Thursday, May 12, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 14

- செல்வன். 

பேரா யூகோ: அத்துடன், மக்கள் பிறரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது. உதாரணமாக, பரளிபூதூரில் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் சேரிக்குள் நுழைந்து வீடுகளைக் கொளுத்தி, மக்களைத் தாக்கினார்கள். நான் அங்கே சென்றபோது மக்கள் "விடுதலைச் சிறுத்தைகள் எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை" என்றார்கள். நான் மேலும் விசாரிக்கையில் அவர்கள் "கட்சியினர் வந்து இங்கே ஒருவாரம் தங்கியிருந்து எங்களுக்கு உணவும், பாதுகாப்பும் அளித்தார்கள். ஆனால் இவ்விஷயத்தை அவர்கள் சரியாக கையாளவில்லை" என்றார்கள். "இதன் பொருள் என்ன?" என நான் கேட்டபோது "எந்தத் தலைவர்களும் வரவில்லை" என்றார்கள். அதன்பின் விசாரித்ததில் பாண்டியம்மாள் மற்றும் எல்லாளன் (மதுரை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர்கள்) மற்றும் ஆற்றலரசுவும் வந்திருப்பது தெரிந்தாலும் அவர்களைப் பொறுத்தவரை திருமாவளவன் வரவில்லை என்பதே குறையாக தெரிந்தது. ஆற்றலரசு ஒரு மாநில தலைவர் (சன்னா: ஆம்) பாண்டியம்மாளும், எல்லாளனும் பிராந்திய தலைவர்கள் (சன்னா: ஆம்). ஆனால் இவர்கள் வந்தும் திருமாவளவன் வரவில்லையென்பதால் மக்கள் விடுதலைச் சிறுத்தைகள் எதுவும் செய்யவில்லை எனச் சொல்லி கட்சியின் போர்டைக் கூட மாட்டாமல் இருக்கிறார்கள்.

சன்னா: ஆம். மக்கள் இன்னும் இரண்டாம் நிலை தலைவர்களை ஏற்கும் மனப்பக்குவத்தில் இல்லை. அதைக் கொஞ்சம், கொஞ்சமாக நாம் மாற்றவேண்டும். இது கட்சியின் ஒரு குறைபாடு என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். பிரச்சனை என்னவெனில் எல்லாரும் எப்போதும் தலைவரை எதிர்பார்ப்பதே.

பேரா யூகோ: நான் அப்போது நினைத்தது என்னவெனில் இந்த மூவரும் கட்சியினருக்கு உள்ளூர் அளவில் நன்கு அறிமுகமானவர்கள். ரவிகுமார் (அன்றைய விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ), சிந்தனை செல்வம் (பொதுச் செயலாளர்) போன்றோர் அன்று வந்திருந்தால் "மாநிலத்தின் வடபகுதியிலிருந்து சிலர் வந்திருக்கிறார்கள்" என்ற அளவில் தலைவர் வரவில்லையெனும் போதும் கூட அவர்களுக்கு அது ஒருவித உத்வேகத்தை அளித்திருக்கும். (சன்னா: ம்ம்ம்). நீங்கள் இதுபோல கூட செய்யலாமே (சன்னா: கட்டாயமாக) நீங்கள் ஆற்றலரசை கடலூருக்கும், சிந்தனை செல்வத்தை மதுரைக்கும் அனுப்பலாம். அவர்களை மாநில அளவில் இப்படி அனுப்புகையில் மக்களிடையே கட்சி தம் பிரச்சனைகளை முக்கியமாகக் கருதி மேல்மட்ட தலைவர்களை அனுப்புகிறது எனும் நம்பிக்கை பிறக்கும்.

