-- தேமொழி
"பல்சுவைப் பாடல்கள்" என்ற தலைப்பின் கீழ் இங்குத் தொகுக்கப்பட்ட பாடல்கள் யாவும்ரவிசந்திரிகா (மீ. ப. சோமசுந்தரம், வானதி பதிப்பகம், நான்காம் பதிப்பு: 1989) என்ற நூலில் மீ.ப. சோமு கதையின் இடையில், ஆங்காங்கே சூழ்நிலைக்குப் பொருத்தமாகக் குறிப்பிட்டுச் சென்ற பாடல்கள். மொத்தம் 25 பாடல்களின் இடத்திற்குப் பொருத்தமான பாடல்வரிகளைக் கொடுத்திருக்கிறார். இவை சித்தர் பாடல், நாடோடிப்பாடல் , தேவாரம், திருமூலர் பாடல், பட்டினத்தார், குறவஞ்சி எனப் பற்பல வகையான பாடல்கள்.
1.
"பல்சுவைப் பாடல்கள்" என்ற தலைப்பின் கீழ் இங்குத் தொகுக்கப்பட்ட பாடல்கள் யாவும்
கதையில் இடம்பெற்ற பாடல்களின் முழுவரிகளையும் அவர் கொடுத்திருந்தால் அந்தப்பாடல்களும், பாடலின் சில வரிகள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தால் முழுப் பாடலும், அந்தப்பாடலுக்கு வெவ்வேறு வடிவங்களும் இருப்பின் அவையும் இணையத்தில் தேடி இங்குத் தொகுக்கப்பட்டுள்ளது .
1.
கோமாளிக் கூத்துப் பாடல்:
முதல் கோமாளி:
கோமாளி வேஷக்காரன் ராமராமா - நான்
ஏமாளி யல்லவடா ராமராமா !
ஆனையைப் பிடித்திழுப்பேன் ராமராமா - அந்தப்
பூனையைக் கண்டோடுவேண்டா ராமராமா !
புலியைப் பிடித்திழுப்பேன் ராமராமா - அந்த
எலியைக் கண்டோடுவேண்டா ராமராமா !
சிங்கத்தைப் பிடித்திழுப்பேன் ராமராமா - பெண்டாட்டித்
தங்கத்தைக் கண்டோடுவேண்டா ராமராமா !
மற்றொரு கோமாளி ...
"அப்படியானால், ஏ கோமாளி! உன்னுடைய பெண்டாட்டியைத் தான் பூனை என்றும், எலி என்றும், தங்கம் என்றும் சொன்னாயோ?” என்று வசன நடையிலே கேட்டு விட்டுக் கீழ்க் கண்டவாறு பாட ஆரம்பித்தான்:
கோடாலிக் கொண்டை போட்டு - ஏ தங்கமே தங்கம்
கோயிலுக்கு வார பெண்ணே - ஏ தங்கமே தங்கம்
கோடாலிக் கொண்டையிலே - அடியே தங்கமே தங்கம்
கொழுந்திருந்து வாடுதடி - தங்கமே தங்கம்
இப்படிக் கோமாளிகளின் உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு பெண்கள் குழு புறப்பட்டு வந்தது.
நாவுக்குச் சர்க்கரை நான் தாரேன்
தின்னச் சர்க்கரை நான் தாரேன்
ஆனை வாரதைப் பாருங்களேன் - ஆனை
அட்டிகை மின்னலைப் பாருங்களேன்!
குதிரை வாரதைப் பாருங்களேன் - குதிரை
குதிரைப் படலம்போல நம்ப தேவதை
கொலுசு மின்னலைப் பாருங்களேன்!
இதைத் தொடர்ந்து கோமாளி பாட ஆரம்பித்தான்:
தங்கத்தாலே தாம்பாளமாம்-பெண்டுகளா
இப்படிக் கோமாளி ஆரம்பித்ததும் அடுத்த அடியைப் பெண்கள் பாடினார்கள்.
சரம் சரமாப் பூச்சரமாம் - ஏ கோமாளி!
கோமாளி ஒரு அடி பாடவும், பெண்கள் அடுத்த அடி பாடவுமாக இந்தப் பாடல் மாறி மாறி நடந்தது.
கோமாளி: தங்கத்தாலே தாம்பாளமாம் - பெண்டுகளா
பெண்கள்: சரஞ்சரமாப் பூச்சரமாம் - ஏ கோமாளி!
கோமாளி: பூச்சரத்தைக் கைப்பிடிச்சு - பெண்டுகளா
பெண்கள்: புறப்பட்டாளே மாரியம்மா - ஏ கோமாளி!
கோமாளி: வெள்ளியாலே தாம்பாளமாம் - பெண்டுகளா
பெண்கள்: விதம் விதமாப் பூச்சரமாம் - ஏ கோமாளி
கோமாளி: பூச்சரத்தைக் கைப்பிடிச்சார் - பெண்டுகளா
பெண்கள்: புறப்பட்டாரே அய்யனாரு - ஏ கோமாளி
கோமாளி: அருவிக்கரை அரசமரம் - பெண்டுகளா
பெண்கள்: ஆனைகட்டும் பூவரசாம் - ஏ கோமாளி
கோமாளி: ஆனைமேலே அம்பாரியாம் - பெண்டுகளா
பெண்கள்: அம்பாரியில் கோமாளியாம் - ஏ கோமாளி
_______________________________________
2.
குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்:
குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்:
வித்தகன் தானும் நீயே
மெய்ஞ்ஞான வீடுநீ வீட்டின் விளக்குநீ
நாதாந்த மூர்த்தி நீயே
நற்குணம் குடிகொண்ட பாதுஷாவான குரு
நாதன் முகயத்தீனே ! (முஹைதீனே )
_______________________________________
3.
