Monday, April 15, 2019

காணக்கிடைத்த செப்பேடுகள்



——    முனைவர் வீ.ரேணுகாதேவி


அச்சு இயந்திரங்களின் வருகைக்கு முன்னர் எழுதப்படும் பொருள்களாகக் கல், ஓலை, உலோகம், மரம், சங்கு, துணி, சுடுமண் என பலவகைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் கல், ஓலை, செம்பு ஆகியவற்றின் பயன்பாடு மிகுதியாகும்.

கல்லில் எழுதப்பட்ட செய்திகள் கல்வெட்டாகவும், ஓலையில் எழுதப்பட்டவை சுவடிகளாகவும், செம்பில் எழுதப்பட்ட செய்திகள் செப்பேடுகளாகவும் இன்றளவும் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. இவை எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் வெளிப்படுத்தும் வரலாறு, பண்பாடு, கலை, சமயம். சமுதாயம் மற்றும் பொருளாதாரம் பற்றிய செய்திகளும் வளமானவை. அவை ஒரு மொழியின், சமூகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்குப் பெரிதும் பயன் உடையதாக உள்ளன.

தமிழகத்தில் முதலில் கல்வெட்டுக்களைத் தொகுக்க ஆரம்பித்த ஆங்கிலேய அதிகாரிகள் தங்கள் கள ஆய்வுகளில் செப்பேடுகளையும் புதையல்களாகக் கண்டறிந்தனர். வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக ஆங்கிலேய அரசு பழைய ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு புதிய வடிவில் தாள் ஆவணங்கள் வழங்கியபோது ஏராளமான செப்பேடுகள் அரசின் கருவூலங்களைச் சென்றடைந்தன.

தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 செப்பேடுகள் இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் ஆங்கிலக் குறிப்புகளுடன் பதிவாகியுள்ளன. பல செப்பேடுகள் படங்கள், வாசகங்கள், எழுத்துப் பெயர்ப்பு, மொழி பெயர்ப்பு ஆய்வுக்குறிப்புகளுடன் எபிகிராபிகா இண்டிகா தொகுதிகளில் வெளிவந்துள்ளன. இந்தியன் ஆன்டிகுவரி, தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகள் ஆகியவற்றிலும் சில வெளிவந்துள்ளன. தமிழகச் செப்பேடுகள் தொகுதி-1 இல் 40 செப்பேடுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் ஒன்று வெள்ளிப் பட்டயம், இரண்டு தெலுங்கு மொழியில் உள்ளவை.

சிதறல்களாக ஆங்காங்கே வெளியிடப்பட்டுள்ள செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில்கொண்டு தி.நா.சுப்பிரமணியன் பல்லவர் செப்பேடுகள் 30, பாண்டியர் செப்பேடுகள் 10 என்ற இரு தொகுதிகளை தமிழ் வரலாற்றுக் கழகம் வாயிலாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார்.

இராமேசுரம் கும்பாபிஷேக மலர் தொகுத்த சோம. லெ. இராமநாதபுரம் அரண்மனையிலிருந்த செப்பேடுகளைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துணை கல்வெட்டுப் பயிற்சி நிறுவன மாணவர்களைக் கொண்டு படித்து அவற்றின் 30 வாசகங்களை வெளியிட்டார். இதன் காரணமாக ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு பலரும் செப்பேடுகளைத் தேடி இதழ்களில் வெளியிடும் போக்கு முனைப்பு பெற்றது. மராட்டியர் செப்பேடுகள், சேதுபதி செப்பேடுகள், கொங்கு நாட்டுச்  சமூக ஆவணங்கள், திருவாடுதுறை ஆதீனச் செப்பேடுகள், திருப்பனந்தாள் ஆதீனச் செப்பேடுகள் எனப் பல்வேறு  தொகுதிகளாகச் செப்பேடுகள் வெளியிடப்பட்டன.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வேளஞ்சேரி திருத்தணி செப்பேடுகள், திருமலை நாயக்கர் செப்பேடுகள் ஆகிய இரு தொகுதிகளை வெளியிட்டதோடு, கல்வெட்டு காலாண்டிதழ் கருத்தரங்கு கட்டுரைத் தொகுதி, மாவட்டக் கையேடு ஆகியவற்றில் அவ்வப்போது செப்பேட்டு வாசகங்களை வெளியிட்டுள்ளது. இதன் தொல்லியல் செய்தி மடலில் ஐந்து செப்பேடுகள் பற்றிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதுவரை அச்சில் வெளிவந்த செப்பேடுகள் அனைத்தையும் பற்றிய செய்திகளை விவரிக்க இயலாமையால் தமிழகச் செப்பேடுகள் என்ற தொகுதியில் வெளிவந்த 40 செப்பேடுகள் பற்றிய செய்திகள் விரித்துரைக்கப்படுகின்றன

