Sunday, October 30, 2016

தீபாவளி ஒரு இந்தியப்பண்டிகை

தேமொழி


நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க?

நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா?  நீங்க நல்லவரா கெட்டவரா?

சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?

என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம்  இன்று  கேட்க முடியாது.

முதலில் நாம் அறிய வேண்டியது  நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும்.

நரகாசுரன்  இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி,  பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு நரகாசுரன் இறப்பு அப்படி என்ன  மகிழ்ச்சி தருவதா? அதுவும் அந்த அசுரனே  என் இறப்பு மக்களைத் துன்புறுத்தும் கொடியவர்  அனைவருக்கும் ஒரு  பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் அதனைப் பண்டிகையாகக்  கொண்டாடச் சொல்லி வேறு கேட்டுக் கொண்டானாம்.  அப்படிச் சொன்னவன் தீயவனாகவா இருக்க முடியும்?  இந்த நரகாசுரன் கதை நாமறிந்த இந்துமத புராணக்கதை.

உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை  சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள்.  வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி தீர்த்தங்கரர்  வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து,  அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை  வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான்  தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).

பாவாபுரி நகரின் மன்னரது அரண்மனையில் இரவுமுழுவதும் அறிவுரை வழங்கினார் மகாவீரர். அது முடிவதற்கு இரவு நெடுநேரமாகிவிட, மக்கள் அனைவரும் அங்கேயே உறங்கினர். அவர்கள் விழித்தெழுந்து பார்த்த பொழுது  மகாவீரர் வீடு பேறு அடைந்திருந்தார் (அக்டோபர் 15,   527 பொ. ஆ. மு).  அறியாமை இருளை அகற்றும் அவரது அறிவுரை, தொடர்ந்து மக்களின் வாழ்வில் ஒளிவீசி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதன் அறிகுறியாக மன்னரும் மக்களும் முடிவெடுத்து ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்து வழிபடும் இம்மரபைத்  துவக்கினர். மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு  என்பது சமணம் கூறும் வரலாறு.  ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த  பொ. ஆ. மு. 600 இல். இது வேத காலத்திற்கும் முற்பட்ட காலம்.  வேதங்களில் சமணதீர்த்தங்கரர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.  தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது.  சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.  சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும்  வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும்  தீபாவளி  பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்).

புராணக் கதைகள் புனைந்துரைக்கப்பட்ட பிற்காலத்தில் தீபாவளிப்  பண்டிகைக்குத் தக்கவாறு  இந்துமதக் கதைகள் பல உருவாக்கப்பட்டன என்பதே அறிஞர் பலரும்  கூறுவது (அபிதான சிந்தாமணி, சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்).  இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டியது (நம்பமுடிகிறதா?), கடலுக்கு அடியில் ஒளித்தது (அறிவுக்குப் பொருந்துகிறதா?),  கண்டு தனது  படைப்புத் தொழில் தடைப்பட்டதாக மிரண்ட  பிரம்மா திருமாலிடம் வேண்டுகிறார். திருமால்  பன்றி அவதாரம்  எடுத்து புவியை மீட்க, இதனால் பூமியும் பன்றியும்  கொண்ட உறவில் பிறந்த பவுமன் (இயற்கையில் நிகழக்கூடியதா?) என்பவன்  தாயைத் தவிர யாராலும் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெறுகிறான்.  அழிக்கப்படமுடியாது என்ற  ஆணவத்தில் (தாய்க்குலத்தைப்  பற்றிய தப்புக்கணக்கு போட்ட முதல் மனிதனாக இருக்கக்கூடும்) தேவர்களுக்கும் மக்களுக்கும்  அவன் துன்பம் தர, திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்க, திருமகள் சத்யபாமாவாக அவரை மணக்க, இருவரும் 'நரக'ர்களை (மக்களை) துன்புறுத்திய 'அசுர'னுடன் போர் புரிகிறார்கள். சத்யபாமா தனது மகன் நரகாசுரனாக மாறிவிட்ட பவுமனைக் கொல்கிறார்  என்பது புராணக்கதை.

