Friday, May 6, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 12

- செல்வன்.



பேரா யூகோ: இப்போது தலித் தொண்டர்கள் இதனால் சிறிதளவு அச்சம் கொண்டிருக்கிறார்கள். கட்சியில் தலித் அல்லாதவர்கள் பெருமளவு இருப்பது ஜாதிக்கலவரம் வராது என தலித் அல்லாதவர்கள் பெருமளவு நம்புவதைக் காட்டுகிறது. ஆனால் இதுகுறித்து தலித் தோழர்கள் கருத்து என்னவெனில் "எதாவது பிரச்சனை என வந்தால் நாம் சமரசம் செய்துகொள்ளத் தூண்டப்படுவோம். முன்பு எடுத்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து மாறி தலித்துகளை கைவிட்டுவிடுவோம்" என. கட்சியின் வேர்களான அடிமட்ட தொண்டர்களும், கிராமப்புற தலித்துகளும் இந்த அச்சத்தையே கொண்டுள்ளார்கள். இது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

சன்னா: இது ஒரு நியாயமான அச்சமே. விடுதலைச் சிறுத்தைகள் அடித்தட்டு மக்களின், குறிப்பாகத் தலித்துகளின் பிரச்சனைகளை முன்னெடுத்த இயக்கம். கட்சியில் தலித் அல்லாதவர்கள் சேர்கையில், அவர்கள் இதன் பலனை அறுவடை செய்வதாகவும் ஒரு புகார் கூறப்படுகிறது. இப்படி ஒரு சந்தேகம் இருப்பதை நாம் மறுக்கமுடியாது. நாம் கேட்கவேண்டியது என்னவெனில் இவர்கள் கட்சியில் சேர்ந்ததால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு என்ன நன்மை ஏற்பட்டது என்பதே. அந்தக் கோணத்தில் பார்த்தால் சில நன்மைகளே ஏற்பட்டிருப்பதை அறியமுடியும். நாம் ஒரே ஒரு எம்பி சீட்டை மட்டுமே வென்றிருக்கிறோம். 10 எம்.எல்.ஏ சீட்டுக்களை இழந்திருக்கிறோம். நாம் அரசியல்ரீதியாக வென்றிருந்தால் அடிமட்ட அளவில் நிலவும் இம்மாதிரி பிரச்சனைகளை தீர்த்து இவற்றை விவாதித்திருக்கலாம். தலித் கட்சியாக மட்டும் நின்றிருந்தால் தலித் அல்லாதவர்களின் ஆதரவு இன்றி வெல்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே இருந்திருக்கும். பிரச்சனைகள் எழுகையில் நீங்கள் சொல்வதுபோல கட்சிக்குப் புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்று நடந்த ஒரு பிரச்சனை கூடப் புகாராக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சேஷசமுத்திரத்தில் கோயில் தேரை இழுக்கும் விஷயத்தில் சேரியில் இருக்கும் மக்களுக்கும், ஊரில் இருக்கும் மக்களுக்கும் இடையே பிரச்சனை உருவானது. பிரச்சனை வந்தபின் 44 தலித்துகள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் ஒரு வன்னியர் கூட கைது செய்யப்படவில்லை. இந்தப் பிரச்சனைகளை உருவாக்கியவர்கள் அப்பகுதியில் வசிக்கும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த சிலர், ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் தலித்துகள். இம்மாதிரி பிரச்சனை வருகையில் அதைக் கையிலெடுத்து தீர்வு காணமுயல்வது யார்? விடுதலைச் சிறுத்தைகள் தான். இதேபோல நாமக்கல்லில் உள்ள மூஞ்சானூரில் தலித்துகளுக்கு மயானத்துக்கான பாதை 20 ஆண்டுகளாக அடைபட்டுக் கிடக்கிறது. அப்போதும் இதை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பே கையில் எடுத்துத் தீர்வு காணவேண்டி இருந்தது. அவ்வூரில் பாதிக்கப்பட்டோர் அருந்ததியர்கள். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் இதைக் கையில் எடுத்ததும் எந்தச் சமரசமும் இன்றி இதற்குத் தீர்வு கண்டது. நாங்கள் சமரசம் செய்யாமல் போராடியதால் அவ்வூர் அருந்ததியர்களுக்கு மயானத்துக்குச் செல்ல வழி கிடைத்தது. இதேபோல பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதே சமயம் சில ஊர்களில் சின்ன, சின்ன பிரச்சனைகள் உள்ளன. அது பெரிதாகி பெரிய ஜாதிக்கலவரமாக ஆகாமல் தடுக்கும் கடமை நமக்கு உள்ளது. சிறுத்தைகள் ஒரு ஊருக்குப் போய் பிரச்சனை செய்துவிட்டு வெளியே போய்விடலாம். ஆனால் அவ்வூரில் மக்கள் அமைதியாகத் தொடர்ந்து வாழவேண்டும் அல்லவா? சிலர் ஏற்படுத்தும் பிரச்சனைகள் ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதிக்கவிடக்கூடாது. இம்மாதிரி சூழலில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்ப்பது தவிர வேறு வழி கிடையாது. இதுபோன்ற சூழலில் நாம் சமரசம் செய்துகொண்டதாக ஓரிருவர் வந்து புகார் சொல்லுவார்கள். ஆனால் மக்களைக் காப்பாற்றுவதற்காக இம்மாதிரி சமரசங்கள் அவசியமாகின்றன.

