தால் வள்ளுவரே அசந்துவிடுவார்.  நான் அவனில்லை  என்று கூடக் கூறலாம். இக்கதைகள் வரலாற்றுக்குப் பொருந்துவதாக இல்லை என்பதால் ஆய்வாளர்களால் அவைகள் புறந்தள்ளப்படுகின்றன. இருக்கின்ற ஒரே சான்று அவர் எழுதிய திருக்குறள் என்பதால் அதிலிருக்கும் சொல்லாட்சி, மொழிநடை, இடம்பெறும் பெயர்கள், உவமைகள், கதைகள், மேற்கோள், பழமொழி முதலானவற்றை வைத்துத் திருவள்ளுவர் யார் என்று அறுதியிடும் முயற்சிகளும் பன்னெடுங்காலமாக நிலவி வருகின்றன. இம்முயற்சிகளால் அவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர், தங்கள் சமயத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் அவரவர் விருப்பத்திற்கும், பயன்களுக்கும் உள்ளாக்கப் படுகிறார். மேலும், அவர் மீது பல முத்திரைகளும், பல வண்ணங்களும், பல முகமூடிகளும் அணியப்பட்டு பல்வேறுவித அடையாளங்களுடன் பார்க்கப்படுகிறார். தற்போதைய அடையாளம் காவி தரித்த உருவம். ஒருமை, ஒற்றுமை, மாந்தநேயம் ஆகிய பிம்பங்கள் சிதையுமளவில் இவ்வேற்றுமைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் இடம் கொடுத்தது திருக்குறளா, இத்தனை நூற்றாண்டுக்கால இடைவெளியா, எழுத்துருக்களின் வளர்ச்சி நிலையா, இடைச்செருகல்களா, உரையெழுதியோரின் உள்மன விகாரங்களா, அதிகார மாற்றங்களா, சமயச் சண்டைகளா என்று பன்னோக்கில் எழுந்து நிற்கும் வினாக்களுக்கு விடை காண்பது எளிதாக இல்லை. 

     திருக்குறளில் பாதிக்கு மேற்பட்ட குறள்கள் தமிழ் படித்தோர்க்கு எளிதில் விளங்கிவிடும். மீதியில் பெரும்பாலானவற்றை உரையாசிரியர்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஒருசில பகுதிகள் உரையாசிரியர்களாலும் விளங்க வைக்க முடியாதவை.  அவற்றுள் ஒருசில உரையாசிரியர்களுக்கே விளங்காதவை. மிகக் குறிப்பிட்ட சில குறள்கள் வள்ளுவருக்கு மட்டுமே விளங்கக்கூடியவை. அவர் வாய்திறந்தால்தான் உண்டு. அப்படிப்பட்ட  குறள்களில் ஒன்றுதான் முதல் குறள். அந்த ‘ஆதி பகவன்’ யார்தானென்று இதுவரை நடந்த ஆய்வுகளை எழுதியும், படித்தும் மாளவில்லை. பலவாறாகப் பொருள் கூறப்பட்ட அந்த ‘ஆதிபகவன்’ சொல்லாய்வில் ஏதோ ஒரு கூற்றில் உண்மை இருக்கக் கூடும். ஆனால் அது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாக இருக்க முடியாது என்ற நிலை திருக்குறளில் ஒருமை இல்லையோ என்ற எண்ணத்தைக் கூட ஏற்படுத்திவிடும். இருமையைப் பற்றிப் பல இடங்களில் கூறிச் செல்லும் அவருடைய கருத்தினால் ஒருமையும் இருக்கும், இருமையும் இருக்கும் என்பதையே குறளின் சிறப்பாகக் கொள்ளலாம். அதே நேரம், திருக்குறளை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்தியாவின் தொடக்கக்காலச் சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் திருக்குறளுக்கும் உள்ள தொடர்பினை அறிந்தாக வேண்டும்.

திருக்குறளும் சமணமும்:
     திருக்குறள் இயற்றப்பட்ட காலத்திலிருந்து (கி.மு. மூன்று) ஆயிரம் ஆண்டுகள் வரை கற்றோர் இடையில் அந்நூல் செல்வாக்குடன் இருந்து வந்தது. பதினான்காம் நூற்றாண்டுக்குப்பிறகு சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய சமயங்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த பின்னர், திருக்குறளும் மறக்கடிக்கப்பட்டு விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாண ஆட்சியர் பொறுப்பேற்ற பிரான்சிஸ் வைட் எல்லீஸ் (1777 – 1819) காலத்தில், அவர் வெளியிட்ட திருக்குறள் (1812) நூல்தான் மீண்டும் திருக்குறளைத் தமிழகத்திற்கு நினைவில் கொண்டுவந்தது. (இதற்கு முன்பும் வீரமாமுனிவர் உள்ளிட்ட சிலரின் பதிப்புகள் வெளிவந்துள்ளன). அயோத்திதாசனாரின் பாட்டனார் கந்தப்பன் வழி, அவருடைய அதிகாரி ஆரிங்டன் வழி திருக்குறள் ஓலைச்சுவடி எல்லீசை அடைந்தது. அது ஒரு சமண நூலாகவே எல்லீஸ் குறிப்பிட்டுத் திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரங்களில் இருந்து தெரிந்தெடுத்த குறள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நீண்ட விளக்கங்களுடனும், பிற இலக்கிய மேற்கோள்களுடனும் 1812 இல் வெளியிட்டார். அந்தக் காலத்தில் நிலவிய கருத்துப்படி அவர் திருவள்ளுவரைச் சமணராகவே அவரது நூலில் அடையாளப்படுத்தினார். எல்லீஸ் காலத்தில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் திருவள்ளுவர் தங்க நாணயங்களை வெளியிட்டது. நாணயத்தில் திருவள்ளுவர் உருவம் சமண முனிவராகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

     திருக்குறளின் முதல் குறளில் இடம் பெறும் ‘ஆதிபகவன்’ முதற்றே உலகு’ என்னும் தொடரில் வரும் ஆதிபகவன், சமணத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதரைக் குறிப்பதாகச் சமண நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆதிநாதரும், ஆதிசிவனும், ஒருவரே என்றும், சமணமும், சித்தமும் அதிலிருந்தே தொடங்குகின்றன என்றும் ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். சிந்துவெளி முத்திரைகளில் எருமைக் கொம்புகள் அணிந்து தவ நிலையில் காணப்படும் உருவம் ஆதிநாதர் என்றும், இடப (ரிஷப) தேவரே என்றும், சிந்துவெளி வரை பேசப்பட்ட மொழி தமிழே என்றும், சமணம் தமிழ்ச் சமயமே என்றும், சமண இலக்கியங்களே தமிழில் அதிகம் என்றும் அண்மைய ஆய்வுகள் கருத்துரைக்கின்றன.  பிற சமயக் குரவர்கள் அனைவரும் விருஷபதேவருக்குப் பின்னர் தோன்றியவர்களே என்று திருவள்ளுவர் சைனர் (சமணர்) என்ற கட்டுரையில் திரு.வி.க. குறிப்பிடுகிறார். சமணம் தமிழகத்தில் இறக்குமதியானதல்ல, ஆதிநாதர் (சிந்துவெளி) காலந்தொட்டே தமிழர்களின் சமயமாக சமணம் இருந்துள்ளது. தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டாக இலக்கணம், இலக்கியம், அற இலக்கியம், உரைகள் ஆகிய தொண்டுகள் உள்ளன என்கிறார் பேரா. க.ப.அறவாணன். சமணர்களின் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்கிறார் கால்டுவெல். காப்பியங்கள், புராணங்கள் உட்பட 22 இலக்கிய நூல்களும், தொல்காப்பியம், நன்னூல் உட்பட 20 இலக்கண நூல்களும், திருக்குறள், நாலடியார் உட்பட 16 அற நூல்களும், நீலகேசி உள்ளிட்ட நான்கு தருக்க நூல்களும், பெருங்குருகு, செயிற்றியம் உள்ளிட்ட ஒன்பது இசை நூல்களும், பிற இலக்கிய வகைகளான நிகண்டு, ஓவியம், சோதிடம், பிரபந்தம், சதகம், கணிதம், நாடகம் ஆகிய வகையில் திருக்கலம்பகம், சூடாமணி நிகண்டு உள்ளிட்ட 36 நூல்களும் ஆக மொத்தம் 107 இலக்கிய நூல்கள் தமிழ்ச் சமணர்களால் இயற்றப்பட்டுள்ளன என்ற செய்தி, தமிழக அரசு வெளியீடான தமிழரசு இதழில் (1.11.1974) வெளியிடப்பட்டுள்ளது (தகவல் இரா.பானுகுமார், சென்னை–மின் தமிழ், தமிழ் மரபு அறக்கட்டளை).

