Thursday, November 3, 2016

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 4

- இராம.கி.

அடுத்தது நற்றிணை 170 ஆம் பாட்டு.. பாடியவர்பெயர் தெரியவில்லை. மருதத்திணை அழகியொருத்தி விழவுக்களம் வர, அவளழகு கண்டு அதிர்ந்துபோய், வேறு சிலர் தம்முள் பேசிக் கொண்டது. உரையாசிரியரின் சுவடிக்குறிப்பு ”தோழி. விறலிக்கு வாயில் மறுத்தது” என்றேசொல்கிறது. பாட்டில்வரும் ”வன்மை” என்ற சொல்லாட்சிகண்டு விறலியென்று சொன்னாரா, தெரியவில்லை. விறல் = வன்மை, வல்லமை. முன்பகுதியிற் சொன்னதுபோல் இங்கும் ஆரியர் தோற்றசெய்தி சொல்லப்படுகிறது.

மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து, செறி குறங்கின்
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;

எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்;
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்,
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?


என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

மடக்கண், தகரக்கூந்தல், பணைத்தோள்,
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து,
செறி குறங்கின் பிணையல் அம் தழை தைஇ,
துணையிலள் விழவுக்களம் பொலிய வந்துநின்றனளே;
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்;

பேர் இசை முள்ளூர் ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு,
பலர் உடன் கழித்த ஆரியர் துவன்றிய
இவள் வன்மை தலைப்படினே,
நம் பன்மையது எவனோ?

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம்.

மடக்கண் = இளங்கண்; முதிர்ந்தகண் சுருக்கம்விழுந்து அகவையைக் கூட்டிக்காட்டும். இன்னொருவிதத்திற் பார்த்தால், ”வளைந்தகண்” எனலாம்; மடங்குதல் = வளைதல்; அழகுற வளைந்த கண் என்றுமே மாற்றாரை ஈர்க்கும். தகரக்கூந்தல் = மயிர்ச்சாந்து பூசிய கூந்தல்; தகர்=பொடி; தகரம்=விதப்புப்பொடி; தலைமயிர்க்கு இடும் ஒருவகைச் சாந்து. (சந்தனம் மட்டுமே சாந்தல்ல. பூசும் எல்லாப் paste களுமே சாந்துகள்தான். சிமிட்டிச்சாந்து. சுண்ணாம்புச்சாந்தென்று சுவரிற்பூசுவதுஞ் சாந்துதான். ”சாந்தின்” பொருண்மையை நாம் உணரவில்லை.) இக்காலத்தில் இந்துலேகா, கேசவர்த்தினி போன்ற பொரிம்புத் (branded) தைலங்களைப் பூசிக் கொஞ்ச நேரமிருந்து, அதன்பின் பெண்கள் குளிக்கிறாரே, அதேபோல சங்ககாலப் பெண்கள் தகரச்சாந்தைத் தலையிற் பூசி நீராடியிருக்கிறார். இத்தைலங்கள் முடிநிறத்தை மாற்றா. முடியடர்த்தியையும், நீளத்தையுங் கூட்டும்..

(எங்கள் வீட்டிலேயே 50/55 ஆண்டுகளுக்குமுன் ஆண்களும், பெண்களும் செம்பருத்திச்சாறு கலந்த தைலத்தைக் காய்ச்சி வடிகட்டித் தலையிற் பூசிக் குளித்திருக்கிறோம். இத்தைலம் செய்வதற்காக மதுரையிலிருந்து ஒருவர் வீட்டிற்கு வருவார். சாறுபிழிந்து எண்ணெய்யோடு சேர்த்துக் காய்ச்சுவது 2,3 நாட்கள் நடக்கும். எம்வீட்டிலிருந்து ஒவ்வொரு சொந்தக்காரருக்கும் தாத்தாவின் மேற்பார்வையில் புட்டில் (bottle) புட்டிலாய் தைலம் போகும். இளம் அகவை நினைவுகள் மங்கலாய்த் தோன்றுகின்றன. இச்செய்முறையைக் கற்காது போனேன். பொன்னாங் கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, செம்பருத்தியிலை, வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து எண்ணெய் காய்ச்சுங்குறிப்பை எங்கோ குறித்துவைத்தேன். இப்போது கிடைக்கவில்லை. ”மயிர்ச்சாந்து செய்ய வழியென்ன?” என்றும் தெரியவில்லை. நம் மரபறிவுகளை பலரும் கொஞ்சங்கொஞ்சமாய்த் தொலைக்கிறோம்.)

