திரு.துரை சுந்தரம்
தமிழ் மரபு அறக்கட்டளை
தமிழ் மரபு அறக்கட்டளை
அண்மையில் தொல்லியல் துறையின், தென்னிந்திய ஆலய ஆய்வுப்பிரிவு கண்காணிப்பாளர் மகேஸ்வரி அவர்கள் கூறியதாகத் தினமலர் நாளிதழில் ஒரு செய்தி
வெளியானது. அவருடைய கூற்று வருமாறு :
”கல்வெட்டுகள் சிதைப்பு, திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள், ஆகிரமிப்புகள், நகரமயமாதல் போன்றவைகளால் நம் நாட்டுப் பொக்கிஷங்களின் பாரம்பரியத் தனமை மறைந்து வருகிறது.”
மேற்கண்ட கூற்றில் சுட்டப்பெறும், திருப்பணிக்காகச் செய்யப்படும் தவறான புனரமைப்புகள் காரணமாகப் பல கோயில்கள் அவற்றின் பழமையான தோற்றத்தை முற்றிலும் இழந்து (கல்வெட்டுகள் சிதைக்கப்படுமேயானால், கல்வெட்டுகளையும் இழந்து) பழங்கோயில் என்னும் வரலாற்று அடையாளமே தெரியாமல் போவது வேதனைக்குரியது. அண்மையில், காங்கயம் வட்டத்தில் பயணம் மேற்கொண்டபோது, பார்ப்பினி என்னும் ஊரில் உள்ள பெரியநாயகியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியைப் பார்த்தேன்.
பார்ப்பினி பெரியநாயகியம்மன் கோயில் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2007-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலில், கி.பி. 1685-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு இக்கோயிலில் இருப்பது பதிவாகியுள்ளது. இக்கோயிலின் பழந்தோற்றம் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. கோயில். முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டுத் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. கோயில், கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய கூறுகளோடு 1685-க்கு முன்பே இருந்துள்ளது. 1685-இல் முன்மண்டபத்தைக் கண்ணந்தை, காடை குல கோத்திரத்தைச் சேர்ந்த காணியாளர்கள் மூவர் கட்டுவித்த செய்தியை மேற்சொன்ன கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டில் பார்ப்பினி என்னும் இந்த ஊர் வீரசோழபுரம் என்னும் பழம்பெயரால் குறிக்கப்படுவதினின்றும் கோயிலின் பழமையை அறிந்துகொள்ளலாம். ஆனால், இன்று தரை மட்டம். நூற்றுக்கணக்கான கற்கள் எறிந்து கிடக்கின்றன. கீழுள்ள படங்கள், கோயிலின் நிகழ்கால நிலையைச் சொல்லும். இருந்த ஒரே ஒரு கல்வெட்டும், இக் கற்குவியல்களுக்கிடையில் எங்கேயுள்ளதோ?
கோயில் தரைமட்டம்-திருப்பணி தொடக்கம்
எறிந்து கிடக்கும் கற்கள்
தொல்லியல் துறைக்கும் அறநிலயத்துறைக்கும் உள்ள தொடர்பு அல்லது உறவைப் பேணுகின்ற கடமை தொல்லியல் துறைக்கு இல்லையா? நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட எந்தப்பொருளும் தொன்மையானது என வரையறை செய்கிறது தொல்லியல்துறை . மாவட்டம் தோறும் தொல்லியல் துறையின் அலுவலகம் ஒன்று இயங்கிவருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகையாக ஒரு முந்நூறு கோயில்கள் இருக்கக்கூடும். தொல்லியல் துறை, அம்மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளின் துணையோடு, ஒரு கல்லூரி ஐம்பது கோயில்களுக்குப் பொறுப்பு எனக் கோயில்களை ஒதுக்கி, கல்லூரியில் பயிலும் இன்றைய இளைய தலைமுறையினரை ஊக்குவித்து, ஒவ்வொரு ஆறுமாத காலத்துக்குள் எல்லாக்கோயில்களும் கள ஆய்வுக்குட்படுமாறு செய்யலாம். அத்துணைக் கோயில்களைப்பற்றிய தரவுகளையும் கணினியில் பதிவு செய்து, கோயில் நிருவாகத்தினரோடு தொடர்பு (நல்லுறவு?) கொண்டு கோயிலின் அனைத்துப்பணிகள் பற்றிய செய்திகளும் தொல்லியல் துறைக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும் என்னும் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். துறை அலுவலர்கள் மேற்பார்வை செய்யலாம். இளைய தலைமுறையினர் வரலாற்று அறிவு பெறுவர். கோயில்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என நம்பலாம்.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
இந்து அறநிலையத்துறையை நிகர்த்த ஊழலும் செயலின்மையும் மலிந்த ஒரு துறை இனிதான் உருவாகி வர வேண்டும். அந்தந்த ஊர்களில் இருக்கும் இந்து சமுதாயங்களிடம் - பட்டியல் சமுதாயம் உட்பட - அரசியல் பார்வையில்லாமல், சமய- பண்பாட்டு-வரலாற்று அறிவும் ஆர்வமும் கொண்ட குழுவினரிடம் கோவில்களை ஒப்படைத்துவிட்டு அரசு ஒதுங்கிக் கொள்ளலாம். REACH பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் அறிவியல் ரீதியாகவும் பண்பாட்டு உணர்வுடனும் கோவில்களை மறுசீரமைப்பு செய்கின்றன.
ReplyDelete