Saturday, October 22, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 15


- செல்வன்

கவுதம் சன்னாவுடன் பேட்டி. பேட்டி எடுப்பவர் எடின்பர்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஹ்யூகோ கொரிங்கே ...

பேரா யூகோ: ஆனால் அந்த வேலை நடக்கவில்லையெனில் அவர்களால் அதன்பின் ஜெயிக்க முடியாது. அதுதான் பிரச்சனையே.

சன்னா: அது உண்மைதான். அதனால் தான் ஒரு குழுவே வேலைசெய்கிறது என நான் சொன்னேன். இதில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று என்னவெனில், கட்சியாக எங்களுக்கு ஒரு கூடுதல் தடையும் உள்ளது. அதாவது விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை நாங்கள் ஜெயித்த எம்பி அல்லது எம்.எல்.ஏ தொகுதியைத் தாண்டியும் மாநில அளவில் எங்கெல்லாம் தலித்துகள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் நாங்கள் பணியாற்றவேண்டிய நிலை உள்ளது.

பேரா யூகோ: உண்மை. ஆனால் இது நீங்கள் ஒரு கட்சியாக என்ன சாதித்துள்ளீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. என்ன மாற்றங்களை உருவாக்கியுள்ளீர்கள்? ஒரு இயக்கமாகப் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளீர்கள். அடிக்கு அடி என்ற முழக்கம் மக்களின் மனதில் பதிந்து விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது. ஆனால் கட்சியாக மக்களிடம் என்ன மாற்றத்தை உருவாக்கியுள்ளீர்கள்?

சன்னா: நான் முன்பே சொன்னதுபோல், ஒரு கட்சியாக சமூகத்தில் எழும் பிரச்சனைகளில் மட்டுமே கவனத்தை செலுத்த முடியும். அப்பிரச்சனைகள் சமுதாயத்தை பிரதிபலிக்கின்றன. திருப்பி அடிக்க நாங்கள் சொல்கையில் முக்குலத்தோரும், வன்னியரும் மிகக் கடுமையான முறையில் தலித்துகளுக்கு எதிராக இருந்தார்கள்.தலித்துகள் திருப்பி அடிக்கத் துவங்கியதும் அந்த மனப்போக்கு மாறிவிட்டது. இப்போது அவர்கள் கலவரத்தை உருவாக்குவதில்லை, சேரிகளைக் கொளுத்துவதில்லை, தலித்துகளைத் தாக்க மக்களைத் தூண்டுவதில்லை. சிறுஅளவிலான வன்முறைகள் பல இடங்களில் நடந்தாலும், பெருமளவில் மோதல்களைத் தூண்டும் மனப்போக்கு மாறிவிட்டது. ஆக நாங்கள் எதற்காக 'திருப்பி அடி' எனும் தந்திரோபாயத்தை இன்னமும் கடைப்பிடிக்கவேண்டும்? தேவை ஏற்பட்டால் மட்டுமே கடைப்பிடிக்கவேண்டும் எனச் சொல்லலாம். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கையில்- அதாவது போருக்கு பின் அமைதி என்ற சூழல் உருவான நிலையில், அமைதியே ஒரே வழி. அவர்கள் அமைதியைக் கடைப்பிடிக்க முயலும் நேரத்தில் நாமும் அப்பாதையைக் கடைப்பிடிப்பதே சரி. ஆனாலும், எப்போது அடக்குமுறை மீண்டும் துவங்குகிறதோ அப்போது 'திருப்பி அடி' எனும் முழக்கம் மீண்டும் தேவைப்பட்டு பயன்படுத்தப்படும்- அது இப்போதும் நடைபெறுகிறது. நாங்கள் அதைக் கைவிடவில்லை

பேரா யூகோ: ஆனால் ஒரு கட்சியாக என்ன மாற்றங்களை நீங்கள் கொண்டுவந்துள்ளீர்கள்?

