Friday, January 6, 2017

கீழடி



- ருத்ரா இ பரமசிவன்






தமிழன் எலும்புக்கூடு மட்டும் அல்ல‌
கீழே கிடப்பது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன் அவன் கண்ட கனவுகள்
அந்த வீடுகள் முற்றங்கள்.
கலை வடிவ மண் பாண்டங்கள்.
இன்னும் எல்லாம் தான்.
கற்காலம் என்பது தமிழனுக்கு
வெறும் கற்காலம் அல்ல.
சிந்தனை ஒளித்துண்டுகளாய்
சிலிர்த்துக்கிடக்கும்
"சொற்காலம்" அவனுக்கு அது.
மக்கிய மண்ணின் அடியில்
நெளியும் புழுக்களும்
தமிழின் உயிர் மெய் வரிகளை
உழுது காட்டி வைத்திருக்கும்!
நாகரிகம் என்னும் சொல்லே
நகர்தல் கொண்டு குடியிருப்புகள்
அமைத்து "நகரம்" நிறுவி
வாழ்ந்த தமிழ்ச்சொல்லின்
ஒலிப்பு தானே.
இதையே சமஸ்கிருதம் ஆக்கி
நம் சிந்தனைப்படிவங்களை
"டிங்கரிங்" செய்து
தோரணம் கட்டிக்கொண்டிருப்பவர்கள்
நம் வட இந்திய ஆட்சியாளர்கள்.
சிந்து வெளியின்
நம் தொல் தமிழ் மீது
வேதச்சாயம் பூச முடியுமா
என்று கோடி கோடி ரூபாய்களை
கொட்டிக்கொண்டிருப்பவர்கள்.
கீழடி என்னும்
மற்றுமொரு சிந்துவெளியில்
அவர்களுக்கு அக்கறை இருக்குமா என்ன?
தமிழ் தொன்மை பற்றி அங்கே
எவருக்கும் எந்த நினைப்புமே இல்லை.
இருந்திருந்தால்
சீனாக்காரர்களோடு இவர்களும்
இலங்கை மகிந்த ராஜபக்சேகளிடம்
கை கோர்த்து
அந்த ஈழ யுத்தத்தில்
லட்சம் தமிழர்களை
அங்கே உள்ள மண்ணின் கீழடியில்
ஈசல் குவியலாய்
பிணங்கள் ஆக்கியிருப்பார்களா?
அதனால்
நிதியில்லை என கைவிரிக்கிறார்கள்.
தமிழ் அகழ்வாராய்ச்சி அறிஞர்களே!
ஒரு சின்ன வேலை செய்யுங்கள்.
சீதையை பார்க்க இலங்கைக்குப் பறக்கும்
அனுமன்
இந்த கீழடியில் தவறவிட்டு விட்ட‌
ராமனின் ஒரு கணையாழியும்
இங்கு கிடைத்திருக்கிறது
என்று ஒரு சிறு குறிப்பை
யூகமாக எழுதிவையுங்கள்.
உடனே
பல லட்சம் கோடிகள்
நிதி ஒதுக்கப்படும்!



படம் உதவி:
முனைவர் காளைராசன்
மேலதிகமான படங்கள்
https://drive.google.com/drive/folders/0B02g7RFB0HureWF6S1o5S2xWRk0?usp=sharing
இந்த முகவரியில் உள்ளன.





______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

No comments:

Post a Comment