— முனைவர் க.சுபாஷிணி
மன்னார் தீவின் இன்றைய நிலவரைப்படத்தை ஏறக்குறைய ஒத்த வகையில் இந்த வரைபடம் அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றே. இன்றைக்கு நமக்குக் கிடைக்கும் நில அளவைக் கருவிகள் இல்லாத போதிலும் அன்றைய வரைபட தயாரிப்பு கருதுகோள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த வரைபடம் வரையப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.
தீவுக்குள் அன்றைய காலகட்டத்தில் இருந்த சில கட்டுமானங்களையும் இந்த வரைபடம் காட்டுகிறது. அதில் டச்சு கோட்டையும் சில தேவாலயங்களும் இருப்பதைக் காணலாம். டச்சுக் காரர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே போர்த்துக்கீசியர் இலங்கைத் தீவின் பல பகுதிகளில் வணிகத்திற்காக வந்து பின்னர் தங்கள் ஆளுமையை விரிவாக்கியிருந்தனர் என்பதையும் காணும் போது இந்தத் தேவாலயங்கள் அனேகமாகப் போர்த்துக்கீசியர் காலத்திலும் சில டச்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்திலும் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கலாம்.
மன்னார் தீவு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்திருக்கின்றது. மன்னாருக்கும் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடையில் உள்ள தூரம் ஏறக்குறைய 57கி.மீ. இந்தக் கடல் பாதையில் மேலும் சில சிறிய தீவுகளும் உள்ளன.
மன்னார் தீவில் உள்ள கோட்டை போர்த்துக்கீசியர்களால் கி.பி.1560ல் கட்டப்பட்டது. இக்கோட்டை பின்னர் டச்சுக்காரர்கள் ஆட்சியில் அவர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த அரச கோட்டையாகச் செயல்பட்டது. 1696ம் ஆண்டில் டச்சுக்காரர்கள் இக்கோட்டையைச் சீரமைத்துக்கட்டினர். டச்சுக்காரர்கள் சரணடைந்த பின்னர் பிரித்தானியர் காலத்திலும் இக்கோட்டை முக்கிய அரச அலுவல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இன்று இக்கோட்டை இலங்கை ரயில் போக்குவரத்துத்துறையின் கீழ் அலுவலகமாக அமைந்துள்ளது.
பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் தாம் எழுதிவைத்த குறிப்புக்களைத் தொகுத்து உருவாக்கிய நூல் Description of the East India, Malabar and Coromandel coasts என்பதாகும். இது நெதர்லாந்தின் இன்றைய தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் டச்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு 1671ம் ஆண்டு அச்சு நூலாக வெளியிடப்பட்டது. ஏறக்குறைய 450 பக்கங்கள் கொண்ட நூல் இது. இந்த நூலில் மொழிபெயர்ப்புடன் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் ஓவியமாகத் தீட்டி வைத்த வரைபடங்களும் அன்றாட வாழ்க்கை காட்சிகளும், மன்னார் தீவின் சில தேவாலயங்களின் ஓவியங்களும் இடம்பெறுகின்றன. இவை அக்கால காட்சியை இன்று நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டும் முதன்மைத் தரவுகளாகவும் அமைகின்றன.
இந்த வரைபடம் நோர்வே திரு.வேலழகனின் சேகரிப்பில் உள்ள ஆவணங்களில் ஒன்று. இதனைத் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கப்பதிவிற்காக வழங்கியமைக்கு எமது நன்றி.
தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com)
No comments:
Post a Comment