சன்னா: ஆம். அந்தக் கேள்விக்கு தான் வருகிறேன். நாங்கள் இயக்கமாக இருக்கையில் மக்கள் உணர்வின் அடிப்படையில் திரட்டப்பட்டு அரசியல் சக்தியாக மாறினார்கள். நான் முன்பே சொன்னதுபோல் இந்த அரசியல் உணர்வை ஒரு இயக்கமாக மாற்றிப் பயன்படுத்தும் அவசியம் இருக்கிறது. அரசியல் அதிகாரத்தை பெறவேண்டுமெனில் நாம் அரசியல் கட்சியாக மாறவேண்டும். இயக்கமாக அரசியல் சக்தியை அடையமுடியாது. இதுவரை எங்களுக்கு ஏராளமான சுதந்திரம் இருந்துள்ளது. யாரை எதிர்க்க நினைக்கிறோமோ அப்போது எதிர்க்கலாம், யாரைக் கண்டிக்க நினைக்கிறோமோ அப்போது கண்டிக்கலாம், யார் நம்மைக் கண்டிக்கிறார்களோ அவர்களை நம்பும் அவசியம் இல்லை. எங்கள் கொள்கை அடிப்படையில் அனைவரையும் கண்டித்தோம்.  கட்சியாக ஆனபின் தேர்தல் கமிஷன் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டிய அவசியம் உள்ளது. இது ஒரு ஒழுங்குமுறையை விதித்து, யாரைக் கண்டிக்கவேண்டும், எப்படிக் கண்டிக்கவேண்டும் என்பதற்கான ஒழுங்குமுறையை எங்களைப் பின்பற்ற வைக்கிறது. இந்த வரம்புகளுக்கும் செயல்பட்டு அரசியல் கலாச்சாரத்துடன் பரிச்சயமாகும் சூழலில் இருக்கிறோம். இதுவரை தலித்துகள் அதிலிருந்து விலக்கப்பட்டு இருந்தார்கள். ஆனால் அது கடந்த பத்தாண்டுகளில் உருவாகத் துவங்கியுள்ளது. தேர்தல்  பாதையில் நுழைந்தபின் இந்த அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் வளர்த்து வருகிறோம்

பேரா யூகோ: ஆனால் அடிமட்ட அளவில் இருக்கும் வாக்காளர்கள் அதை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது வேலைவாய்ப்பு, வீடுகள், இலவசங்கள் ஆகியவற்றையே. ஒரு கட்சியாக, குறிப்பாக ஆளும்கட்சி கூட்டணியில் இருக்கையில், மக்களுக்கு இந்த வாய்ப்புக்களை நீங்கள் வழங்கமுடியாதா?

சன்னா: நாங்கள் ஆளும்கட்சி கூட்டணியில் இருக்கையில் ஒரு குறுகிய எல்லைக்குள் மட்டுமே அதை எங்களால் செய்யமுடிந்தது. ஏனெனில் விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை நாங்கள் ஆளும்கட்சிக் கூட்டணியில் இருப்பது இதுவே முதல்முறை. அது புதிதாக இருந்ததால் ஆளும்கட்சியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அது தெரியாமல், நடக்கவேண்டிய வேலைகளுக்காகப் போராட்டம் நடத்தினோம். ஆனால் இதில் முழுமையாக வெற்றிகண்டதாக நாங்கள் நினைக்கவில்லை. ஏனெனில் திமுகவும், அதிமுகவும் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்ததால் அரசை நடத்திப் பழகிவிட்டன. அவர்களிடமிருந்து வளங்களைப் பெற்று மக்களுக்கு வழங்குவது ஒரு மிகப்பெரிய முயற்சி. அதில் எங்களால் முழுமையாக வெற்றி காணமுடியவில்லை. இது வருங்காலத்திற்கான ஒரு குறிக்கோளாகும். இதை எப்படிச் செய்வது என்பதை நாங்கள் கண்டறியவேண்டும். நாங்களும் இன்னமும் கற்றுக்கொள்ளும் நிலையில் தானே இருக்கிறோம்? அந்த வழிமுறையைக் குறித்த புரிதலை உருவாக்கியுள்ளோம். ஆளும்கட்சியை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதை இப்போது அறிந்துள்ளோம்.

பேரா யூகோ: பல இடங்களில் மக்களுக்கு வேலைகளையும் உருவாக்கியுள்ளீர்கள்

சன்னா: ஆம். அது நடந்துள்ளது. பல இடங்களில் அது நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கியதாகக் கூற இயலாது, ஆனால் நூற்றுக்கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளோம்.