     திருவள்ளுவரைக் கொண்டாடும் சைவ, வைணவ மதங்களின் வழிபாட்டு இடங்களில் அவருடைய உருவம் அமைக்கப்படுவதில்லை. அடியவர் வாழ்த்தில் அவர் சேர்க்கப்படுவதில்லை. இதற்குத் திருவள்ளுவர் முன்னாளில் சமணர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமே காரணம் என்கிறார் திரு. வி.க. திருவள்ளுவரை எச்சமயத்தின் சார்பாகப் பார்த்தாலும் அவை அத்தனையுமே அருகதேவர் (மகாவீரர்) கண்ட அருள்நெறியின் பாற்பட்டன வென்பதும் திரு.வி.க. வின் ஆழ்ந்த கருத்து. கொல்லாமையைத் திருவள்ளுவர் வலியுறுத்தியதைப் போல் அவர் காலத்துப் புலவர்கள் யாரும் வலியுறுத்தவில்லை (அறவினை யாதெனின் கொல்லாமை – குறள் - 321). மேலும் அறத்தைப் பாயிரத்தில் அமைக்கும் மரபாட்சியும் சைனருடையதே என்றும் திரு.வி.க. கூறுகிறார். ‘பிரபோத சந்திரோதயம்’ என்ற வேதாந்த நாடக நூலில் சமணர் சார்பில் ‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று’ என்ற குறள் இடம் பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது ஆதிபகவனையே குறிக்கும். அவரே ஆதிநாதர் (ரிஷப நாதர்). இதுவே திருவள்ளுவர் தம் நூலில் வைத்துள்ள திறவுகோல் என்று தன் ஆய்வில் திரு.வி.க. உரைக்கிறார்.
 
     சைன (சமண) சமயம் விதிக்கின்ற ஐவகை நோன்புகளான கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிரமச்சரியம், உடமை நீக்கம் ஆகியவற்றைப் பல குறள்களில் வலியுறுத்தியும், தனித்தனி அதிகாரத்தில் இக்கருத்துகளை அமைத்தும் இருப்பது திருக்குறள் சைன சமய நூலே என்று நிறுவப் போதுமானதென்று அ.சக்கரவர்த்தி நயினார் ‘திருக்குறள் வழங்கும் செய்தி’ (1959) எனும் கட்டுரையில் விளக்குகிறார். ஜைன சமயத்தில் நான்கு விழுமியங்களாக (மங்களமாக) அருகன், சித்தன், சங்கம், தருமம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப் பாகத மொழியில் திருவள்ளுவர் இயற்றிய ஒரு பாடலில் அமைத்திருப்பதாகக் கூறும் சக்கரவர்த்தி நயினார், இதனைப் பின்பற்றியே திருக்குறளில் கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதே கருத்தையும், முறையையும் திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணியில் பின்பற்றியிருப்பதாகவும் தெரிவிக்கிறார். தேவர், நாயனார் என்பவை சமண முனிவர்களுக்கு வழங்கும் பெயர் என்று சமணத்தின் பன்மொழி நூல்களும் தெரிவிக்கின்றன.

திருக்குறளும் பௌத்தமும்:
     புத்த சமயம் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் பரவியமைக்கு மாமன்னர் அசோகனே காரணம். புத்தர் (கி.மு. 623 – 543) பரிநிர்வாணம் எய்தி (இறந்தபின்) 300 ஆண்டுகள் கழித்து மௌரிய மாமன்னனான அசோகன் புத்த சமயத்தைத் தழுவி, அதை அரசாங்க மதமாகவும் ஆக்கினார். அதே காலத்தில் சமணம், ஆசீவகம் ஆகிய சமயங்களும் செல்வாக்குப் பெற்றிருந்தன. வைதிகமும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. அசோகனின் தூதுவர்களாகப் புத்த சமயம் பரப்ப வந்தவர்கள் முக்கியமான இடங்களில் கல்வெட்டுகளையும், அசோக சக்கரம், தூண்களை நிறுவினார்கள். சில இடங்களில் புத்தர் இன்னார் என்று அறிய அவரது பாத உருவங்களைப் பொறித்தார்கள். இதுதான் இந்தியாவில் முதன்முதலாக உருவ வழிபாடுகளைத் தோற்றுவித்தது. அதற்கு முன்னரும் சில வழிபாடுகள் இருந்திருந்தன. தமிழர்களைப் பொறுத்தவரையில் முன்னோர் வழிபாடும், தாய்த் தெய்வ வழிபாடும், நடுகல் வழிபாடும் தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தன. முன்னோர் வழிபாடு உருவமில்லாதது. ஆனால் இடம் சார்ந்து கிடைக்கும் பொருட்களால் அடையாளப் படுத்தப்படுவது. தாய்த்  தெய்வ வழிபாடு ஒரு பெண்ணுருவம், குறிப்பாகத் தாய் உருவம் சிறியதாக வடிவமைக்கப்பட்டது. நடுகல் வழிபாட்டில் தொடக்கத்தில் உருவம் இல்லை. பெயரும் அவரைச் சார்ந்த ஏதோ ஒரு அடையாளமும் இடம்பெற்று வந்தன. இந்நிலையில்தான் கௌதமபுத்தரின் திருவடிகளைத் தொழும் வழிபாடு அசோக மாமன்னரால் கி.மு. 300 இல் உருவாக்கப்பட்டது. திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் (திருக்குறளில் கடவுள் என்ற சொல் எங்கும் இடம் பெறாத நிலையில் கடவுள் வாழ்த்து எனும் தலைப்பு இடைச்செருகலே என்ற கருத்தும் நிலவுகிறது) பாதங்களைத் தொழும் தன்மை மிகுதியாக இடம்பெற்றுள்ளது. வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின், மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார், வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார், தனக்குவமை இல்லாதான் தாள், அறவாழி அந்தணன் தாள், எண்குணத்தான் தாளை, இறைவன் அடி சேராதார் என்று தாள், அடி ஆகிய காலடி அல்லது பாத வணக்கத்தைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். இதில் கூறப்படும் தாள், அடி என்பவை புத்தருடையதே என அதற்குரிய அடைமொழிகளான, வாலறிவன், மலர்மிசை ஏகினான், எண்குணத்தான் போன்றவைகளைச் சுட்டிக்காட்டிப் புத்த சமயத்தினர் கூறிவருகின்றனர். இவை மகாவீரருக்குச் சொல்லப்பட்டவை என சமண சமயத்தவரும் கூறுகின்றனர்.

     புத்தரின் ஒழுக்க இயலைப் பாலிமொழி நூல்களான விநயபிடகம், சூத்திரபிடகம் ஆகிய தொகை நூல்கள் விவரிக்கின்றன. இந்நூலில் புத்தரின் போதனைகளாகக் குறிக்கப்பெறும் ஒழுக்கவியல் திருவள்ளுவர் கூறும் திருக்குறள் ஒழுக்கவியலோடு பெரிதும் ஒத்துப் போவதைத் தனிநாயகம் அடிகளார் விவரித்துள்ளார். சாதி வேற்றுமைகளை ஒழித்த புத்தரின் கருத்து புண்ணிய பூமியை விரிவாக்கியது. அதைத் தென்னாட்டில் விரிவுபடுத்தியது திருக்குறள். புத்த தன்மங்களான பஞ்சசீலம் (ஐவகை நெறி), அஷ்டசீலம் (எண்குணத்தான்), தசசீலம் (பத்துக்கட்டளைகள்) ஆகியவற்றைத் திருக்குறளில் பொய்யாமை, அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும், கொல்லான், புலாலை மறுத்தானை, எவ்வுயிர்க்கும் செந்தண்மை போன்றவும் இன்னும் பல குறள்களிலும் காணலாம். அதே நேரம் துறவறத்தை அதிகமாகப் புத்தர் வலியுறுத்தியபோதும் திருவள்ளுவர் இல்லறத்தை வலியுறுத்தி அதுவே அறம் என்று மொழிவதை ‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று மொழியும் குறள்கள் மூலமாக அறியலாம் என்றும் தனிநாயகம் அடிகளார் கூறுகிறார். துன்ப நீக்கத்திற்கு வழியாக இறப்பை வள்ளுவர் வலியுறுத்தவில்லை. மாறாக வாழ்க்கையைச் சுவைத்து வாழும் முறையையும் இன்பத்துப் பாலாகக் கொடுத்திருக்கிறார்.

     புத்தரின் போதனைகளான தன்மபீடம், சூத்திரபீடம், விநயபீடம் ஆகிய மூன்று பிடகக் (திரிபிடகம்) கருத்துக்களையே மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம் என்னும் மூன்று பிரிவாகத் திரிக்குறள் நூலை திருவள்ளுவர் இயற்றினார் என்று அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். வள்ளுவர், சாக்கையர், நிமித்திகர், வேந்தன், மாதானுபங்கி, செந்நாப்போதார், பொய்யாமொழி என்று வழங்கும் பெயர்களைத் திவாகரம், பின்கலை நிகண்டு, மணிமேகலை, சிந்தாமணி, சூளாமணி, நன்னூல் இன்னும் பிற இலக்கியங்களில் இருந்தும் பண்டிதர் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், திருவள்ளுவர் மன்னர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், இறுதியாகத் தின்னனூர் அருகில் இராகுல வியாரத்தில் தங்கி நல்லுரைகள் ஆற்றிப் பின் காலமானார் என்றும் ‘தியானப் பஞ்சரத்தினப்பா’ என்னும் ஓலைச் சுவடிச் செய்தியையும் கூறுகிறார். திருவள்ளுவர் நினைவிடம் கட்டப்பட்ட இராகுல வியாரம் தற்போது வீரராகவர் ஆலயமாக வைணவ சமயத்தார் வசம் உள்ளதாகவும் பண்டிதர் கூறுகிறார். இந்த உண்மைகளைத் திரித்து திருவள்ளுவரை வேறு சமயத்தவராகவும், வேறு இனத்தவராகவும் காட்டவேண்டும் என்பதற்காகவே எழுவரோடு உடன்பிறந்தார் என்று கூறும் ‘கபிலர் அகவல்’ போன்ற பொய்யான வரலாறுகள் புனையப்பட்டதாகக் கூறும் அயோத்திதாசர், எல்லீஸ் வெளியிட்ட திருக்குறள் (1812) நூலிலும், அதன் பின்னர் 1831 இல் வெளிவந்த நூலிலும் திருவள்ளுவர் வரலாறு இல்லையென்றும், 1935 இல் விசாகப் பெருமாளையரும், 1937 இல் சரவணப் பெருமாளையரும் ஆதி, பகவன் ஆகியோருக்குப் பிறந்தவர் வள்ளுவர் என்ற கட்டுக்கதைகளைச் சேர்த்து விட்டனர் என்றும் கூறுகிறார். இப்படியான கட்டுக்கதையிலிருந்து விடுவித்துத் திருக்குறளை புத்த சமயக் காப்பியம் என்று நிறுவுதற்குத் திரிக்குறள் உரை விளக்கத்தினை தன்னுடைய ‘தமிழன்’ இதழில் 1911 முதல் 1914 ஆம் ஆண்டு வரையில் எழுதிவந்தார். முதல் 55 அதிகாரங்களுக்கு உரை எழுதி அயோத்திதாசர் இறப்பைத் தழுவிய நிலையில், அவரது உரைகளும், அவர் எழுதிய திருவள்ளுவர் வரலாறும் இலக்கியச் சான்றுகளுடன் புத்தசமய வழிநூலாகத் திருக்குறளை நிறுவி உள்ளன.

