-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.
அண்மையில் மாமல்லபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மாமல்லபுரத்திற்கு வடக்கே சுமார் நான்கைந்து கி.மீ. தூரத்தில் , சாலையின் கிழக்கே மூன்று தொல்லியல் வளாகங்கள் உள்ளன. இவை மூன்றில், தெற்கே உள்ளது புலிக் குகை. அங்கிருந்து சுமார் 200 ,மீ. தூரம் வடக்கே, இடையில் இருப்பது அதிரனசண்டேஸ்வரம்; இதிலிருந்து சுமார் 200 மீ வடக்கே உள்ளது சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் (படம்-1 கூகுள் பதிமம்).
அண்மையில் மாமல்லபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மாமல்லபுரத்திற்கு வடக்கே சுமார் நான்கைந்து கி.மீ. தூரத்தில் , சாலையின் கிழக்கே மூன்று தொல்லியல் வளாகங்கள் உள்ளன. இவை மூன்றில், தெற்கே உள்ளது புலிக் குகை. அங்கிருந்து சுமார் 200 ,மீ. தூரம் வடக்கே, இடையில் இருப்பது அதிரனசண்டேஸ்வரம்; இதிலிருந்து சுமார் 200 மீ வடக்கே உள்ளது சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் (படம்-1 கூகுள் பதிமம்).
முதலில் அதிரனசண்டேஸ்வரம் சென்றோம். பார்க்கும்போதே , இந்தக் கோவில்மண்டபம் மண்ணை அகழ்ந்து வெளிக் கொணரப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது. ஐந்தாறு அடிகள் கீழே இறங்கி மண்டபம் முன் நின்றோம். இந்த மண்டபத்தின் உயரம் ஆறேகால் அடி.
இணையத்தில் கிடைத்த பழைய படம் ஒன்றில் (படம்-2 –இணையத்தில் எடுத்தது (கருப்பு-வெள்ளை போட்டோ), இந்தக் கோவிலின் மேல் சுமார் ஐந்தாறு அடி உயரத்திற்கு மணல் மூடியிருந்தது கண்கூடாகத் தெரிகிறது லிங்கம், நந்தி, இரண்டாம் நரசிம்மன் கால கல்வெட்டுகள் எல்லாம் கண்டறிந்து, வடக்கே 200 மீ தொலைவில் உள்ள சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் சென்றோம்.(படம் -3)
சுற்றிலும் வேலியிட்டிருக்கிறார்கள். இங்கேயும் சுமார் ஏழெட்டு அடிகள் கீழே இறங்கிப் பார்த்தபோது கருவறை எனக் கருதப்படும் இடத்தைச் சுற்றி கீழே செம்புராங்கல் வெட்டுப் பாறைகள், இவற்றின் மேல் செங்கற்கள், செங்கற்களின் மேல் கிரானைட் பாறைகள் என மொத்தம் சுமார் ஐந்தாறு அடி உயரத்திற்குச் சுவர் இருக்கிறது ஆக, இன்றைய நில மட்டத்திற்கும் கருவறையின் . அடிப் பகுதிக்கும் சுமார் பதின்மூன்று அடி வித்தியாசம் காணப் படுகிறது. கோவிலின் பின்புறம் உள்ள லெப்டினைட் பாறையில் ( இந்தப் பாறை sandstone என்று தவறாக அறியப்பட்டுள்ளது) கல்வெட்டுகள் உள்ளன. கடந்த சுனாமியின்போது , இந்தக் கல்வெட்டுகள் வெளிப்பட்டதாகவும் , இந்தக் கல்வெட்டுகளின் அடிப்படையில்தான் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு, இந்தக் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அருமையான பணி.