பணைத்தோள் = மூங்கில்போன்ற தோள்; வார்த்த வால் எயிற்று சேர்ந்து = அச்சுவார்த்ததுபோல் வெண்பற்கள் சேர்ந்து; செறி குறங்கின் = செறிந்த தொடைகள்;

”குறங்கின்” விதப்பை (speciality) இங்கு சொல்லியே ஆகவேண்டும். குறங்குதல் = ஒரு தண்டு/கயிற்றின் மூலம் உருளையைச் சுழற்றுதல். பம்பரத்திற் கயிறிட்டிழுத்துச் சுழற்றுகிறோமே, அது எப்படி?. மிதிவண்டி பயிலும் சிறார், வண்டியுயரம் கூடின், முக்கோணச் சட்டத்துள் கால்கொடுத்துக் குறங்கடிப்பாரே (crank pedal), அது எப்படி? இடுப்பெலும்பின் கீழே மூட்டிச் சேரும் தொடையெலும்பைத் தசையாற்புரட்டித் திருக (turn) முடிகிறதே? தோளோடு மேற்கைசேரும் மூட்டிலும் திருக்கை (torsion) ஏற்படுத்தமுடிகிறதே? ஊர்க்கேணிகளில் இராட்டினக் கயிற்றின் ஒருபக்கம் நீர்வாளியும் இன்னொரு பக்கம் கையிழுப்பும் சேர்கையில், ஒவ்வோர் இழுப்பிலும் இராட்டினஞ் சுழன்று, நீர்வாளி குறிப்பிட்ட உயரம் எழுவதெப்படி?.கைமாற்றி அடுத்தகையால் கயிற்றைக்குறுக்கி இச்செயலைத் தொடர்வது எப்படி? ஒருபக்கம் நேர்விசை கொண்டு இன்னொரு பக்கம் சுழற்றுவதைப் பழந்தமிழர் குறங்குதலென்பார். குறுதல் = மேலிழுத்து வாங்குதல் to pull up. 'கயிறு குறு முகவை” (பதிற்றுப் பத்து. 22:14)

[குறுதல், குறங்குதல் என்பது 2000 ஆண்டுச் சிந்தனை. குறங்கு என்ற சொல் crank எனச் செருமானிய மொழிகளிற் பயில்வதை ஆங்கிலச் சொற்பிறப்பு.அகரமுதலிகள் crank (n.) "handle for turning a revolving axis," from Proto-Germanic base *krank-, and related to crincan "to bend, yield" என்று பட்டறிவு தெரியாமற்கூறும். நாமோ குறங்கைத் தொலைத்து கிராங்சாவ்ப்ட்டென எழுதுகிறோம். தொடையியக்கம், தோளியக்கம், பம்பரம், குடைராட்டினம் போன்ற பட்டறிவுகளை மறந்து, இது ஏதோ மேலையறிவியல் நமக்குப் புதிதாய்ச் சொல்லியதென மருண்டுகொள்கிறோம். மாறாகக் குறங்குத்தண்டு = crankshaft என்று எளிதாய் நம்மூர்ச் சிந்தனை வழி சொல்லிப்போகலாம்.]