பேரா யூகோ: துவக்கத்தில் இது ஒரு கொள்கையால் உந்தப்பட்ட இயக்கம் எனக் கூறினீர்கள். என்ன கொள்கைகள் எனில் பெண்ணுரிமை, நில உரிமை, பொருளாதார சமத்துவம், சாதி ஒழிப்பு ஆகியவை. இவற்றை அடைய என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள்?

சன்னா:  எங்கள் ஐந்து முக்கிய கோரிக்கைகளா?

பேரா யூகோ: ஆமாம். இப்போது என்ன நடக்கிறது என்றால் எங்காவது வன்முறை வெடித்தால் நீங்கள் அங்கே விரைந்து அதைத் தீர்க்க பாடுபடுகிறீர்கள். இது ஒருபக்கம் நடக்கிறது. மறுபுறம் இந்தக் கொள்கைகள் உள்ளன. இவற்றை அடைய என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள்?

சன்னா: நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். தலித் அரசியலுக்கு ஒரு அஜெண்டாவும் குறிக்கோளும் உள்ளது. ஆனால் இந்தக் குறிக்கோளை அடைய மட்டுமே 100% சதவிகித நேரமும் முயற்சி செய்யமுடியாது. அவற்றை அடையும் விருப்பம் உள்ளது, முயற்சிகளைச் செய்கிறோம், தீட்டங்களையும், செயல்திட்டங்களையும் வகுக்கிறோம். ஆனால் இவற்றை அடைய முயல்கையில் இவற்றை அடைந்தால் இயக்கம் பெரிதாக வளர்ந்துவிடும் என்கிறார்கள். சிறுத்தைகளைப் பற்றி மட்டும் சொல்லவில்லை, இந்தியா முழுவதும் இருக்கும் தலித் இயக்கங்களைப் பற்றியும் தான் பேசுகிறேன். ஆளும் வர்க்கம் என்ன நினைக்கிறது என்றால் இந்தக் குறிக்கோளை நாங்கள் அடைந்தால் மிகப்பெரும் சமுதாய மாற்றம் உருவாகிவிடும் என நினைக்கிறது. அதனால் அதற்குத் தடைகளையும், மடைமாற்றும் செயல்களையும் அவர்கள் உருவாக்குகிறார்கள். கட்சித்தொண்டர்களுக்கு எதிராக வழக்குகள் போடப்படுகின்றன, வன்முறைகள் தூண்டப்படுகின்றன. ஊடகங்களும் மற்ற இயக்கங்களும் இத்தகைய மோதல்களைத் தூண்டுகையில் குறிக்கோளை நோக்கிய எங்கள் முன்னேற்றம் தடைப்படுகிறது. தலித் இயக்கங்களின் நோக்கம் எதுவாக இருப்பினும், அவற்றை நோக்கி நாங்கள் முன்னேறுகையில் இப்பிரச்சனைகள் எங்களைப் பின்னுக்கு இழுத்து இவற்றை முதலில் தீர்க்கவேண்டும் எனும் சூழலை உருவாக்கிவிடுகின்றன. 10 ஆண்டுகளில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகளைத் தீர்க்க 30 ஆண்டுகள் ஆகிறது. விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இதுவே நிகழ்வதால் அவர்களும் இவ்விதியில் இருந்து மாறமுடிவதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் ஒரு கொள்கையில் உறுதியாக இருந்தாலும்- நீங்களே பரளிப்புத்தூரை பற்றிக் குறிப்பிட்டீர்கள், அதனுடன் சேதுசமுத்திரம் மற்றும் இதுபோன்ற கணக்கற்ற கிராமங்கள் உள்ளன- எங்கள் நோக்கங்களை நோக்கி முன்னேறுகையில் இதற்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டி உள்ளது.