இதில் நரகாசுரனே தனது இறந்தநாளைக் கொண்டாடவேண்டும் என்று கேட்டதாக ஒரு வடிவமும், சத்யபாமா கேட்டுக் கொண்டதாக மற்றொரு வடிவமும் கொண்ட  கதைகளும்  உள்ளன.  அதுபோல இரண்யாட்சதன் கதைக்குப் பதிலாக  மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதத்தை ஒளித்து வைத்து அதை மீட்க திருமால் பன்றி வடிவம் எடுத்ததாகவும் மற்றொரு வேறுபட்ட  கதையும்  உண்டு.  எனவே இக்கதைகளின் அடிப்படையில்  நரகாசுரன்  என்பவனின்  பிறப்பே கேள்விக்குரியதாக  இருக்கிறது.  எந்தவகையில் மாற்றி மாற்றிச் சொன்னாலும் இவை  அறிவுக்கும் அறிவியலுக்குப் புறம்பான கதைகள் என்பதில் ஐயமில்லை.

கதைகள்  உருவாகிய நோக்கம்  என்று இரண்டு காரணங்களை நாம் கணிக்க இயலும்:
1) அனைவரும் கொண்டாட விரும்பும் சமண தீபாவளியை இந்துமதத்திற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்பது ஒரு நோக்கம்
2) அதேசமயம் நல்லவர்களுக்குத் தீங்கிழைப்பவர் யாராக இருப்பினும் அவர்கள்  அழிக்கப்படுவார்கள் என்ற சமயக்கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் மற்றொரு நோக்கம்.

நல்லவருக்கு நல்லதே  நடக்கும் என்ற இந்த  நீதியை   அனைத்துச் சமயங்களும் பாகுபாடின்றி வலியுறுத்துகிறது; மக்களை நல்வழிப்படுத்தச் சமயங்கள் போதிக்கும் ஒரு அடிப்படைக்  கொள்கை இது. உலகம் முழுவதும் எந்த ஒரு சமயமும் இதில் வேறுபடுவதில்லை.  உண்மை சமயக் கருத்தை மறந்துவிட்டு சமயவெறி பிடித்து அலைபவர்கள் இந்த  அடிப்படைக் கருத்துக்கு மாறாக நடப்பதும் வழமையே.  மேலும், தலைவன் அல்லது நாயகன்  ஒருவன் தோன்றி தீயவர்களை அழிப்பான் (the victory of the good over the evils) என்பதும், அவன் வரவை எதிர்பார்ப்பதும் உலக சமய புராணங்கள் யாவற்றிலும் (இன்றைய திரைப்படங்கள் உட்பட) காணப்படுவதும்  கூட.  இதனை உலக சமயங்களையும் புராணக்கதைகளையும் ஆராய்ந்த அறிஞர் ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987) என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist) கூறியுள்ளார். உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்த ஜோஸப் கேம்பெல், தனது ஆய்வின் முடிவாக உலகில் உள்ள புராணக்கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு.

பண்டைய தமிழிலக்கியங்களில் தீபாவளிக்கான சான்றுகள் காட்ட இயலாது.  விஜயநகர ஆட்சி தமிழகத்தில் தொடங்கியதும் தீபாவளி கொண்டாடுவதும் தோன்றியது.   தீபாவளி என்பது புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாக விஜயநகர ஆட்சியில்  கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பார் குறிப்பிடுவதாக பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் (மதுரை நாயக்கர் வரலாறு, பக்கம் : 433-434) சுட்டிக்காட்டுகிறார். விஜயநகர ஆட்சிக் காலத்தில், மதுரையில் குடியேறிய விஜய நகரத்திலிருந்து வந்த சவுராஷ்டிரர்களும்   இதைப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய பகுதிகளை ஆண்ட  நாயக்கர்களால் தமிழகத்தில் பதினாறாம் நூற்றாண்டு காலவாக்கில்   புகுத்தப்பட்டு தீபாவளி, அந்நாட்கள் தொடங்கி  தென்னிந்திய  மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நரகாசுரன் கதையை தீபாவளியுடன் இணைத்துக் கூறப்படுவது  தென்னிந்தியாவின் மரபு.

