Sunday, October 30, 2016

தீபாவளி வாழ்த்துக்கள்

- இராம.கி.

திடீரென்று அலுவ வேலையாற் பணிக்கப் பெற்று, மறுபடி சென்னை. இன்று காலை வந்தேன். நாலே நாட்களில் சவுதி செல்ல வேண்டும்.

வான்பறனை கீழிறங்கும் போது, அதன் செலுத்தியார் சென்னை அருகாமை வந்தவுடன் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி, இருக்கைகளை நேராக்கிக் கொள்ள நம்மைப் பணிக்கிறார். பறனை கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது. கண்ணாடிச் சாளரத்திற்கு வெளியே பனி கலந்த மேக மூட்டம். எத்தனை பேர் இதற்குப் பொறுப்பு? நகரம் எங்கிலும்? வழமையான சென்னை. அதன் வேடிக்கைக் கூத்துகள்.

அருகே இருந்த பிரஞ்சுப் பெண்மணி, இந்த மேக மூட்டத்திற்குக் காரணம் கேட்கிறார். நான் "நாலைந்து நாட்களாக நல்ல மழை; சில இடங்களில் நகரத்துள் வெள்ளம்; வடியச் சில நாட்கள் ஆகலாம்; தவிரத் தீபாவளிநாள்; முன்னாளின் இரவிலும், இன்று அதிகாலையிலும் வெடிகள், மத்தாப்புக்கள் என்று பலதும் கொளுத்தப் பட்டிருக்கும்; அதனால் எழுகிற புகை இந்தப் பனியோடு கலந்து கலையாத மேக மூட்டத்தைக் கிளப்பிவிட்டிருக்கும்", என்று விளக்கம் சொன்னேன்.

"என்னது வெடியா? நேற்று வந்திருக்கலாமே? வாண வேடிக்கை அழகைப் பார்த்திருக்கலாமே?" என்று என்னிடம் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு தன் தோழியரோடு பிரஞ்சில் அதை ஆர்வத்தோடு சொல்கிறார்.

"தீபாவளி எதற்குக் கொண்டாடுகிறார்கள்?" என்ற அவரது கேள்விக்கு, ஓரளவு சுருக்கமாக கூடவே விரைவாக மறுமொழி சொல்லி முடிக்கிறேன்.

பறனை ஓடுகளத்தைத் தொட்டுவிட்டது. உள்ளே ஈரப்பதம் மாறிக் கொண்டிருப்பதை உணருகிறேன்.

வான்பாலத்தை அணைந்தாயிற்று.

நான், வான்பறனைப் பணிப்பெண்ணுக்கு முகமன் சொல்லி தீபாவளி வாழ்த்தும் சொல்லி வெளியேறுகிறேன். அந்த பகுரைனி அரபுப் பணிப்பெண் வியந்து கொள்ளுகிறாள். முகம் நிறையப் புன்சிரிப்பு.

வெளியே வந்து வண்டியில் ஏறி வீட்டிற்குப் புறப்படும் போதும் மேக மூட்டம் கலையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே மேகமூட்டம் தான். மழை இருந்தாலும், இல்லாவிட்டாலும். நகரத்தில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையெங்கும் ஈரம்; அதன் மணம்; மணத்துள் ஒரு பாந்தமான உணர்வு. இதுதான் சென்னை. உள்ளிழுத்துக் கொள்ளுகிறேன். நெஞ்சுகள் நிறையட்டும்.

இந்த மண் தாகத்தால் ஏங்கியதே? தாகம் அடங்கியதோ? வழி நெடுகிலும் அஞ்சடிகளில் நாலைந்து நாட்களில் முளைத்த புல்வெளிப் பச்சை. ஆங்காங்கே சாலைகளில் ஈயென்று வாய் பிளந்த பள்ளங்கள்; மதகு இல்லாச் சிறு சிறு நீர்த்தேக்கங்கள். எங்கள் நகரம் மாறவே மாறாதோ?