“மரப்பாச்சிக் கல்யாணம்”:
சிறுவர் சிறுமியர் விளையாடும்பொழுது ...
“மரப்பாச்சிக் கல்யாணம்” விழா நடத்திப் பாடும் நையாண்டி பாடல்
தாராபுரம் சம்பந்தம் -அத்தானை
தாசில்தார் என்று சொன்னாங்க
தாராபுரம் போய்ப் பார்த்தேன்-அத்தான்
தமுக்கடிக்கக் கண்டேனே!
இலந்தக்குளம் சம்பந்தம்-அத்தானை
இஞ்சினீயர்னு சொன்னாங்க
இலந்தக்குளம் போய்ப் பார்த்தேன்-அத்தான்
இட்டிலி விற்கக் கண்டேனே!
திருச்சினாப்பள்ளி சம்பந்தம் - அத்தானை
திவான் என்று சொன்னாங்க
திருச்சினாப்பள்ளி போய்ப் பார்த்தேன் -அத்தான்
தீவட்டி பிடிக்கக் கண்டேனே!
கழுகுமலைச் சம்பந்தம்-அத்தானை
கலெக்டர் என்று சொன்னாங்க
கழுகுமலை போய்ப் பார்த்தேன்-அத்தான்
கழுதை மேய்க்கக் கண்டேனே!
வண்ணார்பேட்டை சம்பந்தம்-அத்தா னை
வக்கீல் என்றும் சொன்னாங்க
வண்ணார்பேட்டை போய்ப் பார்த்தேன்-அத்தான்
வறட்டி தட்டக் கண்டேனே!
_______________________________________
4.
மருத்துவம் - சித்தர் பாடல்:
"ஆனைக் கன்றின் ஒருபிடியும்
அரச விரோதி இளம்பிஞ்சும்
கானக் குதிரை இளந்தோலும்
கையில் கனிந்த கனிப்பருப்பும்
தாயைக் கொன்ற பூச்சாற்றில்
தானே கலக்கிக் குடுத்திடினே
மானைப் பொருதும் விழியாளே!
வடுகும் தமிழும் குணமாமே! "
[வேறு]
"ஆனைக் கன்றின் ஒருபிடியும்
அரையன் விரோதி இளம்பிஞ்சும்,
கானக் குதிரை புறத்தோலும்,
காலிற் பொடியை மாற்றினதும்,
தாயைக் கொன்றான் சாறிட்டுத்
தயவா யரைத்துக் கொள்வாரேல்,
மானைப் பொருதும் விழியாளே!
வடுகும் தமிழும் குணமாமே! "
என்பது பாடல்.
தேரையர் பாடலின் கருத்து: ஆனைக் கன்று ஒரு பிடியையும், அரையன் விரோதியின் இளம் பிஞ்சையும், கானக்குதிரையின் மே ல் தோலையும், காலில் பொடியை மாற்றினதையும் தாயைக் கொன்றவனது சாற்றில் இட்டுத் தக்க முறையில் அரைத்தெடுத்து உட்கொள் வாரானால், மானை வென்ற கண்ணையுடைய பெண்ணே! வடுகும் தமிழும் குணமாகி விடும் - என்பது கருத்து.
'வடுகும் தமிழும்' என்னும் நோய் குணமாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாடல் தெரிவிக்கிறது...
அத்தி என்னும் சொல்லுக்கு அத்திமரம், ஆனை என்னும் பொருள்கள் உண்டு. எனவே அத்திமரத்தைக் குறிப்பது ஆனை என்னும் சொல். கன்று என்பது பிஞ்சைக் குறிக்கும். ஆக, ஆனைக் கன்று என்பதற்கு அத்திப் பிஞ்சு' என்று பொருள் கொள்ள வேண்டும். ஆனைக் கன்றின் ஒரு பிடி என்பது ஒரு கைப்பிடி அத்திப் பிஞ்சாம்.
'அரையன் விரோதி இளம் பிஞ்சு' என்பது இளங் கோவைப் பிஞ்சைக் குறிக்கும். கோ என்றாலும் அரையன் என்றாலும் அரசன். வை என்றால் வையும் (திட்டும்) எதிரி. அரையன் விரோதி என்பது கோவைக் கொடி. கோவைப் பிஞ்சு ஓரளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
கானக் குதிரை என்பது மாமரம். கானம்= காடு, குதிரை என்பதற்கு மாமரம் என்ற பொருளும், மா என்பதற்குக் குதிரை என்ற பொருளும் உண்டு. கானக் குதிரை என்றால் காட்டு மாமரம். புறத் தோல் என்பது மேற்பட்டை.
'காலிற் பொடியை மாற்றினது' என்பது, செருப்படை என்னும் ஒரு படர்பூடு. காலில் பொடி சுடாமல் மாற்றுவது செருப்பு ஆகும். இங்கே, செருப்பு என்பது செருப்படை என்னும் படர் பூடு வகையைக் குறிக்கிறது.
தாயைக் கொன்றான் என்பது வாழை மரம். குலை போட்டதும் தாய்மரம் கொல்லப்படு கிறது (வெட்டப் படுகிறது).
மேற் கூறியவற்றையெல்லாம் வாழைமரப் பட்டையைப் பிழிந்து கிடைத்த சாற்றிலே போட்டு நன்றாய் அரைத்து உட்கொண்டால் வடுகும் தமிழும் என்னும் நோய் குணமாகும்.
வடுகும் தமிழும்' என்ன நோய்?
வடுகும் தமிழும் குணமாம்' என்பதற்கு, 'வயிறு கடுத்துப் போகும் சகல ரத்த சீதபேதிகளும் குணமாகும்' என்று பொருள்.
'வடுகும் தமிழும்" என்பது, இரத்த - சீதபேதியை எவ்வாறு குறிக்கும்?
