Thursday, November 10, 2016

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 5

- இராம.கி.


அடுத்தது பதிற்றுப்பத்தின் 11 ஆம் பாட்டு. இதற்குள் போகுமுன் முன்குறிப்புகளைப் பார்ப்போம்.

ஒரு மொழியின் தொடக்கத்தில் தான்தோன்றியான கருத்துச்சொற்கள் (idea words) எழா. பருப்பொருட் சொற்களே (material words) எழும். பருப்பொருளிலிருந்தே, பகரிக் (rebus) கொள்கையின் படி கருத்துச்சொல் உருவாகும். அவ்வகையில் பன்மைகுறிக்கத் தமிழ்ப்பழங்குடி மாந்தன் பல்லையே அடையாளங் காட்டினான். 10 எனுங் எண்ணிக்கைப் பொருள் நெடுங்காலத்திற்குப் பிறகே அமைந்தது. இதன் தொடக்கம் பல் (>பல்த்து>பத்து>பது) என்பதே. [இதேபோல 3 ஐக் குறிக்க மூக்கையும், 5 ஐக் குறிக்க கையையும் காட்டியே தமிழெண்கள் எழுந்தன. 1,2, 3, 5, 10 என்ற சொற்களில் இருந்து கூட்டல், கழித்தல், பெருக்கல் முறையில் தமிழெண்கள் தோன்றின. அவற்றை வேறுபொழுதிற் பார்க்கலாம்.] பதில்/பதின் என்பது பத்தின்தொகுதி. பதினொன்று, பதினிரண்டு,.. பதினெட்டென்று எண்கள் வரும் கூடவே, பதினிரண்டு பன்னிரண்டென்றும், பதினொன்பது பத்தொன்பதென்றும் பேச்சில் திரியும். பப்பத்துப் பாட்டுகளாய் 10 ”பத்தில்>பதில்” கொண்டது பதிற்றுப்பத்து. பதில்+து = பதிற்று. பற்றிக் (பக்திக்) காலத்திலிருந்து இப்பொழுது வரைப் பதிகம் என்ற சொல்லையே பதிலுக்கு மாறாய்ப் பயன்படுத்துகிறார். பதில்/பதின் என்பது வழக்கற்றுப் போனது.

உ.வே.சா.விற்குக் கிடைத்த பதிற்றுப்பத்தில் ஏடுகளிருந்ததால், 1 ஆம் பத்தும், 10 ஆம்பத்தும் கிடைக்கவில்லை (ஆனால் இன்னதென்று சொல்லமுடியா 5 துண்டுகள் கிடைத்தன.) முதலாம்பத்து உதியஞ் சேரலைக் குறித்திருக்கலாமென்பர். அடுத்த 5 பத்துகள் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன், களங்காய்க்கன்னி நார்முடிச்சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பாரையும், மேலும் 3 பத்துகள் இரும்பொறைக் குடியின் செல்வக்கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரலிரும்பொறை, இளஞ்சேரலிரும்பொறை ஆகியோரையும் பேசும். முன்சொன்ன துண்டுகளால் பத்தாம்பத்து பெரும்பாலும் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கே எனவுஞ் சிலர் ஊகிப்பர். பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் உள்ளேவரும் தொடரை வைத்து தனித் தலைப்புண்டு. இந்தக் குறிப்பிட்ட பாட்டின் தலைப்பு “*புண் உமிழ் குருதி*. இதைப் பாடியவர் குமட்டூர்க்கண்ணனார். பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

குமட்டூரென்பது பெரும்பாலும் குமிட்டூராகலாம். 2 ஆம் பதிகத்தின் கீழ் ”பாடிப் பெற்ற பரிசில் உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதலிற் பாகங் கொடுத்தான் அக்கோ.” என்றகுறிப்பு வரும். இக்கூற்றை வைத்துக் குமிட்டூரை எளிதாய் அடையாளங்காணலாம். பிரமதாயம், பெருமானருக்குத் (brahmins) தரும் இறையிலிநிலம். சங்க காலத்திலேயே வேதநெறி தமிழகத்துள் ஓரளவு பரவியதால், இப்படி இறையிலி நிலங்கொடுப்பது நடக்கக்கூடியது தான். (அதேபொழுது வேதமறுப்பு நெறிகளும் உலகாய்தமும் இங்கிருந்தன. இந்நெறியே சங்ககாலத்தில் ஓங்கியது என்பது ஒருபக்கச் சார்பாகும்.) பல்லவர் காலம் (பொ.உ.500) தொடங்கிய பின் தான் பெருமதாயங்கள் (>பிரமதாயம்) எழுந்தனவென்று சொல்வதற்கு இயலாது. . 