நான் வாழும் பகுதிக்கு அண்மையில் வந்தாயிற்று. "நிறுத்துக்கள். அங்கு ஏதோ ஒரு சிறுவன் வெடி வைக்கிறான்" என்று உந்து ஓட்டுநருக்குச் சொல்லுகிறேன். ஆயிரம் இழைச் சீனச் சரவெடி (இப்பொழுதெல்லாம் சீனவெடி என்ற சொல்லே இளையருக்குத் தெரிவதில்லை. எல்லாம் தௌசண்ட் வாலா தான். எங்கோ மரபுத் தொடர்புகள் அறுந்து கொண்டு இருக்கின்றன. வணிக வேகம் சிந்தனையை மறைக்கிறது.) வெடி காதை அடைக்கிறது. புகை கண்ணை மறைக்கிறது.

நின்று காத்து வண்டி தொடருகிறது.

வீட்டுக்கு வந்தாயிற்று; எண்ணெய்க் குளியல் செய்தே ஆகவேண்டும் என்று துணையாள் அடம் பிடிக்கிறாள். அவள் பேச்சுக்கு மறுபேச்சு உண்டோ? குளியல் ஆயிற்று. புத்தாடைகள் வீட்டில் குத்து விளக்கிற்கு எதிரே. இதையெல்லாம் சொல்லவேண்டுமோ? மஞ்சள் தடவி, பக்கத்தில் மாதிரிக்குக் கற்கண்டு வடையை ஏனம் நிறைய வைத்துப் படைத்து, பல்லாண்டு சொல்லித் தண்டனிட்டு, வணங்கி, புத்தாடைகளை எடுத்துக் கொள்ளுகிறோம்.

கற்கண்டு வடையை எத்தனை நாளுக்கு அப்புறம் பார்க்கிறேன்? நாக்கில் நீர் ஊறுகிறது. "அதெல்லாம் முடியாது கோயிலுக்குப் போய்வந்த பிறகுதான்" என்கிறாள் மனைவி. அவளை ஆற்றுப் படுத்தி என் வழிக்கு மாற்றுகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரிலும், தொலைக் காட்சியிலும் நடைபெறுகின்றன.

ஆயிற்று; கோயிலுக்குப் போக வேண்டியதுதான். எங்கள் வீட்டின் முன்னும் ஒரு சீனச் சர வெடி (போன ஆண்டு ஆயிரங் கண்ணிச் சர வெடி வாங்கிய என் மனையாள் இந்த ஆண்டு நூறு கண்ணிச் சரவெடி தான் வாங்கியிருக்கிறாள்.)

இதோ, கோயிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியே உறவினர், நண்பர்கள் பார்த்துத் திரும்பவேண்டும்.

எப்படியோ எதிர்பாராமல் சென்னைக்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு தீபாவளி. எப்பொழுதும் உள்ள சடங்கு அதே கதியில் தொடர்கிறது. நரகாசுரன் எதற்காகத் தீபாவளியைக் கொண்டாடச் சொன்னான்? புரியவில்லை.

"அடச்சே! எதற்காக என்று தெரிந்து என்னாகப் போகிறது? :-) எல்லாமே ஒரு பூடகமான நம்பிக்கை தானே? கலகலப்பு இருந்தால் தானே வாழ்க்கை?" நான் என்னையே ஆற்றுப் படுத்திக் கொள்ளுகிறேன்.

"இந்தா, வந்துட்டேன். தீப்பெட்டியைக் கொண்டு வரேன்" என்கிறாள் என் மனைவி.

உடைந்த செங்கற் சில்லின் மேல் சீனச் சரவெடி...........

மறுபடியும் சத்தம்...... மறுபடியும் புகை..... மேக மூட்டம் விளைவிப்பதில் எங்களின் பங்கு.

தீபாவளி வாழ்த்துக்கள்.


__________________________________________________________________












இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________

No comments:

Post a Comment