இனி, மேற்சொன்ன இரண்டு தொல்லியல் சின்னங்களுக்கும் மேல் சுமார் 13 அடி உயரத்திற்கு மணல் மூடி இருந்திருக்கிறது அதாவது சுமார் 1300 ஆண்டுக் காலத்தில். இந்த மணல் எப்படி வந்தது , ஆற்றாலா, காற்றாலா அன்றி கடலாலா. இந்தப் பகுதியில் பெரிய ஆறு ஒன்றும் இல்லை- இருந்ததற்கான தடயங்களும் இல்லை. எனவே , இந்த மணல் கடலாலோ காற்றாலோ வந்திருக்க வேண்டும். கடலால் –அதாவது சுனாமியால் இவ்வளவு உயரத்திற்கு மணலைக் கொண்டு வந்துவிட முடியாது. SANDY BEACH எனப்படும் மணற்பாங்கான கடற்கரையில் SAND DUNES எனப்படும் மணல் மேடுகளைச் சர்வ சாதாரணமாகக் காணலாம். கிழக்குக் கடற்கரையில் இவை மிக அதிகம். காற்றினால் உருவாகும் இவை பெரும்பாலும் கடற்கரைக்கு இணையாக அமைந்திருக்கும். புறநானூறு இவற்றை “எக்கர்” என்கிறது. கடற்கரையில் வீசும் காற்று, ஒரு தரை விரிப்பை இழுத்துச் செல்வது போல் மணலை இழுத்துச் செல்கிறது. அப்படி மணல் செல்லும் வழியில் ஒரு சிறு தடை ஏற்பட்டாலும் அந்த மணல் அங்கே குவிந்து விடுகிறது. அப்படிக் குவியும் மணல் பெரிய தடையாக மாறி, தொடர்ந்து காற்றில் வரும் மணலைத் தடுத்து அதன் மேல் குவியச் செய்து பெரிய மேடாக மாறுகிறது. இப்படித்தான் கடற்கரையில் மணல் மேடுகள் உருவாகின்றன. நீளவாக்கில் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று என உருவாகும் இத்தகைய மேடுகள் , மேலும் மேலும் வளர வளர ஒன்றோடு ஒன்று இணைந்து பல நூறு மீ. நீளமுள்ள நீளத்தொடர் (LONGITUDINAL DUNES) களாக உருவாகின்றன.
புலிக்குகை-சாளுவன் குப்பம் பகுதியில் நிலஅமைப்பு எப்படி உள்ளது என அறியும் பொருட்டு அந்தப் பகுதியைத் தோராயமாக அளவை செய்தேன்- googleearth துணைகொண்டு. (இது மிகவும் தோராயமான அளவைதான்). குறுக்கிலும் நெடுக்கிலும் எடுத்த அளவைகள் அந்தப் பகுதி பல நூறு மீ. நீளமுள்ள நீளமணல் மேடு (LONGITUDINAL DUNES) எனத் தெரிய வந்தது (மீண்டும் படம்-1 கூகுள் பதிமம்) காற்றில் அடித்து வரப்பட்ட மணல், தெற்கே முதலில் புலிக்குகையால் தடுக்கப்பட்டு ஒரு மணல்மேடு உருவாகியிருக்கிறது. தொடர்ந்து அதிரனசண்டேஸ்வரம், சாளுவன்குப்பம் பகுதிகளிலும் மணல்மேடுகள் உருவாகி வளர்ந்து இணைந்து நீள் மேடாகி, மூன்று மரபுச் சின்னங்களுக்கும் மணல் சமாதி கட்டிவிட்டன. வெவ்வேறு காரணங்களால் இவை இன்று வெளிப்பட்டு நம்மிடம் வரலாறு பேசுகின்றன. கடலூருக்கு தெற்கேயுள்ள தியாகவல்லி திருச்சோழபுரம் திருக்கோவிலும் இவ்வாறே மணலால் மூடப்பட்டிருந்ததாகவும் , காற்றில் வெளிப்பட்ட கலசத்தைக் கண்ட சிவனடியார் ஒருவர் , கடலூரிலிருந்த செல்வந்தர்கள் துணை கொண்டு கோவிலை வெளிக் கொணர்ந்தார் என்றும் செய்திகள் உள்ளன.
மாமல்லபுரத்தில் உள்ள மணல்மேடுகளுக்கடியில் மேலும் பல வரலாற்று/ மரபு சின்னங்கள் மறைந்திருக்கக்கூடும்.
(இந்த மாமல்லபுரப் பயணம் தொல்லியலாளர் பத்மாவதி அவர்களின் வழி காட்டுதலில் நடந்தது. அவரின் இளம் மாணவரும் உடனிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் பாரதி புத்திரன் அருமையான விளக்கங்கள் அளித்தார்)
________________________________________________________
Singanenjam
singanenjam@gmail.com
singanenjam@gmail.com
________________________________________________________
No comments:
Post a Comment