நரகாசுரன் கதை பார்ப்பனர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்பது தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்களது கருத்து  (தமிழர் மதம்,   பக்கம் : 200-201).  பார்ப்பனர்கள் நடத்திய  உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட வேள்விகளை எதிர்த்த மன்னன் ஒருவனை, அவன்  மக்களை (பார்ப்பனர்களை) துன்புறுத்திய  அசுரன் என்று உருவகப்படுத்தி கண்ணனிடம் கூற,    கண்ணன் அவனை அழித்தான் என்று உருவாக்கப்பட்ட கதை என்பது மறைமலை அடிகள் தரும் விளக்கம்.  மக்கள் வாழுமிடங்களில் அத்துமீறி நுழைந்த ஆரியர் தங்களது சோம பானம் சுரா பானத்தை மக்களுக்கு ஊற்றிக்கொடுத்து அவர்களைப் போதைக்கு அடிமைப்படுத்தியதையும் பிறகு அவர்களது தானியங்களையும் உடைமைகளையும் கைப்பற்றியதைத் தட்டிக்கேட்ட அரசன் நரகாசுரனாகக் காட்டப்பட்டு மற்றொரு அரசனான கண்ணன் துணையுடன் கொல்லப்பட்டான் என்ற மற்றொரு கோணமும் உண்டு.  

ஆகவே, சார்புநிலை ஒழித்து செயல்களின் அடிப்படையில் எடை போட்டால்,  உயிர்க் கொலைகளைத் தடை செய்தவனோ, மக்களைப் போதைக்கு அடிமைப்படுத்தி அவர்களது உடைமைகளைச் சூழ்ச்சியால் கவர்ந்தவர்களைக் கண்டித்த செயற்கரிய செய்த நரகாசுரன்  தீயவனாக இருக்க வாய்ப்பில்லை.  ஆரியர் தம்மை  எதிர்த்தவரை 'அசுரர்' எனக் குறிப்பிடுவர். சுரா பானத்தைக் குடித்த ஆரியர்களை 'சுரர்கள்' என்றும், அதனைக் குடிக்காதவர் 'அசுரர்கள்' என்றும் கூறுவர். இவர்கள் கறுத்த நிறத்துடன், கோரைப்பற்களும், கொம்புகளும்  உடைய கொடியவர்களாகவும், சுரர்கள் நற்குணம் பொருந்திய தேவர்களாகக் கூறுவதும் புராணக்கதை வழக்கம்.   அசுரர் என்பவர் என்பவர் குறிப்பிட்ட எந்த இனத்தவர் என்பதை வரலாற்று அறிஞர்களால் கண்டறியப்பட இயலவில்லை என்றாலும், அவர்கள் ஆரியர்களின் பகைவர்கள் என்பது உறுதி.  திராவிடர்களும் ஆரியர்களின் பகைவர்களாகக் கருதப்பட்டவர்களே. இக்காரணத்தின் அடிப்படையில் தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று கா.சுப்பிரமணியன் பிள்ளை தனது  தமிழ் சமயம் (பக்கம் : 62)  என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

