-- தேமொழி
“ஊட்டியின் மோயாற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், அதன் வடக்குப் பகுதி கர்நாடக எல்லையிலும் பாய்கிறது. கர்நாடகாவில் பாயும் நீரானது கபினி மற்றும் நுகு அணைகளைச் சென்றடைகிறது. பின்னர் இரு அணையிலிருந்தும் வெளியேறும் நீரானது ஒன்றாக இணைந்து, டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியுடன் இணைந்து, மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாகத் தமிழகத்திற்குள் பாய்கிறது.”
கடந்த சில நாட்களாகத் தமிழக உழவர்களுக்கு உதவும் வகையில் சிந்தித்த சிலர் வெளியிட்டுள்ள தகவல் இது. இவ்வாறு கர்நாடகாவில் பாயும் மோயாற்றின் வழியாக கர்நாடகா பலன் அடைவதாகவும், இதனால் அவர்களுக்கே நாம்தான் நீர் தருகிறோம் என்றும், அதை அவர்கள் தமிழகத்திற்குத் தரமறுக்கிறார்கள் என்றும், நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்துக் கொண்டுள்ளது என்றும், மோயாற்றின் மீது நாம் ஓர் அணையைக் கட்டிவிட்டோம் என்றால் கர்நாடகா நீருக்காக நம்மைக் கெஞ்சும் நிலை உருவாகிவிடும் என்றும், இந்த உண்மை தெரிந்தும் அரசியல்வாதிகள் தங்கள் தன்னலத்தின் காரணமாக இத்தீர்வை எடுக்கும் முயற்சியை மேற்கொள்வதில்லை என்றும் பலமான கருத்துப் பரப்புரை பல சமூக வலைத்தளங்களிலும் மாறி மாறிப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இணையத்தின் சில “செய்தித் தளங்களும்” கூட இவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களாகத் தெரியவில்லை. ஆனால் இது உண்மையா, இதனால் தீர்வு கிடைக்குமா என்று ஒருவரும் அக்கறை இன்றி வரும் செய்திக்கு கருத்துப் பகிர்வதும் தொடர்கிறது என்பதுதான் வியப்புக்குரியது. இத்தகைய போக்கிற்கு நன்கு கற்றவர்களும் விதிவிலக்கல்ல.
மோயாறும் அது பாயுமிடங்களும்:

நீலகிரியின் வடக்குப் பகுதியில் துவங்கி காடுகளின் வழியேமட்டும் பாயும் மோயாற்றின் நீளம் 100 கிமீ.க்கும் குறைவானது. இதில் சுமார் 25 கிமீ. கர்நாடகா எல்லைக்குள் பாய்கிறது. முதுமலைக் காட்டின் வழியாகப் பாயும் இந்த மோயாறுதான் அப்பகுதியின் வனவிலங்குகளின் வாழ்வாதாரம். மோயாற்றுக்குக் கிளையாறுகள் எதுவும் கிடையாது. மேலும் மோயாறு போல துவக்கநிலையில் உள்ள எந்த ஒரு ஆற்றிற்கும் கிளையாறுகளும் இருக்காது. இவ்வாறு நீலகிரியின் வடபகுதியில் பாயும் மோயாறும், நீலகிரியின் தென்பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியே பாயும் பவானி ஆறும் பவானிசாகர் நீர்த்தேக்கத்தைத் தங்கள் நீரால் நிரப்புகின்றன. இதற்காக சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் பவானி திட்டம் மூலம் பவானிசாகர் அணையும் கட்டப்பட்டு 33 கோடி கன அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
மோயாற்றின் பள்ளத்தாக்கில், மோயாற்றின் வடகரை சத்தியமங்கலம், தலைமலை, தாளவாடி பகுதிகளை உள்ளடக்கிய காட்டுப் பகுதியும்; தென்கரை கொடநாட்டுப் பகுதியும் வெவ்வேறு விலங்குகளின் இருப்பிடங்களாகத் திகழ்கின்றன. சோலைக் காடுகளைக் கொண்ட குளிர் பிரதேசமான கொடநாட்டுப் பகுதியில் வாழும் கருமந்தி, இருவாச்சிப் பறவைகள், பழுப்பு மரநாய், ஈ பிடிப்பான் பறவை ஆகியன, மோயாற்றின் வடக்கில் புதர் காடுகளைக் கொண்ட வெப்பப் பிரதேசமான சத்தியமங்கலம் பகுதியில் கிடையாது. இதுவே இப்பகுதி இயற்கைச் சூழலின் தனிச்சிறப்பு ஆகும். இருகரையின் காட்டுவிலங்குகளும் மோயாற்றினை நம்பியே வாழ்கின்றன. யானைகள், புலிகள், கழுதைப் புலி, வெளிமான் ஆகிய நான்கு விலங்குகளும் வாழும் உலகின் ஒரே இடம் மோயாற்றின் பள்ளத்தாக்கு. இது மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையும் காட்டுப்பகுதிகளில் ஒன்று.
