Saturday, February 2, 2019

இராயண்டபுரம் சிற்றூரில் இராசராசன் கல்வெட்டுகள்


 ——    துரை.சுந்தரம்


முன்னுரை:
            ஆராய்ச்சியாளர்கள்  வியப்படையும் வகையில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டுப் பகுதியில், இராயண்டபுரம் என்னும் முகம் தெரியாக் குறுஞ்சிற்றூரில் சோழப்பேரரசன் முதலாம் இராசராசனின் கல்வெட்டுகள் பல கண்டறியப்பட்டுள்ள செய்தி ”நக்கீரன்”  29-01-2019 இதழில் வெளியாகியுள்ளது. இச்செய்தியை முக நூல் பகுதியில் நேற்றுப் பார்க்க நேர்ந்தது. செய்தியும் உடன் கொடுக்கப்பட்டிருந்த ஒளிப்படங்களும் மிகவும் ஈர்த்தன. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே;

குக்கிராமத்தில் இராஜராஜன் காலக் கல்வெட்டுகள்
நக்கீரன் 29-01-2019 இதழில் வெளியான செய்தி

            திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் மாவட்டத்தில் வாரந்தோறும் வரலாற்று ஆவணங்களைத் தேடி அதனை ஆவணப்படுத்தி வருகின்றனர். அதன்படி தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் கரையில் உள்ள பழைய சிவன் கோயில் அருகில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது இராயண்டபுரம் - தொண்டமானூர் செல்லும் வழியில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவன்கோயில் அருகில் உள்ள பாறையில் சோழர்காலத்தைச் சேர்ந்த 6 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இக்கல்வெட்டுகளில் 3 சிதைந்த நிலையிலும் 3 நல்ல நிலையிலும் உள்ளன. இக்கல்வெட்டுகளைச் படித்த கல்வெட்டியல் அறிஞர் சு. இராஜகோபால் இக்கல்வெட்டுகள் சோழ அரசன் முதலாம் இராஜராஜனின் காலத்தில்  வெட்டப்பட்டுள்ளது என்றும் இக்கல்வெட்டு இங்குள்ள சிவன் கோயிலுக்கு விளக்கெரிக்க ஆடுகளை தானம் செய்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

            முதல் கல்வெட்டில் வாணகோப்பாடி பெண்ணைத் தென்கரையில் இராஜகண்டபுரத்தில்  உள்ள கானநங்கை என்ற கொற்றவை தெய்வத்திற்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 96 ஆடுகளை மும்முடிச் சோழ வாணகோவராயன் என்ற தொங்கல மறவன் என்ற இப்பகுதியில் இருந்த சிற்றரசன் இக்கல்வெட்டை வெட்டியுள்ளான். 

            இரண்டாவது கல்வெட்டு இராஜராஜ சோழனின் 12 வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டதாகும். இதில்  இராஜகண்டபுரத்தைச் சேர்ந்த கோசக்கர எழுநூற்றுவர் என்ற வணிகக்குழு இவ்வூரில் உள்ள திருக்குராங்கோயில் என்ற சிவபெருமானுக்கு இரண்டு நந்தாவிளக்கு எரிக்க 192 ஆடுகள் தானமாக விடப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

            மூன்றாவது  கல்வெட்டில் இவ்வூர் மன்றாடிகளில் ஒருவரான அமத்தனின் மகன் காமன் என்பவர் இவ்வூரில் உள்ள  திருக்குரால் ஆள்வார் கோயிலுக்கு விளக்கெரிக்க 30 ஆடுகள் கொடுத்த செய்தி வெட்டப்பட்டுள்ளது. மற்ற கல்வெட்டுகளில்  சிதைந்து இருந்ததால் அதன் முழு விவரம் அறியஇயலவில்லை.