ஐந்நூறூர் என்பதை 500 ஊர்களெனக் கொள்ளவேண்டாம். பெருமானர் கூட்டங்களில் (கோத்திரங்களில்) எண்ணாயிரம் (அஷ்ட சகஸ்ரம்) என்றொரு கூட்டமுண்டு..(எக்காலம் அதுவெழுந்தது என்பது தனியாய்வு) இக்கூட்டத்தின் தொடக்கம் திருவண்ணாமலைக்கருகில் எண்ணாயிரம் பெருமானக் குடும்புகளிருந்த எண்ணாயிரமாகலாம். இதேபோல் தில்லையில் 3000 குடும்புகள், திருப்பெருந்துறையில் முந்நூற்றுவர் இருந்தார். இங்கே 500 குடும்புகள் கொண்ட சேரநாட்டு ஊரொன்று பெருமதாயமாகிறது. (500 பேரும் பெருமானரென்ற பொருள் கிடையாது.) தானங் கொடுக்கையில் சேரன் தன்நாட்டுள் தானே கொடுப்பான்? வேறுநாட்டிலா கொடுப்பான்? எனவே உம்பற்காடும் குமிட்டூரும் சேரநாட்டினுள் இருக்கவேண்டும். (சுற்றிவளைத்துச் சிற்றன்னவாசற் கல்வெட்டைத் தவறாகப்படித்த தமிழறிஞர் சிலர் குமிட்டூரை ஓய்மான் நாட்டினுள் கொண்டு திண்டிவனம் பக்கம் இதைத் தேடுவார். அப்பிழை விக்கிபீடியாவிலுமுண்டு.)

உம்பலெனில் குமிழம் (coomb teak; Gmelina arborea). உம்பற்காடு = குமிழ்மரக் காடு. Gmelina asiatica என இன்னொரு வகையுமுண்டு. முன்னது பெருங்குமிழ். 2 1/4 அடி விட்டம், 100 அடி உயரம் வளரக்கூடிய மரம். 800 அடிதொடங்கி 3000 அடிவரை உயரமுள்ள குறிஞ்சிநிலத்தில் விரவிக் காணலாம். பின்னது பெரிய முட்செடி நிலக்குமிழ் என்பார். குமிழ்மரத்தின் புறணி மழமழப்பாக, சாம்பல் படர்ந்த வெண்ணிறமாய் இருக்கும். 4 முதல் 8 அங். நீளத்தில் அகன்ற முட்டைவாகில் இதயவடிவில், கீழ்ப்புறம் முசுமுசுப்பாக இலைகளிருக்கும். 1 முதல்; 1.5 அங். வரை நுனியிலும், மஞ்சரிகளிலும் பழுப்புப் படர்ந்த மஞ்சள்நிறமாக மார்ச்சு, ஏப்பிரல் மாதங்களிற் பூக்கும். முட்டைச்சாயலில் 0.5 முதல் 1.0 அங். நீளத்தில் செம்மஞ்சள் நிறத்தோடு மகிழ் வாசனையோடு மழைக்காலங்களிற் காய்க்கும். பழங்கள் உருண்டு திரண்டு குமிழாயிருப்பதால் குமிழ்மரமென்று அழைத்தார். இதைக் கும்பலம்>கும்பளம் என்றுஞ் சொல்வார். கும்பலிற் குகரம் விட்டு உம்பலென்றுஞ் சொல்வார். தவிர, ’அம்’மின்றி இகரவீற்றில் கும்பலி>கும்பளி என்றுஞ் சொல்வர். சேரலத்தில் சிலபோது மூக்கொலிபெற்று கும்மளி>குமளியென்றுஞ் சொல்லப்பட்டது. இற்றை மலையாளத்தில் கும்பில், கும்புலு, குமிலு என்றாகும்.

வடக்கே நகருஞ்சொற்களிற் பெரும்பாலும் ளகரம் டகரமாயும், லகரம் ரகரமாயும் மாறும். கன்னடத்திற் கும்புலு, கும்புடு என்றும், தெலுங்கிற் குமரு, கும்மடி என்றும், ஒடியாவில் குமர், கும்ஹரென்றும், வங்காளத்தில் கும்பர், கம்பர், கமரி என்றும், அசாமீசில் கொமரி என்றும், மேகாலய கரோ மொழியில் கமரி, கம்பரெ என்றும், நேபாலியில் கமாரி என்றும், இந்தியில் கும்பரி, கம்ஹர், கமர என்றும், பஞ்சாபியில் கும்ஹர் என்றும், சங்கதத்தில் கம்பரி என்றும் அழைப்பர். இத்தனையும் தமிழ்வழிச் சொற்கள், இதுபோக Sanskrit: sindhuparni, sindhuveshanam, stulatvach; Oriya- Bhadraparni; Gujarati- Shewan, Sivan; Hindi- sewan; Kannada- Shivane mara, Kasmiri- shivani; Marathi- shivan, siwan; Sinhala- Demata என்றும் இன்னோர் அடிப்படையில் சொல்வரிசையுண்டு.