தமிழகச் செப்பேடுகள் தொகுதி – 1ல் மதுரை நாயக்க மன்னர் தொடர்பான செப்பேடுகள் பத்தும், சேதுபதிகள் தொடர்பானவை ஐந்தும், உள்ளன. நத்தம் பாளையப் பட்டுகள் - 3,  கூளப்ப நாயக்கர்-2, அரியலூர் மழவராயர் -2, தென்காசிப் பாண்டியர் -1, வீரபாண்டிய கட்டபொம்மன்-1, விஜயநகர நாயக்கர்-1, ஆங்கிலேயர்-2 என மொத்தம் 27 செப்பேடுகளில் ஆட்சியாளர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஏனைய 13 செப்பேடுகளில் ஆட்சியாளர்கள் பற்றிய குறிப்புகள், பெயர்கள் இல்லாதவை.

இச்செப்பேடுகள் அனைத்தும் ஒரு ஏட்டில் மட்டும் வாசகம் உடையவை. மயிலாடுதுறை, சேடபட்டிமேல்சேவூர் ஆகிய செப்பேடுகள் வார்ப்பு முறையில் செய்யப்பட்டவை. ஏனையவை செப்புத் தகடுகளாக உள்ளவை. முன்னதில் உருவங்கள் வார்ப்பு முறையில் புடைப்பாக உள்ளன.  தகடுகளாக உள்ள பலவற்றில் உருவங்கள் கோட்டுருவங்களாக உள்ளன.

பெரும்பாலான செப்பேடுகள் தமிழகத்தின் தென்பகுதியைச் சேர்ந்தவை. திருவண்ணாமலை, மேல்சேவூர், நெய்வேலிச் செப்பேடுகள் வட பகுதியைச் சேர்ந்தவை. இச்செப்பேடுகள் பலவும் தமிழ்ச் சமூகங்கள் தொடர்பானவை. சமூகங்களின் தோற்றம் பற்றிய விரிவான புராணங்கள் நெய்வேலி, மானூர், திருவண்ணாமலை செப்பேடுகளில் காணப்படுகின்றன. 

திருமானூர், அரியலூர், நத்தம், மேல்சேவூர்திருவாடுதுறை, செங்கல்பட்டு (வெள்ளிப் பட்டயம்) திருநெல்வேலி 1, 2, மானூர், இராமநாதபுரம், மூலைக்கொத்தளம் -2, முசிறி ஆகியச் செப்பேடுகள் கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய செய்திகளைத் தருகின்றன.

அரியலூர், நத்தம் செப்பேடுகள் சந்தைகளில் பெறப்பட்ட வரி வருமானம் கோயில்களுக்குக் கொடுக்கப் பட்டதைச் சொல்கின்றன.

நத்தம் செப்பேடு பேட்டைகளில் உள்ள வணிகர்களில் இந்துக்கள் மட்டுமல்லாது இஸ்லாமியரும் வரி வருமானத்தைக் கோயில்களுக்குத் தர ஒப்புதல் அளித்ததாகக் காட்டுகின்றன.

இந்து கோயில்களுக்கான இஸ்லாமியர் பங்களிப்பு பற்றி உத்திர கோசமங்கைதிருநாகேஸ்வரம், நயினார் குப்பம் கல்வெட்டுக்கள் வழியாக அறிய முடிகின்றது. இவற்றின் வழியாகப் பெறப்படும் செய்திகள் சமயப் பூசல்களைக் குறைத்துச் சமயப் பொறையை ஏற்படுத்தக்கூடியவை.