            இக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளிலிருந்து தற்போது ராயண்டபுரம் என்று அழைக்கப்படும் இவ்வூர் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இராஜகண்டபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வூரில் உள்ள இக்கோயில் இறைவன் பெயர் இது வரை வெளியில் தெரியாமல் இருந்தது- தற்போது இக்கோயில் பெயர் திருக்குராங்கோயில் என்றும் இவ்வூரில் கானநங்கை என்ற கொற்றவை சிற்பம் இருந்தது பற்றியும் குறிப்புகள் உள்ளன. ஆனால் கொற்றவை சிற்பம் தற்போது கிடைக்கவில்லை. சோடச லிங்கம் என்ற பதினாறு பட்டை ஆவுடையாரும் சண்டிகேஸ்வரர் சிலையும்  தற்போது கோயிலில் உள்ளது. பழைய கோயிலும் தற்போது இல்லை புதியதாக செய்த இரும்பு ஷீட் கொட்டகையில் இக்கோயில் சிலைகள் வைத்துள்ளார்கள்.

            இக்கோயில் அக்காலத்தில் மிகவும் சிறப்படைந்த கோயிலாக இருந்திருக்க வேண்டும் ஏனெனில் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட தானத்தில் மன்றாடி என்று வழங்கப்படுகின்ற இடையரும், கோச்சகர எழுநூற்றுவர் என்ற எண்ணை வணிகக்குழுவும், வாணகோவராயன் என்ற சிற்றரசனும் இக்கோயிலுக்கு தானம் அளித்துள்ளார்கள்.  மற்ற கல்வெட்டுகள் சிதைந்து போனால் பல வரலாற்றுத்தகவல்கள் தெரியாமல்போயின. இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் 3 கல்செக்குகள் காணப்படுகின்றன. இவை இக்கோயில் இறைவனுக்கு விளக்கெரிக்க எண்ணை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும்.

            இப்பகுதியில் பாயும் தென்பெண்ணையாற்றுக் கரையில் மிகப்பழங்காலந்தொட்டே மனிதநாகரிகம் வளர்ந்த சான்றுகள் உடையது. தொண்டைமானூரில் உள்ள பெருங்கற்கால நினைவுச்சின்னமும் பாறைக்கீறல்களும், இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்களும் கல்செக்குகளும் இப்பகுதியின் தொன்மையை பறைசாற்றுகின்றன. தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுச்சிறப்பு மிக்க தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

            இந்த ஆய்வுக்கு வரலாற்று ஆய்வு மைய தலைவர் த.ம.பிரகாஷ், செயலாளர் ச. பாலமுருகன், பொருளாளர் ஸ்ரீதர், இணைச்செயலர் மதன்மோகன் போன்றோர் ஊர் பொதுமக்கள் ஆதரவுடன் நடத்தி கண்டறிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் ஆதாரங்கள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

கல்வெட்டுப்படங்கள்- ஓர் ஆய்வு:

முதல் படம்

முதல் படம்:   செய்திக் கட்டுரையில்,  இக்கல்வெட்டுப் படம் மூன்றாவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கல்வெட்டின் பாடம்:
1     ஸ்வஸ்திஸ்ரீ கோவி(ரா)[ச]
2     (சே)க . பந்ம(ற்)கியாண்டு ..(றா) வது
3     கோப்பாடிப் பெண்ணைத் தென்கரை [ரா]
4     சகண்டபுரத்து இ[ரு]ந்து  வாழு மன்றா(டி)
5     அமத்தன் மகன் காமன் திரு
6                                               ர்க்கு விள
7                                               இவை

குறிப்பு:   சிவப்பு எழுத்துகள் கிரந்தம்.