திருக்குறளும் ஆசீவகமும்:
     சமணம், பெளத்தம் ஆகியவை அமைப்பாக உருவான காலத்தில்தான் ஆசீவகமும் அமைப்பாக உருவகம் பெற்றது. மகாவீரர், கெளதம புத்தரின் சமகாலத்தவராக ஆசீவகத்தின் மூன்றாம் திருத்தங்கரரான மற்கலி கோசாலர் இருந்தார். மாமன்னர் அசோகனின் தந்தை பிம்பிசாரர் ஆசீவக சமயத்தைச் சேர்ந்தவர். அசோகர் புத்தமதம் தழுவினாலும்  ஆசீவகமும் செல்வாக்கோடு திகழ்ந்தது. வடபுலம் மட்டுமன்றித் தென்புலத்திலும் இம்மூன்று சமயங்களும் பெரும் செல்வாக்கோடுதான் இருந்தன. ஆசீவகம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை வடபுலத்திலும், கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டிலும் இருந்தது. சமணமும், பௌத்தமும் தமிழில் பல இலக்கிய, இலக்கண நூல்களை அளித்துள்ளன. ஆசீவகத்தின் ‘ஒன்பது கதிர்’ என்னும் தமிழ் நூல் இன்று கிடைக்கப்பெறவில்லை. இன்னொரு நூலான சினேந்திரமாலை (வெண்பா) ஆசீவகம் செல்வாக்கிழந்த நிலையில் சமண நூலாக அறியப்படுகிறது.

     ஆசீவகத்தின் கோட்பாடுகள் தமிழிலக்கியங்களில் அதிகமாகவே உள்ளன. திருமந்திரம், பரிபாடல், புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார், அருங்கலச் செப்பு ஆகிய நூல்களில் ஆசீவகக் கருத்துகள் விரவிக் காணப்படுகின்றன. திருவள்ளுவர் காலத்தில் இம்மூன்று சமயங்களுமே தமிழகத்தில் செல்வாக்கோடு திகழ்ந்தன. ஆசீவகத்தின் கருத்துகளில் உயர்ந்தவையும், உடன்பாடானவையும் திருக்குறளில் பயின்று வருகின்றன. ஆசீவகம் பிறவியை ஏழு வண்ணங்களில் குறிக்கிறது. திருக்குறளில் ஏழு என்பதை மையப்படுத்தும் எட்டுக் குறட்பாக்கள் உள்ளன. எழுமையும், எழுபிறப்பும் என்ற சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஆசீவகத்தின் ஊழ்க் கோட்பாடு திருக்குறளின் ஊழ் அதிகாரத்தில் ஊடுருவி இருப்பதை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆசீவகத்தின் அணுக் கொள்கை அறிவியல் முன்னோட்டத்தின் முதற்படியாகக் கருதப்படுகிறது. அதேநேரம் அணுவைப் பிளக்க முடியாது என்ற ஆசீவகத்தின் கொள்கையை 2600 ஆண்டுகளுக்குப் பின்னர் பிளந்தவர் விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன். அறிதலையும், அறிவித்தலையும் உயிரின் தொழில்களாக ஆசீவகம் குறிப்பிடுகிறது. ‘எண்பொருளவாக செலச் சொல்லித் தான் பிறவாய் நுண்பொருள் காண்பதறிவு’ (குறள்-424) என்னும் திருக்குறள் ஆசீவகக் கருத்தோடு பெரிதும் ஒத்துள்ளதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆசீவகம், தமிழ்நாட்டில் தோன்றி வடபுலம் வரை சென்ற அறிவியல் சமயம் என்று பேரா. க. நெடுஞ்செழியன் தனது ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ நூலில் குறிப்பிடுகிறார்.

திருக்குறளும் வடபுலமும்:
     வடபுலம் என்பதில் ஆரியம், சமஸ்கிருதம், வேதம், புராணங்கள், மனுஸ்மிருதி ஆகியவை அடங்கும். ஆரியர் என்பதை இனமாகக் கொள்ளாமல் ஆடவரில் உயர்ந்தவர் என்ற பொருளில் புத்தர் வழங்குவார். ஆனால் திருவள்ளுவர் ஆரியரைப் போற்றவில்லை. மனுதர்மத்தின் வர்ணாசிரமத்திற்கு எதிர்ப்புக் காட்டுகிறார். நாம் இன்று வழங்கும் பொருளில் அந்தணர் அன்று குறிக்கப்படவில்லை. சிரமணர்களில் உயர்ந்த அறஹத்துகளே அந்தணர் எனப்பட்டனர். அவர்கள் சமூகத்தில் உயர்நிலையில் மதிக்கப்பெற்றனர். திருவள்ளுவர் காலத்தில் வேள்விக் கொலை புரிந்துவந்த ஆரியர், சமூக மதிப்புக் கருதித் தங்களையும் அந்தணர் என்று சொல்லிக்கொண்டனர். அதனால் தான் அந்தணர் என்போர் அறவோர் என்று வள்ளுவர் விளக்கம் கொடுக்க நேர்ந்தது. இப்படி அகச்சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகியவற்றை எதிர்த்தழிக்கத் தொடங்கிய புறச்சமயமான வைதிகத்தை நேரடியாகவும், மறைபொருளாகவும் தோலுரித்துக் காட்டும் குறள்கள் நூல் முழுவதும் விரவியுள்ளன.

     வடபுலத்தை முற்றாக எதிர்க்கவே தென்புலத்தார் என்கிறார் வள்ளுவர். தென்புலத்தார் என்பது முன்னோர் வழிபாட்டையும், தென்மதுரை, குமரிக்கண்டங்களில் கடல்கோளால் அழிந்தவர் நினைவையும் போற்றுவதற்கான வழிபாடு என்று பாவாணர் கூறுகிறார். தங்கள் புலன்கள் தென்பட சாதிக்கும் (ஐந்தவிக்கும்) சமண முனிவர்களையும், அறஹத்து களையும் குறிக்கும் சொல்தான் தென்புலத்தார் என அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். ஆரியத்தையும், வடபுலத்தையும் பல்வேறு நிலைகளில் எதிர்க்கும் குறள்களை மேற்கூறிய இருவருமே பெரும் பட்டியல் இட்டுள்ளனர். வயதான பெற்றோர், மனைவி, குழந்தைகள் பசியால் வாடும் நிலையில் எப்பாவம் செய்தாயினும் அவர்களைக் காப்பாற்றுக என்று ஆரிய நூல்கள் அறம் உரைக்கின்றன. ஆனால் அதையெல்லாம் மறுத்து எத்துணை இடர்வந்தாலும் பாவகாரியம் எதுவும் செய்யக்கூடாது என்று திருவள்ளுவர் உரைப்பதாகத் திருக்குறளுக்கு வைதிகப் போர்வை போர்த்திய பரிமேலழகரே கூறுகிறார். (செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (குறள் - 656), குன்ற வருப விடல் (குறள் - 961). 

     உயர் பிறப்பாளர்களுக்கே மேலுலகம் என்று கூறி அவர்கள் வீடுபேறடைந்தால் அவர்களை மேலோர், உயர்ந்தோர், வானோர், தெய்வம், தேவர் என்று கூறும் வழக்கமிருக்க ‘தேவர் அனையர் கயவர்’ என்றும், ‘நன்று அறிவாரில் கயவர் திருவுடையர்’ என்றும், ‘மக்களே போல்வர் கயவர்’ என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுவது கயவர்களைத் தேவர்களுக்கு ஒப்பிட்டு, மக்களிலும் தேவர்கள்  தாழ்ந்தவர் என்ற கருத்தில் அமைந்ததே என்று புலவர் குழந்தை மதிப்பீடு செய்துள்ளார். திருக்குறளில் உரைகளில் பின்னர் சேர்க்கப்பட்ட ‘திருவள்ளுவ மாலை’  நூலிலும் சில இடைச் செருகல்கள் போக பெரும்பாலான வெண்பாக்கள் வள்ளுவரின் வருண, வேத, வடபுல எதிர்ப்பினைச் சுட்டியே செல்கின்றன.

