Saturday, March 25, 2017

எழுத்துக்களை ரத்த சதையாக்கிய அசோகமித்திரன்



- ருத்ரா இ பரமசிவன்

 

thanks to: http://blogs.timesofindia.indiatimes.com/wp-content/uploads/2016/04/ashokmitran.jpg


"எனக்குப் பிடிக்காதது என்றால்
'தண்ணீர்', 'கரைந்த நிழல்கள்'
ஆகியவற்றைச் சொல்லலாம்.
என்னவோ அவற்றை எழுதி விட்டேன்."

இது ஒரு நேர்காணலில்
அசோகமித்ரன் அவர்கள் சொன்னது.
இது இந்து மதத்தின்
அடி மனத்து தத்துவம்.
குழந்தைகள் பூக்கள்.
குழந்தைகள் தெய்வங்கள்.
அதெல்லாம் சரி தான்.
ஆனால் அந்தக் குழந்தைகளை
அங்கங்கே வீசிவிட்டு
என்னுடன் வா
என்று
முனிபுங்கவர்கள்
தங்கள் பத்தினிகளை
இழுத்துக்கொண்டு போனதை
சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்.
தம் படைப்புகள்
வெறும் ரத்த சதையாலான‌
மாம்சங்கள்.
பிரம்மம் எனும்
எல்லாம் இறந்த (கடந்த) நிலைக்குப்போக‌
இடைஞ்சல்களாக இருப்பவை இவை.
இவற்றை விட உயர்ந்த
அந்த மாம்சம் (மீ மாம்சம்)
அடைவதே முக்தி.
இந்த இந்து அடிப்படைவாதமே
எல்லாவற்றையும்
மறுக்கும் வெறுக்கும் காரணிகள்
ஆகிப்போகின்றன.

அசோகமித்திரனுக்கு
அவருடைய
"கரைந்த நிழல்கள்"
ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு
விரிவான "நேர்காணல்கள்"பற்றிய‌
விவரம் எதுவும் கிடைக்கவில்லை.
இருப்பினும்
ஜெமினி ஸ்டுடியோவில்
அமரர் வாசன் அவர்கள் குறிப்பிட்டது போல்
எழுத்தாளனுக்கு தனிப்பகிர்வாக‌
இலக்கியம் படைக்கும் வேலையில்லை.
அவர் திரைப்படங்களுக்கு
"கதை இலாகாக்களே"
முக்கிய ஆணிவேர்.
அப்படி அந்த ஸ்டுடியோவில்
அந்நியப்பட்டுப்போன‌ உணர்வை
"கரைந்த நிழல்களில்"அவர் காட்டியிருக்கலாம்.
ஆயினும்
மிக மிக இலக்கியத்தரம் வாய்ந்த‌
நாவல் எதுவென்றால்
கரைந்த நிழல்கள் மட்டுமே.
ஒரு நாவலை
அப்படியே வரிக்கு வரி காட்டும்
திரைஇலக்கியத்தை
காட்டிய படைப்பாளிகள்
சத்யஜித்ரே..அடூர் கோபாலகிருஷ்ணன்
போன்றவர்கள் மட்டுமே ஆகும்.
எனவே அவரது
கரைந்த நிழல்களில்
எழுத்தின் உயிர்ப்பு
சினிமாக்கதைகளில் வசூல்களால்
கரைந்தே போய்விடுகின்றன‌
என்பதை உட்கருத்தாய் அல்லது ஏக்கமாய்
சொல்லியிருக்கலாம்.
நிழல் என்பதே "ஒன்றின் நிழல்" தான்.
ஆனால்
நிழலின் நிழல் என்றால்
அதன் நாளத்துடிப்புகள்
அதன் பசித்தீயின் நாக்குகள்
அதன் அவமான அவலங்கள்
எல்லாம்
எப்படியிருக்கும் என்பதே
அவரது அந்த உயிரோட்டமான நாவல்.
திரைக்குப்பின்னே
திரைக்குப்பின்னேயும் இருக்கிற‌
திரைக்குப்பின்னே
மீண்டும் மீண்டும்
இப்படி பலத்திரைகள்
உரிக்கப்பட்டதற்குப் பின்னே
உள்ள‌
அந்த ரத்தம் வடியும் காயங்களின்
நிர்வாணமே அந்த நாவல்.
நிழல் தரும் ஆலமரம் அந்தத் தயாரிப்பாளர்.
அவர் தலைமறைவாகி விடுகிறார்.
நிழல்களின் காலை வெட்டிவிடுவதைப்போன்ற‌
அவற்றின் முகங்களையே அகற்றிவிடுகின்ற‌
ஒரு சூன்யத்தின் அவஸ்தைகளை
எழுத்துகளுக்குள் மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்.
அறுபதுகளின் உயர்ந்த எழுத்தாளர்.
எழுத்துக்களை ரத்த சதையாக்கியவர் அசோகமித்திரன்.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு உயிர்த்து
தளும்பும் எழுத்துகளின்
அணைக்கட்டுகள் அவர் படைப்புகள்.
அந்த அசோகன் கல்வெட்டுகளில் இருக்கிறார்.
இந்த அசோகன் சொல்வெட்டுகளில்
தன்னைச் செதுக்கிக்கொண்டிருக்கிறார்.

______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
 

No comments:

Post a Comment