விளக்கம்:   கல்வெட்டின் ஒளிப்படத்தில் முழுப் பாடமும் காணப்படவில்லை. எனவே, இறைவர் பெயர் திருக்குரால் ஆள்வார் பெயரையும், கொடை ஆடுகள் முப்பது என்னும் செய்தியையும் காண இயலவில்லை. ’இராசகேசரி’    என்னும் தொடர் இக்கல்வெட்டில் பிழையாக எழுதப்பட்டுள்ளதுபோல் தோன்றுகிறது.   காரணம், இரண்டாம் வரியில், முதல் இரண்டு எழுத்துகள் “சேக”  என்பதாக உள்ளன.  அரசனின் ஆட்சியாண்டைக் குறிப்பிடும் தொடரில், வழக்கமாக  “யாண்டு”  என்னும் சொல்லையடுத்து ஆட்சியாண்டு எண்களால் குறிக்கப்பெறும். இங்கும் அதே முறை கையாளப்பட்டுள்ளதா என உறுதியாகக் கூற இயலவில்லை. காரணம்,  “றாவது”   என்று படிக்கும் படியாகக் கல்வெட்டுப் பாடம் அமைந்திருக்கிறது. நான்காவது வரியில், ”மன்றாடி”  என்னும் சொல்லில், “றா”  எழுத்து வழக்கமாகக்  கல்வெட்டுகளில் எழுதப்படுவதுபோல் அமையவில்லை.  தற்காலம் நாம் எழுதுவது போல் “ற”  குறில் எழுத்தை அடுத்துக் கால் சேர்த்ததுபோல் எழுதப்பட்டுள்ளமை வியப்பளிக்கிறது.  இது மெய்யானதுதானா அல்லது தோற்ற மயக்கமா எனத் தெரியவில்லை.  ஒப்பீட்டுக்காக இரண்டு எழுத்துகளையும் தனிப்படங்களில் கீழே காட்டியுள்ளேன்.

றா  வது

மன்றா(டி)

            ஊரின் பெயரான இராஜகண்டபுரம்  மற்ற கல்வெட்டுகளில், “இராஜகண்டபுரம்”  என்றே எழுதப்பட்டிருக்க, இக்கல்வெட்டில் வடமொழி எழுத்தான “ஜ” , சகரமாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொடையாளியான அமத்தன் மகன் காமன் இராசகண்டபுரத்தில் வாழ்கின்றவன் என்பதைக் குறிப்பிடும் “இருந்து வாழும் மன்றாடி”  என்னும் தொடர்,  “இந்து வாழு  மன்றாடி”  என்று எழுதப்பட்டுள்ளது.  “ரு’  எழுத்து விடுபட்டமையைப் பிழை எனக்கொள்ளலாம்.  ஆனால், “வாழும்+மன்றாடி”  என்பது, இலக்கண மரபில் மகர ஈறு கெட்டது எனக் கொள்ளலாம்.

இரண்டாம் படம்

இரண்டாம் படம்:  செய்திக் கட்டுரையில்,  இக்கல்வெட்டுப் படம் முதலாவதாகக் குறிப்பிடப்படுகிறது. 

கல்வெட்டின் பாடம்:
1     ஸ்வஸ்திஸ்ரீ  கோவிராஜராஜ
2     கேசரி பன்மற்கி யாண்டு 7 ஆவ
3     து வாணகோப்பாடிப் பெண்
4     ணைத் தென்கரை இராஜகண்ட பு
5     ரத்தில் காந நங்கைய்க்கு ஸ்ரீமன்மு
6     ம்முடிச் சோழ வாணகோவரை
7     யனாகிய தொங்கல மறவன் வை
8    ய்த்த திருநொந்தா விளக்கு ஒன்று
9    ஒன்றிநால் ஆடு ... இது  பந்மா
10                          ஹேச்வர ரக்ஷை

குறிப்பு:   சிவப்பு எழுத்துகள் கிரந்தம்.