     வடபுலத்து அரசுகள் தொடக்கக் காலங்களில் 23 ஆவது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் அறக் கொள்கைகளை ஏற்று அமைதி வழிப்பட்ட அதே காலத்தில், வைதிகத்தின் மனுஸ்மிருதிக் கொள்கை ஆரியர்வழி வர்ணாசிரமக் கொள்கையாக அரசுகளின் மீது திணிக்கப்பட்டது. இதில் அசோக மாமன்னனும் தத்தளித்திருந்த வேளையில்தான், நால்வருணம் சாராத அரசையும், அறவழியில் அரசு மற்றும் குடிகளை இணைக்கும் சமூக அமைப்பினைப் புத்தரின் போதனையில் இருந்து அசோகர் பெற்றார். பல்வேறுபட்ட மனிதர்கள், இனங்கள், சமயங்கள் சேர்ந்து வாழும் சமுதாயம், அடிப்படையில் அறநிலையில் அமைய வேண்டிய இன்றியமையாமையை அவர் புத்தரிடம் இருந்து பெற்றார். இதையொட்டி தமது அரசியல் கொள்கைகளை வகுத்துக் கொண்ட அசோகரின் அரசில் ராஜகுரு, மத குருக்களுக்கு இடமில்லை. உயிர்ப்பலி கொடுக்கும் வேள்விகள் அசோகரால் தடைசெய்யப்பட்டன. அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவிக்கும் புத்தரின் போதனை, வைதிகத்தின் வேரை ஆட்டம் காண வைத்ததுடன் அவர்களின் கூட்டத்தைப் புலம் பெயரவும் வைத்தது. 

     வடபுலம் பெயர்ந்தால் தென்புலத்தைத் தவிர வேறு வசதியுள்ள புலமில்லை. இதனால் தமிழர்கள் மீதும், தமிழ் அரசுகள் மீதும் மிகப்பெரிய பண்பாட்டுத் திணிப்பும், போரும் நடை பெற்றபோது அவர்களுக்கு வடபுலத்தில் புத்தர் கிடைத்ததைப் போல் ஒரு தத்துவ வழிகாட்டி கிடைக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அறிவுசார் சமயங்களை அறிந்திருந்த வள்ளுவர் தமிழர்களுக்கு அரணாக இருந்தார். மனுஸ்மிருதி, புராணம், வருணம் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கிலேயே மதகுரு இல்லாத அரசன் – அமைச்சர் கொண்ட அரசியலைத் தத்துவக் கோட்பாடாகத் தந்தார். அரசன் அருள் உள்ளம் உடையவனாகவும், செங்கோல் செலுத்துபவனாகவும் அறம்பிறழாமல் ‘ஐந்து சால்பு ஊன்றிய தூண்’ (குறள் – 983) போல ஆட்சிபுரியவேண்டும் என்ற வள்ளுவரின் அரசியல் கோட்பாடுதான் அன்றைய தமிழ் அரசுகளுக்குப் பெரும் அரணாக விளங்கியது. மனுநீதி வெறுக்கும் உழவுத் தொழிலைத் தலைமைத் தொழிலாக உயர்த்திப் பிடித்தவர் வள்ளுவர். வருணங்கள் நுழையாத பழந்தமிழ்ச் சமுதாயம் காதலை உயர்த்திப்பிடித்தது. அதை இலக்கியங்களில் பாடி வைத்தது. வைதிகத்தின் வழியாக வருணம் தமிழ்நாட்டில் நுழைந்த காலத்தில் அறமும், பொருளும் பாடித்தந்த வள்ளுவர், இன்பத்துப் பாலையும் பாடிவைத்து சமத்துவச் சமுதாயம் நிலைத்திருக்கும் வகை செய்தார்.

     பௌத்தத்திற்கும், வைதிகத்திற்கும் இரண்டு முக்கியமான வேறுபாடுகளை அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். முதலாவதாக, பௌத்தத்தில் கூறப்படும் தம்மம் என்பது ஒழுக்கமே. அது கடவுளுக்கு நிகரானது. ஒழுக்கநெறி இல்லையென்றால் பௌத்தமே இல்லை. ஆனால் வைதிகம் ஒழுக்கத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதல்ல. வைதிக  தர்மம் என்பது சடங்கு, யாகம், பலி, பெண் போகப்பொருள் என்ற தன்மையைக் கொண்டது. இரண்டாவதாகச் சமத்துவம். பௌத்தம் நால்வருணத்தின் எதிரி. மனுதர்மம், நால்வருணம் ஆகியவற்றின் எதிர்ப்பை நீண்டகாலப் போராட்டமாகப் பௌத்தம் கைக்கொண்டது. ஆனால், வைதிகத்தில் ஒருவருக் கொருவர் சமம் இல்லை. ஆண்களுக்குள் சமம் இல்லை. ஆண் – பெண் சமம் இல்லை. பிறப்பினால் கடைநிலையில் உள்ளவர்களும், பெண்கள் அனைவரும் சன்னியாசம் பெறமுடியாது. கடவுளை அடைய முடியாது. மேலும் இதை மீறினால் அருவருக்கத்தக்கத் தண்டனைகள். இதுவே வேதத்தின் ஆணை. இதைத் தடுக்கத்தான் வள்ளுவர் தமிழ் மக்களுக்கு அரணாக நின்று, அவர் காலத்து நன்னெறிகளைத் திரட்டித் திருக்குறளாகத் தந்தார் என்று கொண்டால் தமிழர்கள் ஒற்றுமை பூண்டு, எதிரிகளை அடையாளம் கொள்ளவேண்டிய தேவை விளங்கும். 

துணை நின்ற நூல்கள்:
1.  G.U. Pope, Thirukkural, 2018, சாரதா பதிப்பகம், சென்னை.
2.  க. அயோத்திதாசப் பண்டிதர், திரிக்குறள்., 2015, மெத்தா பதிப்பகம், சென்னை.
3.  ஞா. தேவநேயப் பாவாணர், திருக்குறள் தமிழ் மரபுரை, 2000, இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை.
4.  புலவர் குழந்தை, திருக்குறள், 2007, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
5.  பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி, திருக்குறள்–அறத்துப்பால், 1939, திருச்சி.
6.  திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும், 1967, கழகம், சென்னை.
7.  ப.மருதநாயகம், எல்லீசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி, 2009, சீதைப் பதிப்பகம், சென்னை.
8.  திருக்குறள் பன்முக வாசிப்பு, 2009, மாற்று, சென்னை.
9.  மருதமுத்து, திருக்குறள் – தமிழ்த் தேசிய அரசியல் நூல், 2013, போர்க்கொடி பதிப்பகம், சென்னை.
10.  தர்மானந்த கோசம்பி, பகவான் புத்தர் (மொழிபெயர்ப்பு கா.ஶ்ரீ.ஶ்ரீ.) 2018, சாகித்ய அகாதமி, புதுதில்லி.
11.  டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், புத்தரும் அவர் தம்மமும் (தமிழில் வீ.சித்தார்த்தா), 1996, பௌத்த ஆய்வு மையம், சென்னை.
12.  மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், 1940, கழகம், சென்னை.
13.  மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும், 2017, நாம் தமிழர் பதிப்பகம், சென்னை.
14.  க.நெடுஞ்செழியனின் ஆசிவகமும் ஐயனார் வரலாறும், 2014, பாலம், சென்னை.
15.  சாகர் முனிமகராஜ், குழந்தை ஞானம் (5 தொகுப்புகள்), 2015 பகவான் 1008 ஶ்ரீ நேமி தீர்த்தங்கரர் பஞ்சகல்யாண விழா, ஏதாநெமிலி.
16.  சோ.ந. கந்தசாமி, இந்தியத் தத்துவக் களஞ்சியம் (3 தொகுதிகள்), 2016, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
17.  ஆர்.பி.சேதுப்பிள்ளை, திருவள்ளுவர் நூல் நயம், 1931, கழகம், சென்னை.
18.  திருவள்ளுவர் நினைவுமலர், 1935, திருவள்ளுவர் திருநாட்கழகம், சென்னை.
19.  தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளம். 


முனைவர் சிவ. இளங்கோ,
6, கவிஞர் புதுவைச் சிவம் வீதி,
வெங்கட்ட நகர்,
புதுச்சேரி – 605 011.
பேசி: 99940 78907.
Mail ID:   ilangosiva57@gmail.com


-------

Monday, December 6, 2021

அறம் காத்த அண்ணல்!



-- முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி.

Ambedkar.jpg

 பிறப்பினால் இந்துவாகப்
   பிறப்பவர் யாருமில்லை; 
வெறுப்பினைக் கக்கும் வேதம் 
   வேள்வியில் புனிதம் காக்கும்;
சிறப்பிலாச் சிறுமைச் சாதி 
   சிறிதுமே ஏற்க வேண்டாம்; 
இறப்பிலும் இழிவு தீரா! 
   இறக்குமுன் துறத்தல் நன்றே! 

நன்றதைச் சொன்னவர் அம்பேத்கர்!
    நாளுமே அறிவினைப் போற்றிநின்றார்! 
வென்றதைத் தீர்த்திடும் வேகத்தில்
    விட்டொழித்தார் மதம் வீறுகொண்டே!
நன்றவர் புத்தரின் நடையேற்றார்!
    நானில மக்களும் விழிப்புற்றார்! 
அன்னவர் வழிதனில் நாடுசென்றால்
     அவலமே தீர்ந்திடும்! வாழிஅண்ணல்!

--



Saturday, October 30, 2021

மெக்காலே மகாத்மாவா?


 — முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி


மெக்காலே.jpg

இந்தியாவின் தற்போதைய மதச் சார்புள்ள அரசாங்கம், சென்ற ஆண்டில் அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கைத் திட்டம் நாடு முழுவதும் பெரிய விவாதங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. மதத்தைத் திணிக்கும் ஒரு கல்வி முறையாக இது பரவலான எதிர்ப்பைச் சந்தித்தாலும், அரசாங்கம் அதை வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தப் புதிய கல்விக் கொள்கை தற்காலத்தில் எதிர்கொண்ட எதிர்ப்புகளை விடவும், பிரிட்டிஷ் ஆட்சியின்போது மெக்காலே கொண்டுவந்த கல்விச் சீர்திருத்தம், அது மதச்சார்பற்றது என்றாலும், அந்நாளில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது.

இது குறித்துப் புதிய கோடாங்கியில் பல அறிஞர் பெருமக்களும் விளக்கம் அளித்திருந்தனர். "மொந்தை புதுசு கள்ளு பழசு" என்ற தலைப்பிட்ட (2020, செப்டம்பர்) கட்டுரையில், மெக்காலேயின் கல்வித் திட்டம் குறித்தும் அலசப்பட்டு இருந்தது. இக்கட்டுரையின் சில கருத்துக்களும், பகுதிகளும் இணைய தளங்களில் பதிந்த போது அவை பெரும் விவாதப் பொருளாக மாறி இருந்தன. 

மெக்காலேவின் கல்விச் சீர்திருத்தங்கள் சட்டமாக்கப் பட்டதை வைத்து, அவரை மகாத்மா அளவுக்குப் புகழ்ந்தவர்களும் உண்டு. அதேநேரம் அவர் இந்தியாவை மிகவும் இழிவாகக் கருதியவர் என்றும், இந்தியப் பண்பாட்டுக்கும், இந்தியப் பாரம்பரியக் கல்வி முறைக்கும் எதிரானவர் என்றும் அவரை எதிர்ப்பவர்கள் கட்டமைக்கும் கருத்துக்களின் உச்சமும் உண்டு. மெக்காலேவை எதிர்ப்பவர்கள், அவர் கூறியதாக, மிக முக்கியமான குற்றச்சாட்டின் ஒரு சான்றாகச் சுட்டிக்காட்டுவது இதுதான்.

“நான் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துள்ளேன். அங்கே ஒரு பிச்சைக்காரர் கூடக் கிடையாது. ஒரு திருடர் கிடையாது. மிக்க வளமான நாடு. உயர்ந்த ஆன்மீக மதிப்பீடுகள் கொண்ட நாடு. அதை வென்று அடிமைப்படுத்துவது எளிதல்ல. அதற்கு முதலில் அதன் இந்த வலிமையை உடைத்துத் தகர்த்தாக வேண்டும். அதனுடைய முதுகெலும்பாக உள்ள அதன் ஆன்மீக கலாச்சார மதிப்பீடுகளைத் தகர்க்க வேண்டும். அதற்கு நான் முன்வைக்கும் திட்டம் என்னவென்றால் அதன் பண்டைய கல்விமுறையை முதலில் தகர்க்க வேண்டும். அதனிடத்தில் ஆங்கிலக் கல்விமுறையை வைத்தால் தங்களுடைய கலாச்சாரம் முதலியவைதான் உயர்ந்தது என்கிற சுய பெருமிதத்தை அவர்கள் இழப்பார்கள்”

மேலுள்ள சொற்றொடரை மெக்காலே, இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் 2.2.1935 அன்று பேசியதாக மெக்காலே எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

மெக்காலே இவ்வாறு கூறவில்லை என்று இதற்கு முன்பாகவே பல விளக்கங்கள் வெளியிடப்பட்டு விட்டன. ஆனாலும் மிகத் தந்திரமான ஃபோட்டோ ஷாப் தொழில்நுட்பத்துடன், அந்நாளில், அதாவது 1835 ஆம் ஆண்டு வெளியானதாக, மேற்கூறிய கருத்தை இணையதளத்தில் வெளியிட்டு, அதுதான் மெக்காலேவின் இந்தியாவைப் பற்றிய உண்மையான கருத்து என்ற புரளியைப் பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.

தாமஸ் பாபிங்டன் மெக்காலே (1800 - 1859) இங்கிலாந்தின் கிராமமான லைசெஸ்டர்ஷயரில் 25.10.1800 அன்று பிறந்தவர். எளிமையான குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த மெக்காலே, சிறுவயதிலிருந்து மிகவும் புத்திக்கூர்மை உள்ள மாணவராகத் திகழ்ந்தார். அறிவுத் தரம் உயர்ந்தோரில் ஒருவராக அவர் 1926 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்டுள்ள "300 அறிவாளிகள்" (The Early Traits of 300 Genius) என்ற நூலில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டார். ஐம்பத்து ஒன்பது ஆண்டுக் காலமே வாழ்ந்த அவர், இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே நேரம் தனது கல்வியின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவிகளை அடைந்தவர். அவரது மதிநுட்ப ஆலோசனைகளுக்காகப் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டின்கின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1834 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டு இந்தியாவுக்கு வந்து, பிரிட்டிஷ் இந்திய கவர்னர் ஜெனரலின் ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மெக்காலே, அதன் பிறகு 1838 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து திரும்பினார். 

மெக்காலே இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் பேசியதாகக் குறிப்பிடப்பட்ட நாளில் (2.2.1835 அன்று) அவர் இங்கிலாந்தில் இல்லை. இந்தியாவில், கல்கத்தாவில் தான் இருந்தார். கல்கத்தாவில், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலின் ஆளுநர் மாளிகையில், இந்தியக் கல்வி முறை குறித்து, பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் மற்றும் உயர்மட்டக் குழுவினர் முன்பு மெக்காலே நடத்திய விவாதங்கள் அவ் ஆணையத்தின் நடவடிக்கைக் குறிப்பில் உள்ளன. அவற்றில் 2.2.1835 ஆம் நாளில் இந்தியக் கல்வி முறை குறித்து மெக்காலே பேசியிருக்கிறார். அந்த உயர்மட்டக் குழுவில் மெக்காலே பேசாத ஒரு கருத்தை, அவர் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் பேசியதாக, அதுவும் இந்தியப் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்று பேசியதாக, மேற்குறிப்பிட்ட பேசாத பேச்சை வெளியிட்டுள்ளனர். சரி, கல்கத்தாவில் மெக்காலே என்னதான் பேசினார் என்பதைக் காணப் புகுமுன், அது தொடர்பான வரலாற்றுப் பின்னணியைக் காண்போம்.

மெக்காலே இந்தியா வருவதற்கு முன், இந்தியக் கல்விமுறை சமஸ்கிருதம் மற்றும் பாரசீகம் (அரேபியம்) ஆகிய இரு மொழிகளை மட்டுமே சார்ந்திருந்தது. இந்து மதத்தின் இரு பிறப்பாளர்கள் என்று கூறப்படும் பிராமண, பனியா, சத்திரியர், காயஸ்தர், காத்ரிஸ் என்னும் உயர் சாதியினருக்கு மட்டும் கல்வி சமஸ்கிருத மொழியிலும், பத்தன், அராபியர், மதம் மாறிய இருபிறப்பாளச் சாதியினருக்கு அரேபியக் கல்வியும் சாத்தியமாகி இருந்தது. உணவு உற்பத்தியில் கடும் உழைப்பாளிகளான சூத்திரர்களுக்கும், தலித்துகளுக்கும், ஆதிவாசிகளுக்கும், மகளிருக்கும் கல்வி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. 1817 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கிறித்துவ அமைப்புப் பள்ளி தான், முதன் முதலில் ஆங்கில மொழியில் கற்பித்தது. வில்லியம் கேரி (1761 - 1834) என்பவரால் கல்கத்தாவில், ராஜாராம் மோகன் ராயுடன் சேர்ந்து இந்தத் தனியார் ஆங்கிலப் பள்ளி தொடங்கப்பட்டது. அங்கும் இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டது. வில்லியம் கேரி இறந்த ஆண்டில்தான் (1834) மெக்காலே இந்தியா வந்தடைந்தார். மெக்காலேவின் முதல் திட்டமே இந்தியக் கல்வி முறையில் சமஸ்கிருதம், அரபிய மொழிகளை நீக்கி, ஆங்கில வழிக் கல்வி முறையைப் புகுத்துவது தான்.

அதற்கான காரணத்தைத்தான் கல்கத்தாவில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் 2.2.1835 அன்று மெக்காலே பேசினார். அப்போது இந்தியக் கல்வி முறையின் பயிற்று மொழி குறித்து அவர் கூறும் பொழுது, இந்தியக் கல்வி முறையின் பயிற்று மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார். அவர் தனது உரையில், "இந்தியாவில் அதுவரையில் பழங்காலக் கல்வி முறைகள் சமஸ்கிருத மொழியிலும், அராபிய மொழியிலும் இருந்தன. இந்த இரண்டு முறைகளும் இந்தியாவின் வருங்கால இளைய தலைமுறையினர்க்கு ஏற்றதல்ல" என்று கூறினார். அதற்கான காரணத்தை, மெக்காலே இப்படிக் கூறுகிறார்.