தமிழகக் கேரள எல்லையில் இன்றுள்ள குமிழி>குமிளியே அற்றைக் குமிழூர்>குமிளூர்>குமிட்டூரென இப்போது புரிந்திருக்கும். மரத்தொழிலர் நடுவே குமிழமரம் குமிட்டுத்தேக்கு என்றுஞ் சொல்லப்பெறும் குமிழியிலிருந்து 4 கி.மி. தொலைவில் தேக்கடி (தேக்கு+அடி). தேக்கும், வெண் தேக்கும், குமிட்டுத் தேக்கும் அருகருகே விளைவது வியப்பல்ல. குமிழூர் அன்றுஞ் சேரலஞ் சேர்ந்ததுதான். இவ்வூருக்கு அருகிற்றான் இமையவரம்பன் நெடுஞ்சேரல் குமிட்டூர்க்கண்ணனாருக்கு உம்பற்காட்டு ஐநூறூரைப் பெருமதாயமாய் அளித்தான். குமிழிக்கருகிற்றான், குட்டநாடு. முல்லைப்பெரியாறு; கண்ணகி போய்ச் சேர்ந்த இடம். செங்குட்டுவன் மலைக்காட்சி கண்ட இடம். மங்கலாதேவி கோயில். வஞ்சிக்காண்டம் தொடங்குமிடம். சேரலாதன் ஐந்நூறூர் தவிர தன்நாட்டு வருவாயில் ஒரு பாகத்தையும் (எத்தனை என்று தெரியவில்லை) தான் அரசனாய் வாழ்ந்த 38 ஆண்டிற் கொடுத்திருக்கிறான். வருமானத்தில் ஒருபகுதியை உள்நாட்டானுக்குத் தானே கொடுக்கமுடியும்? .
     .
பாடாண்டிணை. ”பாடு+ஆள்ந்திணை” எனவிரிந்து, போற்றக்கூடிய ஆளுமையைப் புகழ்வதாயமையும். (எல்லாப் புறத்திணைகளும் ஒரு குறிப்பிட்ட செய்கையை மட்டுமின்றி ஒரு மரத்தையும் சேர்த்துக் குறிக்கும். பாடாண்மரம் பற்றி மூலிகை மருந்தறிவியல் ஆய்வாய் பேரா.இரா.குமாரசுவாமி அருங்கட்டுரை படைத்துள்ளார். பார்க்க: ”தமிழர் மெய்யியலும், அறிவுமரபும்” பக்.54-75. உலகத்தமிழ்மொழி மெய்யியல் பண்பாட்டாய்வு நிறுவனம், திருச்சிராப்பள்ளி. தொலைபேசி: 8903838356) பாட்டின்துறை: செந்துறை: வேறொரு ஆளுமையோடு ஒப்பிடாது நேர்படச் சொல்வது செந்துறையாகும்..

இசையியலில் தூக்கென்பது தாளம்பொறுத்து அமையும், யாப்பிலோ இன்னசெய்கைக்கு இன்னவகைப் பாட்டென வழிகாட்டுண்டு. ஒருவரையழைத்துச் சொல்கையில் அகவலோசையோடு ஆசிரியமாய் அமைந்தாற் சிறப்பென்பர். மாறாக அழைத்துச் சொல்வதைச் செப்பலோசையோடு வெண்பாப் பாடின், மரபின்படி அது சரியல்ல. (இக்காலத்தில் யாரும் மரபைக் கண்டுகொள்வதில்லை. அவரவர்க்குப் பிடித்தபடி ஆசிரியம், விருத்தம், வெண்பா, புதுக்கவிதை எனக் கலந்தடிப்பார். அதே போல இன்னபொழுதிற்கு இன்னபண் என்றா பார்க்கிறோம்? அதிலும் கலப்புதான்.) அகவல், செப்பல், துள்ளல், தூங்கல் ஆகியவற்றை நேரம், காலம், நிகழ்வு, செய்கைபார்த்து அந்தந்தப் பா பாடுவது செந்தூக்காகும். அழைத்துச்சொல்லும் வகையில் ஆசிரியம் இங்கு வருவதால் இது செந்தூக்கு.

அடுத்தது, எழுத்துக்கள் வரும்வகை வருநம்>வண்ணமாகும். 20 வகை வண்ணங்களுண்டு. இப்பாட்டில் வருவதை ஒழுகுவண்ணமென்பர். ஓர் ஓடை தடைப்படாது ஓடுவதுபோல ஒழுகும்வண்ணம். படித்துப்பார்க்கும்போது இதில் எத்தடையும் வராது பாடலமையவேண்டும்.

வரைமருள் புணரி வான்பிசி ருடைய
வளிபாய்ந் தட்ட துளங்கிரும் கமஞ்சூல்
நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி
அணங்குடை அவுண ரேமம் புணர்க்கும்
சூருடை முழுமுத றடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச்
செவ்வா யெஃகம் விலங்குந ரறுப்ப
அருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின்
மணிநிற யிருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல வரண்கொன்று
முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை
பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுத றுமிய வேஎய்
வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்
நாரரி நறவி னார மார்பின்
போரடு தானைச் சேர லாத
மார்புமலி பைந்தா ரோடையொடு விளங்கும்
வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப்
பொலனணி எருத்த மேல்கொண்டு பொலிந்த
நின்
பலர்புகழ் செல்வ மினிதுகண் டிகுமே
கவிர்ததை சிலம்பிற் றுஞ்சும் கவரி
பரந்திலங் கருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொ டாயிடை
மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே.