ரத்த சீதபேதி என்பதில் இரத்தம் வப்பானது-சீதம் வெண்மையானது. ஆக, வடுகும் தமிழும் குணமாம் என்பதற்கு, குருதியும் சிதமுமாகப் போகும் வயிற்றுக் கடுப்பு நோய் நலமாகும் என்பது பொருளாம்.
நூல்:மர இனப் பெயர்வைப்புக் கலை
ஆசிரியர்: பேரா. சுந்தரசண்முகனார்
பக்கம்: 10
சுருக்கமாக: இந்த மருத்துவப் பாடலில் மறைபொருளாகச் சொல்லப்பட்ட மூலிகை விளக்கம் வருமாறு:
https://groups.google.com/d/ msg/minTamil/kp6h8f3jXSU/Bph4_ xeJEbIJ
ஆனைக் கன்று = அத்திப் பிஞ்சு
அரசன் விரோதி = கோவைப் பிஞ்சு
கானக் குதிரைப் புறத்தோல் = மாமரத்து ப் பட்டை
காலில் பொடியை மாற்றினதும் = சிரு செருப்படைப் பூண்டு
தாயைக் கொன்றான் சாறு = வாழைப்பூச்சாறு
வடுகும் தமிழும் = வயிற்றுக்கடுப்பு நோய்.
என்பதாகும்.
ஆனைக் கன்று = அத்திப் பிஞ்சு
அரசன் விரோதி = கோவைப் பிஞ்சு
கானக் குதிரைப் புறத்தோல் = மாமரத்து
காலில் பொடியை மாற்றினதும் = சிரு செருப்படைப் பூண்டு
தாயைக் கொன்றான் சாறு = வாழைப்பூச்சாறு
வடுகும் தமிழும் = வயிற்றுக்கடுப்பு நோய்.
என்பதாகும்.
அத்திப் பிஞ்சு, கோவைப் பிஞ்சு, மாமரத்துப் பட்டை, சிறு செருப்படைப் பூண்டு இலைகளைச் சமமாக எடுத்து வாழைத் தண்டு அல்லது பூவின் சாறு விட்டு அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
(வடுகு என்பது தெலுங்கில் வயிற்றுக்கு கடுபு என்று பெயர். தமிழில் உள்ள வயிறு என்ற சொல்லையும் இணைத்து "வயிற்றுக் கடுப்பு"), என்று நோயைக் கூட மறைபொருளாகக் கூறப்பட்டுள்ளது.
_______________________________________
செல்லவே இல்லை - ஒண்ணு
செல்லவே இல்லை!
செல்லாத பணத்துக்கு மண்குயவன் மூணுபேரு
கையே இல்லை-ஒத்தன்
கையே இல்லை!
கையில்லாக் குயவன் செய்தது மூணுபானை
வேகவே இல்லை-ஒண்ணு
வேகவே இல்லை!
வேகாத பானைக்கு இட்டது மூணரிசி
வேகவே இல்லை-ஒண்ணு
வேகவே இல்லை!
வேகாத அரிசிக்கு விருந்தாளு மூணுபேரு
உண்ணவே இல்லை-ஒத்தன்
உண்ணவே இல்லை!
பாடலின் கருத்துகள் ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று பொருள்கள் குறிப்பிடப்பட்டு மூன்றும் எந்தவகையிலும் பயனில்லை என்பதை நேரடியாகச் சொல்லாமல், இரண்டு ஒரு விதமாகவும் மற்றொன்று வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், முடிவு: எதுவுமே உருப்படி இல்லை என்பதுதான் நிலை. குளம் பாழு என்பதும் குளத்தில் தண்ணியே இல்லையென்பதும் இரே நிலைதான். இப்பாடல் பலவேறு வகைகளில் உள்ளது. பாடுபவரின் கற்பனைக்கு ஏற்ப வரிகளும் கருத்துகளும் மாறுபடும். கீழே மேலும் இரு வகைகள்
---
[வேறு - https://ta.wikisource.org/s/3mnn]
கையில்லாத குசவன் செய்தது மூணுபானை
வேகாத பானைக்குப் போட்டரிசி மூணரிசி
வேகாத சோற்றுக்கு விருந்துண்ண மூணுபேரு
உண்ணாத கொத்தன் கட்டினது மூணுகோயில்
சாமியில்லாத கோயிலுக்கு ஆடவந்தார் மூணுபேரு
---
[வேறு - https://ta.wikisource.org/s/3nn9]
கையில்லாத குசவன் வனைந்தசட்டி மூணுசட்டி
வேகாத சட்டியிலே போட்ட அரிசி மூணரிசி
வேகாத சோற்றுக்கு மோர் கொடுத்தது மூணெருமை
ஈனாத எருமைக்கு விட்டகாடு மூணுகாடு
புல்லில்லாக் காட்டுக்குக் கந்தாயம் மூணுபணம்
செல்லாத பணத்துக்கு நோட்டக்காரர் மூணுபேரு
கண்ணில்லாக் கணக்குப் பிள்ளைக்கு விட்ட ஊரு மூணு ஊரு
குடியில்லா ஊரிலே குமரிப் பெண்கள் மூணுபேரு
மயிரில்லாப் பெண்ணுக்கு வந்த மாப்பிள்ளை மூணுபேர்
நூல்: நாடோடி இலக்கியம்
ஆசிரியர்: கி. வா. ஜகந்நாதன்
பக்கம் - 75
_______________________________________
"எருக்கிலைக்குப் பாத்தி கட்டி
எத்தனை பூப் பூத்தாலும்
மருக்கொழுந்தின் வாசமுண்டோ
மலைப் பழநி வேலவனே!”