பிரச்சனைகள் உடனடியாக தீர்ந்துவிடும் என நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. ஆனால் அவற்றைத் தீர்க்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம். இது ஒரு பாயிண்ட். அடுத்த பாயிண்ட் என்னவெனில் கட்சி தமிழ்த்தேசியத்தைப் பற்றி புரட்சிகரமாக உரையாடுகிறது. இதைச் செய்கையில் இதுபோன்ற ஒத்த நோக்கங்களை முன்வைத்துப் பணியாற்றும் கட்சிகள் மற்றும் இயக்கங்களுடன் பணியாற்றியும் கொண்டிருக்கிறோம். சமூக இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்களுடனும் இனைந்து பணியாற்றுகிறோம். அவர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்குத் தேர்தலால் எந்த நன்மையும் இல்லை. குறிக்கோள்களை அடைய அவர்களுடன் ஒவ்வொரு கோரிக்கையை முன்வைத்தும் பணியாற்றுகிறோம். பொருளாதார சமத்துவத்தையும் முன்னெடுத்துப் போராடுகிறோம். பொருளாதார சமத்துவமற்ற நிலையை எதிர்த்து போரிடுகையில், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே வகுப்பு என நாங்கள் கூறினாலும் இடைநிலை சாதிகள் இதை ஏற்பதில்லை. ஆனால் இது எல்லாமிருந்தும் நாங்கள் இடைநிலை சாதிகளை எதிரிகளாகக் கருதவில்லை. ஒரே நோக்கத்தை நோக்கி முன்னேறுவதாகக் கருதி அவர்களுடன் போராட்ட களங்களில் இணைந்து செயல்படுகிறோம். சுரண்டலுக்கு எதிராகப் போராடுகையில் தமிழ்த்தேசிய இயக்கங்களுடனும், இடைநிலை சாதி அமைப்புகளுடனும், பிற ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து செயல்படுகிறோம். பெண்ணுரிமையைப் பொறுத்தவரை இந்த இயக்கங்கள் பெண்விடுதலையை முன்வைக்கின்றன. அவர்களுடன் அந்த நோக்கிலும் இணைகிறோம். அடுத்ததாகச் சாதிய ஒழிப்பும் உள்ளது. எந்தக் கட்சிக்கும் இது நோக்கமாக இருப்பதில்லை. விடுதலைச்சிறுத்தைகளுக்கு மட்டுமே இந்த நோக்கம் உள்ளது. இந்தக் கொள்கையை பொறுத்தவரை விடுதலைச்சிறுத்தைகள் தனியாக மட்டுமே அந்த நட்புசக்தியும் இன்றி செயல்படவேண்டி இருக்கிறது. சாதியை ஒழிக்கப் பிற இயக்கங்களுக்கு எந்த அவசியமும் இல்லையென்பதுடன் அவர்களுக்குத் தனியாக ஒரு அஜெண்டாவும் இருக்கிறது. எங்கள் ஐந்து முக்கிய நோக்கங்களைப் பார்க்கையில், மற்ற கட்சிகளுடன் பணியாற்றி அவற்றில் நான்கு நோக்கங்களை அடைய முயல்கிறோம். ஆனால் இறுதிநோக்கம் என வருகையில் தனியாக மட்டுமே நாங்கள் போராடவேண்டியுள்ளது. இந்த ஐந்து நோக்கங்களையும் உடனடியாக அடையமுடியும் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இவற்றை நோக்கி நாங்கள் வேலைசெய்து வருகிறோம். இந்த ஐந்து நோக்கங்களையும் அடிமட்ட அளவில் கொண்டுசென்றுள்ளோம். சேரிகளில் இருக்கும் யாருக்கும் தமிழ்த்தேசியம் தெரியாமல் இருந்தது, யாருக்கும் பெண்விடுதலை என்றால் என்ன எனத் தெரியாமல் இருந்தது, அடக்குமுறைக்கு எதிராக எப்படிப் போராடுவது என்பது தெரியாமல் இருந்தது. இப்போது சேரிகளில் எல்லாம் இது பேசப்படுகிறது என்றால் அதற்கு விடுதலைச்சிறுத்தைகளின் முயற்சியால் மட்டுமே.

பேரா யூகோ: அவர்களை அதைப்பற்றிப் பேசலாம். ஆனால் சாதியொழிப்பு அடிமட்ட அளவில் நடக்கவேண்டி இருக்கிறது. அதனால் தான் பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகியோரிடையே...