"சமஸ்கிருத மொழி நூல்களிலிருந்து திரட்டி இருக்கக்கூடிய வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும், இங்கிலாந்தில் இருக்கும் குழந்தைகள் பள்ளியில் கொடுக்கப்படும் சுருக்கமான பாடங்களுக்கு முன்னால் மதிப்பற்றவை என்பது தனது மிகையற்ற நம்பிக்கை. மேலும், ஐரோப்பிய நாடுகளின் மதிப்புமிக்க இலக்கியங்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் அரபு, சமஸ்கிருத மொழியின் செய்யுள்கள் இல்லை. அப்படி இருக்கிறது என்று சொல்லக்கூடிய கீழை நாட்டு மொழிகளின் வல்லுநர் ஒருவரைக் கூட நான் சந்தித்ததில்லை" 

இதுதான் மெக்காலே 2.2.1835 அன்று கல்கத்தாவிலுள்ள கவர்னர் ஜெனரல் மாளிகையில் இந்தியக் கல்வி முறை குறித்துப் பேசிய குறிப்புகளில் இடம் பெற்றிருக்கும் வாசகங்கள். இனி வருவதும் மெக்காலே பேசியவை தான்.

 "ஆடு மாடுகளைக் கொல்வது என்னும் காலாவதியாகிப் போன வேதக் கருத்துக்களை மொழிவதிலும், ஒரு கழுதையைத் தொட்டுவிட்டுத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் தங்கள் இளமையைக் கழித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை ஆசை காட்டி இழுப்பது இந்திய அரசாங்கத்தின் வேலை அல்ல" (இதில் கழுதை என்னும் சொல்லுக்கு மெக்காலே ஆங்கிலத்தில் பயன் படுத்திய Ass என்னும் பதத்திற்கு வேறு பொருள்களும் உண்டு). 

"இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருங்கால இந்தியாவை உருவாக்க இந்திய மாணவர்களுக்குக் கணிதம், அறிவியல், நிலவியல் போன்ற பாடங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதைக் கற்பிப்பதில் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்" என்று மெக்காலே உறுதியாகக் கூறினார். ஆங்கிலக் கல்வி முறையைச் சார்ந்திருப்பது தான் எதிர்கால இந்தியாவிற்கு நல்லது என்றும், சுதந்திரமான அரசியலும், அப்படிப்பட்ட பிரதிநிதித்துவம் உள்ள அரசாங்கத்தை வகுத்தல் என்ற ஒரு கருத்தியலை உருவாக்குவதும் தான் எதிர்கால இந்தியாவுக்குத் தேவை என்பதும், எதிர்கால இந்திய அரசியல்வாதிகள் சுதந்திர உணர்வின் மகத்துவத்தை அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதும் மெக்காலேவின் கருத்துக்களாக இருந்தன (Macaulay's Minutes on Education, 2.2.1835).

இதற்கு முன்பும், இங்கிலாந்துப் பாராளுமன்றத்திலும், மெக்காலேவின் குரல் இந்தியாவுக்கான உண்மையான விடியலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. “இந்திய மக்கள், மோசமான நிர்வாகத்தில் நமக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பதைக் காட்டிலும், நம்மிடமிருந்து சுதந்திரம் பெற்று நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்படுவதுதான் நமக்கு நல்லது” என்று 1832 ஜூலை 10ஆம் நாள் நடைபெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் (இங்கிலாந்தில்) மெக்காலே கூறினார்.

1832 இல், தான் ஆற்றிய உரையில் மெக்காலே பின்வரும் கருத்துக்களையும் கூறினார்: “கடுமையான தண்டனைச் சட்டத்தைக் காட்டிலும் மென்மையான தண்டனைச் சட்ட அமைப்பு முறையில்தான் நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன். பிராமணர்களுக்கு மென்மையான சட்ட விதிகளும், சூத்திரர்களுக்குக் கடுமையான சட்ட விதிகளும் இருப்பதுதான் தற்போதைய ஆட்சி அமைப்பு முறைகளில் மிக மோசமான ஒன்று. சாதி வேறுபாடுகளாலும் புரையோடிப் போயுள்ள பாரபட்சமான அணுகுமுறைகளாலும் இந்தியா ஏற்கெனவே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.” என்று பிரிட்டிஷ் பேரரசு, இந்திய நிர்வாகத்தை ஏற்குமுன்பே, அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தின் போது பேசப்பட்டது என்ற உண்மை, மெக்காலேவின் எதிர்காலப் பார்வை எத்தனை சமத்துவமானது என்பதை நிரூபிக்கும். அதுமட்டுமல்ல, 1848-ஆம் ஆண்டில் 'கம்யூனிஸ்ட் அறிக்கை' வெளிவரும் முன்பே சமத்துவத்தை, அதுவும் சாதி ஒழிப்பின் சமத்துவ அரசியலைப் பற்றி மெக்காலே பேசினார் என்பதும் கவனிக்கத்தக்கது. இனவெறி நாட்டின் சிந்தனை, இதுவரையும் மேற்கத்தியர்கள் புரிந்துகொள்ள முடியாத சாதிவெறியைப் பற்றியும், அதை அழித்தொழிக்கும் வழியைப் பற்றியும் மெக்காலே வழி வெளிப்பட்டது என்பதும் கூட இந்தியாவைப் பொறுத்தவரைப் புதுமையானது தான். புத்தர், திருவள்ளுவர் ஆகியோருக்கு அடுத்துப் பேசப்பட்ட சமத்துவச் சிந்தனை மெக்காலேவுடையது என்பதையும் இந்தியச் சிந்தனையாளர்கள் முழுமையாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், இந்தியாவுக்கு வந்த பின்னர் மெக்காலே மேலும் பேசினார்.

 “நாம் அவர்களை அடக்கி, ஒடுக்கி வைத்திருப்பதற்காக இந்திய மக்களை அறியாமையிலேயே சிக்குண்டு வைத்திருக்கப் போகிறோமா? அல்லது விழிப்புணர்வுக்கான ஆவலைத் தூண்டிவிடாத அறிவைக் கொடுக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறோமா? அல்லது விழிப்புணர்வைத் தூண்டிவிட்டு அதற்கு உரிய வடிகால் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறோமா? நமது அமைப்பு முறையின் வரம்புகளைக் கடந்து இந்திய மக்களின் மனம் விசாலமடையலாம்; அதாவது நிர்வாகத்தின் மூலம் நமது மக்கள் சிறந்த அரசை அமைத்துக் கொள்வதற்கான தகுதியைப் பெறுமளவுக்கு நமது சிறந்த அரசு நமது மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும். அதற்கான கல்வி ஐரோப்பிய மொழி மூலம் வழங்கப்பட வேண்டும். அதனால், எதிர்காலத்தில் ஐரோப்பியக் கல்வி நிலையங்களுக்கான தேவை ஏற்படலாம். அப்படிப்பட்ட ஒருநாள் என்றாவது வருமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதைத் தடுப்பதிலோ, தாமதப்படுத்துவதிலோ நான் ஈடுபடவே மாட்டேன். ஆனால், அப்படி ஒருநாள் வந்தால், அதுதான் ஐரோப்பிய வரலாற்றின் பெருமைக்குரிய நாளாக இருக்கும்” என்று கூறியதன் மூலம், 1835 ஆம் ஆண்டிலேயே மெக்காலேவின் சமத்துவச் சிந்தனை, இந்தியச் சுதந்திர உணர்வுக்கு வித்திட்டதை எப்படி மறக்கவும், மறைக்கவும் முடியும்?

இந்திய மக்களுக்குக் கல்வி வழங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் கொடுக்குமாறு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் உத்தரவிட்டபோது, அதிகாரிகளிடையே மாறுபட்ட கருத்துகள் எழுந்தன. ஒரு தரப்பினர் அன்று நடைமுறையில் இருந்த அரேபிய மற்றும் சமஸ்கிருதக் கல்வியைத் தொடரும்படி வலியுறுத்தினர். மெக்காலேயின் தலைமையிலான மற்றொரு தரப்பினர், அறிவியல் களத்தில் விரைந்து முன்னேறுவதற்காக ஆங்கிலக் கல்விதான் தேவை என வலியுறுத்தினர். அரேபிய, சமஸ்கிருதக் கல்வியில் மோகம் கொண்டுள்ள தனது சக அதிகாரிகளைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக, அன்று அவர் பேசியது 15 ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்தின் நிலையைப் பரிகசிப்பதாக இருந்தது:
“15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எழுத்துகளுக்குப் புத்துயிர் கொடுப்பதற்காக மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை நினைவுபடுத்துகிறேன். அந்தக் காலகட்டத்தில், வாசிக்கத் தக்க கருத்துகள் அனைத்தும் தொன்மையான கிரேக்க மற்றும் ரோமன் மொழிகளில்தான் இருந்தன. நமது மூதாதையர்கள், துசைடிடஸ் (Thucydides), பிளாட்டோ, டெசிடஸ் ஆகியோரின் மொழிகளைப் புறக்கணித்திருந்தால், இன்றுள்ள நிலையை இங்கிலாந்து எட்டியிருக்குமா?” 

