சீகன் பால்கு ஆரம்பித்த பள்ளிக்கு 300 வயது .
- சிங்கநெஞ்சம் சம்பந்தன்
எனக்கு கல்வி செல்வத்தை வழங்கியது, "தூய தாவீது உயர்நிலைப் பள்ளி" ( St. David High School ). இன்று தூய தாவீது மேல்நிலைப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பள்ளி கிழக்கிந்திய கம்பெனியின் முக்கியமான வியாபாரத்தலமாக விளங்கிய கூடலூரில் ( இன்று கடலூர் என்று வழங்கப் படுகிறது), 1717ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது . பள்ளியின் நுழைவாயிலில் உள்ள பெயர்ப் பலகையில் ESTD.1717 என்று பெருமையாக எழுதியிருப்பார்கள். இவ்வவளவு பழைமையான பள்ளி தமிழ்நாட்டில் வேறு எங்கேனும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. பெரியவர்கள் இந்தப் பள்ளியை SPG School என்றே அழைப்பர். பலருக்கும் இந்த SPG என்றால் என்னவென்று தெரியாது. பதினோராம் வகுப்பு படிக்கும்போது எங்கள் தலைமைஆசிரியர் அருமைநாயகம் அவர்கள்தான் ( பெயருக்கு ஏற்றபடி அருமையான மனிதர், ஆசிரியர்களில் நாயகம்) SPG என்பது SOCIETY FOR PROPAGATION OF GOSPEL என்பதின் சுருக்கம் என்றும் , இந்தப்பள்ளி அந்த SOCIETY யால் நிர்வகிக்கப்பட்டு வந்தது என்றும் விளக்கம் அளித்தார்.
கூடலூர் செயின்ட் டேவிட் கோட்டையிலிருந்து வியாபாரம் செய்து வந்த கிழக்கிந்திய கம்பெனியினர் 1698 ஆம் ஆண்டு, 'இந்தியாவில் கம்பெனியின் அதிகாரத்தின் கீழ் உள்ள இடங்களில் கம்பெனியில் பணி புரியும் பிரிடிஷ்காரர்களுக்காகவும் அவர்களுக்கு பணி புரியும் இந்திய வேலைக்காரர்களுக்காகவும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்' என்று ஆணை ஒன்றை பிறப்பித்தனர். இதே கால கட்டத்தில் லண்டனில் துவக்கப்பட்ட "SOCIETY FOR PROPAGATION OF CHRISTIAN KNOWLEDGE (SPCK) " அமைப்பும், குடியேற்ற நாடுகளில் , கிறித்துவ மதத்தைப் பரப்புவதற்காக பள்ளிகள் துவங் கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆயினும் சரியான ஆசிரியர்களும் நிர்வாகிகளும் கிடைக்காத காரணத்தால் இந்த ஆணை நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையில் 1706 ஆம் ஆண்டு சீசன் பால்கு ( Bartholomaus Ziegenbalg) எனும் ஜெர்மானியர் தரங்கம்பாடியில் வந்திறங்கினார். இந்தியாவிற்கு வந்த முதல் பிராட்ஸ்டன்ட் மதகுரு இவர்தான். முதன் முதலில் கிறித்துவ வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்தவரும் இவரே. இவர் தரங்கம்பாடியில் பள்ளி ஒன்றினை நிறுவி தமிழ் மற்றும் போர்துகீசிய மொழிகளில் பாடங்கள் நடத்தி வந்தார். நாகப்பட்டினத்தை சேர்ந்த சவரிமுத்து இங்கே ஆசிரியாராக பணி புரிந்து வந்தார். இவர் மீனவர் குலத்தை சேர்ந்தவர்.
1715-16 ஆம் ஆண்டில் சென்னையில் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னாராக இருந்த எட்வர்ட் ஹாரிசன், சீகன் பால்குவின் உற்ற நண்பர் கிரண்ட்லரிடம் சென்னையிலும் கூடலூரிலும் பள்ளிகள் துவக்கும்படி வேண்டினார். அதுசமயம் சீகன்பால்கு ஐரோப்பா சென்றிருந்ததாலும் சரியான ஆசிரியர் இல்லாததாலும் கிரண்ட்லரால் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஐரோப்பாவிலிருந்து திரும்பிய சீகன் பால்குவிடம் SPCK, பள்ளிகள் திறக்கும்படி மீண்டும் வேண்டியது. இதன் விளைவாக 1717 ஆம் ஆண்டு SPCK வின் ஸ்டீவன்சன் துணையுடன் கூடலூரில் சீகன்பால்கு ஒரு பள்ளியை நிறுவினார். இதுவே எங்கள் பள்ளி. தரங்கம்பாடியில் பணிபுரிந்து கொண்டிருந்த சவரிமுத்து கூடலூர் பள்ளியில் ஆசிரியரானார். SPCK நிர்வாகத்தின் கீழ் பள்ளி இயங்கி வந்தது.
சவரிமுத்து மீனவர் குலத்தை சேர்ந்தவர் என்றாலும், கூடலூரில் வசித்து வந்த பிராமணர், சைவப்பிள்ளை போன்ற உயர்சாதி இந்துக்களும் தங்கள் பிள்ளைகளை அவரிடம் பாடம் கற்பிக்க அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 'டேனிஷ் மிஷன் பள்ளி நம் ஊரிலா' என்று உள்ளூர் பிரிடிஷ்காரர்கள் இந்த பள்ளிக்கு இடையூறு செய்திருகின்றனர். SPCK வின் கீழ் இயங்கி வந்த இந்தப் பள்ளி 1825 ஆம் ஆண்டு SOCIETY FOR PROPAGATION OF GOSPEL ( SPG) நிர்வாகத்தின் கீழ் வந்தது. அன்று முதல் SPG School என பலராலும் அறியப்பட்டது.
தற்போது தூய தாவீது மேல் நிலைப் பள்ளி ( St. David's Higher Secondary School) எனும் பெயரில் தென்னிந்திய திருச்சபையின் ( CHURCH OF SOUTH INDIA) கீழ் இயங்கி வரும் எங்கள் பள்ளி இளமையுடன் தன் முன்னூறாவது ஆண்டில் புகழோடு பயணித்துக் கொண்டிருக்கிறது.
( முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் , திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் எங்கள் பள்ளியில் பயின்றவர்கள்)
No comments:
Post a Comment