பிணையல் = (என எல்லாம்) பிணைந்தவள்; அம் தழை தைஇ = அழகியதழையை தைத்தணிந்தவள்; இப்படிப் பிணைத்து அமைந்தவள் பெருநகரத்தவளோ, பெருஞ்செல்வக்காரியோ அல்லள். நாட்டுப் புறத்தாள். பருத்தியாடையோடு, தழையாடையும் கலந்தே அன்றணிந்தார். தழையைத் தைத்தல் என்பதை நாட்டுப்புறங்களில் ”இலைகளாலான தொன்னையைத் தைத்தல், சாப்பிடும் தாமரையிலையைத் தைத்தல்” போன்ற சொல்லாட்சிகளின் வழி உணரலாம். துணையிலள் = துணையில்லாது; விழவுக்களம் பொலிய வந்து நின்றனளே = விழாக்களம் பொலிய வந்துநின்று விட்டாள்; எழுமினோ எழுமின் = எழுந்திருங்கள், எழுந்திருங்கள்; எம் கொழுநற் காக்கம் = எம் கணவரைக் காப்போம்

பேர் இசை முள்ளூர் = பெரிதும் புகழ்பெற்ற முள்ளூரில்; திருக்கோவலூருக்கு NNE திசையில் கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவில் முள்ளூர் மலை (இன்று இது பக்கமலையென்றே அழைக்கப்படுகிறது.) வழி முள்ளூருள்ளது. தென்பெண்னை ஆற்றங்கரைத் திருக்கோவலூரை மலையர்கள் ஏன் தலைநகராக்கினாரென்பது தெரியவில்லை. திருக்கோவலூருக்கு மிக அருகிலுள்ள மலையென்பது (முள்ளூர்ப்) பக்கமலை தான். மலையைவிட்டு வெளியே வந்தால் 4 கி.மீட்டரில் இன்றுள்ள முள்ளூரெனுஞ் சிற்றூர் வரும். இதில் இன்றுவாழும் குடும்பங்கள் 100க்கும் குறைவே. இதுதான் பழைய முள்ளூரா? அன்றி மலைக்குள் வேறொரு முள்ளூரிருந்ததா? முள்ளூரில் கோட்டையிருந்ததா? இங்கே சண்டை போடவேண்டிய காரணமென்ன?- என்பதும் தெரியாது. மலையன்படைகளோடு ஆரியர்படை சண்டையிட்டது இப்பாடலாற் தெரிகிறது. தொல்லாய்வர்தான் முள்ளூரின் எச்சங்களை அகழ்ந்துபார்த்துச் சொல்லவேண்டும்.

சிற்றூரான முள்ளூர் தகடூரிலிருந்து ஏறத்தாழ 172 கி.மீ. தொலைவுகொண்டது. முள்ளூரிலிருந்து திருக்கோவலூர்வரை அன்று காடுகளே இருந்தன. அன்று (முள்ளூர்ப்) பக்கமலை மட்டுமே மலையமான் நாட்டிற் சேர்ந்ததல்ல. திருக்கோவலூருக்கு மேற்கே 50, 60 கி.மீட்டரில் இன்னும்பெரிய கல்வராயன் மலையிருக்கிறது. அது இன்னுமடர்ந்து அந்தப்பக்கம் சேலம் வரை பரவியிருந்தது. மலையமான் நாடென்பது மலைகளாலானதே. சங்ககாலத்தில் தகடூர்வழி தமிழகம்புகுவதே வடக்கிருந்துவரும் படையினருக்கு உகந்ததாகும். தக்கணப்பாதையின் முடிவில் கோதாவரிக்கரையில் நூற்றுவர்கன்னரின் படித்தானத்திலிருந்து தகடூருக்கு வர நேர்வழியுண்டு. இற்றை ஆந்திரவழி தமிழகம் நுழையும் பாதைகள் சங்ககாலத்திற் கிடையா. தகடூரிலிருந்து நேர்கிழக்கே வந்தால் மலையமான் நாட்டிற்கு வராது முடியாது. அதியமான் நெடுமானஞ்சிக்கும் மலையமான் திருமுடிக்காரிக்கும் சங்ககாலத்தில் போரேற்பட்டதும் இயற்கையே. அடுத்தடுத்த நாடுகள் பகைமையிலிருப்பது பலபோதுகளில் நடந்துள்ளது. அதுவொருவகையில் இனக்குழுப்பகையின் மிச்சசொச்சம். இப்பாடலில் சொல்லப்படும் மலையன் திருமுடிக்காரியா? அன்றி அவன்மகனா? - என்றுஞ் சொல்லமுடியவில்லை. கடையெழு வள்ளல்களின் காலத்தை இன்னும் துல்லியமாய் நான் கணித்தேனில்லை. ஆனால் பாடலிற் சொல்லப்படும் மலையன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்தவனே என்பதில் எந்த ஐயமுமில்லை.