சன்னா: இவர்களிடையே பிரச்சனை எழுவது உண்மை

பேரா யூகோ: இவர்களுக்கும் ஒற்றுமை இல்லை, கலப்புமணங்கள் நடைபெறுவதில்லை. அவர்களுக்கிடையே திருமணங்கள் நிகழ்ந்தால் அவர்கள் குடும்பங்கள் அவற்றை ஏற்பதில்லை. ஆக எப்படி இந்தக் கொள்கைகளை நாம் மக்களிடம் கொண்டுபோவது?

சன்னா: நான் இதைத்தான் சொல்லிவருகிறேன். சாதியொழிப்பை எடுத்துக்கொண்டால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துவக்கியே 22 ஆண்டுகள் தான் ஆகிறது. அதிலும் அரசியலில் 12 ஆண்டுகள் மட்டுமே இருந்துள்ளோம். 2000 ஆண்டுப்பிரச்சனையை எப்படி எங்களால் 12 ஆண்டுகளில் தீர்க்கமுடியும்? இதைப்பொறுத்தவரை நாங்கள் ஒரு தளத்தை உருவாக்கியிருக்கிறோம். அருந்ததியினர், பள்ளர்கள் மற்றும் பிறசாதியினர் எங்கள் கட்சியில் சேர்வதை நாங்கள் முன்பே எதிர்பார்க்கவில்லை. கட்சியால் ஒரு தளத்தை மட்டுமே உருவாக்கமுடியும். இதை மட்டுமே காரணமாக வைத்து நீங்கள் எங்களைக் குற்றம் சொல்லமுடியாது.

பேரா யூகோ: நான் அதை முழுமையாக ஏற்கிறேன். ஆனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதுதான் என் கேள்வி. இவற்றை அடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதை எடுக்கிறீர்கள்? இதை நீங்கள் கட்சியுடன் பேசி முன்னேற்றம் காணமுயலவேண்டும்

சன்னா: இதுவரை நாங்கள் தலைவர் மக்களை நேரடியாகச் சந்தித்து பொதுக்கூட்டங்களை நடத்தும் முயற்சிகளைக் கடைப்பிடித்து வந்தோம். இப்போது தொழில்நுட்பம் மாறிவிட்டது. தொழில்நுட்பம் மாறிய சூழலில் அதைப் பயன்படுத்தாமல் மக்களை அடிமட்ட அளவில் அடையமுடியுமா  என்கிற கேள்வி இருக்கிறது. இப்போது நான் ஒரு கிராமத்திற்கு போய் ஒருமணிநேரம் பேசினால், நான் போனபின் மக்கள் தொடர்ந்து  து 10 மணிநேரம் டிவி பார்க்கிறார்கள். ஆக நான் ஒருமணிநேரம் பேசியதை அவர்கள் ஒருமணிநேரத்திற்குள் மறந்துவிடுகிறார்கள். தொடர்ச்சியாக அந்தச் செய்தி அவர்களுக்குப் போய்க்கொண்டே இருந்தால் தான் அவர்கள் சந்தேகங்களும், எண்ணங்களும் மாறும். அதன்பின் தான் பெண்விடுதலையும், சாதியொழிப்பும் அவர்கள் மனதில் பதியும். மக்கள் இயக்கத்தின் நோக்கங்களை விளம்பரப்படுத்துகையில் சிறுத்தைகளின் அடுத்தகட்ட முயற்சியானது ஊடகங்களை தம் கையில் எடுத்து இந்த விஷயங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதாக இருக்கும். பிற சானல்களுடன் நாங்கள் போட்டியிட முடிந்தால் ஊடகங்களை ஜனநாயக சக்தியாக மாற்றமுடியும் என நம்புகிறோம். தற்போதைய நிலையில் நாங்கள் ஊடகங்களை எங்கள் கையில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

பேரா யூகோ: சரி. வேறு விஷயம் ஒன்று. இரு மாதங்களுக்குமுன்பு நான் கர்நாடகத்தில் இருக்கையில் நான் தலித் இயக்கத் தலைவர் எம்.சி. ராஜ் அவர்களைச் சந்தித்தேன். அவர் விகிதாச்சார  பிரதிநிதித்துவத்தை முன்வைத்துப் போராடிக்கொண்டிருக்கிறார். அவர் தேர்தல் வழிமுறையைக் கோளாறுடையதாக கருதுகிறார். இந்த விவாதங்களில் நீங்களும் பங்கேற்றுள்ளீர்களா?