மேல்சேவூர் செப்பேடு செட்டிகள் தங்கள் சமூக மக்களிடையே நிகழும் நன்மை நிகழ்வுகளில் விதிக்கப்படும் கட்டணங்களைக் கோயில் வழிபாட்டிற்கு வருவாய் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது.

இவ்வாறு பல சாதி சமூகங்கள் தங்களுக்கான மடங்களை ஏற்படுத்திக் கொள்வதையும், அவற்றின் நடவடிக்கைகளையும், திருவண்ணாமலை 24 மனை செட்டிகள் செப்பேடு, சேடப்பட்டி அம்பலக்காரர் செப்பேடு, மதுரை ஆரப்பாளையம் குயவர் - செட்டியார் செப்பேடு ஆகிய செப்பேடுகள் வெளிப்படுத்துகின்றன.

அரசனால் பாராட்டப்பட்டு நாட்டாண்மை; தலைமை பெறுவதை சந்தையூர், தாருகாபுரம்பாலக்கோப்பை செப்பேடுகளும், சமயத் தலைவர் ஒருவரால் நாட்டாண்மைச் சிறப்புப் பெற்றதை பள்ளப்பட்டிச் செப்பேடும் காட்டுகின்றன.

கைக்கோளர் சமூகத்தைப் புகழ்ந்து பாடியவருக்குக் கொடுத்த மரியாதைச் சிறப்புகளை மயிலாடுதுறைச் செப்பேடு காட்டுகிறது. இடங்கை, வலங்கை பிணக்கில் இடங்கையினருக்குச் சாதகமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவரைப் பாராட்டி மரியாதைகள் செய்யப்பட்டதை நெய்வேலி பண்ணாட்டார் செப்பேடு கூறுகின்றது.

சந்தையூர் செப்பேடு சந்தையூர்  சலுப்ப பெத்தண்ண செட்டி அதிகாரம் செய்து வந்தபோது அவனிடம் மாதம் 9 கலம் தானியக் கூலிக்கு வீரண்ண சேர்வை காவல் பணி செய்து வந்தான், சந்தையில் இருவருக்கும் சச்சரவு ஏற்பட்டு வீரண்ணன் சேர்வை சலுப்ப பெத்தண்ணனின் தலையை வெட்டி ரத்தக்கைகளோடு நடுச் சாமத்தில் கூளப்ப நாயக்கர் முன்கொண்டு வந்து வைத்து சந்தையூரை கூளப்ப நாயக்கரின் பாளையப்பட்டு ஊராக்கினான். கூளப்ப நாயக்கரும் ராணுவரும் மகிழ்ந்து அவனுக்கு சந்தையூரைச் சேர்ந்த 18 பட்டி காவல் நாட்டாண்மை அளித்தனர்.  அவனது சாதியை அவனை கம்பளக்காரனாகவும், தென் மலை குத்தகைக்காரனாகவும் அங்கீகரித்து பட்டயம் எழுதிக் கொடுத்தனர். கூளப்ப நாயக்கர் பாளையப்பட்டு ஏரிகள் பாசனத்தில் 30 கலம் விதைப்பாடு நஞ்சை நிலமும், 60 சங்கிலி புஞ்சை நிலமும் தரப்பட்டது. 18 பட்டி கிராமத்து வீடுகள் ஒவ்வொன்றும் 1 பணம் 3 குறுணி தானியம் தருவதென்றும், ஆடு உள்ளவர்கள் 1 கிடாய் தருவதென்றும், அரண்மனைக்கு அடுத்து இரண்டாவதாக இவனுக்குக் கோயில்களில் தீர்த்தம் திருமாலை தருவதென்று முடிவாயிற்று என்று செப்புகின்றது.

சாட்சிகள், பட்டயம் எழுதியவர் பெயர்களும் ஓம்படைக்கிளவியில் சதுரகிரி சிவன் பெருமாள் கோயில்களும் சொல்லப்பட்டுள்ளன.