இந்திய மாணவர்களுக்குச் சுதந்திர உணர்வும், விடுதலை உணர்வும், சமத்துவம் நிறைந்த அரசியல் உணர்வும் ஊட்டக்கூடிய கல்வி முறை தேவை என்ற மெக்காலேவின் கருத்து, அவர் வெறும் கல்விப் புரட்சிக்கு மட்டுமல்ல, இந்திய விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா என்று மெக்காலேவை மகாத்மாவாக முன்மொழியும் கூற்றுகளும் உண்டு. அதற்கு அணிகலனாக, மெக்காலேவின் எளிமையை விரும்பும் பண்பைச் சுட்டிக்காட்டுகிறார் கல்வியாளர் டி ஷியாம் பாபு. அரசாங்கத்தின் மகத்தான கவுரவ முத்திரையான (லார்ட்) பட்டத்தைத் துறந்தவர் என்றும், இந்தியத் தன்மையிலிருந்து (சாதி, சமத்துவமின்மை) மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட "இந்தியக் குற்றவியல் சட்டத்தினைத் (இந்தியன் பீனல் கோடு - Indian Penal Code)" தனது கடும் உழைப்பால் வடிவமைத்து நடைமுறைக்குக் கொண்டு வந்தவர் என்றும், இந்திய ஆட்சிப் பணி முதல் பல நிர்வாகப் பணி அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்தியப் பணிச் சேவை (இந்தியன் சிவில் சர்வீஸ் - Indian Civil Services) அமைப்பை வடிவமைத்தவர் மெக்காலே என்றும் ஷியாம் பாபு கூறுகிறார். இந்தியாவில் நவீனச் சட்டங்கள் அவதாரம் எடுக்கவும், நவீன இந்தியா உருவாக்கத்திற்கும் உயிர்நாடியானவர் மெக்காலே என்பது, இந்திய வரலாற்று ஆய்வாளர் கே.எம். பணிக்கரின் கருத்து. ('விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா மெக்காலே'; சந்திர பான் பிரசாத் கட்டுரை. தமிழில் ராஜலட்சுமி சிவலிங்கம் /minnambalam.com/  29.10.2017/ / livemint.com / indianexpress.com).

உயர்மட்டக் குழுவில் இருந்த சில ஆங்கிலேயர்கள், தங்கள் அனுபவங்களைக் கொண்டு, மெக்காலேவின் கல்விமுறை பலத்த எதிர்ப்பைச் சந்திக்க நேரும் என்று எச்சரித்த போதும், இந்தியாவின் கல்வி முறை இங்கிலாந்தின் கல்வி முறையையும், ஆங்கில மொழியைச் சார்ந்தும் இருப்பதை மெக்காலே உறுதிப்படுத்தினார். மெக்காலேவின் கல்வி முறையைச் சனாதனிகளும் கடுமையாக எதிர்த்தனர். அவற்றைப் புறந்தள்ளிய மெக்காலே, அன்றைய அரசாங்கத்தின் பலத்தால், தான் தயாரித்திருந்த சீர்திருத்தக் கல்வியைச் சட்டம் ஆக்கினார். இதற்காக மெக்காலே கல்விமுறைக் குழுவினரோடும், இந்தியச் சனாதனிகளோடும் பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. 

மெக்காலே, இந்து சனாதன வாதிகளுடன் மூன்று கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையின் முதல் கட்டத்தில், இந்தியர்கள் அனைவருக்கும் (அனைத்துச் சாதியினர், மகளிர்) கல்வி கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அதைச் சனாதன வாதிகள் முழுமையாக மறுத்தனர். கல்வி என்பது பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதி மக்களுக்கு மட்டுமே என்று அவர்கள் தங்கள் வாதத்தை வைத்தனர். இந்த முதல் கட்டப் பேச்சு வார்த்தையே பலகட்டமாக நீடித்தது. பல கட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் எல்லோருக்கும் கல்வி என்ற நிலைப்பாட்டில் மெக்காலேயும், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கமும் உறுதியாக இருந்ததால் சனாதன வாதிகளுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. 

இரண்டாவது கட்டமாக எத்தகைய கல்வி என்ற பிரச்சினையில் கணிதத்தையும், அறிவியலையும் சேர்க்க வேண்டுமென்று மெக்காலே கூறியதற்குச் சனாதன வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வேத, புராண, இதிகாசங்களைக் கற்பித்தால் போதும் என்பது அவர்களுடைய வாதம். இதுவும் பல கட்டப் பேச்சு வார்த்தைகளுக்கு உள்ளானது. மெக்காலே, வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கி ஓட்ட முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். அதை வைதீக பிராமணர்கள் இறுதி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை. இறுதியாக ஆங்கிலேயர்கள் தனிப்பட்ட அரசு ஆணை ஒன்றைக் கொண்டு வந்து அறிவியல், கணிதம் சார்ந்த கல்வி முறையை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தினர். அதையும் எதிர்த்துப் பிராமணர்கள் இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்கும், அரசருக்கும் மனுக்களை அனுப்பினார்கள். ஆனாலும் அது பயனளிக்கவில்லை. 

மூன்றாவது கட்டமாகப் பயிற்று மொழி எந்த மொழியில் இருக்க வேண்டும் என்ற விவாதத்தில் மெக்காலே அரேபியம், சமஸ்கிருதத்தை விடுத்து ஆங்கில மொழியைத் தெரிவு செய்தார். ஆனால் வைதிகர்களின் தேர்வு சமஸ்கிருத மொழியும், அது உயர் வகுப்பினர்க்கு மட்டுமே கற்றுத் தர வேண்டும் என்பதாகவும் இருந்தது. அதற்கு ஒத்துக் கொள்ளாத மெக்காலே, பிரிட்டிஷ் பேரரசில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்திய நவீனக் கல்விமுறையை இந்தியர்கள் அனைவருக்கும் விரிவாக்கினார். 

இந்தியர்களின் கல்விக்காக மெக்காலே எவ்வளவு போராடியுள்ளார் என்பது அவரது அறிக்கை வழியாக வரலாற்றிலும் பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாகவே வைதிகச் சமுகம் இன்றுவரையும் மெக்காலேயின் கல்வி முறையையும், அவரையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். இதனால் இந்தியாவில் ஆங்கிலக் கல்வி படித்தவர்கள் மெக்காலேவின் குழந்தைகள் என்று கூடக் கேலியாக அழைக்கப்பட்டனர். இது மெக்காலேவிற்குக் குழந்தை இல்லாத நிலையைச் சுட்டிக் காட்டுவதாக நினைத்துச் சொல்லப் பட்டது தான். ஆனால் ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் குழந்தைகள் மட்டும் இல்லை. மகாத்மா காந்தி, பண்டிதர் நேரு, முகமதலி ஜின்னா, டாக்டர் அம்பேத்கர் போன்ற மகத்தான தலைவர்கள் கூடத் தங்களின் கல்வியை இங்கிலாந்தில் படித்தவர்கள்; இங்கிலாந்தின் சட்டம் படித்தவர்கள்; இங்கிலாந்தின் நீதிமன்றங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள். மகாத்மா ஜோதிராவ் புலேயின் ஆங்கிலக் கல்வி தான் அவரையும், அன்னை சாவித்திரி புலேவையும் கல்வித் தந்தை, தாயாக்கி மகா ஆத்மாக்கள் என்று போற்ற வைத்தது. பண்டிதர் அயோத்திதாசரும் அவரது முன்னோர்களும் ஆங்கிலக் கல்வி பெற்றிருந்ததையும், அப்படி இவர்கள் எல்லாம் பெற்ற கல்விச் சிந்தனைகளே, இந்தியச் சமுதாயத்தைச் சமத்துவத்தை நோக்கி மாற்றி அமைத்ததையும் நாடறியும். மெக்காலேவின் கல்வி முறையும், பயிற்சியும் தான் இந்தியாவுக்கான சுதந்திரத்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு அடிப்படைத் தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தன.

மெக்காலே இந்தியத் தன்மை முழுவதையுமே இழிவாகக் கருதினார் என்றும், இந்தியாவிற்கு வரும் போது இந்தியாவைப் பற்றி ஒரு சார்பு எண்ணத்துடனும், இந்தியாவுக்கு அருள் புரிய வேண்டும் என்ற ஒரு தெய்வீகத் தன்மையுடனும் நினைத்துக் கொண்டு வந்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது. இதற்குக் காரணம், "இந்துக் கடவுள்கள் கோரமான உருவத்துடனும், பயங்கரம், அருவருப்பு நிறைந்ததாகவும் உள்ளன. அறியாமையும், பழிப்புக்கு இடமாகும் கணபதி போன்ற உருவங்களும் கடவுளாக இருக்கின்றன" என்று அவர் கருத்து தெரிவித்ததுதான். முப்பதடி உயரமுள்ள மன்னன், முப்பதாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கூறும் இந்திய வரலாறும், மனிதர்கள் காலிலும், தலையிலும் முளைத்த கதையும் யாருக்குத் தேவை? இந்த உலகம் பாற்கடலால் சூழப்பட்டது என்று கூறும் நிலவியலின் மொழி அமைப்பின் புனிதம் என்னவாக இருக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார் (English Education Act, 1835 - Macaulay's Minute upon Indian education, wikipedia.org).

இந்து மதம் குறித்தும், கடவுள்கள் குறித்தும், வேதங்கள் குறித்தும் மகாத்மா ஜோதிராவ் புலே, அயோத்திதாசப் பண்டிதர், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் இவர்களெல்லாம் என்ன கூறினார்களோ, இதே கருத்தைத் தான் இவர்களுக்கு முன்பாகவே மெக்காலே கூறினார். அது மட்டுமல்லாமல் இந்தியக் கல்விமுறையில், மேற்கூறிய இந்தியத் தலைவர்கள் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்ததைத் தான், அதற்கு முன்பே மெக்காலே உறுதிப்படுத்தி, அதைச் சட்டமாகவும் ஆக்கினார். இவை எல்லாம் தாமஸ் பின்னி என்பவர் தொகுத்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் வழி பல பாகங்களாக வெளியிடப்பட்ட "மெக்காலேவின் கடிதங்கள்" நூலில் இடம் பெற்றுள்ளவை (online publication May 2010/cambridge.org).