நாம் எதற்காகப் போராடுகிறோம்? அமைதியும், நல்லிணக்கமும் நிலவவே போராடுகிறோம். ஆக சில கிராமங்களில் அமைதி நிலவ சில சமரசங்களைச் செய்துகொள்ளவேண்டி உள்ளது. அதை சிலர் பெரிதுபடுத்தி புகார் சொல்கிறார்கள்.

பேரா யூகோ: இது முக்கியமான குறிப்புதான் எனினும் போராட்டம் என்பது முழுக்க அமைதியை ஏற்படுத்தமட்டுமே செய்யப்படுவதாக இருக்கமுடியாது அல்லவா? (சன்னா: ஆம்) போராட்டங்கள் நீதியை நிலைநாட்டவும் நடத்தப்படுபவை. நீதி கிடைக்கவில்லையெனில் போராட்டத்தின் பலன் என்ன எனும் குற்றச்சாட்டும் இருக்கிறது. உதாரணமாக மதுரையில் வண்டியூர் தீர்த்தக்காடு இருக்கிறது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்டும் மேல்சாதியினரே அந்நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள். அவ்வூர்  மக்கள் என்ன சொல்கிறார்கள் எனில் ஏதோ சமரசமின்றி இது நடந்திருக்காது என்கிறார்கள்

சன்னா: அவர்கள் அப்படிக்கூறினாலும் விடுதலைச் சிறுத்தைகள் அப்பகுதியில் உயர்சாதியினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக நீங்கள் கருதவில்லை அல்லவா? (பேரா யூகோ: நிச்சயமாக இல்லை) . ஆனால் உயர்சாதியினருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த அரசின் அமைப்புகளும் இருக்கின்றன

பேரா யூகோ: ஆமாம். ஆனால் தொடர்ந்து போராடினால் நிலத்தை உங்களால் மீட்கமுடியுமல்லவா?

சன்னா: நிச்சயமாகத் தொடர்ந்து போராடினால் நிலத்தை மீட்கமுடியும். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் வெறும் முழுநேர போராட்ட இயக்கம் மட்டுமல்லவே? நாங்கள் மக்களுக்காகப் போராடும் அதே சமயம் அரசியலில் காலூன்றவும் முயல்கிறோம். அதற்காக இக்கோரிக்கையைக் கைவிட்டுவிட்டோம் என்று பொருள் அல்ல. எங்களால் முடிந்தவரைப் போராடுகிறோம். நேற்றுகூட முகநூலில் ஒருவர் செருப்பை கையில் ஏந்தவேண்டி வந்ததைக் குறித்து பதிந்திருந்தேன்

பேரா யூகோ: எங்கே நடந்தது இது?

சன்னா: திண்டுக்கல் அருகே உள்ள ஒருகிராமத்தில். இதுபோன்ற பிரச்சனைகள் பல இடங்களில் இருந்தாலும் எங்கள் பார்வைக்கு இவை வந்தபின்னரே பலருக்கும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருப்பதே தெரியவருகிறது. மக்கள் கவனத்துக்கே வராத பலகிராமங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி என்ன சொல்லமுடியும்? சிறுத்தைகளான நாங்கள் நீதிமன்ற  வழக்குகள், போராட்டங்கள், சாதி இந்துக்களை எதிர்த்தல், சுரண்டல்காரர்களை எதிர்த்தல், போலீசை எதிர்த்தல், கட்சித்தொண்டர்களின் பிரச்சனைகளைக் கவனித்தல், கட்சியில் உள்ள தலித் அல்லாதவர்களின் பிரச்சனைகளை கவனித்தல் எனப் பலவற்றைச் செய்யவேண்டி உள்ளது. இத்தகைய சூழலுக்கு ஊடாகவே இம்மாதிரி பிரச்சனைகளை கவனிக்கவேண்டியுள்ளது. நேரடியாக ஒரு பிரச்சனையை தீர்க்க முடியாமல் போகையில் இவற்றை மனதில் கொண்டே தீர்வுகாணவேண்டியுள்ளது. சில விசயங்களில் உடனடியாக தீர்வு கிடைக்கிறது, சிலவற்றில் (நாமக்கல் மாவட்டம் மூஞ்சானூர் போல) 20 ஆண்டுகள் கழித்தே தீர்வு கிடைக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் அவ்வூர் மக்கள் என்ன பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்? யாராரோ வருகிறார்கள், போகிறார்கள் ஆனால் தீர்வுமட்டும் வந்தபாடில்லை எனத்தானே பேசியிருப்பார்கள்? இன்று தொடர்போராட்டங்களின் விளைவாகவே வெற்றியடைந்துள்ளோமே ஒழிய ஏதோ ஓரே நாளில் நடந்த நடந்த ஒரு மறியல் மூலமாக மட்டுமே நாங்கள் வெற்றியடையவில்லை. சாதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் ஒரு விசயம். அதை இரண்டு அல்லது மூன்றுநாளில் ஒழிக்க முடியாது. ஆண்டுக்கணக்கில் நடக்கும் தொடர்போராட்டங்கள் அதற்கு அவசியம். சிறுத்தைகள் அப்படிப்பட்ட போராட்டங்களில் இருந்து பின்வாங்கினால் நீங்கள் எங்கள் மேல் புகார் கூறலாம். ஆனால் போராட்டம் நடக்கையிலேயே சமரசம் செய்துகொண்டதாக எங்கள் மேல் புகார் கூறப்பட்டால் கள நிலவரத்தை அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துரைப்பது எங்கள் கடமையாகும்.

[தொடரும் ... ]

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________

No comments:

Post a Comment