—— மா. மாரிராஜன்
இக்கல்வெட்டு இராஜராஜனின் தொலை நோக்குப் பார்வை, நிதி மேலாண்மை, என்று பல ஆய்வாளர்கள் சிலாகித்துக் கூறு வர்.
பெருவுடையார் கோவிலின் மேற்குப்புற திருச்சுற்றுமாளிகையின் உட்புறத்தில் உள்ள சிறு பிள்ளையார் முகப்பில் கீழ்க்கண்ட கல் வெட்டு உள்ளது.
இக்கோவில் பிள்ளையாருக்கு தி னசரி அமுது படைத்தல் வேண்டும்.!
தினம் ஒன்றுக்கு 150 வாழைப்பழங்கள் வேண்டும். இந்த அமுது படையல் நிகழ்வானது வருடம் முழுவதும் தடையின்றி நடக்க அரசர் ஒரு ஏற்பாட்டை நிறுவினார்.
ஒரு வைப்புத்தொகை உருவாக்கப்பட்டது. வாழைப்பழம் வாங்குவதற்காக வைப்புத் தொகை அளிக்க, தஞ்சையின் முக்கிய நான்கு தெருக்களைச் சேர்ந்த நகரத்தார்கள் முன் வந்தார்கள். அவர்கள் முறையே 60 காசு., 120 காசு., 120 காசு., 60காசு என மொத்தம் 360 காசுகள் நிவந்தனம் அளித்தனர். இந்த வைப்புத்தொகை 360 காசுகள் தஞ்சை வணிகர்களுக்கு ஆண்டுக்கு 12.5 % என்ற வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டது.! வருட வட்டியாக 45 காசுகள் ( 360 ÷12.5% = 45) பெறப்பட்டது.!
பிள்ளையாருக்கு அமுத படைக்க நாளொன்றுக்கு 150 வாழைப்பழங்கள் தேவை. ஆண்டுக்கு 360 நாட்கள் எனத் தெரிகிறது. ஆக... ஒரு வருடத்திற்குத் தேவைப்படும் வாழைப்பழங்களின் எண்ணிக்கை 360 × 150 = 54000. அன்றைய நாளில் ஒரு காசுக்கு 1200 வாழைப்பழங்கள் கிடைத்தன!
வட்டித்தொகையாக கிடைத்தது 45 காசுகள்! எனவே 45 ×1200 =54000 வாழைப்பழங்கள் கிடைத்தன! பிள்ளையாருக்கும் தடையின்றி வருடம் முழுவதும் படையல் தொடர்ந்தது.! இச் செய்தியினை விரிவாகக் கூறும். கல் வெட்டு வரிகளைப் படித்துப் பா ருங்கள்.!
சமுத்திரம் போல் இருக்கும் தஞ்சை பெரிய கோவிலில் ஒரு சிறு துளிபோல் காணப்படும் பிள்ளையார் கோவிலுக்கு தினசரி நெய்வேத்தியம் செய்ய இவ்வளவு ஏற்பாடுகள் என்றால், தஞ்சை பெருவுடையாருக்கு பூஜைகள் நடக்க எவ்வளவு , எவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.? ஒட்டு மொத்த சோழ தேசத்துக் கோவில்களின் நிர்வாகம் எப்படி இருந்திருக்கும்.?
ஒட்டுமொத்த சோழநாட்டின் நிர்வாகம்..! ராஜராஜ சோழனின் சிறப்பை எவ்வாறு விவரிக்க முடியும் !!!!
இராசராசனின் ‘வாழைப்பழ வாய்ப்பாட்டு’க் கல்வெட்டு
“ஸ்வாதிஸ்தி ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் ஆலயத்துப் பிள்ளையார் கணபதியார்க்கு வாழைப்பழம் அமுது செய்தருள உடையார் பண்டாரத்துப் பொலிசையூட்டுக்கு வைத்தருளின காசும் இக்காசு பொலிசையூட்டுக்கு கொண்ட அங்காடிகளும் கல்லில் வெட்டியது.
ஆலயத்துப் பிள்ளையார் கணபதியார்க்கு அமுது செய்தருள நிசதம் வாழைப்பழம் நூற்றைம்பதாக ஒராட்டைக்கு வந்த வாழைப்பழம் ஐம்பத்து நாலாயிரத்துக்கு காசு ஒன்றுக்கு வாழைப்பழம் ஆயிரத்திருநூறாக வந்த காசு நாற்பத்து ஐஞ்சுக்கு காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைகாற் காசு பொலிசையூட்டாக
செல்லவைத்த காசு முன்னூற்று அறுபது
இக்காசில் தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர்ப் புறம்படி நித்த விநோதகப் பெருந்தெருவில் நகரத்தார் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது பசான் முதல் கொண்ட காசு அறுபதினாற் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைக்காற் காசு பொலிசையாகக் கடவ பொலிசைக் காசு ஏழரைக்கு
உடையார் பண்டாரத்தே நிசதம் இடக்கடவ வாழைப்பழம் இருபத்தைஞ்சு
தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர்ப் புறம்படி மும்முடிச் சோழப் பெருந்தெருவில் நகரத்தார் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது பசான் முதல் கொண்ட காசு நூற்றிரு பதினாற் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைக்காற் காசு பொலிசையாகக் கடவ பொலிசைக் காசு பதினைஞ்சுக்கு
உடையார் பண்டாரத்தே நிசதம் இடக்கடவ வாழைப்பழம் ஐம்பது
தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர்ப் புறம்படி வீரசிகாமனிப் பெருந்தெருவில் நகரத்தார் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது பசான் முதல் கொண்ட காசு நூற்றிரு பதினால் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைக்காற் காசு பொலிசையூட்டாக ஆட்டை வட்டம் அரைக்காற் காசு பொலிசையாகக் கடவ பொலிசைக் காசு பதினைஞ்சுக்கு
உடையார் பண்டாரத்தே நிசதம் இடக்கடவ வாழைப்பழம் ஐம்பது
தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர்ப் புறம்படி திரிபுவன மாதவிப் பேரங்காடி நகரத்தார் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது பசான் முதல் கொண்ட காசு அறுபதினாற் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைக்காற் காசு பொலிசையாகக் கடவ பொலிசைக் காசு ஏழரைக்கு
உடையார் பண்டாரத்தே நிசதம் இடக்கடவ வாழைப்பழம் இருபத்தைஞ்சு”
தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி 2.
எண் 37.
S.I.I vol. 2. No 37.
தொடர்பு: மா. மாரிராஜன் (marirajan016@gmail.com)
No comments:
Post a Comment