Wednesday, March 15, 2017

திருப்பதி – திருமலை தோரணக் கல்



-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.

நேச்சுரல் ஆர்ச் என ஆங்கிலத்திலும் ஷிலா தோரணம் என்று தெலுங்கிலும் ( ஷிலா என்றால் பாறை அல்லது கல் என்று பொருள்) அழைக்கப்படும்  தோரணக்கல் திருப்பதி-திருமலையில் உள்ளது. 1980 களில்  இந்திய புவியியல் ஆய்வுத்துறையைச் சேர்ந்த புவியியலாளர்கள்  இந்தப் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டபோது இந்த தோரணக் கல்லை கண்டறிந்து உலகிற்கு தெரியப் படுத்தினர். தோரண வாயிலின் அகலம் 8 மீ. உயரம் 3 மீ.  திருக்கோவிலுக்கு வடக்கே 600 மீ. தூரத்தில் உள்ள இந்த இடத்திற்குச் செல்ல சாலை வசதிகள் உண்டு. வராகீஸ்வரர் கோவிலிலிருந்து நடந்தும் செல்லலாம். 15- 20 நிமிடங்கள் ஆகும்.

இந்தத் தோரணக்கல் ஓர் இயற்கை வடித்த இனிய சிற்பம். இயற்கை வடித்த இனிய சிற்பங்கள் உலகெங்கிலும் காணப்படுகின்றன. உளியும் இல்லாமல் சுத்தியலும் இல்லாமல் இந்தச் சிற்பங்களை செதுக்கியது , புவியியலில் geological agents என அழைக்கப்படும் காற்று, மழை, வெயில், ஆறு, பனியாறுகள் ஆகியவையே ஆகும். இந்தச் சிற்பிகளின் திறனை மென் பாறைகளான மணற்பாறை, களிமண் பாறை , சுண்ணாம்புப்பாறை  போன்ற படிவப்பாறைகளில் நன்கு காணலாம். உலகின் புகழ் மிக்க நேச்சுரல் ஆர்ச்  எல்லாம் பெரும்பாலும்  படிவப் பாறைகளிலேயே அமைந்துள்ளன.

ஆனால் திருமலை தோரணக் கல்லோ குவார்ட்சைட் எனப்படும் உருமாற்றுப்பாறையில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் உள்ள நகரி குன்றுகளில் முதலில் கண்டறியப்பட்டதால் இவை ‘நகரி குவார்ட்சைட்’ என்று அறியப்படுகின்றன. (அத்திராம்பாக்கத்திலும் , குடியம் குகை பகுதியிலும் கற்கால ஆயுதங்கள் செய்ய பயன்பட்ட கூழாங்கற்களின் தாயகம் நகரி குவார்ட்சைட் பாறைகள்தான் என எண்ண  இடமுண்டு.) இந்தப் பாறைகளின் வயது 160 கோடி ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாறைகள் தோன்றிய பின்னரே தோரணக்கல்    அமைப்பு தோன்றியிருக்க வேண்டும். ஆதலின் தோரணக் கல்லின் வயது சற்று  குறைவாகத்தான் இருக்க வேண்டும்.

குவார்ட்சைட் பாறைகள் மிகவும் வன்மையானவை. ஆதலின் இயற்கை சிற்பிகளின் கைவண்ணம் இங்கே அதிகம் பலித்திருக்காது. மாறாகப் பாறையில் ஏற்பட்டுள்ள விரிசல்களும் பிளவுகளுமே தோரணக் கல் அமைப்பு உருவாகக் காரணமாக இருந்திருக்கவேண்டும். பாறைகள் அழுத்தத்திற்கு உட்படும்போது அவற்றில் விரிசல்கள் உருவாகின்றன. தொடர்ந்து பல லட்சக்கணக்கான ஆண்டுகள் இந்தப் பாறைகள் வெப்பத்தில் விரிவதாலும் குளிரில் சுருங்குவதாலும் இந்த விரிசல்கள் பிளவுகளாக மாறுகின்றன. பிளவுகள் குறுக்கும் நெடுக்குமாக அமையும்  போது பாறைகள் துண்டாகி விழுகின்றன. இந்த முறையில்தான் தோரணக் கல் உருவாகியிருக்கவேண்டும்.





தோரணக் கல்லை பார்வையிட வரும் பக்தர்கள், ‘பெருமாளின் உயரமும் இதன் உயரமும் ஒன்றே  ...பெருமாளே இங்கேயும் வாசம் செய்கிறார்’ என்று நம்புவதோடு   இதில் ஆதி சேஷனையும் , சங்கு சக்கரத்தையும் கண்டு வழிபடுகிறார்களாம். நம் கண்களுக்கு குவார்ட்சைட் பாறையைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. 



படம்-1 : திருமலையில் கோட்டை சுவர் போல் நிற்கும் குவார்ட்சைட் பாறைகள்.

படம் -2 & 3 : தோரணக் கல் வளைவு           



 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________ 
   

No comments:

Post a Comment