மோயாற்றின் கிளையாறு வழியாக கபினி ஆற்றிற்கு நீர் கிடைக்கிறதா என்பதில் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் வாழும் மக்களுக்கே சரியான புரிதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் செய்தி கிடைக்கும் பொழுது அது உண்மைதானா என ஆராய்ந்து பார்க்க அதே இணையமும் நமக்குப் பலவழிகளில் உதவுகிறது. கூகுள் இணையத்தேடலும், கூகுள் புவிவரைபடமும் ஒரு சொடுக்கில் கணினித் திரையில் தரவுகளை அள்ளித்தருகிறது.
கூகுள் புவிவரைபடத்தில் மோயாறு பாயும் தடத்தைத் தொடர்ந்து சென்றால் மோயாற்றுக்குக் கிளையாறு இல்லை என்பதும், இல்லாத ஒரு கிளையாற்றின் வழியாக கபினியாறும் நீர் பெறவில்லை என்பதும், மோயாற்றில் அணைகட்டுவதால் கர்நாடகாவை நாம் அடிபணியவைக்கமுடியாது என்பதும் தெளிவாகிறது. கொடுக்கப்பட்டுள்ள படங்கள் வழி உண்மை அறியலாம்.
கட்டுரைக்கான தகவல் தந்து உதவிய தளங்கள்:
[1] Moyar River — https://en.wikipedia.org/wiki/Moyar_River
[2] மோயாறு — https://ta.wikipedia.org/s/h7k
[3] ஒரு நதியின் வாக்குமூலம்: சத்தி, கொடநாடு வனங்களின் ஆதாரம் மோயாற்றின்! [தி இந்து தமிழ் நாளிதழ்] — http://tamil.thehindu.com/opinion/columns/ஒரு-நதியின்-வாக்குமூலம்-சத்தி-கொடநாடு-வனங்களின்-ஆதாரம்-மோயாற்றின்/article7312241.ece
[4] கருவூலம்: ஈரோடு மாவட்டம்! [தினமணி] — http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2017/feb/18/கருவூலம்-ஈரோடு-மாவட்டம்-2651269.html
***
பொய்த்தகவல் வெளிவந்த இணையத்தளங்கள்:
[1] மோயாற்றில் அணை கட்டி, கர்நாடகாவுக்கு ஆப்பு வைக்கலாம்! — http://www.channel42.in/tamil/tamilnadu-will-build-dam-in-moyar-river
[2] ஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக..! — http://www.manithan.com/news/20170406126217?ref=youmaylike1%7Cஊட்டியில்
[3] தமிழக விவசாயிகள் தண்ணீர், குடிநீர் பிரச்சனை தீர: கட்டப்படுமா மோயாற்றின் அணை ? — http://tamilvarthamaani.in/2017/04/தமிழக-விவசாயிகள்-தண்ணீர்/
[4] இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி! — http://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-about-moyar-river-001082.html
நன்றி: சிறகு
______________________________________________________________________
தேமொழி
themozhi@yahoo.com
______________________________________________________________________
themozhi@yahoo.com
______________________________________________________________________
No comments:
Post a Comment