பழநி வட்டாரத்து நாட்டுப் பாடல்
[வேறு]
"எருக்கிலைக்குத் தண்ணீர் கட்டி
எத்தனைப் பூப் பூத்தாலும்
மருக் கொழுந்து வாசமுண்டோ
மலைப் பழநி வேலவனே”
நூல்: காட்டு வழிதனிலே
ஆசிரியர்: கவிஞர் பெரியசாமித்தூரன்
பக்கம்: 36
7.
_______________________________________
சிறுவர்களும் சிறுமிகளும் பாடி ஆடி விளையாடுகையில் பாடும் பாடல்.
"சுண்டெலிக் கண்ணே!"
ஆக்க வேணாம் அரைக்க வேணாம் சுண் டெலிக் கண்ணே - நீ
அருகிருந்தால் போதுமடி சுண்டெலி க் கண்ணே!
தூக்க வேணாம் வைக்க வேணாம் சுண் டெலிக் கண்ணே-நீ
சுத்தி நின்னாப் போதுமடி சுண்டெ லிக் கண்ணே!
ஆறும் வேணாம் குளமும் வேணாம் சு ண்டெலிக் கண்ணே-நீ
அணைஞ்சிருந்தால் போதுமடி சுண் டெலிக் கண்ணே!
சோறு வேணாம் தண்ணி வேணாம் சுண் டெலிக் கண்ணே-உன்
சுகமிருந்தால் போதுமடி சுண்டெலி க் கண்ணே!
அடுப்பு வேணாம் துடுப்பு வேணாம் சுண்டெலிக் கண்ணே-உன்
அன்பிருந்தாப் போதுமடி சுண்டெ லிக் கண்ணே!
நடக்க வேணாம் அலுக்க வேணாம் சு ண்டெலிக் கண்ணே-நீ
நாலு வார்த்தை சொன்னாப் போது ம் சுண்டெலிக் கண்ணே!
_______________________________________
குறவஞ்சி பாடல்:
"அருள் இலஞ்சி வேலர் தமக்கு
ஒரு பெண்ணைக் கொடுத்தோம்
ஆதீனத்து மலைகள் எல்லாம்
சீதனமாய்க் கொடுத்தோம்!”
என்று குற்றாலத்துக் குறவஞ்சி, இலஞ்சி முருகனோடு சம்பந்த முறை கொண்டாடிப் பாடும் பாடல்.
- திருக்குற்றாலக் குறவஞ்சி
_______________________________________
தினைப்புனக் காதல்:
வண்டாடும் சோலையிலே-நீ
வந்து புனம் காக்கையிலே
மாடப் புறாவென்று என் கண்ணம்மா
மதிமயங்கிப் போனேண்டி!
மலர் பூக்கும் சோலையிலே-நீ
வந்து புனம் காக்கையிலே
மயிலோ குயிலோண்ணு- என் கண்ணம்மா
மதிமயங்கிப் போனேண்டி!
வாழைப் பழமே-என்
வைகாசி மாங்கனியே!
நீலக் கருங்குயிலே-என் கண்ணம்மா
நிலைமயங்கிப் போனேண்டி!
நூல்: தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
ஆசிரியர் : நா. வானமாமலை
பக்கம்: 92
(சேகரித்தவர். ஆர். கே. நல்ல கண்ணு)
10.
_______________________________________
பழநி நடைப்பயணம் செய்யும் பண்டாரங்கள் பாடும் பாடல்:
மலைக்குள் மலை நடுவே
மலையாள தேசமப்பா
மலையாள தேசம் விட்டு
மயிலேறி வருவாயிப்போ
அரகரா அரகரா அரோகரா!
ஏறாத மலை ஏறி
எருது ரெண்டும் தத்தளிக்க
பாராமல் கை கொடுப்பாய்
பழநி மலை வேலவனே
அரகரா அரகரா அரோகரா!
[வேறு]
பாசி படர்ந்த மலை முருகையா
பங்குனித்தேர் ஓடும் மலை முருகையா
ஊசி படர்ந்த மலை முருகையா
உருத்திராட்சம் காய்க்கும் மலை முருகையா
மலைக்குள் மலை நடுவே முருகையா
மலையாள தேசமப்பா முருகையா
மலையாள தேசம் விட்டு முருகையா
மயிலேறி வருவாயிப்போ முருகையா
அந்த மலைக்குயர்ந்த மலை முருகையா
ஆகும் பழநி மலை முருகையா
எந்த மலையைக் கண்டு முருகையா
ஏறுவேன் சன்னிதி முன் முருகையா
ஏறாமல் மலை தனிலே முருகையா
ஏறி நின்று தத்தளிக்க முருகையா
பாராமல் கைகொடுப்பாய் முருகையா
பழநி மலை வேலவனே முருகையா
வேலெடுத்து கச்சை கட்டி முருகையா
விதவிதமாய் மயிலேறி முருகையா
கோலா கலத்துடனே முருகையா
குழந்தை வடிவேலவனே முருகையா
உச்சியில் சடையிருக்க முருகையா
உள்ளங்கை வேலிருக்க முருகையா
நெற்றியில் நீறிருக்க முருகையா
நித்தமய்யா சங்கநாதம் முருகையா
தேரப்பா தைப்பூசம் முருகையா
தேசத்தார் கொண்டாட முருகையா
இடும்பன் ஒரு புறமாம் முருகையா
இருபுறமும் காவடியாம் முருகையா
ஆற்காட்டுத் தேசத்திலே முருகையா
ஆறு லட்சம் காவடிகள் முருகையா
தென்னாட்டுச் சீமையிலே முருகையா
தேசமெங்கும் காவடிகள் முருகையா
கடம்ப வனங்கண்டு முருகையா
காட்சிதர வருவாயிப்போ முருகையா
பாவி நான் என்றுசொல்லி முருகையா
பாராமலிருக்கிறாயோ முருகையா
பழநி நான் வருகிறேனே முருகையா
பார்த்து வரம் தந்திடுவாய் முருகையா
source: http://pathayathirai. org/murugan_songs.html
_______________________________________
11.
