—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
ஆயிரம் வருடங்கள் தொன்மையான தமிழகக் கோயில் ஒன்றினுள்ளே மருத்துவமனை ஒன்று செயல்பட்டதைக் கல்வெட்டுச் செய்தியால் அறியமுடிகிறது. திருமுக்கூடல் கல்வெட்டில் அங்கு 'வீரசோழன்' என்னும் பெயரில் இயங்கிய மருத்துவமனை பற்றிய செய்தியின் சுருக்கம் கீழே:
கோயில் இருப்பிடம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் அருள்மிகு ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோயில்
மூலவர்:
மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, திருமால் மூவரும் ஒரே திருக்கோலத்தில் உள்ளனர்.
மூலவரின் சிறப்பு:
இவர் கடுசர்க்கரை படிமத்தால் ஆனவர், எனவே அபிஷேகம் இல்லாமல் தைலக்காப்பு மட்டும் நடைபெறுகிறது.
ஆதுலர் சாலை அல்லது மருத்துவமனை பற்றி உள்ள கல்வெட்டுச் செய்தி:
கோயிலின் உள்ளே செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த மருத்துவமனை 15 படுக்கைகள் கொண்டிருந்தது.
மருத்துவர்:
ஆலம்பாக்கத்து சவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாமன் பட்டர் என்பவர் நாடி பார்த்து மருந்து கொடுப்பவராக இருந்துள்ளார். இவருக்கான ஊதியம் தினமும் 3 குறுணி நெல் 4 காசுகள்.
அறுவை சிகிச்சை செய்பவர்:
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் சல்லிய கிரியை பண்ணுவான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். இவருக்கான ஊதியம் தினம் 1 குறுணி நெல்லும் 2 காசுகளும்.
நீர் கொண்டு வருபவர்:
மருத்துவமனைக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்கு ஒரு பணியாள் இருந்துள்ளார். இவருக்கான ஊதியம் ஆண்டுக்கு 15 கலம் நெல்.
மருத்துவப் பணி மகளிர்:
மருத்துவப் பணி மகளிராக இருவர் இருந்துள்ளனர். இவர்கள் மருந்து அடும் பெண்கள் என அழைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கான ஊதியம் தினம் 4 நாழி நெல்லும் அரைக் காசும்.
நாவிதன்:
மருத்துவக் குழுவில் நாவிதர் ஒருவர் இருந்துள்ளார். நாவிதர்கள் கத்தியைக் கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் சவரத் தொழிலையும், அறுவை தொழிலையும் செய்துள்ளனர். இவர் நரம்பு உடல் உறுப்புகள் பாதிக்கா வண்ணம் சிறு அறுவை சிகிச்சை செய்வதால் இவரும் மருத்துவர் என்று அழைக்கப்பட்டார். பிள்ளைப் பேற்றுத் துறையில் நாவிதர் மனைவிமார் ஈடுபட்டதால் இவர்கள் மருத்துவச்சி என அழைக்கப்பட்டனர். நாவிதர்க்கான ஊதியம் நாளொன்றுக்கு 4 நாழி நெல்.
நோயாளிகள்:
நோயாளிகளை வியாதிப்பட்டு கிடப்பார் என்று பெயர் கொண்டு அழைத்ததாகக் கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகின்றது. இவர்களுக்கு ஒரு வேளைக்கு ஒரு நாழி அரிசி வழங்கப்பட்டது.
மருந்துகள்:
ஆதுலர் சாலையில் ஒரு ஆண்டுக்குத் தேவையான பலவகையான மருந்துகளிருந்தன, அவை;
1. பிராமியம் கடும் பூரி - 1 எண்ணிக்கை
2. வாசா ஹரீ தகி - 2 படி
3. தச மூலா ஹரீ தகி - 1படி
4. பல்லாதக ஹரீ தகி -1 படி
5. கண்டீரம் - 1 படி
6. பலா கேரண்ட தைலம் -1 தூணி
7. லசு நாக ஏரண்ட தைலம் -1 தூணி
8. பஞ்சக தைலம் -1 தூணி
9. உத்தம கர்ணாதி தைலம் -1 தூணி
10. பில்வாதி கிருதம் -1 பதக்கு
11. மண்டூகர வடகம்-2000 எண்ணிக்கை
12. திராவத்தி -1 நாழி
13. விமலை - 2000 எண்ணிக்கை
14. சுனேற்றி - 2000 எண்ணிக்கை
15. தம் ராதி - 2000 எண்ணிக்கை
16. வஜ்ர கல்பம் - 1 தூணி 1 பதக்கு
17. கல்யாண லவணம் - 1 தூணி 1 பதக்கு
இந்த அனைத்து மருந்துகளையும் பத்திரப்படுத்திப் பாதுகாக்க 40 காசுகள் வழங்கப்பட்டுள்ளது என்று திருமுக்கூடல் கோயிலின் கல்வெட்டு செய்தி தெரிவிக்கின்றது.
இதேபோன்று ஆதுலர் சாலை( மருத்துவமனை) ஒன்று சென்னை வடபழனி முருகன் கோயிலின் உள்ளே இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சான்றாதாரங்கள்:
'திருமுக்கூடல்', முனைவர் சீ. வசந்தி, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு, 2013 பதிப்பு, பக்கம் 75-77.
அருள்மிகு திருமுக்கூடல் கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
http://www.tamilvu.org/ta/அருள்மிகு-திருமுக்கூடல்-கரியமாணிக்க-வரதராஜப்-பெருமாள்-திருக்கோயில்-139047
தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
https://www.facebook.com/devipharm
No comments:
Post a Comment