என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு
வான்பிசிர் உடைய வரைமருள் புணரி
வளிபாய்ந்து அட்ட துளங்குஇரும் கமஞ்சூல்
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி

விலங்குநர் செவ்வாய் எஃகம் அறுப்ப,
மனாலக் கலவை போல
அருநிறம் திறந்த *புண்உமிழ் குருதி*யின்
மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து,
அரண் கொன்று
முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை

பலர்மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடிஉடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று
எறிமுழங்கு பணைசெய்த வெல்போர்
நார்அரி நறவின் ஆர மார்பின்
போர்அடு தானைச் சேரலாத

பரந்து இலங்கு அருவியொடு
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே.
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்
பொலன்அணி எருத்த மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகுமே

இனிச்சில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம். முதலில் நாம் பார்ப்பது ”அணங்கைப்” பற்றியாகும். நாட்டு மரபுகள் அறியாத் தமிழாய்வாளரும், அவர் வழித் தமிழிலக்கியங் கற்ற மேலையாசிரியரும் இச்சொல்லைத் தவறாகப் புரிந்துகொள்கிறார். இணையத்தில் தேடின், பென்னம்பெரிய பேராசிரியரெலாம் இதில் தடுமாறியது புரியும். அணங்கென்பது ஏதோ ஒருவகை ஆற்றல் என்றும் இது பெண்முலையில் குடிகொள்ளுமென்றும், அணங்கின் வழிதான் கண்ணகி மதுரை எரித்தாளென்றுஞ் சொல்வார். இதுபோன்ற விளக்கங்கள் தென்பாண்டிநாட்டில் நாட்டுமரபு தெரிந்தோருக்கு வியப்பாகவே தெரியும். பல்வேறு சங்க இலக்கியக் காட்டுக்களை எடுத்துக்காட்டி இப்புரிதல் பிழையென்று முதலிற் சொன்னவர் பேரா. வி.எஸ்.இராஜமேயாவார்..

அணங்குதல் = மேலேறுதல். வீரம், மகிழ்ச்சி, பயமென்று தான்கொள்ளும் இயல்வெளிப்பாடுகளிற் சட்டென மாறி எக்கிய உணர்ச்சிகளுக்கு (extreme emotions) ஆட்பட்டு இதுவரை காணாதபடி ஒருவர் நடந்துகொண்டால், ”இவருக்கு என்னாச்சு? ஏனிப்படி நடந்துகொள்கிறார்? ஏதேனும் பேய்பிடித்ததா? ஆவி இவருட்புகுந்ததா? சாமி, கீமி வந்துவிட்டதா?” என்று சுற்றியுள்ளோர் சொல்வாரல்லவா? அளவுமீறிய ஆற்றலுடன் கொஞ்சமுங் களைப்புறாது வேலை செய்பவரையுங்கூடச் சாமிவந்தவர்போல் செயற்படுவதாய் நாட்டுப்புறத்திற் சொல்வர். இதுபோன்ற வெளிப்பாடுகளை (நீண்ட நாள், குறுகிய நேர) மனப்பிறழ்வுகளென்றும், உடைபட்ட ஆளுமையின் (split personality) வெளிப்பாடென்றும் சொல்லி, விதப்பு மருத்துவங்களையும், நரம்பியல் மருந்துகளையும் இற்றை உளவியல் நாடச் சொல்லும்.  ஆனால் நாட்டுப்புறப் பழங்குடிப்பார்வையில் இவற்றை அல்மாந்த (அமானுஷ்ய)ச் செயற்பாடுகளாக்கிச் ”சாமியாடியைக் கொண்டுவா; வேப்பிலையால் மந்திரித்துவிடு; திருநீறுபூசு; குறிகேள்! படையல் போடு; பூசைநடத்து” என்றே நடவடிக்கையெடுப்பார். சங்க இலக்கிய வேலன்வெறியாட்டு போன்றவை இவற்றைச் சேர்ந்ததுதான் (வேலன் இன்றைக்குச் சாமியாடி. வெறியாட்டம் சாமியாட்டம்.) மேலே சொன்ன பேய், பிசாசு, ஆவி, சாமி ஆகிய வெவ்வேறு விதப்புகளுக்கான பொதுச்சொல்லே அணங்காகும். மேலேறுதல் என்ற கருத்தீடு இப்போது விளங்குகிறதா?