மெக்காலே செய்தது உண்மையில் ஒரு கல்விப் புரட்சி தான். இப்படிப்பட்ட ஒரு புரட்சியைக் கொண்டு வந்தவரைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட விளைவுகள் (இந்திய விடுதலை உட்பட) குறித்தும் ஏதும் சொல்லாமல், தங்கள் மதத்தையும், கடவுளையும் அவர் இழிவுபடுத்தினார் என்ற இந்துத்துவப் பார்வையை மட்டுமே கொண்டு, மெக்காலே மேல் சேற்றை வாரி இறைத்தது தான் அப்படிச் செய்தவர்கள் ஏற்படுத்திய விளைவுகள். மெக்காலே சொல்லாததை எல்லாம் அவர் கூறியதாக அவர்களால் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இவையெல்லாம் இந்துத்துவக் கருத்தியல் அடிப்படையில் தொகுக்கப்பட்டு, அவை "விடியல் கதிர்" என்ற தலைப்பில் நூலாக வெளிவந்து, பின்வந்த நாட்களில் இந்தியப் பத்திரிகைகளை ஆக்கிரமித்தன (The Awakening Ray, vol.4 - No.5, Published by Gnostic Centre/'Niti', Indian Magazine in 2002). இணையதளங்களில் புகுந்து விளையாடும் இணையதள வாதிகளால் (நெட்டிசன்கள்) இவை இன்னும் பரவலாக்கப்பட்டன. 

இவற்றின் விளைவால் "மெக்காலே வின் கல்விப் புரட்சி என்பது இந்தியாவின் பண்பாட்டைக் கேவலப்படுத்திய செயல் என்றும், இந்தியாவின் முதுகெலும்பாக இருந்த இந்திய மரபுவழிக் கல்விமுறையை நொறுக்கியது தான் மெக்காலேவின் சாதனை என்றும்" கூறும் அளவுக்கு மெக்காலே எதிர்ப்பு வாதம் சென்றது. இதைப் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான எல். கே. அத்வானியும் படித்து விட்டு மெக்காலேவைப் பற்றிக் கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமும் இதே கருத்திலேயே, தொலைக்காட்சி கருத்து விவாதங்களிலும் பேசி இருக்கிறார். இதற்கான அடிப்படை என்பது மெக்காலே இந்து மதம், வேதம், கடவுள்கள் குறித்துக் கருத்து தெரிவித்தது தான். ஆனால் இதன் மறுபக்கம் வேறு விதமாக உள்ளதை, "மெக்காலேவின் இகழ்ச்சியான பேச்சு ஒருபோதும் நிகழவில்லை" என்ற தி வயர் இணையத்தின் ஆய்வுக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது (19 2.2017 இல் பதிப்பிக்கப்பட்டது. thewire.in).


இந்தியச் சனாதனப் பாதுகாவலர்கள் தான் முதன்முதலில் ஆங்கிலக் கல்வியைப் பயின்றனர். அதற்கு முன்பு அரேபிய மொழியையும் அவர்கள் பயின்றனர். ஆட்சியாளர்களின் தாள் பணிவதும், பிறரைத் தன் தாள் பணிய வைப்பதுமே அவர்களின் இலக்காக இருந்தது. சமஸ்கிருதமோ, அரேபியமோ, ஆங்கிலமோ அதுவரை உயர் சாதியினருக்கு மட்டுமே இருந்து வந்த கல்வியை, 1834 ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும், அதாவது அனைத்துச் சாதியினருக்கும், மகளிர்க்கும் என்று மடை திறந்த வெள்ளமெனக் கல்வியைப் பாய்ச்சியதாலேயே, மெக்காலே இந்தியச் சனாதனிகளுக்கு வேண்டாதவர் ஆகிவிட்டார். மெக்காலேவால் கொண்டுவரப்பட்ட ஆங்கிலக் கல்வியைப் பயின்று, பின்னர் அவரையே திட்டித்தீர்த்த சனாதனிகள் போல், கல்வி மறுக்கப்பட்டவர்களும் சேதியறியாது மெக்காலே மேல் கடும் விமர்சனம் வைக்கின்றனர். ஆங்கிலக் கல்விப் பாகுபாடு சாதிகளுக்குள் மறைவாக நிலவ, கிராமம் - நகரக் கல்வியில் அது வெளிப்படையாக நிலவுகிறது. ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள் அதிகார மையம், உயர் வணிகம், உலக மயமாக்கல் என்று பவனி வரும்போது, மாநில மொழி கற்றவர்கள் பின்தங்கும் நிலை இன்றும் உள்ளது. இப்படிப் பின் தங்கியவர்களும் தங்கள் நிலைக்குக் காரணமாக்குவது மெக்காலேவைத்தான். இருமொழிக் கொள்கையை அறிஞர் அண்ணா காலத்திலிருந்து (1968) நடைமுறைப்படுத்திய தமிழ்நாட்டிலேயே இந்த நிலை என்றால், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கல்வியை ஏற்று, ஆங்கிலத்தை மூன்றாம் நிலைக்குக் கொண்டு சென்று, இந்தியர்களை மெக்காலே காலத்திற்கு முன் இருந்த நிலைக்குக் கொண்டு செல்வதையா "இந்தியா ஒளிர்கிறது" என்று சொல்ல முடியும்? அறிவுப் பாதையைத் தடுத்து நிறுத்துவதே சனாதனமும், இந்துத்துவமும் என்ற சிந்தனை எப்போது ஒளிரத் தொடங்கும்?

அனைவருக்கும் கல்வி என்ற நிலையைக் கொண்டு வந்த மெக்காலே, சட்டத்தின் முன் அனைவரையும் சமம் ஆக்கினார். இந்தியாவில் வர்ணமும், சாதியும், வந்தேறி நாட்டாண்மையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் கோலோச்சி வந்த இருண்ட காலத்தை, இந்தியக் குற்றவியல் சட்டம் மூலமாக (ஐபிசி) 1835 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி மனு தர்மம் என்னும் அதர்மத்தைச் சட்டத்தின்முன் செல்லாக்காசு ஆக்கினார் மெக்காலே. பூர்வகுடி மக்கள் கல்வி கற்று, நிர்வாகத்தில் பங்கேற்பதற்காக "இந்திய சிவில் சர்வீஸ்" என்னும் அமைப்பை உருவாக்கினார் மெக்காலே. இந்தியாவில் சாதியினால் ஒடுக்கப்பட்டுப், பழிவாங்கப்பட்ட மக்கள், கல்வி கற்று, உயர் நிலைப் பதவிகளை அடையவும், அரசாங்கத்தில் இடம்பெற்றுத் தங்களைத் தாங்களே நிர்வகிக்கவும், நிர்ணயிக்கவும் வேண்டும் என்ற மெக்காலேவின் விருப்பத்தைக் கல்வி மறுக்கப்பட்ட பல்லாயிரம் பேர் நிறைவேற்றினர். 

மெக்காலேவின் எதிர்பார்ப்புக்குச் சரியான இந்தியக் கல்வியாளர் ஒருவரைக் கூற வேண்டுமானால், உச்சமாக அண்ணல் அம்பேத்கரைத் தான் கூறமுடியும். அம்பேத்கரின் ஆங்கிலக் கல்வியும், வெளிநாட்டுக் கல்வியும் அவரைச் சமத்துவத்தின் உயரத்தில் ஏற்றி வைத்தன. புத்தரிடம் இருந்து பெற்ற சமத்துவப் பார்வையை அனைவருக்கும் விரிக்க அம்பேத்கருக்குப் பெருந்துணையாக இருந்தது அவர் கற்ற கல்வியே. அதுவே அவரை ஒரு நாட்டுக்கான அரசியலமைப்பை உருவாக்க வைத்தது. எங்கிருந்தோ வந்து சமத்துவத்தைச் சட்டப்பூர்வமாக்கிய மெக்காலேவின் எண்ணச் சிதறல்கள் அதில் குவிந்து கிடந்தன. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பக்கங்களில் மெக்காலே, அம்பேத்கர் முகங்களைச் சமத்துவ வாதிகள் காணமுடியும். 

மேற்கத்தியக் கல்வி முறையும், அதன் கல்வி நிறுவன அமைப்புகளும் இந்தியாவை உலகத்தோடு கைகோர்க்க வைக்கும் என்ற மெக்காலேவின் சிந்தனை, அம்பேத்கரிடம் இருந்ததை அரசியலமைப்பின் பக்கங்களைப் புரட்டினால் அறியமுடியும். இருவருக்கும் இடையில் கருத்தியல் ரீதியான ஒற்றுமையுடன், வெளிப்படையான ஒற்றுமையையும், இருவரின் மேற்கத்திய பாவனைகளில் காணமுடியும். எப்போதும் நூல்களைக் கையோடு வைத்திருக்கும் பிம்பங்களாக அடையாளப் படுத்தப் படும் புகழ்பெற்ற இருவரில், மெக்காலேவையும், அண்ணல் அம்பேத்கரையும் தான் உலகம் சிறப்புடன் அடையாளம் காட்டும். வர்ணம், சாதியினால் சனாதன பூமியாக்கப்பட்ட இந்தியாவை, சமத்துவப் பூமியாகக் கட்டமைத்த அந்த இருவருமே இந்தியாவிற்கு வழிகாட்டிகள். இருவருமே இந்தியாவின் மகாத்மாக்கள்.

-----------------