Monday, April 24, 2017

தொட்ட மளூர்க் கோவில் கல்வெட்டு

--- சேசாத்திரி சிறீதரன்




தொட்ட மளூர் (Dodda Mallur) கருநாடகத்து இராமநகர மாவட்டத்தின் சன்னப்பட்டண வட்டத்தில் அமைந்த ஒரு சிற்றூர். மளூர் கண்வ ஆற்றோரம் அமைந்துள்ளது. இவ்வூர் இராமபிரமேய சுவாமி, அரவிந்தவல்லித் தாயார் அதோடு அம்பேகளு நவநீத கிருஷ்ணன் கோவில்களுக்குப் புகழ்பெற்றது.  பெங்களூருவில் இருந்து 60 கி.மி. தொலைவில் பெங்களூரு மைசூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.  சன்னபட்டணாவில் இருந்து 3 கி.மி. தொலைவுதான்.

இந்த அப்பிரமேயர் கோவில் 11 ஆம் நூற்றாண்டில் சோழ வேந்தன் இராசேந்திர சிம்மனால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு. படை நடத்திய சோழப்  படைத்தலைவன் அப்பிரமேயன் நினைவில் இப்பெயர் சூட்டப்பட்டது.

இங்கத்து நம்பிக்கை - பிள்ளைப்பேறு இலா இணையர் இங்கு வந்து உண்மையான தொழுதலோடு வேண்டுதலை வைத்தால் அவர் வேண்டுதல் நிறைவேறும் - விரைவில் அவர் ஒரு பிள்ளை பெறுவர். அதற்கு நன்றியறிதலாகத் திருவுண்ணாழியில் வெள்ளித் தொட்டில் கட்டித் தொங்கவிடுவர். அவர்கள் குழந்தைக் கண்ணனுக்கு வெண்ணெய்க் காப்பும்  இடுவர். இது ஒரு கண்கொள்ளாக்காட்சி.

அண்மையில் இக்கோவிலில் எடுத்த படத்தில் தமிழ் எழுத்தில் அமைந்த இரு கல்வெட்டு. இது இவ்வூர் ஒருகாலத்தே தமிழ்ப் பகுதியாய் இருந்ததற்குச் சான்று.






கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை, திரு துரை  சுந்தரம்:

கல்வெட்டின் ஒளிப்படம் சற்றும் தெளிவில்லை, ஒரு சில சொற்களை இனம் காண முடிந்தது.

கோயிலில், அமுதுபடிக்காக நிலம் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி உள்ளது. நிலத்தின் நான்கு பக்க எல்லைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

கல்வெட்டின் காலம், அரசன் பெயர், கொடையளித்தவன் பற்றிய செய்தி ஆகியன இல்லை.

கல்வெட்டில் படித்த சொற்கள்:
வரி 2  (வாய்க்)காலுக்கு கிழக்கும்
வரி 3  நிலத்து இந்நாற்பாற்கெல்லைக்கு
வரி 4  ..........................மேல்பாற்கெல்லை
வரி 5 ....   குழி............
வரி 6 ....................அமுதுபடிக்கு விட்ட....
வரி 7  வாய்)க்காலுக்கு 


-=o0O0o=-

முனைவர் காளைராசன் அளித்த தொட்ட மளூர்க்  கோவில் கல்வெட்டுப் படங்களும் அவற்றுக்கு  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை, திரு துரை  சுந்தரம்,  அளித்த கல்வெட்டுப் பாடங்களும்:

23


கல்வெட்டுப்பாடம்  (கல்வெட்டு படம் 23)
1 ஸ்வஸ்திஸ்ரீ .... (அதி) ராஜேந்த்ர...
2 ....அப்பிரமேய விண்ணகர்...
3 ....அப்ரமேய விண்ணகர்....
4 க்கு ணாங்கள் விற்றுக்குடுத்த நி(லம்)
5  த்து......................
6 .....லிக்கு மா .........அறுமாவும்


24


கல்வெட்டுப்பாடம்  (கல்வெட்டு படம் 24)
 
1 அப்பிரமேய .......கோயில்லும் பெருமாள்..
2 ..ல் பொலியூட்டாலே  சந்திராதித்தவற் செல்லக்கடவ
3 ...ணாண்டாநேன் யித்தருமத்துக்கு (அ)ழிவு நிநைப்பவ(ர்)
4 ஊரார் இத்திருநந்தாவிளக்கு ......
5 .லத்தால் .......(அறம்) .........
 