அணங்குடை அவுணர் = அணங்குள்ள அவுணரின். உரையாசிரியர் பலரும் அவுணரை அசுரராக்கித் தேவாசுரக் கதைகளைச் சொல்வார். அப்படியிருக்கத் தேவையில்லை. நாகர், இயக்கர், அரக்கர் (இதையே இராட்சதர், இராக்கதரென்பார்), பூதர், அசுரர் என்போர் வெவ்வேறு பழங்குடி எதிரிகள். இவரில் எத்தனைபேர் தமிழரின் எதிரிகள்? எத்தனைபேர் தமிழருள் கலந்து போனார்? என்பதெலாம் ஆய்வு விதயங்கள். வடபுலத் தென்புலக்கதைகளை இக்காலத்திற் கலந்துபேசுகிறோமா?- என்பதும் பெருமாய்வு. எதிரிகளென்று கற்பிக்கப்படுவதன் மிச்சசொச்சம் தமிழரிடமும் இருக்கலாம். அவுணர் உண்மையில் அசுரரா? அன்றி உவணரெனும் மலைக்குடியாரா?- புரியவில்லை.

(உவணம் = உயரமான இடம், மலை. வானம் போன்ற பொருளுமுண்டு. உவணர்>ஊணர்>ஔணர்>அவுணர் எனும் திரிவை எண்ணிப்பாருங்கள். வரலாற்றில் மிலேச்சரான ஹூணராய் இவரிருக்க வழி இல்லை. ஏனெனில் அவர் பொ.உ.5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பொதுவாக வெளியாரைக் குறிக்குஞ் சொற்கள் நம்மிடந் திரியலாம். ”கன்வ” எனும் மகதச்சொல் கனகவென நம்வாயில் திரிந்ததே? செங்குட்டுவன் தோற்கடித்த கனகவிசயன் மகத அரசனாகலாமெனச் ”சிலம்பின் காலத்திற்” சொன்னேன். அம்முகன்மையை நம்மிற் பலரும் உணரவில்லை. அயொனியர் நமக்கு யவனரானாரே?)

ஏமம் புணர்க்கும் = ஏமங் (safety) காக்கும்; சூருடை முழுமுதல் தடிந்த = சூரனின் உயிரிருந்த மாமரத்தை வெட்டி; பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் = பெரும்புகழ் கொண்ட கடுஞ்சின விறல்வேளின் (முருகனின்); களிறு ஊர்ந்தாங்கு = களிறு நகர்ந்தது போல்; வான்பிசிருடைய = வான்தெறிக்கும் துளிகளுடைய; வரை மருள் புணரி = மலையென மருளத்தகும் அலையை; வளி பாய்ந்து அட்ட =  காற்றுப் பாய்ந்து சிதைக்க; துளங்கு இரும் கமஞ்சூல் = அசையும் பெருநீரைச் சூலாக்கி; நளி இரும் பரப்பின் = பென்னம்பெரிதாய்ப் பரந்த; மாக்கடல் முன்னி = கருங்கடலில் (சமுத்திரம்) முன்சென்று

[தம்நாட்டுக் கடல்வணிகம் காப்பாற்றுதற்காகச் சேரர் கடல்வழிசென்று மேற்கே இலக்கத்தீவுக் கடற்கொள்ளையரைத் தாக்கியழித்த செய்தி இங்கே சொல்லப்படுகிறது. பொ.உ.மு.200 களுக்கு முன்னேயே யவனரோடும், உரோமரோடும் மேற்குவணிகம் தொடங்கியது. சேரலத்து மிளகும் கொங்கின் மணியும், சூர்ணி முத்துமெனப் பல பொருட்கள் ஏற்றுமதியாகின. மேற்கின் பல்வேறிடங்களிலிருந்து கொண்டு வந்த கொடிமுந்திரிக் (grapes) கள்ளும், தங்கமும், குங்குமப்பூவும் (Crocus sativus), சாம்பாணியும் (சாம்பிராணி) இங்கிறங்கின. முசிறி, தொண்டி, நறவில் தொடங்கி வடக்கே பாருகச்சம் (Barukaccha> Baroach) வரை வணிகம் நடந்தது. மூவேந்தரையும் (குறிப்பாகச் சேரர்), நூற்றுவர் கன்னரையும் (Satakarni) மகதம் அசைக்கமுடியவில்லை சோழரும், பாண்டியரும் கிழக்கு வணிகத்தில் சிறந்திருந்தார். சங்க இலக்கியத்திற் பெரிதும் பேசப்படும் பலவும் அரசியற் பொருளாதாரம் (political economy) தொடர்பானவை. எங்கெலாம் பொருளியற் தேவை எழுந்ததோ, அங்கெலாம் போரும் உடன்சென்றது. (Wherever economy demanded, war followed). பிற்காலத்தில் பொ.உ.1000க்குப் பின்னால் கிழக்குவாணிகம் தடைப்பட்டபோது, இராசேந்திர சோழன் சிரீவிசயத்தின் மேற் படையெடுத்துப் போனான்.]