சன்னா: நிச்சயமாக. இலங்கையில் அரசு கடுமையான ஒடுக்குமுறையைக் கையாண்டு வருகிறது. ஆனால் அதே சமயம் தமிழர்களுக்குத் தேவையான பிரதிநிதித்துவமும் இருக்கிறது. ராஜபக்சே அரசு பெரும் மெஜாரிட்டியில் வெற்றிபெற்றாலும், எதிர்க்கட்சி எம்பிகளும் பாராளுமன்றத்தில் நுழைய முடிகிறது. அங்கே விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை இருப்பதே காரணம். இங்கே நம்மிடம் அம்முறை இல்லை. இங்கே எண்ணிக்கை அடிப்படையிலான முறை மட்டுமே இருக்கிறது. தேர்தல் நடக்கிறது. 100 ஓட்டுக்கள் இருந்தால் 51 ஓட்டு வாங்கியவர் வெற்றியாளர். ஒரு சின்ன உதாரணம் தருகிறேன். 100 ஒட்டுக்கள் இருக்கின்றன என வைத்துக்கொல்Vஓம். 3, 4 கட்சிகள் கூட்டணியாக போட்டியிடுகின்றன. இந்தியாவைப் பொறுத்தாரை 70% ஓட்டுப்பதிவே கூட நடப்பது கிடையாது. 68 அல்லது 65% மட்டுமே ஓட்டுப்பதிவு நிகழ்கிறது. ஆக 30% மக்கள் தேர்தலில் ஓட்டுப்போடுவதில்லை. இந்த 70% ஓட்டில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் மூன்றாவது அணிகளும் ஓட்டுக்களைப் பெறுகின்றன. தேர்தல் முடிந்ததும் ஓட்டுக்களை எண்ணுகையில் ஆளும்கட்சி 25 முதல் 30% வரை ஓட்டுக்களைப் பெறுகிறது. ஆக இதன் பொருள் என்னவெனில் இந்தியாவில் அரசு என்பது ஒரு சிறுபான்மை அரசாகவே இருக்கிறது. அவர்கள் 30 முதல் 40% ஓட்டுக்களைப் பெற்றாலும் 60% மக்கள் அவர்களுக்கு எதிரானவர்களாகவே இருக்கிறார்கள். பின் எப்படி நாம் இதை ஒரு ஜனநாயக நாடு என அழைக்கமுடியும்? அதனால் தான் இந்த வாக்களிப்பு முறையை எதிர்க்கிறோம். எம்பிகளும், எம்.எல்.ஏக்களும் கட்சிகள் பெறும் ஓட்டுக்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் அனைவரும் பாராளுமன்றத்தில் நுழையும் வாய்ப்பைப் பெறமுடியும். அதனால் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை முழுமனதுடன் ஆதரிக்கிறோம். இதை முன்வைத்து ஒரு பிரச்சாரமும் துவக்கவுள்ளோம். இதுகுறித்த பிற பிரசாரங்களில் நாங்கள் பங்கேற்றிருந்தாலும் இதைநோக்கிய எங்களின் பிரச்சார இயக்கத்தையும் துவக்கவுள்ளோம்.

பேரா யூகோ: இது மிக முக்கியமானது. ஏனெனில் இது நடந்தால் அதன்பின் நீங்கள் கூட்டணிகளை நம்பியிருக்கவேண்டியதில்லை.

சன்னா: ஆமாம். அதன்பின் அதற்கான தேவை இருக்காது

பேரா யூகோ: நான் உங்களின் நிறைய நேரத்தை எடுத்துக்கொண்டேன். உங்களிடம் இருந்து பல விசயங்களையும் கற்றுக்கொண்டேன். நன்றி

(முற்றும்)

மொழியாக்கம்: செல்வன்

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________

No comments:

Post a Comment