Sunday, April 23, 2017

கிராதன்

 -- முனைவர் கி. காளைராசன்


 புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அடியார்களால் சிறப்பித்துப் பேசப்படும் கோயில்.

இத்திருத்தலத்தில், சமயக்குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமானுக்குச் சிவபெருமான் குருவாக வந்து குருந்தை மரத்தின் அடியிலிருந்து உபதேசம் வழங்கியருளினான் என்கிறது புராணம்.  இத்தலத்தில் உள்ள ஆத்மநாதர் (ஆவுடையார்) கோயில் தெற்குப் பார்த்தது.  சிவலிங்கம் இருக்காது. பீடம் (ஆவுடை) மட்டுமே இருக்கும்.  இதனால் இக்கோயிலை ஆவுடையார் கோயில் என்கின்றனர்.  அன்னை யோகாம்பாளுக்கு உருவம் இல்லை.  பாதங்கள் மட்டுமே உண்டு.  இவ்வாறு பார்வதி பரமேசுவரர் அருவமாகவே காட்சியருளுகின்றனர்.  மாணிக்கவாசகப் பெருமானே உற்சவராக உள்ளார்.  எல்லாத் திருவிழாக்களும் மாணிக்கவாசகப் பெருமானுக்கே நடக்கின்றன.

இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் மிகவும் நுணுக்கமானவை.  அதி அற்புதமானவை.  இச்சிற்பங்களுள் மிகவும் அபூர்வமான சிற்பமாக அதீதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இரண்டு சிற்பங்கள் உள்ளன.   இச்சிற்பங்கள் இரண்டையும் கம்பிவலை கட்டிப் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.  அதில் “கிராத வேடமொடு கிஞ்சுகவாய் அம்மையுடன் அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தல்“ என்று எழுதப்பட்டுள்ளது.

கிராதன்



கிராதன் தலைமுடியில் சூரிய சந்திரர் உள்ளனர்.  நெற்றிப் பட்டையில் சிறிய சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன.  நெற்றியில் நீரு இல்லை.  நெற்றிக் கண் உள்ளது.  மீசை உள்ளது.  காது வளர்க்கப்பட்டு அதில் குண்டலங்கள் தொங்குகின்றன. காளிக்கு உள்ளது போல் கோரைப் பற்கள் கடவாய்ப் பகுதியில் உள்ளன.   உயிர்ப்பலி ஏற்றல், மாமிசம் உண்ணுதல் முதலான தெய்வங்களுக்கே இவ்வாறான கோரைப் பற்கள் இருக்கும்.  கழுத்தில் ஒற்றை உத்திராட்சம், இடது கையில் கடகம் அணிந்து கேடயம் ஏந்தியுள்ளார். வலதுகை மணிக்கட்டுக்குக் கீழே பட்டி, கொலை வாள், மார்பில் மணிமாலைகளும்  பூணூலும் உள்ளன.  இடுப்புக்குக் கீழே முழங்காலுக்கு மேலே கபால மாலை.



இடுப்பில் பூதம் பதித்த இடைவார் (ஒட்டியாணம்).  பெருமாளுக்கே இதுபோன்ற பூதம் உள்ள இடைவார் இருக்கும்.   இடது கால் தரையில் ஊன்றியிருக்க, வலதுகாலால் முயலகனை(?)த் தலையில் மிதித்துக் கொலைவாளால் நெஞ்சுக்கூட்டுக்குக் கீழே குத்திச் சாய்த்துள்ள நிலை.


கிஞ்சுகவாய் அம்மன்
"கிஞ்சுக வாயவள்" - முருக்கம்பூப்போன்ற உதட்டையுடைய உமாதேவி என்பது பொருள். சர்வ அலங்காரத்துடன் கொண்டை.  நெற்றியில் அழகாக நாமம்.  கண் புருவத்திற்கு மேல் புருவத்திற்கு மை தடவிய ஒப்பனை.  ஒவ்வொரு காதிலும் மூன்று பெரிய தோடுகள்.  கழுத்தே தெரியாமல் ஆபரணம், மணிமாலைகள்.  மாராப்பு அணியாத மார்புகள்.  வலதுகையில் பனையோலைக் கூடை. விரல்களில் நீண்ட  நகங்கள்.



இடது கையில் காப்புகளும் வளையல்களும், விரல்களில் மோதிரம்,   இடுப்பில் ஒட்டியாணம், சர்வ அலங்கார ஆடை,  முழங்காலுக்குக் கீழே பட்டை,  காலில் தண்டை,   கால்விரல்களில் மிஞ்சி.



சிறிதளவும் ஈவு இரக்கமில்லாமல் கொலைத் தொழில் செய்யும் வேடுவனை கிராதகன் என்பர்  என்று பொருள் கூறுவர்.   ஆனால் இச்சிலையைக் கிராதகன் எனக் குறிப்பிடுவது தவறு.  "கிராதன்" என்பதுவே  சரி. சிவனின் இருபத்தைந்து மஹேசுவர மூர்த்தங்களுள் ‘கிராத’ மூர்த்தமும் ஒன்று  (இருபத்தைந்து மஹேசுவர மூர்த்தங்கள்: சந்திரசேகரர், உமாமகேசர், ரிஷபாரூடர், ஸபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷாடனர், காமாரி, காலாரி, த்ரிபுராரி, ஜலந்தராரி, மாதங்காரி, வீரபத்ரர், ஹரி அர்த்தர், அர்த்தநாரீசுரர், "கிராதர்", கங்காளர், சண்டேசாநுக்ரஹர், நீலகண்டர், சக்ர ப்ரதர், கஜமுகாநுக்ரஹர், ஸோமாஸ்கந்தர், ஏகபாதர், ஸுகாசீனர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர்).  இந்த்ரகீல பர்வதத்தில் தவம் புரிந்த அர்ஜுனருக்கு சிவபெருமான் கிராத வடிவில் தோன்றிப் பாசுபத அஸ்த்ரம் அளித்தார் என்பது மஹாபாரதச் செய்தி.

கோயிலில் இச்சிற்பத்தின் அருகே “கிராத வேடமொடு கிஞ்சுகவாய் அம்மையுடன் அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தல்“ என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கிராதனிடம் பாசுபத ஆயுதம் போன்றதொரு ஆயுதம் எதையும் காணவில்லை.  மேலும், கிராதன் அருகில் அர்ச்சுனன் போன்று யாரும் காட்டப்பட வில்லை. 

அர்ச்சுனனுக்குப் பாசுபத ஆயுதம் வழங்க வந்த சிவபெருமான் பன்றிமேல் அம்பு  எய்திருப்பார்.  ஆனால் இச்சிற்பத்தின் அருகே பன்றியேதும் காட்டப்பட வில்லை.  மேலும் வாளால் ஒரு மனிதனையே கொன்றிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த அரியச் சிற்பம் கிராதன் அல்ல என நினைக்கத் தோன்றுகிறது. மேலும், கோயிலில் இருந்த நிருவாகிகளுக்கு இதுபற்றி ஏதும் தெரியவில்லை.


-=o0O0o=-




திருவைக்குண்டம் 
அருள்மிகு கள்ளபிரான் திருக்கோயிலில் கிராதன் சிற்பம்






இந்தக் கோயிலின்  அரியச் சிற்பங்களை வாழ்வில் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்க்க வேண்டும்.

__________________________________________________________
முனைவர் கி.காளைராசன்
kalairajan26@gmail.com
__________________________________________________________

No comments:

Post a Comment