விலங்குநர் = (இச்செயல்) தடுப்போரை (கடற்கொள்ளையரை); செவ்வாய் எஃகம் = கூர்(sharp)ஓர எஃகுவாளால் (இரும்புக்கால முதலடையாளங்களும் பழம் எஃகுப்பொருட்களும் தொல்லாய்வின் மூலம் தென்னகத்திலேயே கிடைத்துள்ளன. எஃகு = steel; எஃகம் = steel sword); அறுப்ப = அறுத்து; மனாலக்கலவை போல = குங்குமப்பூக் கலவைபோல்; அருநிறம் = செந்நிறம்; அருநிறம் திறந்த புண்ணுமிழ் குருதியின் = செந்நிறங் கொண்ட புண்ணுமிழ் குருதியால்; மணிநிற இருங்கழி = நீலப்பெருங்கழி, நீர்நிறம் பெயர்ந்து = நீரின் நிறம்மாற, அரண்கொன்று = (எதிர்த்தவரின்) காவலழித்து; முரண்மிகு சிறப்பின் = முரண் மிகு சிறப்பால்; உயர்ந்த ஊக்கலை = உயரூக்கம் கொண்டவனே!

[ஓர் இடைவிலகல். ”மனாலம்” என்பது இங்கே எழுத்துப்பெயர்ப்பாய் Minoan crete ஐயும், மனாலக்கலவை குங்குமப்பூக் கலவையையும் குறிக்கிறது. கிரீட்டிலிருந்துதான் பொ.உ.மு. 3000 - 1100 இல் குங்குமப்பூ மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பார்க்க: https://en.wikipedia.org/wiki/History_of_saffron. Saffron played a significant role in the Greco-Roman pre-classical period bracketed by the 8th century BC and the 3rd century AD. The first known image of saffron in pre-Greek culture is much older and stems from the Bronze Age. A saffron harvest is shown in the Knossos  palace frescoes of Minoan Crete, which depict the flowers being picked by young girls and monkeys. One of these fresco sites is located in the "Xeste 3" building at Akrotiri, on the Aegean island of Santorini—the ancient Greeks knew it as "Thera." These frescoes likely date from the 16th[ or 17th century BC` but may have been produced anywhere between 3000–1100 BC. They portray a Minoan goddess supervising the plucking of flowers and the gleaning of stigmas for use in manufacture of what is possibly a therapeutic drug. A fresco from the same site also depicts a woman using saffron to treat her bleeding foot. These "Theran" frescoes are the irst botanically accurate visual representations of saffron's use as an herbal remedy. This saffron-growing Minoan settlement was ultimately destroyed by a powerful earthquake and subsequent volcanic eruption sometime between 1645 and 1500 BC. The volcanic ash from the destruction entombed and helped preserve these key herbal frescoes.

தவிரக் குரு>குருங்கு என்பது தமிழிற் சிவப்புநிறங் குறிக்கும் சொல். குருங்குமம்>குங்குமம், நிறத்தை வைத்து இறக்குமதிப் பொருளுக்கு ஆன பெயர். (பருத்தி - ஒரு பிறந்தவிடப் பெயர். கொட்டை> cotton - இறங்கிய இடங்களில் ஏற்பட்ட பெயர்.) ”குருங்குமம்” பின்னால் (kurkema Aramaic இலும், krocos கிரேக்கத்திலும் என) மேலைநாடுகளிற் பரவும். அதேபொழுது azupirana என்ற akkadian சொல்லிலிருந்து Saffron என்ற இற்றை மேலைச்சொல் பிறந்தது. குங்குமப்பூ வணிகத்தையும் பதிற்றுப்பத்து வரியையுஞ் சேர்த்து விக்கிப்பீடியாவில் யாரேனுங் குறித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சேரலாதன், செங்குட்டுவனின் பழங்காலமும் (’சிலம்பின்’ காலமும்) மனாலக்கலவை என்ற கூட்டுச்சொல்லால் உறுதிப்படும். எத்தனை இந்திய இலக்கியங்கள் ”மனோலத்தைப்” பதிவுசெய்தன???] 

பலர்மொசிந்து ஓம்பிய = பலருங்கூடிக் காப்பாற்றிய; திரள்பூங்கடம்பின் = திரள்பூங் கடம்பமரத்தின்; கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்று = காவலுடைய அடிமரத்தை வெட்ட ஏவி, வென்று; எறிமுழங்கு பணைசெய்த வெல்போர் = (அதன்மூலம்) அடித்துமுழக்கும் பறைசெய்த வெல்போரினையும்; நாரரி நறவின் ஆர = நார்ச்சீலையால் வடித்த கள்ளையும் பருகும்; மார்பின் = மார்புடைய; போரடுதானைச் சேரலாத = போரடுக்கும் தானைகொண்ட சேரலாதனே! (எதிரியின் காவல்மரம்வெட்டி முரசுசெய்வதும், எதிரிக்கோட்டையழித்து, எள்விதைத்துக் கழுதைகொண்டுழுவதும் அன்றிருந்த மரபுகளாகும். எள்விதைத்து கழுதையாலுழுவதை மூவேந்தர் மட்டுமின்றிக் கலிங்கத்துக் காரவேலனுஞ் செய்தான். மூவேந்த மரபுகள் தென்னகம் முழுக்கப் பரவினவோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது.)