பார வண்டி ஓட்டுநர் பாடும் பாடல்:
பருப்பு பிடிக்கும் வண்டி - இது
பட்டணந்தான் போகும் வண்டி
பருப்பு விலை ஏறட்டுண்டி - தங்கரத்தினமே
பதக்கம் பண்ணிப் போடுறேண்டி - பொன்னுரத் தினமே
அரிசி பிடிக்கும் வண்டி - இது
அவினாசி போகும் வண்டி
அரிசிவிலை ஏறட்டுண்டி - தங்கரத் தினமே
அட்டி பண்ணிப் போடுறேண்டி - பொன்னுரத் தினமே
கொள்ளு பிடிக்கும் வண்டி - இது
கோட்டை தாண்டிப் போகும் வண்டி
கொள்ளுவிலை ஏறட்டுண்டி - தங் கரத்தினமே
கொலுசு பண்ணிப் போடுறேண்டி - பொன்னுரத் தினமே
வாழப் பிறந்த வண்டி - இது
வாழவகைசெய்யும் வண்டி
மாளாப் பிறவியல்லலோ - தங்கரத்தி னமே
மனுசப் பிறவியடி! - பொன்னுரத்தினமே
[வேறு]
மஞ்ச புடிச்ச வண்டி, மாயவரம் போற வண்டி
மஞ்ச வெல ஆகட்டுண்டி - நான்
மாலை செஞ்சிப் போடுறேண்டி
பருப்பு புடிச்ச வண்டி, பட்டணந்தான் போற வண்டி
பருப்பு வெல ஆகட்டுண்டி - நான்
பதக்கம் செஞ்சி போடுறேண்டி
கடலை புடிச்ச வண்டி, கடலூருக்குப் போற வண்டி
கடலை வெல ஆகட்டுண்டி - நான்
கம்மல் செஞ்சிப் போடுறேண்டி
அரிசி புடிச்ச வண்டி, அசலூருப் போற வண்டி
அரிசி வெல ஆகட்டுண்டி - நான்
அட்டி செஞ்சி போடுறேண்டி
வாழப் புடிச்ச வண்டி, வடக்குப் பக்கம் போற வண்டி
வாழ வெல ஆகட்டுண்டி - நான்
வளையல் செஞ்சி போடுறேண்டி
மங்கா புடிச்ச வண்டி, மதுரப்பக் கம் போற வண்டி
மாங்கா வெல ஆகட்டுண்டி - நான்
மாட்டல் செஞ்சி போடுறேண்டி
சரக்குப் புடிச்ச வண்டி, சந்தைக்குத்தான் போற வண்டி
சரக்கு வெல ஆகட்டுண்டி - நான்
சங்கிலி பண்ணி போடுறேண்டி
தேங்காப் புடிச்ச வண்டி, தெக்குப் பக்கம் போற வண்டி
தேங்கா வெல ஆகட்டுண்டி - நான்
தோடு செஞ்சிப் போடுறேண்டி
(புஷ்பவனம் குப்புசாமி-1990)
http://shodhganga.inflibnet. ac.in/bitstream/10603/193858/ 4/chapter%202.pdf#page=29
12.
_______________________________________
பூபாள ராகத்தில் ஒரு பாடல் ...
“பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று
பொய்கையில் தாமரை பூத்து மலர்ந்தது!”
[வேறு]
சண்முகர் வருகை:
வாரும் வாரும் தெய் வடிவேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும்
புள்ளி மயிலோரே வாரும்.
சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
சண்முக நாதரே வாரும்
உண்மை வினோதரே வாரும்.
பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று
பொன்னான வேலரே வாரும்
மின்னார்முந் நூலரே வாரும்.
காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
கண்ணுதல சேயரே வாரும்.
ஒண்ணுதல் நேயரே வாரும்.
செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
செங்கல்வ ராயரே வாரும்
எங்குரு நாதரே வாரும்.
அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
ஆறுமுகத் தோரே வாரும்
மாறில் அகத்தோரே வாரும்.
சூரியன் தோன்றினன் தொடர்கள் சூழ்ந்தனர்
சூரசங் காரரே வாரும்
வீரசிங் காரரே வாரும்.
வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
வேலாயுதத் தோரே வாரும்
காலாயுதத் தோரே வாரும்.
சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
தேவர்கள் தேவரே வாரும்
மூவர் முதல்வரே வாரும்.
பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்
பன்னிரு தோளரே வாரும்
பொன்மலர்த் தாளரே வாரும்.
மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
மாமயில் வீரரே வாரும்
தீமையில் தீரரே வாரும்.
தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்
சுப்பிர மணியரே வாரும்
வைப்பின் அணியரே வாரும்.
முருகனை விடியலில் வரவேற்கும் மகளிர் பாடும் சிந்துப்பாடல்கள்
(சிந்து விளக்கம்: மூன்று அடிகளில், முதலடி அளவடியாலும், பின்னிரண்டடி சிந்தடியாலும் அமைந்து சிந்தடியின் ஈற்றுச் சீர் ஒன்றிவரத் தொடுக்கப் பட்டுள்ளது.)
திருவருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார் - சிதம்பரம் இராமலிங்க அடிகள்; 51. சண்முகர் வருகை; பாடல்கள்: 538-549
_______________________________________
13.
மலைவாழ் பழங்குடி பளிஞர் இன மக்கள் பாடல்களாக சில ...
அகவல் மகள், ஆவேசத்துடன் நாகர் பீடத்துக்கு வணக்கம் செய்து விட்டு அகவும் பாடல்;
பழங்குடி தலைவனுக்குக் கட்டளையிடும் பாடல்...