ஆரியர்படை தமிழகம் வந்தது வரலாற்றுக்காலத்தில் 4,5 முறைகள் என்று சொல்லமுடியாது. அசோகனின் தந்தை பிந்துசாரன் காலத்திலும், அடுத்து முந்தையப் பாடல்விளக்கத்தில் சொன்ன மாதிரி பொ.உ.மு. 120க்கு அருகிலும் தான் இருமுறை வடபுலத்திலிருந்து படையெடுப்பு நடந்திருக்கிறது.. இதேபோற் சங்ககாலத்தில் தமிழர் வடக்கே படையெடுத்துப்போனது பொ.உ.மு.460க்கு அருகில் முதற்கரிகாலன் காலத்திலும், இரண்டாவதாய் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெயரில் செங்குட்டுவன் படையெடுத்துப் போனதும் (இது பொ.உ.மு.120 க்கு முன்னோ, பின்னோ), மூன்றாவதாய்ச் செங்குட்டுவனின் இரண்டாம் படையெடுப்பும் (கண்ணகிக்குக் கல்லெடுக்கப்போனது) என்றும் அமையும். பாண்டியர் படையெடுப்பு வடக்கே போனதா? - என்பது இன்னும் எனக்குத் தெரியாது.       .

ஒள்வாள் மலையனது = ஒளிரும் வாள் கொண்ட மலையனின்; ஒரு வேற்கு ஓடியாங்கு = ஒருவேலுக்கு ஓடியது போல்; பலர் உடன் கழித்த = பலருடன் கூடிவந்த; ஆறியர் துவன்றிய = ஆரியர் தோற்றுப்போனார்; துவலுதல்>துவளுதல் = சோர்ந்துபோதல், தோற்றுப்போதல். அழிதல், சாதல். இவள் வன்மை தலைப்படினே? = இவளுடைய வல்லமைக்குத் தலைப்பட்டால்; நம் பன்மையது எவனோ = நம்முடைய பன்மை எந்த மூலைக்கு வரும்? (இத்தனை பேரிருந்தாலும், இவள் வல்லமைக்கு முன் நாம் எந்த மூலைக்கு வருவோம்?)

பாட்டின் மொத்தப்பொருள் மிகச்சிறியது:

இளங்கண், மயிர்ச்சாந்து பூசிய கூந்தல், மூங்கில்போன்ற தோள், அச்சுவார்த்தது போல் வெண்பற்கள், ஆகியவை சேர்ந்து செறிந்த தொடையோடு பிணைந்து, அழகிய தழையைத் தைத்தணிந்து, துணையில்லாது தனியே விழவுக்களம் பொலியும்படி வந்து நிற்கிறாளே? இவள் எப்பேர்ப்பட்டவள்? எல்லோரும் எழுக; எம் கணவன்மாரைக் காப்போம். பெரிதும் புகழ்பெற்ற முள்ளூரில் ஒளிரும் வாள்கொண்ட மலையனின் ஒருவேலுக்கு ஓடியதுபோல் பலருடன் கூடிவந்த ஆரியர் தோற்றுப்போனார் இவள் வல்லமைக்குத் தலைப்பட்டால் நம் பன்மை எந்த மூலைக்கு வரும்?

[தொடரும்]
__________________________________________________________________












இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________

1 comment:

  1. நற்றிணையின் சில பாடல்களுக்கு எழுதிய பாடலாசிரியர் யார் என ஒரு காலத்தில் தெரியாமல் இருந்தது. பேரா அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் பின்னர் அனைத்து பாடல்களுக்கும் ஆசிரியர் யார் என உறுதி செய்தார். அவர் தொகுப்பாளராக வெளியிடப்பட்ட நற்றிணை தொகுதியில் அனைத்து ஆசிரியர் பெயர்களையும் அறியலாம், அய்யா. வணக்கம்.

    ReplyDelete