பரந்திலங்கு அருவியொடு = பரந்துவிளங்கும் அருவியொடு; கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி = முருக்குநிறை மலையில் துயிலும் கவரிமான்கள், கவிர் (Erythrina suberosa Roxb.), முள்முருக்கு (Erythrina stricta Roxb.), கலியாண முருக்கு (Erythrina variegata L.; also known as Erythrina indica) என்று 3 விதமான முருக்குமரங்கள் (Indian coral tree) உண்டு. (முருக்கையோடு முருங்கையைக் குழம்பவேண்டாம்.) கலியாண முருக்கு பொ.உ.8/9 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைக்கப்பட்டது. பெரும்பாலும் கவிரும், முள்முருக்கும் நம்மூர் மரங்களாகலாம். ("செம்முகை அவிழ்ந்த முண்முதிர் முருக்கு” என்பது அகம்:99.2) கவிரும் முருக்கும் 1200 அடி தொடங்கி 4000 அடிவரையில் குறிஞ்சிநிலத்தில் வளரும். முருக்கம்பூ ஒருவகையில் முருகனின் நிறங்குறிப்பது.

முருக்கு மரங்களைக் காட்டுத்தீப்பிழம்பு போல் பூக்கும் புரசு மரத்தோடு [Butea monosperma; காட்டுமுருக்கு, வெள்ளைப்புரசு. இதைச் செந்தூரப்பூ மரம் என்றுஞ் சொல்லுவர். ”பதினாறுவயதினிலே” திரைப்படத்தில் வரும் “செந்தூரப்பூவே” பாட்டு. சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் கங்காதீசர் கோயிலின் தலமரம். புரசை வடமொழியில் பலாசு/பலாசம் என்பார். இந்தியாவில் குறிப்பிடத்தக்க மரம். சென்னையிலிருந்து தில்லிபோகும் இருவாய்ப்-railway-பாதையில் Ballarshaவை எண்ணிக்கொள்ளுங்கள். இராபர்ட்கிளைவ் வங்காளத்திற் சண்டையிட்டுவென்ற பலாசி யுத்தம் எண்ணிப்பாருங்கள்.] பலரும் குழம்பிக்கொள்வதுண்டு. நானுங் குழம்பியிருக்கிறேன்.

கவரி = கவரிமான்கள், இவை இமையமலை அடிவாரத்திலும், சற்று உயரக்குன்றுகளிலும் அலைந்துதிரியும் யாக் எருமைகள். இவற்றின் மேனியை மூடினாற்போல் உரோமங்களுண்டு. குளிருக்காக இந்த முடி. இந்த எருமைகள் வெப்பநிலங்களில் வளரா. தென்னகத்தில் இவை கிடையா. இந்தியாவில் இவை இமையமலைப் பகுதியில் மட்டுமேயுள்ளன.

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம்வரின்”

என்பது குறள். பதிற்றுப்பத்தின் 11 ஆம் பாட்டு கவரிமானைக் குறிப்பதால் பாட்டிற் சொல்லப்படும் ஆரியர் வடக்கே இமையத்தின் அடியில் வாழ்பவரே என்ற கருத்து உங்களுக்கு வலுப்படும். (ஆரியர் என்ற சொல்லிற்கு noble என்று பார்ப்பதை வேறிடத்தில் பேசுவோம்.)  

நரந்தம் கனவும் = நரந்தம்புல்லைத் தின்னக் கனவுகாண்கிற, நரந்தம் புல் = நல்ல வாசனையோடு வளரும் புல். எலுமிச்சம் புல் என்றுஞ் சொல்லப்படும். [நரந்தம் என்ற தனிச்சொல் எலுமிச்சைக்கு முதலிற் பயன்பட்டு இங்குப் புல்லிற்கு வாசனை கருதி மாறிவந்தது. நார்த்தை, நாரங்கை (>orange) போன்ற சொற்களும் நரந்தத்தோடு தொடர்பானவை] நரந்தம்புல் ஆங்கிலத்தில் Cymbopogan எனப்படும்.புல்லிலிருந்து பெறப்படும் நரந்த (சிட்ரொனெல்லா) எண்ணெய் மணமூட்டும் பொருளாய்ப் பயனாகிறது. Cymbopogan citratus, Cymbopogan flexuosus, Cymbopogan martinii, Cymbopogan nardus எனப் பல்வேறு வகைகள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வளர்கின்றன. இங்கே Cymbopogan flexuosus என்று உத்தரப் பிரதேசத்திலும் வடக்கு பீகாரிலும் விளையும், இவற்றிற்கு வடக்கே இமையமலைடடியில் வளரும் புல் பேசப்படுகிறது. கவரிமான்கள் இந்தப்புல்லைத் தின்னக் கனவு காண்கின்றனவாம்.

