வணக்கம்.
கீழடி ஆய்வுகள் இந்திய தொல்லியல் துறையினால் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் மார்ச் மாதம் அடுத்த கட்ட ஆய்வு நடைபெற்றது. இதில் கட்டிடங்களின் அடித்தள அமைப்புக்கள், மட்பாண்டங்கள், அணிகலன்கள், செங்கற்சுவர்கள் சுடுமண் குழாய்கள், கழிவுநீர் தொகுதிகள், உறை கிணறுகள் மற்றும் ஏராளமான தொல்லியல் சான்றுகள் ஆய்வின் போது கிடைத்தன. தமிழரின் வாழ்வியல் பண்பாட்டு மேன்மைக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதைப் பறைசாற்றும் சான்றுகளாக இங்குக் கிடைத்த தொல்லியல் சான்றுகள் உள்ளன. தொல்லியல் ஆய்வுலகம் மட்டுமன்றி, பொது மக்களும் தமிழகத்தின் இந்தப் பண்டைய நாகரிகத்தினை அறிந்து கொள்ள பெருமளவில் ஆர்வம் காட்டிவந்தவண்ணம் இருக்கின்றனர்.
இதற்கிடையே, கீழடி தொல்லியல் ஆய்வுகள் தடைப்படுவதும் மீண்டும் தொடங்கப்படுமா என்ற ஐயங்கள் எழுவதும் என்ற நிலையிருந்து பின் மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த வாரங்களில் அதன் தலைமை ஆய்வாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றொரு ஆய்வுப் பகுதிக்கு அனுப்பும் நடவடிக்கை என இந்தப் பிரச்சனை தொடர்கின்றது . இப்படி கீழடி அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருவதைக் காண்கின்றோம். கடந்த ஆண்டு பெங்களூர் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டு 5,300 தொல்பொருட்கள் ஆய்வு அங்குச் செய்யப்பட வேண்டும் என ஒரு பிரச்சனை எழுந்தது. பொதுமக்கள் எதிர்ப்பு ஏற்பட்டு வழக்குகள் தொடரப்பட்டபின் அவை அனுப்பப்படாமல் நிறுத்தப்பட்டன. பெங்களுர் அரசு மையத்திற்குச் சென்று ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அவை திரும்பி தமிழகம் வருமா? அல்லது அவை முறையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிக்கு வைக்கப்படுமா என்பதும் கேள்வியாகத்தான் இன்றும் இருக்கின்றது. மைசூர் தொல்லியல் காப்பகத்தில் இருக்கின்ற ஏராளமான தமிழக கல்வெட்டுக்கள் பூட்டிய அறையில் இன்னமும் இருக்கின்றன என்பதும் அவை பற்றிய பல சந்தேகங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. இத்தகைய செயல்பாடுகளின் போது தமிழக தொல்லியல் துறை தமிழகத்தில் இவ்வகை ஆய்வுகள் பாதிப்புக்கள் இல்லாமல் தொடரும் நிலையைக் கண்காணிக்க வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் எதிர்பார்ப்பு.
தமிழகத்தின் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏனைய உலக நாடுகளுடனான கடல்வழித் தொடர்பினையும், தமிழர் நாகரிகத்தையும், சமூக நிலைகளையும் பற்றிய தொடர்ச்சியான வரலாற்றுச் செய்திகள் மிகக் குறைவாகத்தான் கிடைக்கின்றன. தமிழகத்தின் பண்டைய துறைமுகப்பட்டினங்களிலும், சங்க இலக்கியங்கள் சுட்டும் நகரங்களிலும் தொடர்ச்சியான ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டால் தான் பண்டைய தமிழர் நாகரிகத்தை ஊகங்களின் அடிப்படை என்றில்லாமல், தக்கச் சான்றுகளுடன் அறிந்து கொள்வதற்கு வாய்ப்புக்கள் அமையும். இதனைச் செய்வதற்கு தமிழக தொல்லியல் துறை வெகுவாக இயங்க வேண்டிய அவசியம் உள்ளது.
இன்றைய நிலையில், வரலாற்று ஆய்வுகள் மற்றும் தொல்லியல் அகழ்வாய்வுகள், கல்வெட்டு மற்றும் நடுகற்கள் ஆய்வுகள் என்ற வகையில் தன்னார்வலர்களின் சில முயற்சிகள் தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு ஏதுவாகத் தமிழக தொல்லியல் துறை ஒவ்வொரு ஊரிலும் ஒரு தொல்லியல் அருங்காட்சியகம் ஏற்பட வாய்ப்புகளை உருவாக்கித்தரவேண்டும். இது அந்தந்த ஊர்களில் கிடைக்கின்ற கவனிப்பாரற்று கிடக்கின்ற வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க உதவும்.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
ksubashini@gmail.com
படம் உதவி மின்தமிழ் குழும உறுப்பினர்: முனைவர் காளைராசன்
மேலதிகமான படங்கள்
https://drive.google.com/drive/folders/0B02g7RFB0HureWF6S1o5S2xWRk0?usp=sharing
இந்த முகவரியில் உள்ளன.
No comments:
Post a Comment