— முனைவர் க.சுபாஷிணி
திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் ஏறக்குறை 26கி.மீ தூரத்தில் வீரவநல்லூர் என்ற ஊர் வருகின்றது. அவ்வூருக்கருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஒரு ஊர் திருப்புடைமருதூர்.
கடனா நதி என்ற ஆறு தாமிரபரணியில் சேரும் இடத்தில் இந்த திருப்புடைமருதூர் என்ற சிற்றூர் உள்ளது. இங்குள்ள நாறும்பூசுவாமி கோயில் கோபுரத்தின் உள்ளே அமைந்துள்ள சித்திரக்கூடம் தமிழக ஓவியக் கலைக்கும் மரச்சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை கொண்டதாக அறியப்படும் இக்கோயிலில் 14 கல்வெட்டுக்கள் உள்ளன.
ஏறக்குறைய கி.பி.10ம் நூற்றாண்டு தொடங்கி 19ம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்கள் இவை. கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகளை விவரிக்கும் கல்வெட்டுக்களாகவே பெரும்பாலும் இவை அமைகின்றன. அவற்றுள் முதலாம் ராஜராஜனின் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் அடங்கும்.
கி.பி.9ம் நூற்றாண்டு தொடங்கி அறியப்படும் இக்கோயில் சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள் எனப் பல மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட கோயிலாக விளங்குகிறது. தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டுத் தொடர்ந்து இக்கோயில் சிறப்புடன் திகழ்கின்றது.
இக்கோயிலின் வாயிற்புரத்தில் 5 நிலைகளைக் கொண்ட கோபுரம் உள்ளது. இந்த ஐந்து நிலைகளிலும் ஏறிச்செல்லப் படிகள் உள்ளன. ஒவ்வொரு தளங்களின் சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சித்திரவேலைப்பாடுகளாகும்.
இச்சித்திரக் கூடத்தில் இடம்பெறும் சித்திரங்களுள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைச் சிற்பங்கள் ஓவியங்களாக உள்ளன; தென் தமிழக வரலாற்றில் இடம்பெறும் தாமிரபரணி போர் பற்றிய விரிவான காட்சிகள் ஒரு தளத்தில் நிறைந்து காணப்படுகின்றன.
இவை மட்டுமன்றி சிவபுராண கதைகள், விஷ்ணு புராணத்தில் வரும் சில கதைகள், திருவிளையாடற்புராணத்தில் வருகின்ற கதைகள், கந்த புராணம், பெரிய புராணம் ஆகியவற்றோடு தலபுராணக் கதைகளும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன.
இக்கோயில் கோபுரத்தின் இரண்டாவது தளம் தாமிரபரணிப்போரை காட்சிப் படுத்துவதாக அமைந்துள்ளது. நுட்பமான போர்க்காட்சிகள், ஈட்டி, வாள், வேல்கம்பு போன்ற போர் கருவிகளுடன் வீரர்கள் போரிடும் காட்சி சித்திரங்களாக அமைந்திருக்கின்றன. தென் தமிழகத்தின் துறைமுகப் பகுதிகளில் வந்திறங்கிய போர்த்துக்கீசிய வணிகர்கள் பற்றியும், அரேபிய வணிகர்கள் பற்றியும் சில காட்சிகள் அமைந்திருக்கின்றன. சில போர்க்காட்சிகளில் தமிழர்கள் மட்டுமன்றி போர்த்துக்கீசியர்களும் ஓவியத்தில் காட்டப்படுவது வியப்பளிக்கின்றது.
கி.மு 14ம், 15ம் நூற்றாண்டுகளில் தென் தமிழகத்தின் கடற்கரை பகுதிகளின் வணிக ஆளுமையை அரேபிய வணிகர்கள் தம் வசம் வைத்திருந்தனர். அரேபிய வணிகர்கள் கப்பலில் பயணித்து குதிரைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் குதிரை வணிகத்தைக் காட்டும் காட்சி ஒன்றும் இதில் இடம்பெறுகின்றது. கப்பலில் குதிரைகள் அரேபியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு புன்னைக்காயல் துறைமுகத்தில் இறக்கப்படுவதையும் தமிழ் வணிகர்கள் துறைமுகத்தில் கடல் வணிகத்திற்காகக் கப்பலில் பயணம் செல்வதையும் ஒரு ஓவியம் மிக அழகாகக் காட்சிப்படுத்துகிறது.
இக்கோபுரத்தின் ஐந்தாவது தளம் முழுமைக்கும் கடவுள் உருவங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. மூன்றாம் நான்காம் தளங்களில் புராணக் காட்சிகள் கண்களைக் கவரும் வண்ணம் சுவர்களை முழுமையாக அலங்கரிக்கின்றன. அவற்றுள் கருவூர் தேவர் இக்கோயிலுக்கு வந்து வழிபட வரும் ஒரு காட்சி, சைவர்கள் சமணர்களை வாதில் வெல்லும் காட்சி, சமணர் கழுவேற்றம் பற்றிய காட்சி , சமய வாதங்களை வெளிப்படுத்தும் அனல்வாதம் -புனல் வாதக் காட்சி போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இவ்வோவியங்கள் தாவரங்களிலிருந்தும் மூலிகைச் செடிகளிலிருந்தும் எடுக்கப்பட்ட வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது இவற்றின் தனிச் சிறப்பு.
ஒவ்வொரு தளங்களிலும் வெளிச்சம் புக வாய்ப்பில்லாத நிலையிலும் மிகத் துல்லியமாக நுணுக்கமாக ஓவியங்களையும் சிற்பங்களையும் உருவாக்கிய இக்கலைஞர்களின் திறனை என்னவென்று புகழ்வது?
