Tuesday, November 29, 2016

ஜமனாமரத்தூர்

ப்ரகாஷ் சுகுமாரன்

”டேய், கண்ணன் எங்கடா இருக்கான்”

”சார், சொல்லியனுப்பி இருக்கம் சார், வந்துகிட்டே இருக்கும்..”

”அவனெப்ப வந்து, நாங்க எப்படா கெளம்புறது, பரதேசிப்பய, எங்கனா கள்ளடிச்சி போதைல கெடக்கப்போறான், போய் பாத்துட்டு வாங்க. யோவ் அதிகாரிங்க வந்தா டீ, காபி போட்டு தரணும்னு கூட தெரியாதா ?”

”மன்னிச்சிக்கங்க சார், இங்க கடையெல்லாம் இல்ல. வீட்ல இருந்த பால புள்ளைக்கு கொடுத்தாச்சு. அடுத்தமுறை செஞ்சிடறேன் சார். பெரியவருக்கு அந்த பழக்கமெல்லாம் கெடையாது. அதாலதான் இந்த வயசுலயும் ஆனைங்கள வெறட்ட முடியுது. ராத்திரி பூரா அதுங்க பின்னாடியே போயிட்டு, வெடி காத்தாலதான் வந்து படுத்தார். சீக்கிரம் வந்துடுவார்”

“இப்படியே சொல்லிகிட்டு இருங்க, மரத்த கடத்துறதா கேச போட்டு உள்ள தள்ளிடுறேன்”

”சாமீ, வந்துட்டேன். ஆனைங்க சுத்தறப்ப, ஏஞ்சாமி இம்மாம்பேரு வந்திருக்கீங்க ?”

“வா கண்ணா, அதுங்கள வெறட்டத்தான் வந்திருக்கோம், எங்கேருக்குங்க ?”

“சுத்தி ஒம்பது நிக்குதுங்க, நடுவுல நின்னுகிட்டு எங்கேருக்குன்னு கேக்கறீங்களே ?”

”யேய், என்னய்யா சொல்றே, சாந்திரம் தானே அதுங்க காட்ட விட்டு வெளிய வரும்னு சொன்னாங்க”

”அது சரிதான் சாமீ, நீங்க என்ன டவுன்லயா நிக்கறீங்க, நிக்கறதே காடு, இதுல அதுங்க எந்த காட்ட விட்டு ராவுல வெளில வரணும் ?”

“அட இருய்யா வரேன்”

“சார், எல்லாம் இங்கதான் இருக்காம், நாம போயிட்டு அப்றம் வருவோம்”

“சரி சரி, நீங்க இருந்து பாத்துக்கங்க, பாத்து பைய செய்யுங்கய்யா, இன்னிக்குள்ள இங்கேருந்து விரட்டிடணும், நா போளூர் கெஸ்ட் அவுஸ்லதா இருப்பேன், எதாயிருந்தாலும் மைக்ல சொல்லுங்க”

“கண்ணா, ஐயா வேற கெளம்பிட்டாரு, இனி எங்க பொழப்பே ஒன்ன நம்பித்தான்யா இருக்கு. என்ன செய்யணும்னு பாத்து சொல்லு”

“நல்லா வர்றீங்க சார், மொதல்ல இத்தன பேரு இங்க நிக்க வேணாம். எல்லாரையும் ஜமனாமரத்தூருக்கு போயிடச் சொல்லுங்க, விடிகாத்தால தான் மேல் சிப்பிலிலருந்து வாலியம்பாற வழியா எறங்கினாங்க. இப்ப கீழ் சிப்பிலிலதான் இருக்குதுங்க. ஒங்காளுங்கள்ள பீடி, சுருட்டு பிடிக்கறவங்கள எல்லாம் மொதல்ல அனுப்பிடுங்க. அந்த வாட அதுங்களுக்கு ஆகாது. ஒரு நாளஞ்சி பேரு இருந்தா போதும், மத்தவங்களையும் அனுப்பிடுங்க”

“இவ்ளோ பேருல நாலு பேத்த நிறுத்த சொன்னா, எவன்யா இருப்பான். வேணா நானொருத்தன் நின்னுகிட்டு, மத்தவன அனுப்பிடவா ?”

”சரி, அப்படின்னா எல்லாத்தையும் ஊருக்குள்ள இருக்க சொல்லிடுங்க, எங்காளுங்க 10 பேரு மட்டும் இங்கயே இருக்கட்டும். சாமீ, அங்க ரெண்டு ஆளுங்க உக்காந்து படம் பிடிக்கிறாங்க பாருங்க, அவங்கள ஒடனே கூப்பிடுங்க, 3 ஆன சாமிங்க சுத்திடுச்சி”

“ஏம்பா, ரிப்போர்ட்டரு இங்க ஓடியா, அந்த ஆளையும் கூட்டியாய்யா”

“யோவ், நான் சொல்றது ஒங்காதுல விழல, வந்துடுங்கய்யா, சுத்தி வந்துடுச்சிங்க”

“ஜவகர், ஃபாரஸ்ட்காரனுங்க கத்தறாங்க பாரு, வா போகலாம்”

“திரும்பி சான்ஸ் கிடைக்காது, என் கேமரால ஒரு யானை சிக்கிடுச்சி, மீதி எங்க இருக்குன்னு பாத்து நீ எடு”

“சுத்தி முள் மரங்கதான் தெரியுது, வேற எதுவும் தெரியல”

“இரு ப்ரகாசு, ரெண்டே நிமிஷம், யானைங்கள படம் எடுத்துட்டா அப்றம் நம்ப வேலை முடிஞ்சிரும்”