கிருஷ்ணாவதார  நரகாசுரன் அழிப்பு கதை  மட்டுமின்றி, கண்ணன்  கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து இந்திரனிடம் இருந்து ஆயர்குலத்தைக் காப்பாற்றியதையும் இணைத்துக் கூறும் தீபாவளிக்  கதையும் உண்டு. திருமாலின் பிற அவதாரக் கதைகளுடன் இணைப்பதும் வழக்கில் உள்ளது. மன்னன்  மாபலியைப் பாதாளத்திற்கு அனுப்பிய பிறகு அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களைக் காணவரும்  நாளாகவும் (மலையாள ஓணம் பண்டிகை) கூறப்படுகிறது. அது போல,  இராமாவதாரத்துடன் தொடர்புப்படுத்தி, இராவணனைக் கொன்று  சீதையை சிறைமீட்டு, தனது வனவாசம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பிய நாளை மக்கள்    மகிழ்ச்சியுடன்  விளக்கேற்றிக் கொண்டாடியதே தீபாவளிப் பண்டிகை என்றொரு மற்றொரு  இந்துமதத்தின் தீபாவளிக் கதையும் உண்டு. வட இந்தியாவில் வழக்கத்தில் உள்ள தீபாவளிக்  கதை இராமரின் கதை.  சக்தி  கேதாரகௌரி விரதத்தை  21 நாள் கடைப்பிடித்த பின்னர், சக்தியைச் சிவன் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தனாரீஸ்வரர்  என்று மாறிய நாள்  தீபாவளி என்ற ஒரு கந்தபுராணக் கதையும் உண்டு.  அதுமட்டுமின்றி  சீக்கியர்களும் தங்களது குரு கோபிந்த் சிங் (Guru Har Gobind) விடுதலை பெற்ற நாளைக் கொண்டாட பொற்கோவில் வரை விளக்கேற்றி வழிபடும் வழக்கமும் உண்டு.  நேபாளத்தில் உள்ள மகாயான பௌத்தர்கள் உருவவழிபாடு செய்ய கிடைத்த உரிமையைத் திருமால், திருமகள் ஆகியோரை வழிபட்டும்;  மயன்மாரில் உள்ள தேரவாத பௌத்தர்கள் புத்தர் வீடுபேறு அடைந்ததை விளக்கேற்றிக் கொண்டாடும் வழக்கமாகவும் தீபாவளி  உள்ளது.  ஆனால் இப்பண்டிகைகளில் சிலவற்றில்  நாட்கள் வேறுபடுவதும், பண்டிகை  கொண்டாடும் நாட்களின் எண்ணிக்கை வேறுபடுவதும் வழக்கம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் சமண சமயத்தில் துவங்கி, இன்று அப்பகுதியில் வாழும் சமணர், இந்துமதத்தின் பல உட்பிரிவினரும், பௌத்தரும், சீக்கியரும் என்று  பற்பல சமயப்பின்னணி கொண்டவரும் குளிர் காலத் துவக்கத்தில் விளக்கேற்றிக் கொண்டாட விரும்பும் ஒரு  பண்டிகையாக தீபாவளி சமய எல்லைகளைக் கடந்த விழாவாக மாறிவிட்டிருக்கிறது.  உலகில் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இந்தியர்களின் பலதலைமுறையினரும் கொண்டாட, இன்று  உலகில் பலநாடுகளில் கொண்டாடும் நிலையை எட்டி இந்தியப் பண்டிகை என்றால் தீபாவளி என்ற பொதுத்தன்மையையும் அடைந்துவிட்டது. பண்டிகையின்  பின்னணி எனக் கூறப்படும் காரணம் எதுவாக இருப்பினும்,  பல்வேறு பின்புலம் கொண்ட  இந்தியர்களையும் ஒருங்கிணைக்கும் தீபாவளிப் பண்டிகையை இந்துப் பண்டிகை என்பதைவிட இனி "இந்தியப்பண்டிகை" என்பதே சாலப் பொருந்தும்.  வலைத்தள அமெரிக்க நாட்காட்டிகளில் இடம்பெறும் ஒரே இந்தியப்பண்டிகை தீபாவளி.   தமிழகத்தில் இதைத் தவிர்த்து, விளக்கேற்றிக் கொண்டாட  கார்த்திகை பண்டிகையும் உண்டு.

