-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.
அது என்ன டெல்டா?
காவிரி டெல்டா...காவிரி டெல்டா ...என்கிறார்களே, காவிரி தெரியும், முன்பெல்லாம் அதில் தண்ணீர் வரும். அது என்ன டெல்டா ?
மலைகளில் பிறக்கும் ஆறுகள் கடலை நோக்கி தங்கள் பயணத்தைத் துவக்குகின்றன. மலைச் சரிவுகளில் துள்ளிக் குதிக்கின்றன. அருவிகளாக ஆர்ப்பரித்து கீழ் நோக்கி வெகு வேகமாகப் பாய்கின்றன.
சிவசமுத்திரம் அருவி
மலைகளில் குறுகலாக வந்த ஆறுகள் கீழே இறங்கி சமவெளியை அடையும்போது விரிந்து போவதால் அவற்றின் வேகம் குறைந்து போகிறது. மலைச்சரிவுகளை ஒப்பிடும்போது சமவெளிப் பகுதியின் சரிவு (Slope) மிக மிகக் குறைவு. இதனாலும் ஆற்றின் வேகம் குறைந்து போகிறது. இதற்கும் மேலாக ஆறுகள் கடலை அடையும் போது, அலைகளின் வேகத்தை எதிர்க்க வேண்டியுள்ளது. இதனாலும் ஆறுகளின் வேகம் குறைகிறது.
ஆற்றின் வேகத்தால் அடித்து வரப்பட்ட பாறைத் துகள்கள், மணல் துகள்கள், வண்டல் மண் போன்றவை, ஆற்றின் வேகம் குறையும் போது மேலும் அடித்துச் செல்லப்பட இயலாமல் ஆற்றின் கரைகளில் வண்டல் படிவங்களாக படியத் துவங்குகின்றன. இப்படிப் படிப்படியாக படியும் வண்டல்கள் உயரும்போது அவை ஆற்றின் போக்கை மாற்றிவிடுகின்றன. அல்லது பிரித்து விடுகின்றன. இப்படி தடம் மாறிச் செல்லும் அல்லது பிரிந்து செல்லும் ஆற்றின் கரைகளிலும் வண்டல்கள் படிந்து மேலும் மேலும் ஆறு பல கிளைகளாகப் பிரிந்து விடுகிறது.
ஆக, ஒரு கோடாக வந்து கொண்டிருந்த ஆறு, கடலை நெருங்கும் போது , பல கிளைகளாக பிரிந்து வண்டல் மண்ணைப் பரப்பி ஒரு புதிய நில அமைப்பை உருவாக்கி விடுகிறது. கிட்டத்தட்ட ஒரு முக்கோண வடிவில் உருவாகும் இந்த நில அமைப்பு கிரேக்க எழுத்து ‘டெல்டா’ (∆) வைப் போல் உள்ளதால் இந்தப் பகுதி ‘டெல்டா’ என்று அழைக்கப்படுகிறது.
கூகுள் பதிமத்தில் அடர் பச்சை நிறத்தில் உள்ளது காவிரி டெல்டா
காவிரி டெல்டா பகுதி , திருச்சிக்கு கிழக்கே கல்லணையிலிருந்து துவங்குகிறது. காவிரி டெல்டாவின் வடக்கு எல்லையாகக் கொள்ளிடம் ஆறு அமைகிறது. ஒரு கோட்டில் வந்து கொண்டிருந்த காவிரி ஆறு, தன் கால்களை விரித்துப் பரவியதால் “காவிரி” ஆனதோ.
________________________________________________________
Singanenjam
singanenjam@gmail.com
singanenjam@gmail.com
________________________________________________________
No comments:
Post a Comment