சன்னா: உண்மை. நாங்கள் அப்படிச் செய்திருக்கவேண்டும். அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம். வரும்காலத்தில் அதை மாற்ற முயல்கிறோம்

பேரா யூகோ: சரி. தொடர்புடைய இன்னொரு கேள்வி. நீங்கள் எப்படி வேட்பாளர்களைத் தேர்வு செய்கிறீர்கள்? 2011ல் உங்களுக்கு 10 சீட்டுகள் கிடைத்தன. பத்தில் ஒருவர் மட்டுமே பெண். இருவர் தலித் அல்லாதவர்கள். (சன்னா: ஆம்). யாருக்குச் சீட்டு என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்?

சன்னா: தேர்தல்களில் வேட்பாளர்களை முடிவுசெய்கையில் முதல் விஷயம் என்னவெனில் நாங்கள் கூட்டணி வைத்துள்ள கட்சி தான் நாங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை முடிவு செய்யும்.

பேரா யூகோ: அம்முடிவில் உங்களுக்குப் பங்கு இல்லையா?

சன்னா: கூட்டணிக்கட்சிகள் தான் சீட்டுகளை முடிவு செய்கின்றன.

பேரா யூகோ: உண்மை. அந்தத் தொகுதிகள் வேண்டாம் என உங்களால் சொல்ல முடியாதா?

சன்னா: ஆம். நாங்கள் ஒரு பட்டியலை கொடுப்போம். 40 தொகுதிகளின் பட்டியலை கொடுத்தால் அதிலிருந்து 10 தொகுதிகளைக் கொடுப்பார்கள். இப்படித்தான் நடந்து வருகிறது. இதில் ஒரு ஐந்து தொகுதி வேண்டும் என நாங்கள் போராடி வாங்கலாம். ஆனால் முதல் முடிவை அவர்கள் தான் எடுக்கிறார்கள். இப்படி முடிவெடுக்கையில் திமுகவும், அதிமுகவும் நாங்கள் உள்ளூர் வேட்பாளர்களையே நிறுத்தவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதன் பொருள் என்னவெனில் ஒரு தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சாதியை சார்ந்தவரையே வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பதே. இந்த இரண்டுக்கும் பின், அடுத்ததாகப் பார்க்கும் விஷயம் என்னவெனில் அவர்களுக்குப் போட்டியிடும் அளவு பணபலம் இருக்கிறதா என்பது. வேட்பாளர்கள் இந்த மூன்று விஷயங்களின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் நிலையும் இதுவே. ஆனால் இதை நாங்கள் சரியாக சில சமயம் பின்பற்றியும், சில சமயம் சரியாகப் பின்பற்றாமலும் இருக்கிறோம். இந்த முறை ஓரளவே பின்பற்றப்படுகிறது. எங்கள் கட்சிக்குள்ளாக சீட்டை ஒதுக்குகையில் வேட்பாளர்கள் மக்களிடையே ஓரளவு அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும், கட்சிக்காக நீண்டகாலம் உழைத்திருக்கவேண்டும், சட்டசபையில் அவரதுச் செயல்பாடு எப்படி இருக்கும் - இதுபோன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டே முடிவெடுக்கிறோம். இறுதி முடிவு தலைவர் கையில் என்றாலும் அவர் முடிவெடுக்குமுன் விரிவான அளவில் விவாதங்களை நடத்தியே முடிவெடுக்கிறார். இதன் அடிப்படையிலேயே தலைவர் வேட்பாளர்களை அறிவிக்கிறார். கடைசி இரண்டு,மூன்று தேர்தல்களில் இதுதான் நடந்தது. இம்மாதிரி அறிவிப்புகளில் நிச்சயமாக ஒரு பெண்ணும், ஒரு தலித் அல்லாதவரும் இருப்பார்கள், எங்களுக்கு 10 சீட்டுகள் கிடைத்தால் அதில் இரண்டு தலித் அல்லாதவர்கள், ஒரு பெண் இப்படித்தான் சீட்டு கொடுக்கிறார்கள். அது தலித்துக்கான சீட்டு எனில் அதன்பின் தலித்களிடையே அது ஒரு பெண்ணாக இருக்கவேண்டும். இந்த அடிப்படையில் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பெண்வேட்பாளர் ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டுள்ளார். தலித் அல்லாதவர்களும் முஸ்லிம் அல்லது பிற சமூகமாக இருக்கலாம். அவர்களுக்குச் சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டு அந்த அடிப்படையில் நியமனங்கள் நடைபெறுகின்றன. இதில் சிக்கலான விஷயம் என எதுவுமில்லை.