25


கல்வெட்டுப்பாடம் (கல்வெட்டு படம் 25)
 
1 ...........காணியா .... ல்ல
2 டியார் கையில்லும் குடுத்
3 ..............யிந் நம்பிமார் கைய்(யிலும்)
4 ..........கெங்கைக்கரையி(ல்) குராற்பசு...
5 ..........டாந் யிட்ட தி(ரு)க்க.......
6 .........................(துணையில்லை)
குறிப்பு:  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.

செய்திகள்:
1. கோயிலின் பெயர் அப்பிரமேய விண்ணகரம் என்பது உறுதியாகிறது.

2. அரசன் பெயர் கிரந்த எழுத்துகளில் உள்ளது. “ராஜேந்த்ர”  என்பது தெளிவு. ஆனால், ”ராஜேந்த்ர”  என்பதன் முன்னர்  உள்ள கிரந்த எழுத்துகள் “அதி”  என்பதாகப் புலப்படுகிறது. உறுதி செய்ய இயலவில்லை. எனவே, சோழ அரசன் முதலாம் இராசேந்திரன், இரண்டாம் இராசேந்திரன், அதிராசேந்திரன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோருள் ஒருவர் ஆகலாம். சோழப்படைத்தலைவன் அப்பிரமேயன் எந்த அரசனின் கீழ் பணி புரிந்தான் எனத்தெரிந்தால் அரசனின் பெயரையும் உறுதிப்படுத்தலாம். ஆனால், சோழ அரசருள் இராசேந்திர சிம்மன்  யார்?

3.  முதல் கல்வெட்டில், கோயிலுக்கு நிலக்கொடை அளிக்கப்பட்ட செய்தி உள்ளது. கொடை நிலத்தின் ஒரு பகுதி ஆறு மா அளவுடையது. ஊரார், ஊர் நிலத்தை விற்றுக் கொடுத்திருக்கிறார்கள் எனக் கருதலாம். விலை கொடுத்து வாங்கிய  கொடையாளி அதைக் கோயிலுக்குக்  கொடையாக அளிக்கிறார்.

4.  இரண்டாம் கல்வெட்டில், கோயிலுக்கு நந்தாவிளக்கெரிக்க, ஒரு முதல் (CAPITAL)  வைக்கப்படும் செய்தி உள்ளது. முதல் வாயிலாகப் பெறக்கூடிய  வட்டி (பொலியூட்டு)  யிலிருந்து, விளக்கு எரிக்கப்படுகிறது. இந்த நந்தாவிளக்கு எரிதலை ஊரார் கண்காணிக்கவேண்டும் என்று கொள்ளலாம். இந்த தருமத்துக்கு அழிவு நினைப்பவர் பாவத்தை அடைவர் எனக் கல்வெட்டு சுட்டுகிறது.

5. மூன்றாம் கல்வெட்டில், கோயிலுக்கு ஒரு கொடை அளிக்கப்படும் செய்தி உள்ளது. கொடை இன்னதெனத் தெரியவில்லை. ஆனால், கொடைக்கான பொருள் கோயிலின் நம்பிமார் கையில் கொடுக்கப்படுகிறது. சிவன் கோயில் பூசைப்பணியில் இருப்பவர் சிவப்பிராமணர் எனவும், விண்ணகரக் கோயில் பூசைப்பணியில் இருப்பவர் நம்பிமார் எனவும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. “கெங்கைக் கரையில் குராற்பசு”  என்னும் தொடர், கொடைக்கு ஊறு செய்பவர், கங்கைக்கரையில் குரால் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் (குரால் பசு=கபிலை நிறப்பசு) எனக்குறிப்பிடுகிறது.  கல்வெட்டின் இறுதியில் “துணையில்லை”  என்றொரு தொடர் காணப்படுகிறது. “அறத்தை மறவாதீர்; அறமல்லது உயிர்க்குத் துணையில்லை”  என்பதாக இதைப் பொருள்கொள்ளலாம். “அறமறவற்க”  என்னும் தொடரைச் சில கல்வெட்டுகளில் கண்டிருக்கிறேன். சரியான எடுத்துக்காட்டு கிடைக்கும்போது மேலும்  பகிரலாம். 
 

No comments:

Post a Comment