சொக்கையா சொக்கையா
சோறு வையடா
சொக்கையன் பெண்டாட்டிக்கு
நீறு வையடா!
எதிர்காலத்தில் நிகழப்போவதாக அகவல் மகள் குறிப்பு கூறும் பாடல் ....
ஊரான ஊர்விட்டு
ஒருத்தன் இங்கே வருவானாம்!
பேரான சீமைவிட்டு
ஒருத்தன் இங்கே வருவானாம்!
கட்டான ஆண்பிள்ளையும்
கண்மணியாம் பெண்பிள்ளையும்
திட்டான வார்த்தையிலே
திசைமாறி நின்றிடுவார்!
ஆனாலும் இந்தமலை
அருமையான மலையல்லோ
போனாலும் வந்தாலும்
புண்ணியந் தான் சேருமல்லோ!
ஆகையினாலே - சொக்கி குடிதனிலே
சோதனைகள் நடவாமல்
பக்கம் இருந்திடுவான்
பாங்கான முருகனுமே!
பழங்குடி தலைவனின் மகளுக்கு திருமணம் நடக்கப்போவதாக அகவல் மகள் அறிவித்து விடை பெறுதல்....
பளிஞர் குலத்தினிலே
பருவத்தில் பூத்திட்ட
பளிங்குக் கொடியான
பத்தினிக் கன்னிக்கு
பாக்கியங்கள் வந்திடுமாம்
பர்த்தாவும் வந்திடுவான்
ஆக்கினைகள் செய்திடுவாள்
அரசாட்சி நடத்திடுவாள்!
மானுக்காய் இரங்கியிந்த
மான் போலும் கன்னியிவள்
போன உயிர்காத்த
புண்ணியத்தால் நன்மையுண்டு!
இத்தனை தான் இந்நேரம்;
இனியுள்ள சேதியெல்லாம்
பித்துடனே வருமந்தப்
பேரான மனிதனிடம்
சொல்ல வருவேன் நான்,
சொக்கையா கேட்டாயோ!
மெல்ல நடந்திடுவேன்
மேலேறிச் செல்லுகிறேன்!
[***குறிப்பு: பழங்குடியினர் திருமணம் குறித்த பாடல் தனியே கொடுக்கப்படும் ...***]
திருமணம் நன்றே முடிந்ததாகவும் தான் கூறிய குறியின்படியே அனைத்தும் நிகழ்ந்ததாகவும் அகவல்மகள் அறிவிக்கும் பாடல்...
ஊரான ஊர்விட்டு
ஒருத்தன் இங்கே வந்தானாம்
பேரான சீமைவிட்டு
ஒருத்தன் இங்கே வந்தானாம்
கட்டான ஆண்பிள்ளையும்
கண்மணியாம் பெண்பிள்ளையும்
திட்டான வார்த்தையிலே
திசைமாறி நின்றிட்டார்
ஆனாலும் இந்தமலை
அருமையான மலையல்லோ
போனாலும் வந்தாலும்
புண்ணியந்தான் சேருமல்லோ!
ஆகையினாலே சொக்கி குடிதனிலே
சோதனைகள் நடவாமல்
பக்கம் இருந்திட்டான்
பாங்கான முருகனுமே!
_______________________________________
14.
பளிஞர் - பழங்குடியினர் திருமணவிழா பாடல்:
தும்பிக்கையார் பிள்ளையாரைத்
தொழுதுபாதம் தெண்டனிட்டோம்
ஆனைமுகத்து நாயகரை
அடிபணிந்து தெண்டனிட்டோம்!
தாமரைப் பூ பூத்துநின்ற
தையலவள் வாசலிலே
பூமகளும் நிலமகளும்
பொருந்தும் மண வாசலிலே
ஆனைமுகனார் வந்துநின்று
அசைந்தாடும் வாசலிலே
ஆறுமுக வேலவர்தான்
அவதரித்த வாசலிலே
வேலும் மயிலும்
விளையாடும் வாசலிலே
அன்னம் மிதந்து
அசைந்தேகும் வாசலிலே
வண்மை வளம் உடையாள்
வந்து நிற்கும் வாசலிலே
செல்வம் பெரிதுடையாள்
சேவைதரும் வாசலிலே
கலியாணம் கலியாணம்
காரிகைக்கே கலியாணம்
அல்லி அரசாணிக்கும்
அர்ச்சுனர்க்கும் கலியாணம்
ஆணழகன் அர்ச்சுனர்க்கும்
பெண்ணழகி அல்லிக்கும்
ஆசார வாசலிலே அழகுக் கலியாணம்!
கலியாணம் என்று சொல்லிக் காடெல்லாம் முழுதறிய
உற்றார் உறமுறையார் ஊரெல்லாம் பாக்கு வைத்து
சம்பந்தி மார்களுக்குச் சதிருடனே பாக்குவைத்து
வாருங்கள் என்று சொல்லி வணங்கி வரவேற்று
முன்னூறு காதம் மூடியே பந்தலிட்டார்!
ஆயிரம் காதம் அகலமாய்ப் பந்தலிட்டார்!
எண்ணூறு காதம்பேர் இட முள்ள பந்தலிலே
வாழை மரம் கட்டி வண்ணக் கொடிகட்டி
மாணிக்கப் பந்தலிலே வரிசையுடன் தான் தூக்கி
தென்னங் குருத்து வெட்டிச் சோலைக் கிளிகள் கட்டி
தாரும் கமுகுகளும் தனித்தனியே தொங்கவிட்டார்!
சொக்கட்டான் பந்தலிட்டுச் சோளக் கதிர்கட்டி
பாளங்கள் தொங்கவிட்டுப் பந்தல் அலங்கரித்தார்!
கலியாணம் கலியாணம்
காரிகைக்குக் கலியாணம்
அல்லிக்குக் கலியாணம்
அர்ச்சுனர்க்குக் கலியாணம்
அல்லிக்கும் அர்ச்சுனர்க்கும்
அழகான கலியாணம்!