பஞ்சமா சப்த வாத்தியக் கருவியை இயக்குபவர்களான நாகாபாசத்தார் தங்களுக்கென்று தலைவரைத் தேர்வு செய்து அவருக்கு மரியாதைச் சிறப்புகள் செய்ததை ஆழ்வார்பேட்டை செப்பேடு-1 பதிவு செய்துள்ளது.

பாளையப்பட்டுப் பாளையக்காரர்கள் பொது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை நத்தம், வேலன்பட்டி, பழனிச் செப்பேடுகள் காட்டுகின்றன. திருச்செந்தூர்க் கோயில் திருப்பணிக்கு பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரன் வீரபாண்டிய கட்டபொம்மன் தன் ஆளுகைப் பகுதி வரி வருமானத்தை அளித்ததைப் பற்றி திருவாடுதுறை செப்பேடு காட்டுகிறது.

பாளையப்பட்டுக்களை அடக்கி ஆங்கிலேயர் கம்பெனி ஆட்சியை நிறுவிய அரசியல் நிகழ்வுகளை எட்டயபுரம் விளம்பிச் செப்பேடு செப்புகின்றது.


ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதும் கடல் கடந்து வெகு தொலைவிலிருந்த அரசுத் தலைமையைப் போற்றித் தமிழகத்தில் அன்னதானம் இலவச ஆடைகள் மற்றும் தெய்வத்திற்கு அணிகலன் வழங்கியதைச் செங்கல்பட்டு வெள்ளிச் செப்பேடு வெளிப்படுத்துகின்றது.

மீனாட்சிபுரம் செப்பேடு குரும்பர் சமுதாயப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றிய “தீண்குலச் சமயத்தைச்” சேர்ந்த இஸ்லாமியரைப் போற்றுவதைப் பார்க்கலாம். சமயங்களிடையே சமயப்பொறை மட்டுமின்றி இடருற்ற காலங்களில் உதவும் சகோதரத்துவமும் இருந்தமைக்கு இச்செப்பேடு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

பண்டைய காலத்தில் வழக்கிலிருந்த வராகன், பணம் முதலிய செலவாணிகளிலும் பேட்டைகளிலும் துறைமுகங்களிலும் வந்து சென்ற சரக்குகள் அவற்றிற்கான வரி விதிப்புகள் சமூக மக்கள் ஒவ்வொரு நிகழ்விற்கும் விதித்துக் கொண்ட கட்டணங்களும் பொருளாதாரச் செய்திகளை அறிந்துகொள்ளப் பெரிதும் உதவுபவையாக உள்ளன.

வெம்பக் கோட்டைச் செப்பேடு அரசின் ஆதரவோடு எப்படி வரிவிதிப்பு உண்டாக்கப்பட்டது அது மக்களால் எதிர்க்கப்பட்டது, பின்னர் அது தவிர்க்கப்பட்டது போன்ற செய்திகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.

வெள்ளிக்குறிஞ்சி செப்பேடு பண்டாரம் உறவின் முறையார் தங்களிடையே உள்ள மண உறவுகள் பற்றிய நெறிமுறை ஏற்படுத்திக் கொண்டதை வெளிப்படுத்துகின்றது.

பழனிச் செப்பேடு குமார லிங்கைய நாயக்கர் தனது தந்தை ஏறுதாது லிங்கைய நாயக்கர் மற்றும் தாயார் தாதம்மாள் அவர்கள் பெயரில் இரண்டு சத்திரங்கள் கட்டி நிர்வாகச் செலவுக்காக ஏற்கப்பட்டி கிராமம், காரைக்குண்டு, அம்மாபட்டி ஆகிய ஊர்களைக் கொடுத்துள்ளார். இவ்வூர்களில் உள்ள நிலங்களில் எல்லைகளின் திசைகள் ஈசானிய, அக்னி, நிருதி, வாயு என்று திரை பாலகர்களின் பெயரில் சொல்லப்பட்டுள்ளது. நிலத்தின் ஒவ்வொருத் திருப்பத்திலும் எல்லைக் கல்லாகச் சூலக்கல் நடப்பட்டதால் ‘சூலக்கல் 11க்குள் சேர்ந்த’, ‘சூலக்கல் 14க்குள் சேர்ந்த’ என்று நிலங்கள் குறிக்கப்படுகின்றன.