பேரா யூகோ: திருமாவளவன் வேட்பாளராக இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களா? திருமாவளவனால் தன் தொகுதிக்கு அடிக்கடி செல்ல முடியாது. அவர் உறங்கக்கூட நேரமின்றி எப்போதும் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். முன்பு தமிழகம் முழுக்க சுற்றினார், இப்போது டெல்லி. ஆக அவரால் தொகுதி வேலையைச் செய்யமுடியாது என்கையில் தொகுதியை அவர் இல்லாத சூழலில் யார் கவனிக்கிறார்கள்?

சன்னா: இந்தக் கேள்வியே எழக்கூடாது. நாட்டுக்குப் பிரதமர் இருக்கிறார். அவர் தன் தொகுதிக்குச் செல்கிறாரா? (யூகோ: இல்லை). ஜெயலலிதா தொகுதிக்கு செல்கிறாரா? தலைவர்களால் மக்களுக்கு அரசியல் அடிப்படையிலேயே பிரதிநிதித்துவம் கொடுக்க முடியும். இதனால் தொகுதி பாதிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எல்லா இடத்திலும் உண்டு. திருமாவளவனுக்கு மட்டுமல்ல, எல்லாத் தலைவர்களுக்கும் உண்டு. சாதாரண எம்பி, எம்.எல்.ஏவால் தொகுதியில் அதிக கவனம் செலுத்த முடியும். ஆனால் தலைவர்களால் அப்படிச் செய்யமுடியாது. அந்த வேலையைக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களே எடுத்துச் செய்யவேண்டும். இந்த அடிப்படையில் சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு என்ன வேலையைச் செய்யவேண்டும், எப்போது செய்யவேண்டும் என்பதை முடிவெடுக்க ஒரு பெரிய குழுவே உள்ளது. அக்குழு எந்த இடத்தில் என்ன பிரச்சனைகள் உள்ளன, எங்கே சாலைகள் போடவேண்டும், எங்கே தொட்டிகள் அமைக்கப்படவேண்டும், எங்கே சமூகநலக் கூடங்களும், நூலகங்களும் அவசியம், பள்ளிகள் அவசியம் என்பதைச் சரிபார்த்து தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ஐந்துகோடியை அதற்கு அளித்து, அதைச் செலவு செய்கிறார்கள். ஆகத் தொகுதி வேலைகள் நடக்கின்றன. அது புறக்கணிக்கப் படுவதில்லை, ஆனால் பத்திரிக்கைகள் இதை வெளியிடுவதில்லை. ஆகத் தலைவர்களை பொறுத்தவரை அவர்கள் தேர்தலில் நிற்பதா, வேண்டாம் எனும் கேள்வியே எழுவதில்லை. கட்சித்தலைவர்கள் கட்டாயமாக தேர்தலில் நிற்கவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை பிறக்கும்.

பேரா யூகோ: ஆனால் அந்த வேலை நடக்கவில்லையெனில் அவர்களால் அதன்பின் ஜெயிக்க முடியாது. அதுதான் பிரச்சனையே.

சன்னா: அது உண்மைதான். அதனால் தான் ஒரு குழுவே வேலைசெய்கிறது என நான் சொன்னேன். இதில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் ஒன்று என்னவெனில், கட்சியாக எங்களுக்கு ஒரு கூடுதல் தடையும் உள்ளது. அதாவது விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை நாங்கள் ஜெயித்த எம்பி அல்லது எம்.எல்.ஏ தொகுதியைத் தாண்டியும் மாநில அளவில் எங்கெல்லாம் தலித்துகள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் நாங்கள் பணியாற்றவேண்டிய நிலை உள்ளது.



[தொடரும் ... ]

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________

No comments:

Post a Comment