Friday, May 6, 2016

சென்னையின் “ஆளவந்தார் ஹால்“


--கோ.செங்குட்டுவன். 
 
2013 பிப்ரவரியில் ஒருநாள். மண்டையைப் பிளக்கும் மத்தியான வெய்யில்.

நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றின் கரையோரமாக, சிவானந்தா சாலை நோக்கி நடக்கத் தொடங்கினேன். கூவம் ஆற்றில் படகுத்துறை இருக்கிறதாமே? அதைக் கண்டுபிடிப்பதுதான் எனதுப் பயணத்தின் நோக்கம்.

தூர்தர்ஷன் அலுவலகத்தைக் கடந்ததும் ஒரு பெரியக் கட்டடம். வெளியில் அமர்ந்திருந்தக் காவலாளியிடம் கேட்டேன் “இங்க படகுத்துறை எங்க இருக்கு?“. அவரோ யோசிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் ஒருவழியாக “இப்படியே கொஞ்ச தூரம் போங்க. ஒரு பாலம் வரும். அந்தப் பாலத்துக் கீழ ஒரு கட்டடம் இருக்கு“ என வழிகாட்டினார்.

அடுத்த சில நிமிட நடைப்பயணத்தில் அந்தப் பாலம் வந்துவிட்டது. கூவத்தில் இருந்து தெற்கு பக்கிங்காம் கால்வாய் தொடங்கும் இடம். சாலையின் தெற்கே, அடர்ந்த மரங்களுக்கிடையேத் தெரிகிறது அந்தக் கட்டடம்.

சாலைத் தடுப்புக்குள் நுழைந்து மிகவும் சிரமப்பட்டு கீழே இறங்கினேன்.

அது ஒரு பாழடைந்தக் கட்டடம். உள்ளே ஒரு படகுத் தென்பட்டது. படகுத்துறை தானா?

 

கட்டடத்தின் முகப்பில் சாரண இயக்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழே “ஆளவந்தார் ஹால்“ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. கட்டடமும் அதன் சுற்றுப்புறமும், திருவாளர் பொதுஜனங்களால் திறந்தவெளிக் கழிப்பிடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சகித்தவாறே கட்டடத்தை நெருங்கினேன். அதோ, கட்டடத்தின் அடிக்கல் நம் பார்வையில் படுகிறது.

முதற் சென்னை கடற்சாரணக் குழு (S.S.S.ஸ்ரீராமுலு)

திறப்பாளர்: மாண்புமிகு இரா.நெடுஞ்செழியன், தமிழ்நாடு கல்வி அமைச்சர்,

தலைவர்,  தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் சங்கம்,

திறப்பு விழா தலைவர்: திரு.S.V. சிட்டிபாபு அவர்கள், பிரதம ஆணையாளர், தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் சங்கம்.

ஆகஸ்ட் 15 1970.

தி.க.சங்கரன், குழு தலைவர். செயலாளர்.

-மேற்காணும் வாசகங்கள் அந்த அடிக்கல்லில் காணப்பட்டது. நல்ல வேளை அடிக்கல்லையாவது விட்டு வைத்திருக்கிறார்கள். இல்லையென்றால் இந்தக் கட்டடத்தைப் விவரத்தை ஆவணங்களில்தான் தேட வேண்டியதாயிருந்திருக்கும்.

கட்டடத்தின் பெயருக்கான அந்த மதிப்பிற்குரிய ஆளவந்தார் அவர்கள் குறித்தும், இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளப் படகு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது பற்றியும் விரிவாக ஆராய வேண்டும்.

மீண்டும் வந்த வழியே மேலே ஏறினேன்.

பிறகு அதே பகுதியில் கூவம் ஆற்றங்கரையில் இருந்தப் படகுத்துறையைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பது வேறு விசயம்.

அதுபற்றி அப்புறம் பதிவிடுகிறேன்..!



நன்றி:

 
கூவம் அடையாறு பக்கிங்காம் சென்னையின் நீர்வழித் தடங்கள்

வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்.    






_____________________________________________________

கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
_____________________________________________________

No comments:

Post a Comment