ஆரியர் துவன்றிய = ஆரியர் தோற்றுப்போன; இங்கே வடக்கே இமையமலை அடிவாரம் வரைக்கும்போய் ஆரியரைத் தோற்கடித்தது பேசப்படுகிறது. சிலம்பின் வஞ்சிக்காண்டத்தில் இரண்டாம் படையெடுப்பிற்கான விவரிப்பில் முதற்படையெடுப்பை அசைபோட்டுச் சிலசெய்திகள் சொல்லப்படும். இதுபோன்ற படையெடுப்புக்கள் பொ.உ. 5 ஆம் நூற்றாண்டில் நடக்கவேயில்லை. (காய்தல் உவத்தலின்றி ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால்) சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் வெவ்வேறு செய்திகளும் சிலம்பின் வஞ்சிக்காண்டச் செய்திகளும் உறுதியாக இமையவரம்பன் சேரலாதன் காலத்தில் பொ.ய்.மு.120க்கு முன் நடந்த படையெடுப்பை உறுதிசெய்கின்றன. சங்ககாலத்தை பொ.உ.மு.600 இலிருந்து பொ.உ.150 வரை சொல்வதே சரியென்று விளங்கும். அடுத்தடுத்துப் பல பாடல்கள் இதை உறுதிசெய்கின்றன. தமிழர் வடக்கே போகவேயில்லை என்றுசொல்லிச் சங்ககாலத்தைக் குறைத்து மதிப்பிடுபவர் நாம் என்னசொல்லியுங் ஏற்கப்போவதில்லை. அவர் அடம்பிடித்துக் கொண்டேயிருப்பார்.

பேரிசை இமயம் = பெரும்புகழ் இமையமும், தென்னங் குமரியொடு ஆயிடை = தென்குமரியொடும் ஆகிய இடைப்பட்ட இடங்களின்; மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே. = செருக்குற்று நிலைத்த மன்னரின் மறம்கெடக் கடந்து; மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும் = மார்பிற்கிடந்த பசியமாலையும் நெற்றிப்பட்டமும் விளங்க; வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் = வலிமிகு பெரும்தந்தத்தால் பழிதீர்த்த யானையின்; பொலன் அணி எருத்த மேல் கொண்டு பொலிந்த = பொன்னணி எருத்தின்மேல் பொலிந்துகொண்டு சென்ற; நின் பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகுமே = பலரும்புகழும் உன் செல்வத்தை இனிதே கண்டோம்.

பாட்டின் மொத்தப்பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்...

அணங்குள்ள அவுணரின் ஏமங்காக்கும்
சூரனின் உயிரிருந்த மாமரத்தை வெட்டி,
பெரும்புகழ்கொண்ட கடுஞ்சின விறல்வேளின்
களிறு நகர்ந்ததுபோல்,
வான்தெறிக்கும் துளிகளுடைய
மலையென மருளத்தகும் அலையைக்
காற்றுப்பாய்ந்து சிதைக்க,
அசையும் பெருநீரைச் சூலாக்கி,
பென்னம்பெரிதாய்ப் பரந்த கருங்கடலில்
முன்சென்று,
(இச்செயல்) தடுப்போரைக்
கூரோர எஃகு வாளால் அறுத்து;
குங்குமப்பூக் கலவைபோல்
செந்நிறங் கொண்ட புண்ணுமிழ் குருதியால்,
நீலப்பெருங்கழி நீரின் நிறம்மாற,
(எதிர்த்தவரின்) காவலழித்து,
முரண்மிகுசிறப்பால்,
உயரூக்கம் கொண்டவனே!

பலருங்கூடிக் காப்பாற்றிய,
திரள்பூக்களும் காவலுமுடைய,
கடம்பின் அடிமரத்தை வெட்ட ஏவி,
வென்று, (அதன்மூலம்)
அடித்துமுழக்கும் பறைசெய்த வெல்போரினையும்
நார்ச்சீலையால் வடித்த கள்ளையும்
பருகும் மார்புடைய
போரடுக்கும் தானைகொண்ட சேரலாதனே!

பரந்துவிளங்கும் அருவியொடு
முருக்குநிறை மலையில் துயிலும் கவரிமான்கள்
நரந்தம்புல்லைத் தின்னக் கனவுகாண்கிற,
ஆரியர் தோற்றுப்போன,
பெரும்புகழ் இமையமும்
தென்குமரியொடுமாகிய
இடைப்பட்ட இடங்களிற்
செருக்குற்று நிலைத்த மன்னரின்
மறம்கெடக் கடந்து
மார்பிற்கிடக்கும் பசியமாலையும்
நெற்றிப்பட்டமும் விளங்க,
வலிமிகு பெரும்தந்தத்தால்
பழிதீர்த்த யானையின்
பொன்னணி எருத்தின்மேற்
பொலிந்துகொண்டு சென்ற,
பலரும்புகழும் உன்செல்வத்தை
இனிதே கண்டோம்!

[தொடரும்]
__________________________________________________________________










இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________


No comments:

Post a Comment