உலகின் பண்டைய நாகரிகங்களில், குகைச்சித்திரங்கள் தொடங்கி, கோயில் சித்திரங்கள் வரை தமது பண்பாட்டைப் பதிந்து வைக்கக் கருவியாக இக்கலையைப் பயன்படுத்தினர் பண்டைய மக்கள். கிரேக்கர்கள், எகிப்தியர்கள், அரேபியர்கள், ரோமானியர்களை இவ்வகையில் சிறப்பித்துச் சொல்லலாம். அந்த வரிசையில் தமிழர் பண்பாட்டின் ஆவணப்பதிப்பாக நமக்கு இவ்வகைச் சித்திரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒரு சமூகத்தின் சமகால நிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மக்களின் தோற்றமும் அவர்கள் அணிந்திருக்கும் ஆடை அணிகலன்களும் அமைகின்றன, இதனால் ஓவியங்களில் இடம்பெறும் மனிதர்களின் தோற்றம், அரசு அதிகாரிகள், படை அதிகாரிகள், வணிகர்கள், குடிமக்கள், சமயவாதிகள் ஆகியோரின் ஆடைகள் கவனிப்பிற்கு உரியனவாக அமைகின்றன.
இக்கோயிலின் சுவர்ச்சித்திரங்களை மிக ஆழமாக ஆராய்ந்து புகைப்படங்களுடன் ஒரு நூலாக வெளியிட்டவர் பேராசிரியர் சா.பாலுசாமி. இக்கோயிலின் 2ம் தளத்தில் அமைந்திருக்கும் தாமிரபரணிப் போரைப் பற்றி குறிப்பிடுகையில் “இந்தத் தாமிரபரணி போர், 1532-ம் ஆண்டு ஆரல்வாய்மொழிக் கணவாய்க்கு அருகே திருவிதாங்கூர் அரசர் பூதல வீர உதய மார்த்தாண்ட வர்மாவுக்கும், விஜயநகர அரசர் அச்சுத தேவராயருக்கும் இடையே நடைபெற்ற போர் என்றும், அந்தக் கால அரசாங்க நடவடிக்கைகளை இந்தச் சுவரோவியங்கள் நுட்பமாக வெளிப்படுத்துகின்றன என்பதோடு கி.பி 16-ம் நூற்றாண்டின் சமய, சமூக, அரசியல் வரலாற்றுக்குத் திருப்புடைமருதூர் ஓவியங்கள் இன்றளவும் முக்கியமான சாட்சிகளாக விளங்குகின்றன” என்றும் குறிப்பிடுகின்றார். இக்கோயிலின் ஓவியங்கள் அனைத்தும் விஜயநகர ஓவிய பாணியையும், நாயக்கர்களின் ஓவிய பாணியையும் இணைத்து ‘வேணாட்டுப் பாணி’ என்று அழைக்கப்படும் புதிய பாணியில் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக கோயில்களில் உள்ள சுவர்ச்சித்திரங்கள் பெருமளவில் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் சிலரால் சிதைக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.
இத்தனைச் சிறப்பு வாய்ந்த இச்சுவர் சித்திரங்களின் மீது தங்கள் பெயரையும் தொலைபேசி எண்களையும் எழுதி வைத்து இவற்றைச் சிதைப்பவர்கள் அயல்நாட்டுக்காரர்கள் அல்ல, மாறாக நமது தமிழகத்திலேயே வாழும் மக்கள் தான். எதற்காக இவர்கள் இப்படிச் செய்கின்றனர்?
நம் சூழலில் இன்று வரை புராதனச் சின்னங்களையும் கோயில் கலைகளையும் மதித்துப் போற்றி பாதுகாக்கும் சிந்தனை பொது மக்களிடம் மிகக் குறைவாகவே உள்ளது என்பது தான் உண்மை. புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மட்டும் உள்ள கடமை அல்ல. மாறாக நம் அனைவருக்குமே இருக்கும் கடமை என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் உணர வேண்டும்.
ஒரு கலைச்சிற்பத்தைக் கீறி வைக்கும் போதும், ஒரு ஓவியத்தின் மீது எழுதி அதனைச் சிதைக்கும் போதும், நமது மூதாதையர் விட்டுச் சென்ற புராதன கலை படைப்புக்களை அழிக்கின்றோம் என்ற சிந்தனை எழ வேண்டும். ஒரு சிற்பத்தின் மீது எழுதும் போது நமது தமிழினத்தின் வரலாற்றைச் சிதைக்கின்றோம் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். இப்படி சிந்தனை மாற்றம் நிகழும் போது நமது கவின் கலைகளும் கோயிற்கலைகளும் நிச்சயம் பாதுகாக்கப்படும்.
கோயில் என்பது பக்தர்கள் வந்து வரம் கேட்டு வேண்டிக் கொண்டு, வந்து வழிபட்டு விட்டு குப்பைகளைப் போட்டு விட்டுச் செல்லும் இடமல்ல. கோயில் என்பது கலைகளின் இருப்பிடம். கோயில்கள் பண்பாட்டுத் தளத்தின் மிக முக்கிய சான்றுகள். கோயிலையும் அவை கொண்டிருக்கும் பண்பாட்டுக் கூறுகளையும் சேதப்படுத்தாமல் அவற்றைப் பாதுகாப்பதும் நமது அடுத்த தலைமுறைக்கு அதன் சிறப்பு குறையாமல் விட்டுச் செல்வதும் தமிழர் நம் ஒவ்வொருவரது கடமையுமாகும்!
தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com)
No comments:
Post a Comment