ஞான ஒளி
=============================================
-ருத்ரா
கடவுள் என்றால் என்ன
என்ற கேள்வி தான்
இன்னும் இவர்களின்
பாஷ்யங்களில்
தொங்கிக்கொண்டிருக்கும்
அறிவின் தொப்பூள் கொடி.
ஆனால்
அதை அறுத்து எறியும் விதமாய்
இவன் தான் கடவுள்
இவன் தான்
நான்கு வர்ணம் சொன்னான்.
நான்காவது வர்ணம்
மூன்றின் கீழ் நசுங்கிக்கிடப்பதே
கடவுள் வேதம் எனச்சொல்வது
அநாகரிகங்களின்
அயோக்கியத்தனங்களின்
சிகரம் ஆகும்.
அதுவே சாஸ்திரம் ஆகி
மானுடத்தை படுகொலை செய்யவந்தது.
மானுடத்தை கசாப்பு செய்ய
இத்தனை சமஸ்கிருத வாந்தியெடுப்புகளா?
வேதங்கள்
அழகிய வாக்கியங்களாய் தான்
இருப்பதாய்
கூச்சல் போடுகிறார்கள்!
ஆனால்
அதற்குள் இருப்பது
"அந்த தாஸர்களை வெட்டிகொல்லு"
ஓ! இந்திரா!
இந்த சோமபானத்தைக்குடித்து
சுருதியேற்றிகொள்.
அந்த "தாஸர்கள் கட்டிய அணைகளை அடித்து நொறுக்கு"
என்ற
கசாப்புகளின் வெட்டரிவாள்கள் தான்.
வேதங்கள் ஒலிக்கும் முன்பேயே
இருந்த மண்ணின் மைந்தர்களை
நோக்கிப் பாயும் நச்சு வரிகளே
வேதாந்த பாஷ்யங்கள்.
மனு தர்மம் சொல்லும் அந்த நான்காம் வர்ணமே
தாஸன் என்பது.
அதற்கும் கீழே இருப்பவன் "பஞ்சமன்"
அவன் பூமியில் இருக்கவே கூடாது
என்பது வேதங்களின் சாரம்.
அதன் அடியில் பூத்த
நாய்க்குடைக்காளான்களே
மனுதர்ம சாஸ்திரங்கள்.
ஆனாலும் பாருங்கள்
இந்த தந்திர வரலாற்று சாகசங்களை.
தமிழர்கள் இன்றும்
இந்த மந்திரங்களைக்கொண்டு
தங்களையே சிரச்சேதம் செய்துகொள்ளும்
மடமையில் தான்
மக்கி அழிந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தான்
தமிழ்
மொழியாக இருப்பதை விட
ஒரு உளியாக இருக்கவேண்டும்.
இந்த மரணப்பாறைகளை
வெட்டிப்பிளக்கும்
வழியும் அதில் இருக்கவேண்டும்.
சமுதாய அறிவியலின்
ஞான ஒளியும் அதில் தெறிக்கவேண்டும்!
தமிழே!
பொங்கும் சுடராய்
எங்கும் பரவுக!
No comments:
Post a Comment