—— மா. மாரிராஜன்
மூன்று பள்ளிப்படை கோவில்களையும் ஒரே நாளில் சென்று பார்க்க வேண்டும், வந்து வழிகாட்டுங்கள் என்ற நண்பர்களின் அன்புக் கட்டளையை ஏற்றாயிற்று.
1. பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை
2. இராஜராஜன் பள்ளிப்படை கைலாசநாதர் கோவில்
3. திருப்புறம்பியம்
இம்மூன்றும் எங்கள் இலக்கு..
ஒரு நெருடல், இக்கோவில்களில் இரண்டு எப்போதும் பூட்டியே இருக்குமே, புகைப்படம் எடுக்க விடமாட்டார்களே. பழைய நினைவுகள், கசப்பான பல பழைய அனுபவங்கள் நினைவுக்கு வந்தாலும் திட்டமிட்டபடி பயணத்தைத் துவங்கினோம்.
.. இம்முறை எங்களுக்குக் கிடைத்தது பல இனிய அனுபவங்கள்..
1. பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை:
தாராசுரத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாகப் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையை முதலில் அடைந்தோம். வழக்கம்போல் கோவில் பூட்டியிருந்தது. வாசலில் அர்ச்சகரின் தொலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது. தொலைபேசியில் அழைத்தோம், 10 நிமிடத்தில் வருகிறேன் என்ற அர்ச்சகர் சரியாக 5 நிமிடத்தில் வந்தார். முதல் வியப்பு !!
அமைதியான சூழல். பொறுமையாகக் கோவிலை வலம் வந்து, கட்டுமானம், சிற்பங்கள், கல்வெட்டு என பார்த்துப் பார்த்து படம் எடுத்தோம். எந்தத் தடையும் இல்லை. அர்ச்சகரும் எங்களுடன் வலம் வந்து அவருக்குத் தெரிந்த சில விடயங்களை எங்களுக்குக் கூறினார். எங்களிடம் சில ஐயங்களை எழுப்பி விடைகாண முயன்றார்.
பள்ளிப்படை கோவிலில் அம்மனுக்கு தனிச் சன்னிதி இருப்பது சாத்தியமா என்னும் அவரது கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை.
கோவிலினுள் உள் நுழைகிறோம். அற்புதமான பழுவூர் நந்தியையும், வியப்பான துவார பாலகர்களையும் பார்த்து, படம் எடுத்தோம். எந்தத் தடையும் இல்லை. கருவறை வாயிலில் அமர்ந்து இறைவனைப் பிரார்த்திக்கும் பொழுது அர்ச்சகரின் அதி அற்புதமான குரலில் சுத்தத் தமிழில் பதிகங்கள் கேட்டது அடுத்த வியப்பு !!
தீபாதரணையை கண்களில் ஒற்றி தட்சணையாக தட்டில் பணம் போடமுயன்றோம். பணத்தைப் போட அவர் அனுமதிக்கவில்லை. அடுத்த .. அடுத்த.. வியப்பு !!!!
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் தட்சணையாக பணம் வாங்க மறுத்தார். பிறகு, கோவிலுக்கு எண்ணை வாங்கப் பயன்படுத்துங்கள் என்று கூறி பணத்தைக் கொடுத்தோம். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தோம். விடைபெற்றுப் புறப்படும்போது, மருத்துவர் கலைக்கோவன் ஐயா எழுதிய மலைக்க வைக்கும் மாடக்கோவில்கள் என்னும் புத்தகத்தை பரிசாகக் கொடுத்தார். அடுத்த வியப்பு !!!!
இப்படியும் ஒருவர், போற்றுதலுக்குரியவர்.
2. இராஜராஜன் பள்ளிப்படை கைலாசநாதர் கோவில்:
உடையாளூர் சென்று இராஜராஜனின் பள்ளிப்படை என்று சொல்லப்படும் ஒட்டத்தோப்பு லிங்கத்தைப் பார்த்து விட்டு, பால்குளத்தம்மன் கோவில் சென்று பிரபலமான அந்தக் கல்வெட்டை படம்பிடித்தோம். அந்த அற்புதமான கல்வெட்டுத்தூணை இரும்பு பட்டையால் நெறித்து ஆனி அடித்து, வெள்ளை வர்ணம் பூசி பாதுகாப்பு செய்துள்ளார்கள்.