இச் செப்பேட்டில் உள்ள வாசகம் அப்படியே நத்தம் அருகில் உள்ள சத்திரம் ஊராளிப் பட்டியில் கல்வெட்டாகவும் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்லிலும், செம்பிலும் வெட்டிக்கொள்க என்று வரும் கல்வெட்டுச் சொற்றொடர்க்கு இச்செப்பேடு நல்ல காட்டாக உள்ளது. இதனில் சொல்லப்படும் சத்திரங்கள் இன்றுப் பழனிக்குப் பாதயாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ளன.

தாருகாபுரம் செப்பேடு தென்காசிப் பாண்டியர் எல்லைக்குட்பட்ட மலையங்காட்டுப் பகுதியில் தீயவனும், மிருகத்தன்மை உடையவனுமான சந்திரன் என்ற ஒரு எதிரி இருந்ததாகவும் அவன் பல அரசர்களைக் கொன்று வந்ததாகவும் அவனை கொண்டையன்கோட்டை  மறவரில் ஒருவனான திருவண்ணாத் தேவர் வெட்டி வெற்றி கொண்டான். ஆதலால் திருவண்ணாத் தேவர்க்கு இந்திரத் தலைவன் என்று பட்டம் தரப்பட்ட செய்தி சொல்லப்பட்டுள்ளது. இவருக்கு நிலமை காணி ஆட்சியாக, உம்பளச் சர்வமானியமாக 22க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழங்கப்பட்டன. இவ் கிராமங்களின் பெயரும் அவை உள்ளடக்கிய பகுதியின் எல்லையும் இச் செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ளது. இவர் தமக்குப் பல்லக்கு, தீவட்டி, குடை, கொடி, சாமரம் முதலிய பரிவாரங்கள் வைத்துக் கொள்ளத் தேங்காய் தொட்டு உரிமை வழங்கியதும், கோயில் மரியாதை வழங்கியதையும் சொல்வதாக உள்ளது.

அரித்துவாரமங்கலச் செப்பேடு தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்கருக்கு வெள்ளாளர்கள் அனைவரும் ஒன்று கூடி கோயில்களுக்கு நிவந்தம் அளித்ததைப் பதிவு செய்து அளித்ததைக் குறிப்பதாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்த பல்வேறு பிரிவு வெள்ளாளர்களைப் பற்றியும் அவர்கள் கோயில்களுக்கு அளித்த, கொடைகள் பற்றியும் கூறுவதாக இச் செப்பேட்டுச் செய்திகள் உள்ளன.

செப்பேடுகளின் பொதுவாகக் கோயில் கொடைகள், மக்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள், வசூல்கள், அரசர்களின் மெய்தீர்த்திகள் பற்றிய செய்திகளையே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன.

ஒன்பது கம்பளம், கவுண்டர்கள், செங்குந்தர், பண்டாரம், பள்ளு, செட்டி, வெள்ளாளர், நாயக்கர், தேவர் எனச் சாதீயப் பெயர்களும் செப்பேடுகளில் காணக் கிடைக்கின்றன.

பழைய அளவு முறைகள் பற்றிய செய்திகளும் காணக் கிடைக்கின்றன.

கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள் ஒரு மொழியின் தொன்மையைப் பறைசாற்றுபவை. அவை மொழி வரலாறு, மொழி அமைப்பு, மொழி நடை, சமூக வரலாறு, அமைப்பு, பண்பாடு, கோயில் வழிபாடு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிவந்தங்கள், நி;நிலக்கொடைகள், வரி விதிப்பு, வரி வசூல், அரசியல் அமைப்பு, பொருளாதாரம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்குப் பெரிதும் துணையாக அமைந்துள்ளன. அவற்றை எரியூட்டி மகிழாது போற்றிப் பாதுகாப்பது நமது தலையாயக் கடமையாகும்.




தொடர்பு:
முனைவர் வீ.ரேணுகாதேவி
(prof.renuga@gmail.com)
தகைசால் பேராசிரியர்
மேனாள் துறைத்தலைவர்
மொழியியல் துறை
மேனாள் புலத்தலைவர்
மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை – 625 021.









No comments:

Post a Comment