Friday, October 21, 2016

முகம் எங்கே?



 - ருத்ரா இ பரமசிவன்.




எத்தனை முகமூடிகள்
மாட்டியிருப்பாய்?
எத்தனை வேடங்கள்?
எத்தனை பேர் உன் வேடங்களில்
எத்தனை எத்தனை விதமாய்
ஏமாற்றப்பட்டிருப்பார்கள்?
என்றாவது ஒரு நாள்
உன்னைச்சுற்றிச் சுற்றிவந்து
அந்த முகமூடிகள்
கேள்விகள் கேட்டதுண்டா?
ஆனாலும் ஒரு நாள்
அப்படி அவற்றில் ஒன்று
இப்படிக் கேட்டது?
உன் முகத்தையே
மாட்டிக்கொண்டு
ஒரு நாள் வாழ்ந்து பார்.
முடியுமா உன்னால்?
இந்தக்கேள்வி
அவன் கன்னத்தில் அறைந்தது!
ஆமாம்
அவன் முகம் அவனுக்கு
மறந்தே போனது.
சின்னப்பிள்ளையாய்
பாற்சோறு சாப்பிடக்கூட‌
அடம் பிடித்த போது
விளையாட்டுக்காட்ட‌
கண்ணாடி காட்டினாள் அம்மா!
விவரமே தெரியாத போது
பார்த்த முகம் அல்லவா அது!
மறந்து போன முகத்தை
எப்படிப் பார்ப்பது?
அவனுக்கு உண்மையிலேயே
அவன் உண்மை முகத்தை
பார்க்க வேண்டும் என்ற
ஆவல் ஏற்பட்டது?
அதுவே வெறியாகிப் படபடப்பு ஆகியது.
எப்படிக் கண்டு பிடிப்பது?
அந்த முகமூடி கேட்டதற்காக‌
தன் முகத்தைப்பார்க்க‌
கண்ணாடியில்
உற்று உற்று நோக்கினான்?
கண்ணாடி முழுவதும்
அவனுக்குத் தெரிந்தது
சூன்யம் மட்டுமே!
அவன் முகம் அங்கு இல்லை.
அவனுக்கு முகமெல்லாம் வியர்த்தது.
ஒரு திகில்
அவன் ரத்தம் புகுந்து
அவனை உறைய வைத்தது.
பயத்தில் என்ன செய்வது என்று
தெரியாமல்
கை முட்டியால்
ஓங்கிக் குத்தினான்.
கண்ணாடி சுக்கல் சுக்கல் ஆனது.
ஒவ்வொரு கண்ணாடித்துகளிலும்
ஒவ்வொரு பிண்டமாய்
அவன் முகம் தெரிந்தது.
ஆயிரம் ஆயிரம் கண்களாய்
அப்பிக்கொண்டு
அருவருத்த உருவம் கொண்ட‌
இந்திரன் போல தெரிந்தான்.
"இது என்ன கோரம்?
இது என்ன ஆபாசம்?
என் முகம் எங்கே?"
அவன் அலறல்
ஆகாயத்தையே பிளந்தது.




______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
 

No comments:

Post a Comment