(”யோவ், கிட்ட வந்துடுச்சாம்யா, வாங்கய்யா”, என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தால்.. வாட்சர்கள், கார்டுகள், அதிகாரிகள், உள்ளூர் மக்கள் என கிட்டதட்ட 200 பேர் கூட்டமாக அங்கு இருந்த தடம் கூட இல்லை)

“யோவ் ஜவகர், ஒருத்தரையும் காணோம், வாய்யா போகலாம்”

(சட சடவென மரங்கள் முறியும் சத்தம்)

“யே, அறிவுகெட்டவங்களா, அத்தினி பேரு கூப்பிடுறோம், வரலைன்னா எப்படி, ஒங்களால இன்னிக்கு நானும் ஆன சாமிக்கு படையலாகப் போறேன், வாய்யா இப்படி”

(கண்ணனின் கைப்பிடி உடும்பு பிடியாக இழுக்க, ஓட முடியாமல் ஓடியதில் கை, கால், தலை என எல்லா பகுதிகளிலும் முள் கிழித்திருந்தது. சிறு குழந்தைகள் நடை பழகும் போது அடிக்கடி கீழே விழுந்து அடிபடுவது போல, ஓடத் தெரியாத குழப்பம் ஏற்பட்டதால் ஆங்காங்கே விழுந்ததில், கை-கால் முட்டிகளில் சிராய்ப்புகள். ஆனால் கையை பிடித்து இழுத்து ஓடிய கண்ணனின் கால்கள் சரியாக ஓடின, கண்கள் சரியாகத் தெரிந்தன. காட்டுக்குள்ளும் ராஜபாட்டைகள் அவருக்கென விரிந்தன)

“ஓட முடியலை இருங்க, மூச்சு வாங்குது, என்னோட வந்த இன்னொருத்தர வேற காணோம்”

“என் தம்பி அவன இன்னேரம் இழுத்துட்டு போயிருப்பான். பேசாம வா. பேசினா அதுங்க திரும்பி வரும். சுத்தி அவ்ளோ பக்கத்துல கறுப்பு சாமிங்க இருக்கறது கூட தெரியாம என்னத்த படம் பிடிச்சீங்க ?”

“இல்லையே, வெறுங்கண்ல பாத்தப்ப நெழலாட்டமா தெரிஞ்சுது. ஆனா கேமரால பாத்தா ஒன்னு கூட தெரியலையே”

“நல்ல ஆளுங்கய்யா நீங்க. டருக்கி ரவைக்கு ரெட்டைங்களோட சந்தோஷமா இருந்ததாலே தப்பிச்சீங்க, இல்லாட்டி களியாகி இருப்பீங்க. மொதல்ல வெள்ள சட்டைய கழட்டுங்க. ஒங்க கண்ணுல படக்கூடாதுன்னுதானே இவ்ளோ மேல வந்து தங்குதுங்க, அப்புறம் ஏன் விடாப்பிடியா தொரத்தறீங்களோ. போற வார வழியெல்லாம் சிமெண்ட் கட்டடம் கட்டிட்டா, கறுப்புங்க எப்படிதான் வலச போவும் ? பாவம் அதுங்களும் கூடி கொலவ வேணாமா ? என்னமோ போங்க. பாவம் தண்ணீக்கு என்ன பண்ணுமோ தெரியல. மறுபடி மேல் சிப்பிலிதான் போகணும்”

(13 கிலோ மீட்டர் தூரம் ஓடிக் கடந்தது கவர்மெண்ட் கெஸ்ட் அவுஸ் கண்ணில் பட்டதில் தெரிய வந்தது)

“சார், அவ்ளோ பேர் இருந்தாங்க, ஒரே நிமிஷத்துல ஒருத்தரையும் காணோம், நல்லவேளையா கண்ணன்னு ஒருத்தரு வந்தாரே அவரு பிடிச்சி இழுத்து வந்ததால் தப்பிச்சேன். சட்டையெல்லாம் கிழிஞ்சி போச்சி. கூட இருந்த ஜவகர வேற காணோம்”

“உங்கள யாரு அவ்ளோ கிட்ட போயி படமெடுக்கச் சொன்னது, மைக்ல தகவல் வந்ததும் டென்ஷன் மண்டைக்கு ஏறிடுச்சி. செவள பத்திரமா ஜவகர கூட்டியாந்து எங்காளுங்க கிட்ட விட்டுட்டான். ஜீப்ல கூட்டிகிட்டு வர்றாங்க, நீங்க கொஞ்சம் வெளிய போயி இருங்க”

(காத்திருந்த நேரத்தில் கேட்டது)

”சார் இன்னிக்கு யானைய வெறட்ட 300 ஊராளுங்கள கூட்டியாந்து, அவங்களுக்கு சோறு செஞ்சி போட வேண்டியதா போச்சி. இன்னிக்கு மட்டும் 30,000 ரூபாக்கு பட்டாசு வாங்கி வெடிச்சோம், மத்த செலவெல்லாம் சேத்து ஒன்ற லட்சம் ஆகிடுச்சி. இதோட 13 நாளு. சீக்கிரமா பில்ல அனுப்பச் சொல்லுங்க. இன்னும் எத்தன நாளைக்குதான் யானைங்கள வெறட்டறதோ தெரியல. இன்னிக்கு பிரஸ்காரங்க உள்ள வந்து, ஒரே பிரச்சினையாகிடுச்சி”

“சார், ஓகே சார். பில் பாஸானதும் அனுப்பிடுறேன் சார். இன்னிக்கே வந்துட்டாலும், நாளைக்கு நான் நேர்ல வந்துடறேன் சார். 300 னு போடுறத, 400 னு போட்டா, இங்கேருக்க ஆளுங்கள இன்னும் கொஞ்சம் நாளைக்கு சரி கட்டலாம். ஓகே சார். நன்றி சார்”

No comments:

Post a Comment