விளக்கம்:    செய்திக்கட்டுரையில், அரசனின் ஆட்சியாண்டு குறிப்பிடப்பெறவில்லை. ஆனால், இரண்டாம் வரியில்,  அரசனின் ஆட்சியாண்டு குறிப்பிடப்பெறும் பகுதியில்,   ஏழாம் ஆண்டைக் குறிக்கும் ...எண் குறியீடு  “எ”   என்பது தெளிவாகப் புலப்படுகிறது.  எனவே இக்கல்வெட்டின் காலம் கி.பி. 992 எனலாம்.  கொற்றவையைக் குறிக்கும் ...  “காந நங்கை”  என்னும் சொல்  கல்வெட்டுகளில் மிகுந்த புழக்கத்தில் இல்லை எனத்தெரிகிறது. “காடு கிழாள்”   என்னும் சொல்லுக்கு ஒப்பான ஒரு சொல்லாக இதைக் கருதலாம்.  ”நங்கை”  என்னும் சொல் இக்கல்வெட்டில் சொல்லின் இறுதியில் கூடுதலாக “ய்”  என்னும் மெய் சேர்ந்து “நங்கைய்”  என எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்து முறையைத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் காணலாம். அவற்றில் (பிராமிக் கல்வெட்டுகளில்), “ப(ள்)ளிய்” என்றும், “கணிய்” என்றும்  ”அந்தைய்”  என்றும்  பல இடங்களில் வருவதைக் காணலாம்.  5-ஆவது வரியின் இறுதியிலும், 6-ஆவது வரியின் தொடக்கத்திலும் சேர்ந்து “மும்முடிச்சோழன்”  என்னும் சிறப்புப் பெயர் காணப்படுகிறது.  இப்பெயருக்கு முன்னொட்டாக  “ஸ்ரீமன்”  என்னும் வடசொல் கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது வியப்புக்குரியது.  ஏனெனில், 10-நூற்றாண்டில் இராசராசன் காலத்துக் கல்வெட்டுகளில் “ஸ்ரீமன்”   என்னும் சொல் பயின்று வரக்காணோம்.  இச்சொல்,  விஜயநகரர், நாயக்கர்  காலத்துப் பயன்பாடு.  கொடையாகக் கொடுக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை 96 என்று செய்திக்கட்டுரை கூறுகிறது. எண்ணிக்கையைச் சுட்டும்  தமிழ் எண்களுக்கான குறியீடு  வழக்கமான குறியீடாகத் தோன்றவில்லை.

மூன்றாம் படம்

மூன்றாம் படம்:  செய்திக் கட்டுரையில்,  இக்கல்வெட்டுப் படம் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கல்வெட்டின்  பாடம்:
1     ஸ்வஸ்திஸ்ரீ  காந்தளூர்ச் சாலை கலம
2     றுத்த கோவிராஜராஜ கேசரி பந்மற்கு  யா
3     ண்டு 12 ஆவது வாணகோப்பாடிப்
4     பெண்ணைய்த் தென்கரை இரா
5     ண்டபுரமுடைய கோசக்கர எழுநூற்று
6     வரோம் இவ்வூர்த் திருக்குராங்கோ
7     யில்  மாஹதேவர்க்கு வைய்த்த திரு 
8    நொன்தா  விளக்கு இரண்டு இரண்டிநால்
9    ஆடு ...  இது பந்மாஹேச்வர ர
10                                                  க்ஷை

குறிப்பு:   சிவப்பு எழுத்துகள் கிரந்தம்.

விளக்கம்:   மற்ற கல்வெட்டுகளினின்றும் இக்கல்வெட்டு மாறுபட்டுள்ளது.  இராசராசனின் மெய்க்கீர்த்தியில் காணப்பெறும் “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய”  நிகழ்வு இக்கல்வெட்டில் முதல் வரியில் அமைந்துள்ளது. இக்குறிப்பு செய்திக்கட்டுரையில் குறிக்கப்படவில்லை.  ஆட்சியாண்டு 12 என்பது ஓரளவு புலப்படுகிறது. இக்கல்வெட்டிலும் சொல்லின் இறுதியில் “ய்”  என்னும் மெய்யெழுத்து கூடுதலாக எழுதப்பட்டுள்ளது.  ”பெண்ணைய்” (வரி 4, “வைய்த்த”  (வரி 7)   ஆகியன சான்று.  இக்கல்வெட்டில் கோயிலின் பெயர் திருக்குராங்கோயில் என உள்ளது. மேலே மற்றொரு கல்வெட்டில், செய்திக் கட்டுரைப்படி இறைவரின் பெயர் “திருக்குரால் ஆள்வார்”  என்று குறிக்கப்பட்டுள்ளது.  இந்த மாறுபாடு குறிப்பிடத்தக்கது. இறைவனைக் குறிக்கும் “மஹாதேவர்”  என்னும் வடசொல் இங்குப் பிழையாக “மாஹதேவர்” என எழுதப்பட்டுள்ளது.

புவிவரைபட உதவி: மயிலை நூ.த.லோக சுந்தரம்





தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.

             


No comments:

Post a Comment