திருமணம் முடிந்த பின்னர் மணமகனின் நண்பர்கள் அவனை நோக்கி பாடும் பாடல்...
புளிய மரத்துக் கிளி
பூவெடுத்துத் தின்னும் கிளி
உன்னை அடுத்த கிளி-கந்தப்பா
உனக்கேத்த சொக்கிக் கிளி!
அரச மரத்துக் கிளி
அத்திப் பழம் கொத்தும் கிளி
பஞ்ச வர்ணக் கிளி-கந்தப்பா
பாட்டிலே பேசுங் கிளி!
ஆல மரத்துக் கிளி
ஆறு தாண்டி வந்த கிளி
சோலை மரத்துக் கிளி -கந்தப்பா
சொந்தமாகி வந்த கிளி!
மணமகனின் தோழர்கள் மணமகனைக் கேலி செய்யும் பாடல் ....
கொய்யாமரத்து மேலே
கொம்புப் பழம் உறங்கும்
கொம்புப் பழம் விழுந்தால்
குயிலா நினைவு வரும்.
கண்ணாளஞ் சோலையிலே
கனிஞ்ச பழம் உறங்கும்
கனிஞ்ச பழம் விழுந்தா
கண்ணா நினைவு வரும்.
மாமரத்து உச்சியிலே
மாங்காப் பழம் உறங்கும்
மாங்காப் பழம் விழுந்தா
மயிலா நினைவு வரும்!
மணமகளின் தோழியர் மணமகளைக் கேலி செய்யும் பாடல்...
கருமலையிலே கல்லுருட்டி
கன்னிமார் எல்லாம் கூடிக்கிட்டு
மூணு முழத்தில் அடுப்புக்கட்டி
முத்துக் குடங்கொண்டு பால் காய்ச்ச
காய்ச்சின பாலும் கசக்குதென்பா
கட்டித் தயிரும் புளிக்குதென்பா
வேப்பம் பட்டை இனிக்குதென்பா
வெள்ளரிப் பிஞ்சும் கசக்குதென்பா.
_______________________________________
15.
பழங்குடிப் பெண் பாடும் பாடல்:
“கொள்ளுப் போட்டா எள்ளு விளையும் - எங்க காட்டிலே
கோழி வந்து குட்டிபோடும் - எங்க வீட்டிலே
கடலை போட்டா நெல்லு விளையும் - எங்க காட்டிலே
கடுவம் பூனை குட்டி போடும் - எங்க வீட்டிலே
அவரை போட்டாத் துவரை விளையும் - எங்க காட்டிலே
ஆனை போடும் பூனைக்குட்டி - எங்க வீட்டிலே”
_______________________________________
16.
முருகனாரு சாமி - அது
முதலான சாமி - எங்க
முன்னோரும் பின்னோரும்
முறை தொழுத சாமி!
கந்தனாரு சாமி - அது
கடவுளராம் சாமி - இன்னும்
சொந்தமான பேருக்கெல்லாம்
சுகம் கொடுக்கும் சாமி!
வேலவராம் சாமி - அது
வேண்டினார்க்குச் சாமி - எந்தக்
காலமுமே நம்மையெல்லாம்
காத்துவரும் சாமி!
வெற்றி வேலுச் சாமி - அது
வீரவேலுச் சாமி - நம்மைச்
சுற்றியுள்ள பகைகள் எல்லாம்
தொலைத்துநின்ற சாமி!
வள்ளியோட சாமி - அது
வரிசை தரும் சாமி - தெய்வ
ஆனையோட சாமி நம்மை
ஆதரிக்கும் சாமி!
குமரனாரு சாமி - அது
குலதெய்வச் சாமி
கும்பிட்டபேர் எல்லாரையும்
கும்பி காக்கும் சாமி!
புள்ளிமயில் சாமி - அது
புஞ்சிரிப்புச் சாமி
வள்ளிதெய்வ யானையோடே
வரம் கொடுக்கும் சாமி!
_______________________________________
பட்டினத்தார் பாடல்:
வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே?
http://www.tamilvu.org/slet/l7100/l7100pd1.jsp?bookid=140&pno=130
_______________________________________
18.
கண்ணன் பாட்டு: கண்ணன் என் காதலன்
-- சுப்பிரமணிய பாரதியார்
(செஞ்சுருட்டி-திஸ்ர ஏகதாளம்.)
சிருங்கார ரசம்.
தூண்டிற் புழுவினைப்போல் -- வெளியே
சுடர் விளக்கினைப்போல்,
நீண்ட பொழுதாக -- எனது
நெஞ்சந் துடித்த தடீ.
கூண்டுக் கிளியினைப்போல் -- தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளையெல்லாம் -- மனது
வெறுத்து விட்டதடீ. 1
பாயின் மிசைநானும் -- தனியே
படுத் திருக்கையிலே
தாயினைக் கண்டாலும், -- சகியே,
சலிப்பு வந்ததடி.
வாயினில் வந்ததெல்லாம், -- சகியே,
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன், -- சகியே
நுங்க ளுறவையெல்லாம். 2
உணவு செல்லவில்லை; -- சகியே
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; -- சகியே,
மலர் பிடிக்கவில்லை;
குண முறுதியில்லை; -- எதிலும்
குழப்பம் வந்ததடீ;
கணமும் உள்ளத்திலே -- சுகமே
காணக் கிடைத்ததில்லை. 3
பாலுங் கசந்ததடீ; -- சகியே,
படுக்கை நொந்ததடீ.
கோலக் கிளிமொழியும் -- செவியில்
குத்த லெடுத்ததடீ.