குளத்தின் அருகே உள்ள கைலாசநாதர் ஆலயத்திற்கு விரைந்தோம். வழக்கத்திற்கு மாறாகக் கோவில் திறந்து இருந்தது. முதல் வியப்பு !! வாங்கோ.. வாங்கோ.. என்ற அர்ச்சகரின் அன்பான வரவேற்பு, அடுத்த வியப்பு !!
இதற்கு முன் மூன்று தடவை இக்கோவிலுக்கு வந்தும், கருவறையில் உள்ள அந்த அற்புதமான சோழ அரசன் அரசியின் சிற்பம், மற்றும் காலடியில் அடியார்களைக் கொண்ட பிரத்யோகமான துவாரபாலகர் சிற்பம்
இவற்றைப் புகைப்படம் எடுக்க அனுமதி கிடைத்ததே இல்லை. ஆனால், இம்முறை தாராளமாக படம் எடுக்கலாம் என்று அனுமதி கிடைத்தது. மிதமிஞ்சிய உற்சாகத்துடன் படம் பிடித்தோம்.
அருமொழிதேவ வளநாட்டு, திருநரையூரு நாட்டு, சிவபாதசேகரமங்களத்து, உடையார் சிவபாதசேகர ஈஸ்வரமுடையார்..
என்னும் கல்வெட்டு வாசகத்தைத் தேடி படித்து படம் பிடித்து பரவசமானோம். கல்வெட்டு வாசகங்கள் அடங்கிய தொகுப்பு கையில் இருந்ததால் சாத்தியமாயிற்று. ஏதோ ஒன்றைச் சாதித்த நிறைவுடன் திருப்புறம்பியம் நோக்கி விரைந்தோம்.
3. திருப்புறம்பியம்:
பிற்காலச் சோழவரலாற்றில் தவிர்க்கவே இயலாத ஒரு பெயர் திருப்புறம்பியம். இங்கு நடந்த பெரும் போரும், போரின் விளைவால் அமைந்த சோழர்களின் ஏற்றமும், போரில் இறந்த கங்கமன்னன் பிரித்வீயின் பள்ளிப்படையும், வரலாற்று ஆர்வலர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். பொன்னியின் செல்வன் வாசித்தவர்களுக்கு, திருப்புறம்பியம் வெகு பரிட்சயமாக இருக்கும். திருப்புறம்பியர் போர், விஜயாலரின் வீரம், பள்ளிப்படை காட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்று பல சம்பவங்கள்.
இவ்விடத்தை இரவில் பார்க்கவேண்டும் என்ற ஆவலில், சரியாக இருட்டிய பிறகு திருப்புறம்பியத்தை அடைந்தோம். குறிப்பிட்டத் தூரத்திற்கு மேல் வாகனம் செல்லாது. நடைப்பயணம்தான்.அவ்வூரைச்சேர்ந்த நண்பர் திரு. செந்தில் வழிகாட்ட அடர்ந்த காட்டிற்குள், கும்மிருட்டில் நடந்தோம்.. நிஜமாலுமே ஒரு திகிலான அனுபவம்.
தற்போது ஐயனார் கோவில் என அழைக்கப்படும் பள்ளிப்படைக் கோவிலை இருட்டில், செல்போன் வெளிச்சத்தில் பார்த்தது பரவசமான ஒன்று. நம்முடைய பல கேள்விகளுக்கு தக்கச் சான்றுகளுடன் திரு.செந்தில் விளக்கம் அளித்தார். பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் பள்ளிப்படை காட்சிகளை இவ்வூரைச் சேர்ந்தவர்களைக் கொண்டு ஒரு நாடகமாக நடத்துகிறார். இப்பள்ளிப்படையிலேயே எதார்த்தமாக உயிரோட்டமாக அக்காட்சிகள் நாடகமாகின்றன. எங்கள் குழுவிற்கும் ஒரு காட்சி நடத்துங்கள் என்று அவரிடம் வேண்டுகோள் வைத்தோம்..
ஒரேநாளில் மூன்று பள்ளிப்படை கோவில்கள்.. மறக்க இயாலா அனுபவம்.
தொடர்பு: மா. மாரிராஜன் (marirajan016@gmail.com)
Super sir
ReplyDelete