Sunday, November 27, 2016

திசை திரியும் வயங்கு வெண்மீன்

--முனைவர்  ப. பாண்டியராஜா




பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பட்டினப்பாலையில் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் காவிரியின் சிறப்பையும், கரிகால் பெருவளத்தான் மாண்பையும் சிறப்பித்துக் கூறுகிறார். பருவமழை பொய்த்துப்போனாலும் காவிரி வற்றாத நீர்வளம் கொண்டிருக்கும் என்று கூறவந்த புலவர் தன் பாடலை இவ்வாறு தொடங்குகிறார்:

    வசையில்புகழ் வயங்குவெண்மீன்
    திசைதிரிந்து தெற்குஏகினும்
    தற்பாடிய தளியுணவின்
    புள்தேம்பப் புயல்மாறி
    வான்பொய்ப்பினும் தான்பொய்யா
    மலைத்தலைய கடற்காவிரி (- பட்: 1-6)

இங்கு வயங்கு வெண்மீன் என்று கூறப்படுவது சுக்கிரன் எனப்படும் வெள்ளி என்ற கோள் (கிரகம்) ஆகும். இந்த வெள்ளி தான் வழக்கமாகச் செல்லும் பாதையினின்றும் திரிந்து தெற்குப்பக்கம் சென்றால் வானம் பொய்க்கும் – அப்படிப் பொய்த்தாலும் காவிரி பொய்க்காது என்கிறார் புலவர். இது அணைகள் கட்டப்படாத அன்றைய காவிரி.

பட்டினப்பாலை மட்டுமல்ல, இன்னும் சில இலக்கியங்களும் வெள்ளி திசைமாறிப் பயணிப்பதன் விளைவுகளைப் பற்றிக் கூறுகின்றன.

    இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்
    அந்தண் காவிரி வந்துகவர் பூட்ட 

- என்கிறது புறநானூறு (பாடல் 35).

    

    கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
    விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
    ………………………………………………………
    காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை 

- என்கிறது சிலப்பதிகாரம் (காதை 10:102-108)

    

    கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
    தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை 

- என்கிறது மணிமேலை (பதிகம்:24,25)

எனவே இது அன்றைய தமிழரின் நம்பிக்கை என்பது உறுதியாகிறது.


இந்த ஆண்டில், இன்னும் சில நாட்களுக்கு, பகலவன் மறைந்த பின்னர் மேற்குத்திசையில் பார்த்தால் சற்றே தென்புறத்தில் ஒளிர்வுள்ள ஒரு வெள்ளைப் புள்ளியைக் காணலாம். இதுதான் இப் பாடலில் குறிப்பிடப்படும் வயங்கு வெண்மீன்.

கீழ்க்கண்ட படம் 2016 -இல் ஒரே இடத்தில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளி மாலையில் தோன்றும் நிலைகளைக் காட்டுகின்றது. இதில், வெள்ளி தெற்குப்பக்கம் எழுந்து உயர்ந்து, பின்னர் வடக்கு நோக்கி நகர்வதைக் காணலாம்.

 

இந்த ஆண்டு வெள்ளியானது சரியான மேற்குத்திசைக்குச் சற்றே வடக்குப்பக்கத்தில் ஆகஸ்ட்டு மாதம் தோன்றி, மெதுவாக மேலெழுந்து, பின்னர் தெற்கு நோக்கிப் பயணித்து, இப்போது தெற்கு எல்லையில் இருக்கிறது. இப்போதும் இன்னும் சில மாதங்களுக்கும் வெள்ளி மேற்கில் வெகுநேரம் காட்சியளிக்கும். அதன் பின்னர் மெதுவாகக் கீழிறங்கி அடுத்தாண்டு ஏப்ரல் தொடக்கத்தில் மறைந்துவிடும்.

இவ்வாறு வெள்ளி தெற்குப்பக்கம் நகர்வது மிகவும் அரிதானது. சாதாரணமாக இது வடக்குப்பக்கமே காணப்படும். ஆனால் இவ்வாறு இந்த ஆண்டு வெள்ளி தெற்குப்பக்கம் ஏறி வருகிறது.

இதுவே வடகிழக்குப் பருவக்காற்று பொய்த்து வறட்சி ஏற்படுவதற்கான அறிகுறி என பண்டை இலக்கியங்கள் கூறுவதைப் பார்த்தோம்.

இதே மாதிரி நிகழ்வு 2013 டிசம்பரில் நிகழ்ந்தது. அந்த ஆண்டும் வ.கி.பருவமழை பெருமளவு பொய்த்துப்போனதைக் கண்டோம்.
பார்க்க: http://www.deccanchronicle.com/131227/news-current-affairs/article/ne-monsoon-tamil-nadu-worst-18-years

இந்த ஆண்டும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது நீண்ட வறட்சிக்கான எச்சரிக்கையோ என அஞ்சத் தோன்றுகிறது.



 




___________________________________________________________
  
 

DR. P.PANDIYARAJA
ppandiyaraja@yahoo.com          
http://sangacholai.in/
http://tamilconcordance.in/
___________________________________________________________




No comments:

Post a Comment