நாலு வயித்தியரும் -- இனிமேல்
நம்புதற் கில்லையென்றார்;
பாலத்துச் சோசியனும் -- கிரகம்
படுத்து மென்றுவிட்டான். 4
கனவு கண்டதிலே -- ஒரு நாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை, -- எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; -- சகியே,
மேனி மறைந்துவிட்டான்;
மனதில் மட்டிலுமே -- புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ. 5
உச்சி குளிர்ந்ததடீ; -- சகியே,
உடம்பு நேராச்சு.
மச்சிலும் வீடுமெல்லாம் -- முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ.
இச்சை பிறந்ததடீ -- எதிலும்
இன்பம் விளைந்ததடீ.
அச்ச மொழிந்ததடீ; -- சகியே,
அழகு வந்ததடீ. 6
எண்ணும்பொழுதி லெல்லாம், -- அவன்கை
இட்ட விடத்தினிலே
தண்ணென் றிருந்ததடீ; -- புதிதோர்
சாந்தி பிறந்ததடீ
எண்ணியெண்ணிப் பார்த்தேன்; -- அவன்தான்
யாரெனச் சிந்தைசெய்தேன்;
கண்ணன் திருவுருவம் -- அங்ஙனே
கண்ணின்முன் நின்றதடீ. 7
http://www.tamilvu.org/node/154572?link_id=185
_______________________________________
19.
தோத்திரப் பாடல்கள்: முத்துமாரி
-- சுப்பிரமணிய பாரதியார்
உலகத்து நாயகியே, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன்பாதம் சரண்புகுந்தோம், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கலகத் தரக்கர்பலர், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!
கருத்தினுள்ளே புகுந்துவிட்டார், எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பலகற்றும் பலகேட்டும், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பயனொன்று மில்லையடி, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நிலையெங்கும் காணவில்லை, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண்புகுந்தோம், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
துணிவெளுக்க மண்ணுண்டு, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணிவெளுக்கச் சாணையுண்டு, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம்வெளுக்க வழியில்லை, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பிணிகளுக்கு மாற்றுண்டு, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பேதைமைக்கு மாற்றில்லை, -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அணிகளுக்கொ ரெல்லையில்லாய், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம், -- எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
http://www.tamilvu.org/node/154572?link_id=44
_______________________________________
20.
கோளறு திருப்பதிகம்:
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிக
நல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி,
சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
அவர்க்கு மிகவே.
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
(இரண்டாம் திருமுறை)
http://www.tamilvu.org/slet/l4120/l4120son.jsp?subid=1748
_______________________________________
21.
தோத்திரப் பாடல்கள்: வேலன் பாட்டு
-- சுப்பிரமணிய பாரதியார்
[ராகம் -- புன்னாகவராளி] [தாளம் -- திஸ்ர ஏகம்]
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை,
வேலவா! --அங்கொர்
வற்பு நொறுங்கிப் பொடிப் பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக் --கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே.
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன் --சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரை யிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை --ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக் கரந
தொட்ட வேலவா! 1
வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை --உடல்
வெம்பி மறுகிக் கருகிப்
புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச்
செல்வத்தை --என்றும்
கேடற்ற வாழ்வினை இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
குலைத்தவன் --பானு
கோபன் தலைபத்துக் கோடி
துணுக்குறக் கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
மானைப்போல்-தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை
மணஙகொண்ட வேலவா! 2
ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப
மாகுதே; --கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
மகிழ்ச்சியுண் டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணி பசி
யாவையும்-இங்கு
நீக்கி அடியரை நித்தமுங்
காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தைக் --கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள் --எங்கள்
வைரவி பெற்ற பெரு ங்கன
லேவடி வேலவா! 3
http://www.tamilvu.org/node/154572?link_id=17
_______________________________________
22.
திருமூலர் பாடல்:
மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே.
https://shaivam.org/thirumurai/tenth-thirumurai/446/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-6-sivaguru-thiruvadi-peru
_______________________________________
23.
தோத்திரப் பாடல்கள்: சரசுவதி தேவியின் புகழ்
-- சுப்பிரமணிய பாரதியார்
ஆனந்த பைரவி ராகம் -- சாப்பு தாளம்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள். (வெள்ளைத்) 1
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்) 2
வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர் தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்) 3
தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம். (வெள்ளைத்) 4
செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்) 5
வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்) 6
ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்) 7
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்) 8
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல். (வெள்ளைத்) 9
நிதிமி குத்தவர் பொற்றகுவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர்!
ஆண்மை யாள ருழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்!
வாணி சைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்) 10
http://www.tamilvu.org/node/154572?link_id=7
_______________________________________
24.
பெண்மை
-- சுப்பிரமணிய பாரதியார்
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.1
அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம். 2
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலி யழிப்பது பெண்க ளறமடா
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம். 3
பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா. 4
சக்தி யென்ற மதுவையுண் போமடா
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே
ஒத்தி யல்வதோர் பாட்டும் குழல்களும்
ஊர் வியக்கக் களித்துநின் றாடுவோம். 5
உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
ஊது கொம்புகள், ஆடு களிகொண்டே. 6
‘போற்றி தாய்’ என்று தோள்கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோமே
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே. 7
‘போற்றிதாய்’ என்று தாளங்கள் கொட்டடா
‘போற்றிதாய்’ என்று பொற்குழ லூதடா
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே. 8
அன்ன மூட்டிய தெய்வமணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம். 9
http://www.tamilvu.org/node/154572?link_id=295
_______________________________________
25.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்.
வாழ்க்கைத் துணைநலம் - குறள் 54.
_______________________________________
'சோமு' (மீ. ப. சோமசுந்தரம்)
வானதி பதிப்பகம்
நான்காம் பதிப்பு: 1989
No comments:
Post a Comment