விளக்கொளி ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள்(Festival of Lights) இந்தியாவிற்கு மட்டும்  உரியதன்று.  உலகில் பலநாடுகளில் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள் வழக்கத்தில் உள்ளன.  இவ்விழாக்களுக்கிடையேயான  ஒற்றுமைகள் என்னவென்று  நோக்கினால்,  இவையாவும் புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகள் என்பதும், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுவது புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ளபகுதியின்  குளிர்காலத்துடன் (winter solstice - அதாவது நவம்பர்,டிசம்பர், ஜனவரி மாதங்களில்) தொடர்புடையவை என்பதுமாகும்.  இரவு நீண்டுவிடும் காலத்தில் விளக்கொளிகள் தரும் அழகிற்காகவும் இவை கொண்டாடப்பட்டிருக்கக் கூடும்.

உலகநாடுகளில் குளிர் காலத்தில் கொண்டாடப்படும் விளக்கொளி விழாக்கள் சில:
கிறிஸ்துமஸ் - உலகெங்கும் (Christmas)
யூதர்களின் ஹனூக்கா பண்டிகை (Jewish Festival of Lights Hanukkah)
குவான்சா - ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் (Kwanzaa - African)
செயிண்ட் லூசியா நாள் - சுவீடன் (St. Lucia's Day - Sweden)
ஹாக்மானே - ஸ்காட்லாந்து  (Hogmanay - Scotland)
தசங்காடய்ங் - மயன்மார்  (The Tazaungdaing Festival - Myanmar)
செயிண்ட் மார்ட்டின் டே - ஹாலந்து (St. Martin's Day - Holland)
லோய் குர்தாங் - தாய்லாந்து (Loi Krathong - Thailand)
லியோன் - ஃபிரான்ஸ்(Lyon - France)
இவையாவும் ஏதோ ஒரு வகையில் தீமை ஒழிந்து நன்மை மேலோங்கிய நாளாகவோ, வெற்றித் திருநாளாகவோ, ஒரு புதிய தொடக்கமாகவோ, அறியாமை நீங்கும் நாளாகவோ கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒளியில் இருள் நீங்குவது அறியாமை நீங்கி அறிவு பெறுவதுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாகவே உலகில் பண்டைய நாட்களில் இருந்து,  குளிர்காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளே அதிகம்.  இதற்குக் காரணம் வேளாண்மையை மேற்கொண்டு மக்கள் ஒரு குழுவாக குடியிருக்கத் தொடங்கியதற்கு தொடர்புப்படுத்தும் வழக்கமும் உள்ளது.  அறுவடை முடித்து உணவுப்பண்டங்கள் நிரம்பியிருக்கும்  காலம் என்பதாலும், தட்பவெட்பநிலை காரணமாகத் தொழிலில் சுணக்கம் ஏற்படும் நாட்களை இவ்வாறு கூடி உணவுண்டு பொழுதைக் கழிக்க   பண்டிகைகள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அத்துடன் உளவியல் அடிப்படையில், குளிர் காலத்தில் பகல்பொழுது குறுகியும் இருண்டும் இருக்கும் நாட்களில் சிலர் மனச்சோர்வு நிலைக்கு   (Seasonal affective disorder -SAD) ஆட்படுவது  வழக்கம்.  அப்பொழுது தங்களை நிலைப்படுத்திக்கொள்ள அதிகம் உணவை நாடுவதும் வழக்கம்.  மனச்சோர்வுக்கு மருந்தாக உணவு உண்ணுவது, போதைப்பொருட்களை மூளை எவ்வாறு கையாள்கிறதோ அதே அடிப்படையிலேயே  இயங்கச் செய்கிறது என்று கூறுகிறது அறிவியல். பண்டிகை என்பது விதம் விதமாக சமைத்துண்ணும் வாய்ப்பை வழங்குகிறது என்பதால் குளிர் காலங்களில் அவற்றின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கொள்ளலாம். 

No comments:

Post a Comment